September 18, 2022

Describing the Metaphysical beauty of Lalithambika's Kingdom (Deivathin Kural)

சிவனுக்குக் கைலாஸம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு வாஸ ஸ்தானந்தான். 


இவளுக்கோ இரண்டு. அதில் ஒன்று பிரம்மாண்டம் என்கிறதற்குள்ளேயே எல்லா க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி மத்தியிலிருக்கும் மேரு 


சிகரத்தில் இருப்பது. அந்த மேருவிலேயே வேறே மூன்று சிகரங்களில் ப்ரம்ம லோகம், விஷ்ணு லோகம், சிவலோகம் ஆகியவை இருப்பதாகவும் அந்த 


மூன்றுக்கும் நடுநாயகமான பிரதான சிகரத்திலே அம்பாள் லோகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது. ”ஸுமேரு மத்ய ச்ருங்கஸ்தா” என்று 


ஸஹஸ்ர நாமத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. இது ஒன்று. 

.

இது தவிர இந்த ப்ரஹ்மாண்டத்திலேயே அடங்காமல் தனி லோகோமாக ஸ்ருஷ்டி பண்ணிக்கொண்டு அதற்குள்ளே ஒரு த்வீபத்திலும் (தீவிலும்) 


வஸிக்கிறாள். ”ஸுதா ஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ, காமதாயிநீ” என்று ஸஹஸ்ரநாமத்தில் இந்த அம்ருத ஸாகர இருப்பிடத்தைச் 


சொன்னவுடனேயேதான் காமாக்ஷி நாமத்தையும் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் வர்ணிப்பதும் இந்த வாஸ ஸ்தானத்தைதான். இதுதான் 


அம்பாளே நிர்மாணித்துக் கொண்ட லோகம். மேரு மத்ய சிருங்கத்திலிருப்பது தேவத்தச்சனான விச்வகர்மா நிர்மாணித்தது! 

.

தேவர்களுடைய சத்ருவான பண்டாஸுரனை வதம் பண்ணுவதற்காக அம்பாள் ஆவிர்பவித்தாள். உடனே, ”இவள்தான் நம் ராணி, ராஜராஜேச்வரி” 


என்று தேவர்கள் பட்டாபிஷேகம் பண்ணினார்கள். ராணிக்கு ராஜதானியாகவே விச்வகர்மா ஏகப்பட்ட கோட்டை கொத்தளங்களோடு தேவ 


லோகங்களெல்லாம் இருக்கும் மேரு பர்வத்தில் அம்பாளுக்கும் ஒரு ஸ்ரீபுரத்தை நிர்மாணித்துக் கொடுத்தான். ஆனால் ஆசார்யாள் வர்ணிப்பது 


அம்பாளே ஸ்ருஷ்டித்துக் கொண்ட அம்ருத ஸாகர ஸ்ரீபுரத்தைத்தான்.

.

மேரு மத்தியானாலும் ஸரி, அம்ருத ஸாகரமானாலும் ஸரி அதில் அவளுடைய ஊருக்கு போய்விட்டால் அங்கே ஒன்றும் வித்யாஸமில்லை. வெளிக் 


கோட்டையிலிருந்து ஆரம்பித்து அரண்மனையில் அவள் கொலுவிருக்கும் இடம் வரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான பிராகாரங்கள், வனங்கள், 


தடாகங்கள், பரிவாரங்கள்தான். அந்த  தலைநகரத்திற்கு ஸ்ரீபுரம் அல்லது ஸ்ரீநகரம் என்றே இரண்டிலும் பெயர். 

.

அது இருபத்தைந்து கோட்டைகளும் பிராகாரங்களும் சூழ்ந்தது. முதலில் இரும்பிலிருந்து ஸ்வர்ணம் வரை ஒவ்வொரு லோஹத்தால் ஒவ்வொரு 


கோட்டை. அப்புறம் நவரத்தினங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு கோட்டை. இப்படியே ஸூக்ஷ்மமாகப் போய் மனஸாலேயே ஆன கோட்டை, 


புத்தியாலேயே ஆன கோட்டை, அஹங்காரத்தாலான கோட்டை எல்லாங்கூட உண்டு. கடைசியில் ஸூர்ய தேஜஸ், சந்திர தேஜஸ், மனமத தேஜஸ் 


இவற்றைக் கொண்டே ஒவ்வொரு கோட்டை. கோட்டைகளுக்கு நடுவே திவ்ய வ்ருக்ஷங்கள் உள்ள பல வனங்கள், பல ஓடைகள். எல்லாம் தாண்டிப் 


போனால் இருபத்தைந்தாவது ஆவரணத்தில் — ஆவரணம் என்றாலும் ப்ராகாரம்தான் — மஹா பத்மவனம் என்று ஒரே தாமரை மயமாய்ப் பூத்த 


ஓடை வரும். அது அகழி மாதிரி. அதற்குள்ளே செங்கலுக்குப் பதில் சிந்தாமணிக் கல்களையே வைத்துக் கட்டியதான அம்பாளின் அரண்மனை வரும். 


.

அரண்மனையில் இருக்கிற ராணி, ராஜராஜேச்வரி என்பது ஒரு பக்கம். அப்படிப் பார்க்கிறபோது ஸதஸில் ஸிம்ஹாஸனம் போட்டுக்கொண்டு தர்பார் 


நடத்துவாள். முன்னேயே சொன்னாற்போல பஞ்ச ப்ரம்மங்களை நாலு காலாகவும் மேல் பலகையாகவும் கொண்ட ஸிம்ஹாஸனம். அதில் 


காமேச்வரன் மடியில் உட்கார்ந்து கொண்டு தர்பார் நடத்துவாள். ராணி என்ற அதிகார ஸ்தானத்தை முக்யமாக வைக்காமல் ப்ரஹ்ம தத்வத்தை 


லீலையில் திருப்பிய ச்ருங்காரமூர்த்தி என்று பார்க்கிறபோது பஹிரங்கமான ராஜ ஸதஸாக இல்லாமல் ஏகாந்தமான அந்தஃபுரத்தில் தர்சனம் 


தருவாள். அந்த தர்சனம் பெறுவதற்கு ரொம்பவும் உசந்த இந்திரிய நிக்ரஹம் பெற்றிருந்தால்தான் முடியும். தத்வார்த்தமான ச்ருங்காரத்தைப் 


புரிந்துகொண்டு தத்வத்துக்குள்ளே முழுகிப்போகிற பக்வமிருக்கிறவருக்கு மட்டுமே அப்படி தர்சனம் கிடைக்கும். ஸதஸில் ஸிம்ஹாஸனமாயிருந்த 


பஞ்ச ப்ரஹ்மாஸனம் இங்கே (அந்தஃபுரத்தில்) மஞ்சமாக இருக்கும். அதிலே காமேச்வரனோடு அம்பாள் இருப்பாள்.


Chapter: அம்பிகையின் இருப்பிடம் 

.

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment