September 28, 2022

Kameshwara's Kameshwari (The first seed of "want/desire") (DEivathin kural)

 (Shaaktham)




ராஜராஜேச்வரி, லலிதா, த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களைக் கொண்டவளும் அவளேதான் என்றாலும் காமேச்வரி நாமாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. என்னவென்றால், சைவத்தில் சிவன் எப்படி சக்தி சஹிதனாகவே இருக்கிறானோ, அப்படியே சாக்தத்திலும் இந்த ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சக்தியானவள் சிவ சஹிதையாகவே பதியோடு இருக்கிறாள். பூர்ண ப்ரஹ்ம சக்திக்கு யார் பதியாக இருக்க முடியும்? அதைத் தவிர எதுவுமே இல்லாதபோது யார் பதி ஆகமுடியுமென்று ஆலோசித்துப் பார்த்தால் சக்தியைக் காட்டாமல், கார்யம் பண்ணாமல், சாந்தமாக இருந்து கொண்டிருக்கிற ப்ரஹ்மமான சிவன்தான் அந்த சக்திக்கு வேறே மாதிரி, இன்னொன்று மாதிரி தெரிவதால் அதுதான் பதியாயிருக்க முடியுமென்று தெரிகிறது.
.
இதிலிருந்து இன்னும் என்ன ஆகிறதென்றால், அந்த சிவனே நேராக சக்தி விலாஸத்தைக் காட்டும் கார்யத்தைப் பண்ணாவிட்டாலும், அப்படிப் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாக ஆகிறது. ”ஒன்றாக இருந்த ப்ரம்மம் பலவாக ஆக ஆசைப்பட்டது” என்றே உபநிஷத்துச் சொல்கிறது.
.
சாந்த ப்ரம்மம் அப்படியே இல்லாமல் கார்ய ப்ரம்மமாயிற்று என்றால், அப்போது அந்தக் கார்யத்துக்கெல்லாம் முந்தி, அது கார்ய பிரம்மமாகணும் என்று ஆசைப்பட்டிருக்கணும் தானே? ‘ஆசைப்பட்டது’ – என்றே உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. எப்போதும் சித்சக்தியான ஞானசக்தியை உள்ளே வைத்துக் கொண்டுள்ள பிரஹ்மம் – சிவம் – சக்தியை வெளிப்படுத்தி பிரபஞ்ச லீலை பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதே அதனுடைய இச்சா சக்தி எனப்படுகிறது.
.
அப்புறம் வாஸ்தவமாகவே பஞ்ச க்ருத்ய லீலை செய்தது க்ரியா சக்தி. அது இருக்கட்டும். இப்போது விஷயம், தன்னில் தானாயிருந்த பிரம்மம் வெளிமுகப்படும்போது முதலில் தோன்றியது அதன் இச்சை, ஆசை; ‘காமம்’ என்று உபநிஷத் சொல்வது. ‘காமம்’ என்பது இங்கே தப்பர்த்தம் தருவதில்லை. சுத்தமான இச்சைக்கே அப்படிப் பேர்.
.
பூர்ண ப்ரஹ்மம், சக்தி பிரஹமத்திலிருந்து வேறே மாதிரி கொண்ட முதல் ஆவிர்பாவம் அந்தக் காமம். அதுவேதான் அவனுக்குப் பத்னி. அப்பா அம்மா சேர்ந்து ப்ரஜைகள் உண்டாகிறாற்போல சாந்த ப்ரஹ்மமான சிவன் இந்த இச்சா சக்தியோடு சேர்ந்தால்தான் ப்ரபஞ்ச லீலை, பஞ்ச க்ருத்யங்கள் எல்லாம் என்பதால் அவர்கள் பதியும் பத்னியும் ஆகிறார்கள்.
.
அவனுடைய இச்சையின், காமத்தின் ஸ்வரூபமானதால்தான் அவளுக்குக் காமேச்வரி என்று பெயர். அதுதான் முதல் பெயர். பிரஹ்மத்திடமிருந்து முதல் evolute [பரிணாம தத்வம்] காமம் என்றால் அதை வைத்து ஏற்பட்ட [காமேச்வரி என்ற] பேர்தானே ப்ரஹ்ம சக்தியின் முதல் நாமாவாக, ப்ரதான நாமாவாக இருக்க வேண்டும்? எவன் இப்படி ஆசைப்பட்டானோ அவன் காமேச்வரன்.
.
வெறும் பிரஹ்மமாக இருந்த அவன் ஆசைப்பட்டதோடு ஸரி. அந்த ஆசையைக் கார்யமாக்கி ப்ரபஞ்ச லீலையாகப் பஞ்ச க்ருத்யம் என்று வாஸ்தவமாகவே பண்ணிக் காட்டுவது முழுக்க முழுக்க சக்தியான அவள்தான். அதாவது, காமேச்வரிதான் விக்டோரியா, எஸிபெத் ராணிகள் மாதிரி, தானே பூர்ண ஆட்சியதிகாரத்துடன் இருப்பவள்; ஸமஸ்த ஜகத்துக்களையும் ஜீவர்களையும், தேவர்களையும் ஆள்கிறவள்.
.
ஆள்கிற ராஜாவுக்குப் பெண்டாட்டிக இருப்பதால் மட்டும் ராணியில்லை; தானே நேராக ஆட்சிப் பொறுப்பு வஹிக்கிற ராணி! ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவாக ‘ஸ்ரீமாதா’ என்று அவளை அன்போடு அம்மாவாகக் கூப்பிட்டவுடனேயே அடுத்த இரண்டு நாமாக்கள் அவளுடைய ஆட்சியதிகாரத்தை – அவள் அகிலாண்ட, ப்ரம்மாண்ட சக்ரவர்த்தினியாக இருப்பதைத் தான் – ‘ஸ்ரீமஹாராஜ்ஞி’ என்றும், ‘ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி’ என்றும் சொல்லியிருக்கிறது.
.
Chapter: பஞ்ச க்ருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment