February 08, 2012

முதல் முதலில் படித்த இந்துமதி சுஜாதா

கடைசியாய் நானும் ஒரு கதை படித்து விட்டேன். பார்டியோ பார்டி என்று சென்ற மாதம் பார்டி கொண்டாடி விட்டு, என் சொந்த ஊரான சேலத்தில், சொந்த வேலை விஷயமாய் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன்.

அவர் ஒரு சுஜாதா வெறியர் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு தமிழில் கிறுக்கும் ஆர்வம் இல்லை. வெறும் வாரப் பத்திரிகைகளை மேய்ந்து விட்டு அவசரமாய் அடுத்த வேலையில் என்னை அமிழ்த்திக் கொள்வேன்.

இம்முறை, இலக்கிய கூட்டத்தில் அலசு அலசு என்று பலர் அலசி காய வைத்து, புது சாயம் பூசி, ஒரு வழி பண்ணிவிட்டனர். நான் மட்டும் பாவப்பட்ட ஜந்துவைப் போல் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளின் நடுவே, சுருதி சேராது கூடக் கூவும் கோரஸ் பாடகியைப் போல், சம்மந்தமில்லாது அவ்வப்பொழுது எதையோ உளறிக்கொண்டிருந்தேன். இல்லாவிடில், இறுக்கி வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஏன்? ஒரு அரையணாப் பெறக்கூடிய ஒரு நாவலைக் கூட இது வரை படித்தறியாத பாமரத்தனத்தினால். இந்த உண்மை என்னை மிகவும் சுடவே, என் மாமா வீட்டின் புத்தக அலமாரியை  குடைந்து சுஜாதாவின் குட்டிக் குட்டிக் கதைகள் இரண்டைப் படித்தேன்.

1. குருப்ப்ரசாதின் கடைசி தினம்
2. தேடாதே
3. இறுதிப் புன்னகை


இவையெல்லாம் ஒரே புத்தகத்தில் இருந்ததால் என் கண்களிடமிருந்து தப்ப முடியவில்லை. எல்லாக் கதையும் வெகுவாய் ரசித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நன்றாய் இருந்தது.

குருப்ப்ரசாத் இறப்பு தெரிந்தே அவனுடன் பயணிக்கிறோம். நடுநடுவே தெரிந்தோ தெரியாமலோ, கிளுகிளுப்பு என்ற பெயரில், அரைகுறை மார்புடன் உலாவரும் பெண்கள் வர்ணிக்கப் படுகின்றனர். தேவையா என்பதெல்லாம் யோசிக்க அவகாசம் இல்லை. ஏனெனில் குருபிரசாத் பாவம் இறக்கப் போகிறான், இன்னும் சிறிதே நேர அவகாசம் தான். மார்பகத்தை ரசித்து விட்டுப் போகட்டுமே என்ற பச்சாதாபமாய் இருக்கலாம். அவன் மனைவியுடன் புணர்ந்ததை இன்னும் அழகாய் கூறவே முடியாது. கல்யாணம் ஆகாத எந்தப் பெண்ணும் அதைப் படித்தால் இனி திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவு இருந்தது அந்த விவரிப்பு. புசுபுசுவென்று புகைவிடும் எஞ்சின்களை இனி யாரும் ரசிக்க முடியாது. குருபிரசாத் இறந்ததும் கதையில் பிடிப்பு வருகிறது. அதற்குள் கதையும் முடிந்து போகிறது.

'இறுதிப் புன்னகை' நெஞ்சில் ரொம்ப பதிந்தது என்று சொல்ல முடியாது.

'தேடாதே' ரசிக்கும்படி இருந்தது. கடைசிவரை யார் என்று சொல்லாமல் நாளை பேப்பரை பார்த்து தெரிந்துக் கொள்ள சொல்கிறார். நானும் மூன்று நாளாய் பேப்பர் பார்க்கிறேன். இன்னும் புரியவில்லை. 

