Showing posts with label கற்பனைகள் விற்பனைக்கு. Show all posts
Showing posts with label கற்பனைகள் விற்பனைக்கு. Show all posts

October 29, 2018

கற்பனைகள் விற்பனைக்கு


கவிஞர் பூவேந்தன் எனக்கு முதன் முதலாக அறிமுகமானதே அவரின் கவிதை மூலமாகத் தான். குழுமம் ஒன்றில் அவரின் கவிதையே முதலில் என் கவனத்தை ஈர்த்தது. அன்று தொடங்கி இன்னும் இன்னும் வற்றா ஊற்றாக தினம் பெருகி வரும் அவர் கவிதைகள் பலரை கட்டி இழுத்து நட்பு வட்டத்தில் இறுக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

திரையிசையில் தோன்றும் சில வரிகளை மனம் உள்வாங்கும் போதெல்லாம் இப்படியும் சிந்திக்க முடியுமா? இவ்வளவு அன்பு செலுத்தவும் மனிதர்கள் உள்ளனரா? காதல் இவ்வளவு வலிமையானதா? சொந்தமானவளின் அன்புக்காக இத்தனை ஏங்குபவர்களும் உண்டா என்ற கெள்விகள் எழுந்ததுண்டு. இத்தனைக்கும் விடையாக இன்று என் கைகளில் பூவேந்தன் அவர்களின் கற்பனைகள் சாட்சியாக விளங்குகின்றன.

காதலின் மென்மையைச் சொல்ல இயற்கையை நளினமாகக் கையாண்டிருக்கிறார். காதலின் வலிமையைச் சொல்லவும் இயற்கையின் பேருருவை துணைக்கழைக்கிறார். பல இடங்களில் காதலின் போதையையும் இயற்கையைக் கொண்டே வெளிப்படுத்துவதால், காதல் உயர்ந்து சாகா வரம் பெறுகிறது.

காதலி மரங்களுடன் பேசுவதெல்லாம் மலர்களாகி மணக்கிறது. அவள் நடக்கும் பாதையெல்லாம் சோலையாகி நம்முடன் நடக்கிறது. அவள் நிலா என்றால் அவள் ஒளிமுகத்தில் நாமும் வெளிச்சம் பெறுகிறோம். பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறாள். பால்வீதியில் ஜொலிக்கிறாள். இயற்கையையே படைத்தவளாக்கி விடுகிறார். அவருக்கான உலகையே அவள் படைத்துவிட்டதால் ஆகாசமெங்கும் நிறைந்த  அவளும் கடவுளாகி விடுகிறாள். 

ரசித்த நிலா கூட, முதலும் கடைசியுமாக அவளுடனேயே முடிந்துவிடுகிறது. இதற்காகவேனும் அந்த இரவு நீண்டிருக்கலாமோ என்ற பேராசை தொற்றிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை.

காதலைத் தாண்டிய பிற படைப்புகள் என்றுமே இன்னும் ஆழமானதாக அமைந்து விடுவதுண்டு. அம்மாவின் கதை ஒவ்வொரு வீட்டிலும் தொடரும் முடிவிலாக் கதை. அம்மாக்கள் இன்றும் வாழ்கிறார்கள் கதைகளிலும் இது போன்ற கவிதைகளிலும்.

அப்பா அப்படியே இறந்தாலும் இண்டு இடுக்கிலெல்லாம் அவர் பாசம் கசிகிறது.

ஆனந்தவிகடனிலும் மலேசிய இதழிலும் வெளி வந்த கவிதைகளைத் தாண்டி இன்னும் சில் கவிதைகள் திரைப்படங்கள் தழுவ தயாராய் உள்ளது போல் தாள கதியோடு குதிக்கின்றன.

தொலைப்பேசியைத் தவிர்த்திருக்கலாம், நிலவுடன் கூடிய இரவின் குளிர்ச்சியை நீட்டியிருக்கலாம், இருபுறமும் மரங்களடர்ந்த சாலையை வானம் வசப்படும் வரை வரைந்திருக்கலாம், என்று கவிஞருடன் நாமும் சேர்ந்தே பேராசைப்படுகிறோம்.

பிடித்த கவிதைகளில் ஒன்றாக கடைசி மனிதனின் செல்ஃபியைச் சொல்வேன். கடவுளுக்கும் ஆறுதல் கூறக்கூடிய நிலையில் இருப்பவன் கவிஞன் ஒருவனே! மிகப் பிடித்த கவிதைகளில் ஒன்றாக, கடவுளுக்கு ஆறுதலளிக்கும் அக்கவிஞனை தேர்ந்தெடுக்கிறேன். அவனே எனைப் பெரிதும் வெல்கிறான்.


கவிஞர்களின் கற்பனைகள் எப்போதுமே விற்பனைக்கு வருவதில்லை. கவிஞர்களின் கற்பனைகள் விலைமதிப்பற்றவை. அவை நம் கருத்துக்கு பரிசுகளாகவே தரப்படுகின்றன. பூவேந்தன் அவர்கள் திறமை இன்னும் மின்னி திசையெல்லாம் பரவ வேண்டும் என்பது நட்புவட்டத்துள்ளோர் அனைவரின் ஒருமித்த எதிர்பார்ப்பு.

உள் வாங்கி படித்தவர்களெல்லாம் காதலுக்கு இப்படியும் மரியாதை செய்ய முடியுமா
என்று வியக்கலாம். காதல் மரியாதைக்குறியதே. காதலியும் கூட. இப்படி ஒரு கவிதையை பரிசளிக்க கடவுளைப் போல் உயர்ந்திருக்கும் காதலியால் மட்டுமே முடியும். 


வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களே. 


புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. விவரம் கீழுள்ள சுட்டியில்

அன்புடன்,
ஷக்திப்ரபா