January 29, 2010

கதோபநிஷத் (சோவின் எங்கே பிராமணன் - பாகம் 2)

spilt milk என்று சொல்வார்கள். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுவதைப் பற்றி படித்தும் கேட்டும் இருந்தாலும் அகக் கண்ணை கோபமோ வருத்தமோ மறைக்கும் பொழுது சூடாகவோ அல்லது தகாத வார்த்தைகளோ வந்து விழுகின்றன. விழுந்த வேகத்தில் அவசரச் புத்திக்கு வருந்துகிறோம். உதிர்த்த ஒரே ஒரு சொல்லால் இழந்த கதைகள், கணங்கள், உறவுகள், மனிதர்கள் பலப்பல. இப்படிபப்ட்ட அனுபவங்கள் எல்லோர் வாழ்விலும் நிரம்பியிருக்கும். அதிக பூஜா பலன் பெற்றவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவ்வப்பொழுது பலித்தும் விடும்.

நசிகேதஸ் தந்தை வாஜஸ்ரவஸ் மகத்தான யாகம் செய்கிறார். யாகத்தின் போது தானங்கள் வழங்கப்பட வேண்டும். தனது தந்தை உபயோகமற்ற வயது முதிர்ந்த மாடுகளை பேருக்கு தானம் செய்கின்றதை கண்ணுற்று அதைப் பொருக்காத நசிகேதஸ், சற்றே படிப்பனையூட்டும் வண்ணம் "என்னை எவருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்" எனக் கேட்கிறான். மீண்டும் மீண்டும் இதே கேள்விகளால் துளைத்ததும் பொறுமை இழந்த வாஜஸ்ரவஸ் "உன்னை யமனுக்கு தானமாக கொடுத்தேன்" எனச் சொல்ல உடன் யமலோகம் போகிறான் நசிகேதஸ். அவ்வளவு வலிமை வாய்ந்தவை உதிர்க்கும் சொற்கள்!

மூன்று நாட்கள் யமனைப் பார்க்க வாயிலில் காத்திருந்ததால் நல்லாத்மாவை காக்க வைத்ததன் பொருட்டு தன் தர்ம நியாயங்கள் அழிந்து விடுமோ என அஞ்சி நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அளிக்கிறான் யமன்.

முதலாவதாக, தன் தந்தையின் மேன்மை உயரும் பொருட்டு வரம் கேட்கிறான்

இரண்டாவதாக, எவ்விதமான யாகங்களும் வேள்விகளும் ஸ்வர்கத்துக்கு இட்டுச்செல்லக்கூடியவை எனக் கேட்டு, அதனைச் செய்யும் முறைகள் மந்திரங்கள் வழிகள் தெரிந்து கொள்கிறான். நசிகேதஸின் அறிவு கூர்மையை மெச்சி யமன் மிகவும் மகிழ்ந்து, குளிர்ந்து, அவனுக்குப் பட்டங்கள் வழங்கி மாலைகள் அணிவித்து மகிழ்விக்கிறான்.

அடுத்ததாக, அவன் கேட்ட வரம் "மரணத்திற்கு பிறகு நிகழும் நிகழ்வு என்ன?" என்பது. மரணத்திற்குப் பின் இருப்பு நிலை தொடரும் என்ற கருத்தும் அதனை மறுக்கும் வண்ணம் மரணத்திற்கு பிறகு இருப்பு நிலை இல்லாதொழியும் என்ற எதிர்மறைக் கருத்தும் நிலவி வருகிறது. தயை கூர்ந்து மரணத்திற்கு பின் என்ன என்ற ரகசியத்தை சொல்லி அருளுங்கள் என்கிறான். திடுக்கிட்டு போகும் யமனோ பல யோகிகளும் முனிவர்களும் கூட சந்தேகிக்கும் கேள்வியை நீ கேட்டு விட்டாய். இந்த ரகசியத்தைத் தவிர வேறு என்னவேண்டுமானாலும் கேள் என்க் கூறி வேறு வகையிலெல்லாம் நசிகேதஸைத் திசைத் திருப்பப் பார்க்கிறான். தன் ஆர்வத்தின் தீவிரம் விட்டகலாத நசிகேதஸும் மீண்டும் அதனையே வற்புறுத்திக் கேட்க, யமன் சொல்லும் விளக்கங்களே "கதோ'பநிஷதமாக உருப்பெற்றது.

January 21, 2010

பிரம்மச்சர்யம் ( சோ-வின் எங்கே பிராமணன் - பாகம் 2)


சில நூற்றாண்டுகள் முன்பு வரையும் கூட பிரம்மச்சரியம் பழவி வந்த வாழ்கை முறை. பிரம்மச்சர்யம் என்பது வேத அத்யாயனம் செய்யும் முறைகளும் அதற்கென கடைப்பிடிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் நிறைந்தது. பிரம்மம் என்ற உயர்ந்த லக்ஷியத்தை அடைவதற்கான முதல் படியாக இதைக் கருதலாம். இதனைப் பயில்பவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிற அகக் (மனக்) கட்டுப்பாடுகள் கடினம். அகக் கட்டுப்பாடுகளாக

* பெண்களிடம் பேசுவதை தவிர்த்தல்
* பிட்சையெடுத்து அந்த உணவையே உண்ணுதல் (பணிவு வளர்கிறது. அஹம் வெகுவாக அழிக்கப்படுகிறது)
* சத்தியம் பேசுதல்
* எப்பொழுதும் பகவத் சிந்தனையில் இருத்தல்


ஆகியவை சில விதிமுறைகள்.


"இனி நீ பிட்சை பெற்று உண்பாயாக" என்று உபநயன மந்திரமே கூறுகிறது.

இறைவனே திருவோடு ஏந்தி பிட்சை பெற்ற புராணம் உண்டு. கோபத்தில் சிவன் பிரம்மனின் தலையை பிடுங்கிவிட அந்தத் தலை அவரின் உள்ளங்கையில் திருவோடாக ஒட்டிக்கொண்டது. பார்வதிதேவியே அன்னபூரணி வடிவத்தில் பிட்சையிட்டு அவர் சாபத்திற்கு விமோசனம் அளித்தாள் என்பது புராண கூற்று. பிட்சை எடுத்தல் இன்னொருவரிடம் இல்லாத ஒன்றிருக்கு யாசகம் பெறுதல். நம்மிடம் இல்லை என்று கையேந்தும் போது உயர்வு மனப்பான்மை அகலும், பணிவு ஊற்றெடுக்கும். பிட்சையளிப்பவள் மஹதேவியாம் அன்னபூரணியிடம் ஞானத்தை பிட்சையாக கேட்கிறார் ஆதிசங்கரர்.


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி


அன்னபூரணியே, பூரணத்துவம் நிறைந்தவளே ஷங்கரனினுக்கு உகந்தவளே அன்னையே பார்வதியே எனக்கு ஞானமும் வைராக்யம் பிட்சையாக கொடு. என்பது ஸ்லோகம்.


பிரம்மச்சர்யத்திற்கு புற கட்டுப்பாடுகளுக்காக,

* கட்டாந்தரையில் படுத்துறங்குதல் (சுகத்தை விட்டொழித்தல்)
* வாசனாதி திரவியங்களை தவிர்த்தல்
* சிகை (குடுமி) வைத்தல்


முதலியவை விதிக்கப்பட்டிருக்கின்றன.

பிரம்மச்சரியம் மிக கடினமான வாழ்கை முறையாக இருந்து வந்திருக்கிறது. புலனடக்கம் பிராதான பங்கு வகித்திருக்கிறது. பிரம்மச்சரியத்தை வேண்டி துவங்குபவன் சௌரம் என்னும் சிகை வைத்தலை மேற்கொள்கிறான் (தர்கால வழக்கில் குடுமி). தந்தையார் தமது மைந்தனுக்கு மந்திரங்கள் சொல்லி செய்யப்படுவது. அறிவும் செல்வமும் நிரம்பப் பெற இறைவனை வேண்டுகின்றனர். மந்தரங்கள் சரிவரச் சொல்லி பிரம்மச்சர்யத்தை முறையாக கடைபிடிப்பவன், தினமும் ஸ்நானம் செய்கையில் சிகை நீர் கொண்டு நரகத்தில் உழலும் ஜீவன்களுக்காக, உலக நன்மைக்காக மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பிரம்மச்சரியம் எல்லா வர்ணத்தவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசர்யம் முடிந்த பின் தொண்ணூறு சதவிகிதம் பேர் க்ருஹஸ்தாசிரமம் ஏற்று சிறந்த க்ருஹஸ்தனாக விளங்குகின்றனர். க்ருஹஸ்தாசிரமம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. வெகு சொற்பம் பேர்கள் நைஷ்ட்கிக பிரம்மச்சாரியராய் (நித்திய பிரம்மாச்ச்சாரி) தொடர்கின்றனர். ஆதிசங்கரரைப் போல் சிலர் க்ருஹஸ்தாசிரமம் விடுத்து சன்யாசம் ஏற்கின்றனர். சன்யாசம் ஏற்பதற்கு பெற்றோரின் சம்மதம் மிக அவசியம். இறைவனே முதலை ரூபத்தில் தோன்றி அவர் தாயாரின் சம்மதம் பெற உதவினார் என்பது தெரிந்த கதை. மத்வாச்சார்யார் சன்னியாசம் மேற்கொள்ள பெற்றோர் மறுத்ததும், பின்னர் அவர் தந்தை நமஸ்கரித்து விண்ணப்பித்ததும், அதற்கு மத்வாசார்யார் "தந்தை நீர் வணங்கியதாலேயே நான் சன்யாசம் பெற்றேன்" என்று கூறி அவர்களுக்கும் இன்னொரு பிள்ளை பிறந்தவுடன் சன்யாசம் ஏற்பதும், முதல் பகுதியிலேயே நாம் பகிர்ந்து கொண்ட கதை. எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. வரலாற்று சான்றுகளின் படி நரேந்திரர் சன்யாசம் பெறுவதற்கும் நைஷ்டிக பிரம்மச்சரியம் தொடர்வதற்கும் அவர்கள் வீட்டில் அனுமதி வழங்கப்படவில்லை எனினும் அவர் தம் பயணத்தை தொடர்ந்தார்.

January 19, 2010

சித்தி (sidhdhi) - (சோவின் எங்கே பிராமணன் - பாகம் 2)


சித்தர்களைப் பற்றியும் அவர்களின் விசேஷ சித்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்। அஷ்டமா(மஹா) சித்திகள் வரப் பெற்றவர்கள். (யோக சித்திகள் எட்டு என ஹிந்து மதம் அறிவிக்கிறது) இறையை அறியும் தேடலில் சித்தி முதலில் கிடைக்கப் பெறும் என்று கூறுவர். பிறப்பின் உயர்ந்த நோக்கத்தில் இறையின் தேடலில் ஈடுபடும் ஒருவன் தனது பாதையில் சித்தியிலே நின்றுவிடாது ஞானத்தை நோக்கி மேல் செல்ல வேண்டும். யோக சித்திகள் கிட்டியவுடன் நிறைவு பெற்றுவிட்டால் அவனின் பரிபூரணத்துவம் நிறைவு பெறுவதில்லை. சித்திகள் கர்வத்தை வளர்த்து விடக் கூடும் சாத்தியம் உண்டு. சித்திகள் வரப் பெற்றதும் அதிலேயே தம் தேடலை நிறுத்தி விடாமல், ஞானத்தை நோக்கி உயர்வதே சிறந்தது.

பரிபூர்ணத்துவம் பெற்ற நிலையில் சித்திகளை மனித குலம் உய்விப்பதற்காக உபயோகித்து, பிறப்பின் நோக்கம் உணர்த்திய சித்தர்களும் பலர். பதினெண்சித்தர்கள் எனப் போற்றப்படுபவர்களில் சிவவாக்கியரும் ஒருவர். சித்தர்களில் தலை சிறந்தவராக கருதப்படுகிறார். உயிரற்ற உருவ வழிபாடுட்டு முறை, மூட நம்பிக்கை பலவற்றையும் இவர் தமது பாடல்களில் சாடியுள்ளார். அகத்தே தேடலைத் தொடராத, இயந்திரத்தனமான சமய வழிபாடுகளைப் பற்றி பாடல்களில் பாடியுள்ளார்.

நாலுவேதம் ஓதுவீர் ஞானப்பாதம் அறிகிலீர்!
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்!
ஆலமுண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே...
காலனென்று சொல்லுவீர் கனாவிலும் அஃதில்லையே!