எல்லாக் கதைகளிலும் ஒரு குட்டி சம்பவத்தை வைத்து, எத்தனை அழகாய் கதை வளர்க்கலாம் என்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. கதை முழுதும் பேச்சுகளால் நிரப்பப்பட்டிருந்தாலும்,  ஒரு தேர்ந்த எழுத்து என்பது என்ன என்று கற்றுக்கொள்ள முடிகிறது. கதை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்ல இயலாது. ரசிக்கலாம். ரசித்தேன்.
_____

சுஜாதா கதைகள் படிப்பதற்கு முந்தைய நாள், மூன்றே மணி நேரத்தில் புத்தகத்தை கீழே வைக்க முடியாமல்,  கதையில் மூழ்கி, பாத்திரத்தோடு ஒன்றி, அழுது, சிரித்து மாய்ந்து போய் படித்து முடித்த பிறகும், முதன் முறையாய் நான் படித்த சில ஆங்கிலக் கதைகளுக்கு ஈடாய் என்னை வெகு நேரம் பாதித்தது என்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" கதையைச் சொல்வேன். நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் விச்வம், பரசு சிரிக்கின்றனர். அழுகின்றனர். கனவுகள் தொலைக்கின்றனர், பின் அதுவே வாழ்க்கையாகிப் பழகிப் போய், இருக்கும் வாழ்வில் இன்பம் தேடும் வழியில் திணிக்கப்  படுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் விச்வம் பரசுவாகும் வரையில் நடக்கும் கதைகள். இம்மி பிசகாமல்  எடுத்துக்கூறுகிறார்.  ஒரு வரியில் கூட சலிப்பு தட்டவில்லை. வரிக்கு வரி, உங்கள் வாழ்க்கையை, என் வாழ்க்கையை படம் பிடித்துள்ள இந்துமதிக்கு மனம்கனிந்த பாராட்டுகள்.

விச்வம், ருக்மணி உறவு அழகான நட்புறவு. ஒருவேளை ருக்மணி பரசுவுக்கு மனைவியாய் வந்திராவிட்டால்,  இவனுக்கே நல்ல தோழியாய், பின் வாய்ப்பிருந்தால் காதலியாய் மனைவியாய் வாய்த்திருக்கக் கூடும் என்று பல இடங்களில் தோன்றுகிறது. கொச்சைப் படுத்தப் படாத நட்புறவு. யாரேனும் இக்கதை படிக்கவில்லையெனில் ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள். நம்முள் இருக்கும்  விசுவம் இங்கு பாத்திரமாய் பேசுவது புரியும்.

______

நிற்க. ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன் மரத்தடியில் பதிவிட்ட மீள் பதிவு. 

24 comments:

  1. சுஜாதாவின் ‘பெண் இயந்திரம்’ படித்துப் பாருங்கள் ஷக்தி. செக்ஸ், விஞ்ஞானம், க்ரைம் எல்லாம் தவிர்த்து அவர் எழுத்தின் முழு வீச்சும் வெளிப்பட்டிருக்கும். இந்துமதியின் இந்த விமானங்களில் பலமுறை நான் பயணித்திருக்கிறேன். ருக்மணியின் கேரக்டரைசேஷன் எனக்கு மிகவும் பிடித்தமானது. நீங்கள் ரசித்து எழுதிய விதம் மிக நன்று.

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை.

    இந்துமதியின் கதை முன்பு எப்பொதோ படித்தது.நீங்கள் எழுதியிருப்பதை பார்த்ததும் மீண்டும் படிக்க ஆவலாக இருக்கு.

    ReplyDelete
  3. கணேஷ் ஐயா சொன்னது போல "பெண் இயந்திரம்" வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.அதைப் போல நாமொன்று படைக்கலாம் என்ற எண்ணம் வரும்..தொடர்ந்து கிடைக்கிற கதைகளை வாசியுங்கள்.நீங்கள் ரசித்த விதத்தையும் சுட்டிக் காட்டியது சிறப்பு.

    ReplyDelete
  4. தாங்கள் சொன்ன எந்தக்கதையையும் வாசிக்கும் வாய்ப்பு இதுவரை எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக மனம் திறந்து பேசுவதாக அமைந்துள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  5. நாவல்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
    அதைப்படிப்பதற்கு எங்கே நேரம் -என்று
    சொல்லும் போது எனக்குள் ஒரு பாரம்
    இருந்தும், எப்போதோ அங்கொன்றும்
    இங்கொன்றுமாக படித்ததுண்டு சிலநேரம்.
    மீண்டும் அது போன்ற வாய்ப்புவருமோ என்று
    ஏங்கும் நெஞ்சிலும் கண்களிலும் ஒரு ஈரம்.