வேதம் ஓதினாலும் நீங்கள் இறைவனை அறிதானில்லை, பாலுள் நெய்யைப் போன்று உம்முள் உரையும் அவனை நீங்கள் அறிந்தானில்லை என்ற கருத்து படி உயர்ந்த தத்துவத்தை உரைக்கும் பாடல்கள். இவர் ஆத்திகரா அல்லது நாத்திகவாதத்தை முன் மொழிந்தவரா என என்று இன்று வரை சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ..நாதன் உள்ளிருக்கையில்!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

என்ற பாடலில் இறைவனை உன்னுள் தேடு என்ற உயர்ந்த தத்துவம் உணர்த்த முயன்றுள்ளார். அதனால் இவர் இறைவனை மறுத்தாரில்லை என்பது தெளிவாகிறது. உணவை சமைக்கும் பாத்திரமும் சட்டுவமுமா சுவை அறியும்? கல்லை கடவுளென்று நம்பும் அறிவீனனே அவன் உன்னுள்ளல்லவா இருக்கிறான்? என்கிறார். "அஹம் பிரமாஸ்மி" என்ற உபநிடத தத்துவத்தின் எளிய சாராம்சம்.

January 17, 2010

இறைவனுடனான உறவு (சோ-வின் எங்கே பிராமணன்)


வைதீக காரியங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் சரியாகவும் முறையாகவும் சொல்லப்படுதல் அவசியம்। அப்படி சொல்லப்படும் போது அந்த வார்த்தைகேயுறிய அதிர்வுகள் சரியாக அமைந்து நல்லன விளைவிக்க வல்லது। குறிப்பாக வேத மந்திரங்கள் இறைவனையோ இன்னபிற தேவதைகளையோ வேண்டி அழைத்தும், போற்றியும் சொல்லப்படுவதால், உச்சரிப்பு கவனம் வெகு முக்கியம்। அது தவிர வேத மந்திரங்களுக்கென தொனியும் ஸ்வரங்களும் உண்டு. ஸ்வர பேதம் எதிர்மாறான விளைவுகளைக் கூட ஏற்படுத்த வல்லது। வேதம் ஓதும் பொழுது,

* ஸ்வர பேதம்
* ராகமாக இழுத்து உச்சரித்தல்
* அவசரமாக மந்திரம் ஓதுதல் (குறில் நெடில் முறையாய் பிரயோகித்து அதற்கென உரிய காலக் கணக்கில் உச்சரிக்கவேண்டும்)
* அதீத அங்க அசைவுகளுடன் ஓதுதல்
* இயந்திரத்தனமான உச்சரிப்பு
* அர்த்தம் மாறும் வகையில் உச்சரித்தல்
* குரல் கம்மி பிசிருதல்


முதலியவை செய்யக்கூடாத ஆறு குற்றங்களாம்.

பகுதி ஒன்றில் சோ அவர்கள் த்வஷ்டா என்ற தேவதச்சனின் கதையை பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்திற்கும் வரலாம். இந்திரனைக் கொல்லும் மகனுக்காக வேள்வி நடத்தி, மந்திரஹீனத்தால் இந்திரனால் கொல்லப்படும் மகனையே வரமாகப் பெற்றான் என்பது கருத்தில் கொள்ள உகந்தது. வேதத்தை முறையாக கற்றாலேயன்றி உச்சரிப்பதை தவிர்ப்பது நலம்.

இவ்வளவு மெனக்கெட்டு ஸ்வர சுத்தியும் சரியான உச்சரிப்பும் சேர்ந்து இறைவனை துதி செய்து, நித்தியம் தியானம் செய்தால், முக்காலமும் நினைந்தால், நம் முயற்சி எல்லாம் திருவினையாகுமா? கேட்டதாலாம் கொடுப்பானா? என்றால் இல்லை. சில முயற்சிகள் லபிக்கலாம். வேறு சில முயற்சிகள் கர்மவிதிப்படி நடவாமலும் போகலாம். நம் கர்மவினைப்படி தான் வாழ்க்கை அமைகிறது. இறைவன் நமக்கு மன அமைதியும், துன்பம் வரும் பொழுது அதை எதிர்கொள்ளும் ஷக்தியும் தர வல்லவன். இறையருளும் பலனும் வெகு விரைவில் கிட்ட நம்மில் பலர் இன்னும் உதாரண பக்தனின் நிலைக்கு உயரவில்லை.

சில நிகழ்வுகளுக்கு மனிதனுக்கு அப்பாற்பட்ட ஷக்தியும் காரணமாய் இருந்து வந்திருக்கிறது. இறைவன் செயல் என்று இதைச் சொல்லுகிறோம். கும்பகர்ணன் நித்திய வாழ்வு வேண்டி கடும் பனி, குளிர், வெப்பத்தில் தவமியற்றி அதன் பின் வரம் கேட்கிறான். இவனுக்கு நித்திய வாழ்வளித்தால் மக்கள் நிலைமை பரிதவிக்கும் என்று கருணைக் கொண்டு சரஸ்வதி உட்புகுந்து அவன் நாப்பிழற்றுகிறாள். இறுதியில் அவன் "நித்திரை வாழ்வு" வேண்டி நின்றான். இதனை தெய்வ சங்கல்பம் என்று கூறாமல் வேறு என்னவென்று அழைப்பது? தெய்வம் சில நிகழ்வுகளை நிகழ்த்தும், வார்த்தைகளை உதிர்க்க வைக்கும்.

மனிதன் தான் எப்பேர்பட்ட சுயநலவாதி! தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே இறைவனை நாடுகிறான். பரிபூர்ண அன்பு இல்லாது இறைவனிடம் தனக்கு வேண்டியவற்றை பேரம் பேசுகிறான்! வியாபாரம் நடத்துகிறான். இது எப்படி சரியாகும்?

க்ருஷ்ணன் கீதையில் தன்னை நான்கு வகையான பக்தர்கள் வணங்குகின்றனர் அவற்றுள் ஞானியே உயர்ந்தான் என்று கூறுகிறான். அப்படியெனில் மற்ற வகை பக்தர்கள் மட்டம் என்றில்லை. இறைவனிடத்து நம்பிக்கையற்று இருப்பதைக் காட்டிலும் அவனை நம்பி உச்சி குளிர்வித்து தமக்கு வேண்டியதை பேரம் பேசும் பக்தி ஒரு படி மேல்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ஸுக்ருதினோ அர்ஜுன
ஆர்த்தோ ஜிக்ஞாஸுரர்தார்தீ ஞானீ ச பரதர்ஷப


(பகவத் கீதை)

என்னை நான்கு விதமான மக்கள் வணங்குகின்றனர். ஆசைகளின் ஆதிக்கம் மிகுந்தவன், துன்பத்தில் உழல்பவன், அறிவுத் தாகம் கொண்டு என்னை(தன்னை) அறிய முயல்பவன், அறிஞனாம் ஞானி. இவர்களுள் எனக்கு நான்கு பேரும் ப்ரியமானவர்கள் எனினும் அதில் ஞானி எனக்கு மிக அருகில் நிற்கிறான். என்னை அடைந்தவனாகிறான் என்கிறார்.

இறைவனிடம் பேரம் பேசும் வழியிலாவது அவனை நினைவது, அவனை நினையாமல் இருப்பதை விட மேலாம்.

January 15, 2010

சீமந்தம் (விழா/சடங்கு) (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி - 2 )

சீமந்தம்
______

பூணூல் விழாவிற்கும் மணவிழாவிற்கும் பொருந்துவது போலவே தற்காலத்தில் வைதீக முறைப்படி நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியும் வழி வகுத்திட்ட முறைப்படி நடப்பதில்லை. அதன் சாரம்சமே அழிந்து படாடோபமும் வீண் விரயச் செலவுகளும் டாம்பீகமும் மிஞ்சி நிற்கிறது. தேவையற்ற பகட்டும், பணமும் இரைக்கபடுகிறதேயல்லாமல் வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவை செய்பவர்கள் வெகு சொற்பம். தம் வருமான ஷக்திக்கும் மீறி போலி கௌரவத்திற்காக இவ்விழாக்களுக்கு அதீதமாக செலவு செய்வது தேவையற்றது.

சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் பகட்டுக்கும முக்கியத்துவம் கொடுப்பதை விட முக்கியமானது நம் விழக்களை சிறப்பித்து கொடுக்கும் / நடத்தி கொடுக்கும் ஏனைய உதவியாளார்கள், மந்திரம் ஓதும் புரோஹிதர்கள், தொழிலாளர்கள் முதலியோர். அவர்கள் மனம் கோணாது இன்புறும் வகையில் அவர்களை மரியாதை செய்து திருப்தி படுத்தி அனுப்புதல் விசேஷங்களின் பலன்களை முழுமையாக்கும்.