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

    ReplyDelete
  6. எழுத்துச் சித்தர் சுஜாதாவின் "பெண் இயந்திரம்" நானும்
    படித்து மனதைப் பறிகொடுத்திருக்கிறேன்.
    இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" நாவலில் வரும்
    கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எந்த காலத்திலும் எந்த
    சூழலிலும் பேசப்படும்.. பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்..
    படித்ததில் பிடித்ததை உங்கள் ரசனையோடு எங்களுக்கு
    பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  7. இந்துமதியின் நாவல்கள் வாழ்க்கையின் பிற்பகுதிக்கு வந்தபின் புரிந்து கொள்ளக்கூடிய புதிய ரகசியங்களை கொண்டிருக்கின்றன என்பது என் கருத்து. கல்லூரி காளத்தில் புரிந்து கொண்டதற்கும் இப்போது புரிந்து கொள்வதற்கும் வேற்றுமை உள்ளது. வாசிப்பு அனுபவம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. இப்பொழுது இந்த மூன்று நாவல்களையும் எடுத்துப் படித்துப் பாருங்கள்; ஆறு வருடங்களுக்கு முன் எழுதியதிலிருந்து கருத்துக்களில் சற்றேயாயினும் மாற்றமிருக்கலாம்.

    ReplyDelete
  9. மிக்க நன்றி கணேஷ், வை.கோ சார், சாகம்பரி, மகேந்திரன், ராம்வி, மதுமதி, தமிழ்விரும்பி, ஜீவி.

    ஏறக்குறைய எல்லாருமே "பெண் இயந்திரம்" பற்றி சொல்லியிருக்கிறீர்களே! படிக்க வெண்டும். இது படித்த பிறகு, சுஜாதாவின் வேறு சில கதைகள் படித்தது ரொம்பவே பிடித்துப் போனது. "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" தொகுப்பு ஒவ்வொன்று முத்து.

    ஜீவி,

    உண்மை தான் :) இதை பதிவிடும் பொழுது, நாம் நடந்து வந்த பாதையில் தான் எத்தனை மாற்றங்கள். எப்படியெல்லாம் நம் ரசனை, எழுத்து, கோணம் வாழ்வு எல்லாமே மாறிப் போகிறது என்று வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அதற்கேற்றார் போல் மறுமொழியிட்டுவிட்டீர்கள் :) நன்றி.

    ReplyDelete
  10. //சுஜாதாவின் வேறு சில கதைகள் படித்தது ரொம்பவே பிடித்துப் போனது. "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" தொகுப்பு ஒவ்வொன்று முத்து.//

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் நானும் படித்துள்ளேன். எனக்கு பிடித்ததாக இருந்தது.

    ReplyDelete
  11. அழகான நறுக்குத் தெறித்தாற்போன்ற விமர்சனங்கள். இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். சாகம்பரி அவர்கள் சொல்வது போல் காலத்துக்கேற்றாற்போல் நம் உணர்வுகளில், புரிதல்களில் மாற்றங்களை உணரக்கக்கூடும். சுஜாதாஅவர்களின் சிறுகதைகள் சில படித்திருக்கிறேன். வாய்ப்பு அமைந்தால் இன்னும் பலவற்றைப் படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி ஷக்தி.

    ReplyDelete
  12. மிகவும் அழகிய பார்வை. கதைகளை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சகோதரி.

    ReplyDelete
  13. அந்தக் காலத்தில் ஏறக்குறைய சுஜாதா , இந்துமதி ,சிவசங்கரி, ஜெயகாந்தன் போன்ற எல்லோர் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். ஆனால் குறிப்பிட்டு எதுவும் நினைவில் நிற்பதில்லை. ஒரு சமயம் அவற்றை ஒரு முறை நோட்டம் விட்டால் எல்லாம் நினைவுக்கு வரலாம். என்ன செய்வது.?காலம் செய்யும் கொடுமை.. நான் கூகுள் க்ரோம் மூலம் வந்தால் பின்னூட்டம் இட முடிவதில்லை. இப்போது இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் மூலம் தான் சாத்தியமாகிறது.