சிறு அளவிலான மனைவிழாக்களாகட்டும் அல்லது பெரிய அளவிலான யாகம் செய்யும் பொழுது அதற்கு உதவிய கீழ் நிலைத் தொழிலாளிகள், யாக மண்டபத்தை அலங்கரித்தொர், என்று தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பலவேறு மக்களுக்கும் உகந்த மரியாதை செலுத்தப்படவேண்டும். அப்பொழுது தான் யாகமோ பூஜையோ நிறைவு பெறும். பலன் முழுமை பெறும். எந்த வித மகத்தான காரியங்கள் நடைபெறுவதற்கும் தொழிலாளிகளின் உதவியன்றி அணுவளவும் முடியாது. தொழிலாளர்களின் 'நடைமுறை அனுபவமே' கற்றறிந்த சாஸ்திர சம்பிரதாயங்களைக் காட்டிலும் உடன் கை கொடுப்பது.

சீமந்த சுபநிகழ்வின் போது மந்திரங்கள் தாய் சேய் நலத்திற்காகவும், பிறக்கும் பிறவி நல்ல பிறவியாக அமைவதற்கும், அப்படி பிறந்த பிறப்பு தன் உயர் லக்ஷியமாம் பிறப்பின் தளை அறுத்து வீடுபேற்றை அடைய வேண்டி வேத மந்திரங்கள் ஓதி வேள்வி செய்யப்படுகிறது.

பும்சவனம் என்பது பிள்ளை வரம் வேண்டி செய்யப்படும் சடங்கு. பிள்ளைக் குழந்தைகள் சந்ததிகள் என்று கருதப்படுவதால், பிள்ளை வரம் வேண்டுகின்றனர். கர்ப்பகால அறிகுறிகள் தெரியும் போதே பும்சவனம் செய்யப்படவேண்டும் என்பது நியதி. சில சாரார்களின் வழக்கப்படி, முள்ளம்பன்றியின் முள்ளினால் வகிடு எடுக்கப்படுகிறது. புத்தி கூர்மையுள்ள சிசு பிறக்கவேண்டும் என்பதற்காகவும், கர்பமுள்ள ஸ்த்ரீயை அழகு படுத்தி, சந்தோஷபடுத்தும் வகையில் வகிடு எடுத்து, தலை பூச்சூட்டி, அலங்கரித்தும் நடத்தப்படுகிறது. அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.

முள்ளம்பன்றியின் முள் கொண்டு வகிடு எடுத்தல் பல இனத்தவரிடையே இருந்து வரும் பழக்கம். அவர்கள் கற்பிக்கும் காரணங்கள் வித்தியாசமாகவும் வெவ்வேறாகவும் இருக்கிறது. கொங்கிணி பேசும் சில இனத்தவரும் இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், முள்ளம்பன்றியின் முள்ளால் நன்கு (இரத்தம் வரும் அளவு) அழுத்தல் வேண்டும். அப்படி அழுத்தும் பொழுது கர்பஸ்த்ரீ வலி பொறுக்கிறாள். இது பேறு கால வலிக்கு ஒரு முன் அறிவிப்பைப் போல் அவளை தயார் படுத்துவதற்காக செய்யப்படுகிறதாம்.

January 12, 2010

பக்தன்- சோ-வின் எங்கே பிராமணன் (இரண்டாம் பாகம்)

பக்தன்
_____


துன்பம் வரும் போது விரக்தி மனநிலைக்கு தள்ளப்படும் நடுநிலை பக்தர்கள் பெரும்பாலும் நாத்திகர்கள் ஆவதில்லை. துன்பமுற்ற நேரம் இறைவனை நிந்திப்பது நம்மில் பலரும் செய்யக்கூடியது. இறைவனை நிந்திப்பது என்றால், இறைத்தத்துவத்தின் மேல் நம்பிக்கையற்ற நிலை, விரக்தி, நல்ல செயல்களிலும் தர்மங்களிலும் நம்பிக்கை குறைதல் போன்றவையும் அடக்கம்.