    ReplyDelete
  14. கடசில வாசிச்சிட்டுயா ஷக்தி? அதைப்பகிர்ந்த விதம் அருமை

    ReplyDelete
  15. நாவல் படிப்பது என்னமோ தவறான செயல் போல அப்பா நினைப்பார். ஆனால் பேருந்து பயணங்களில் பிகேபி, சுபா, பாலகுமரன், இந்திரா சௌந்திரராஜன், ராஜேஷ்குமார்லாம் துணைவருவர். சுஜாதா இன்னும் துணைக்கு வரலை. உங்க பதிவை படித்தபின் அடுத்த முறை துணைக்கு சுஜாதாவை அழைக்கலாம்னு இருக்கேன் தோழி

    ReplyDelete
  16. ///ராஜிFeb 11, 2012 08:31 PM
    நாவல் படிப்பது என்னமோ தவறான செயல் போல அப்பா நினைப்பார்.////

    உங்களுக்கும் அப்படித்தானா! நானும் அப்படி கட்டுப் பாட்டுக்குள் அகப்பட்டதால் தான் அந்த அனுபவமே இல்லாமல் போயிற்று... இப்போது ஆவல் மாறிவிட்டது!... அது தவறா என்பது தெரியவில்லை இருந்தும் நானும் என் குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்கிறேன்... அது மாத்திரமா! இரவு நேரங்களில் கைத் தொலைப் பேசிகளையும், இணைய பார்வை வரலாறுகளையும் கூட சோதிப்பது வழக்கமாக இருக்கிறது... என்ன செய்வது பதின்ம வயது வைத்திருக்கும் தந்தைமார்கள் இந்த நவீன உலகில் இது போன்ற வேலைகளையும் செய்யத் தான் வேண்டி இருக்கிறது, போங்கள்.. என்னத்தான் நம்பினாலும் ஒரு பக்கம் எச்சரிக்கையாக இருப்பது நாற்று என்றும் தோன்றுகிறது அல்லவா!

    இந்த அப்பாக்களே இப்படித்தான் போலும்!

    ReplyDelete
  17. ஷைலஜா, ராஜி, கீதா, ஜி.எம்.பி, நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    தமிழ்விரும்பி :)

    பார்வைகள் மாறுகிறது :D

    வை.கோ சார்,

    ஏறக்குறைய அனைத்து கதைகளும் அருமை.

    ReplyDelete
  18. தங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக மனம் திறந்து பேசுவதாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  19. வாசிப்பு அனுபவத்தை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. நன்றி ராஜேஸ்வரி, மாலதி :)

    ReplyDelete
  21. குருபிரசாத் படித்த ஞாபகம்.. விவரங்கள் நினைவில்லை. சுஜாதா கதைகளில் நினைவில் நிற்கும்படி எதுவும் இல்லை என்பது என் அனுபவம். அந்த நிமிட சுவாரசியம், அத்தோடு சரி. fast food மாதிரி. still, தமிழில் அதிகம் படித்தது சுஜாதா தான். இந்துமதியின் சில சிறுகதைகள் படித்திருக்கிறேன்.. எதுவும் நினைவில்லை. இலக்கியம் என்று எல்லாம் சொன்னார்களே என்று சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதினதைப் படிச்சதும்.. பத்து பக்கம் தான்.. முடியலே. உடனே என்னிடமிருக்கும் ஒன்றிரண்டு சுஜாதா புத்தகங்களைப் புரட்டிப் பத்து பக்கம் படிச்சு ராமகிருஷ்ணனைக் கழுவினேன். எனக்கு இலக்கிய துவேஷி என்று யாராவது பட்டம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளத் தயார். இலக்கியம் கற்பூரம் மாதிரினு முடிவுக்கு வந்தேன்.

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை. அவரவர்க்கு ரசனை மாறுபடுகிறது. இன்னது தான் என வரையறுக்க முடியாது. பெரும்பாலானவர்களின் மனவோட்டத்தையொட்டி படைப்பை தருபவர்கள் போற்றபபடுகிறார்கள் :)

    ReplyDelete
  23. உங்கள் கருத்தை வெளிப்படையாய் சொன்ன விதம் பிடித்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரிஷபன் சார். (மாமாங்கத்துக்குப் பிறகு பதிலளிக்கிறேன்) :) உங்கள் மறுமொழியை இன்று தான் பார்த்தேன்

      Delete