இந்திரஜித் மாயா-சீதாவை உருவாக்கி அவளை அழித்த போது வானர சேனைகள் செயலற்று நின்றுவிடுகின்றனர். இலக்குவனும் இராமனும் கூட இம்மாயையில் சிக்குண்டு மனம் வெம்பி விடுகின்றனர். அப்போது இலக்குவன் தர்மம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை என்ற நம்பிக்கை இழந்து புலம்புகிறான். 'தர்மம் கடைபிடித்து நாம் கண்ட பலன் தான் என்ன!' என்று அரற்றுவதாய் சரித்திரம்..

விரக்தி நிலை பெரும்பாலும் நீடிப்பதில்லை. சொற்ப காலத்திற்கே ஆட்டுவிக்கும் பரிதவிப்பு நிலை. அதன் பின் உண்மை பக்தன் தன் நிலைக்கு திரும்புகிறான். அவன் ஒரு போதும் நாத்திகன் ஆகிவிடுவதில்லை. இது சாதாரண சாமான்ய நடுநிலை பக்தனின் நிலை என்றால், 'என்ன தலைவிதி' என்று நோகாத மனிதனோ ஞானியின் நிலையில் உள்ளவன்.

துன்பம் நேரும் போதெல்லாம் துவண்டுவிடாது இறைவனையே பற்றியிருப்பவன் சிறந்த பக்தன். உயர்ந்தவன். உதாரண புருஷன். பல பக்தர்கள், மஹாபுருஷர்களின் கதையோ நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதையையோ அறிந்து, தெளிந்து கொண்டோமேயானால் அவர்களின் வைராக்கியம் மனவுறுதி, பக்தி போன்றவை பொன்னைப் போல் ஜொலிப்பதைக் காணலாம்

திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவர் எட்டாம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இவரைப் பற்றிய செய்திகள் அறியலாம்.

சிவபெருமானின் "திருநீலகண்டம்" என்ற திருநாமத்தை அடிக்கடி வழங்கிவந்ததால், திருநீலகண்ட-குயவனார் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. ஓடு செய்து அவற்றை அடியவர்களுக்கு இலவசமாக அளித்து வருவதை திருப்பணியாக செய்துவந்தார். சிறு குறையேனும் இல்லாத மனிதன் ஏது? அவரால் பெண்ணின்பத்தை துறக்க முடியாமற் போனது. இதனால் மனம் நொந்த அவரது இல்லத்தாள், "எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்" எனக் கூறி தள்ளிவைக்கிறாள். "எம்மை" என்று கூறியதால் இனி எந்த பெண்டிரையும் யாம் தொட மாட்டொம் என உறுதி பூண்டு அதன் படி நடந்தும் வந்தார். மணவுறவு கொள்ளாமலே இருவரும் இளமை தொலைத்து முதுமையும் எய்தினர்.


ஒரு நாள், சிவனடியார் ஒருவர் திருநீலகண்டரை நாடி தமது திருவோட்டினை கொடுத்து, ஒப்பற்ற அந்த திருவோடு பொக்கிஷம் போன்றதென்றும் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுமாறும் விண்ணப்பித்து தம் பயணத்தைத் தொடர்ந்தார். சில நாட்கள் சென்று திரும்ப கேட்கும் போது, ஓடு தேடிப்பார்த்தும் தென்படவில்லை. வேறு தருவதாகவும், அதைவிடவும் நல்ல ஓடு தருவதாக வாக்களித்தும் சிவனடியார் மனம் சுருங்கி சினம் கொள்கிறார். திருநீலகண்டரே அதை கவர்ந்து கொண்டு தம்மிடம் பொய் பேசுவதாக கோபிக்கிறார்.

உன் மகனின் கையைப் பற்றி சத்தியம் செய் என்கிறார். மகன் இல்லை என்றால், மனைவியின் கை பற்றி குளத்தில் முங்கி சத்தியம் செய் எனக் கூறுகிறார். சிவனடியார் உடனே சபை கூட்டி வழக்கு தொடர்கிறார். நீர் செய்தது சரியென்றால் ஏன் சத்தியம் செய்ய தயங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிகின்றனர் அவையோர். மனைவியை தீண்ட முடியாத காரணத்தை ஊர் அறிய உரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். தடியொன்றின் ஒரு முனையை இவர் பிடித்தும், மறு முனையை மனைவியை பிடிக்கச் செய்து குளத்தில் முங்கி எழுகிறார்.

குளத்தில் முங்கி எழுந்த மாத்திரத்தில் அவர்கள் முதுமை நீங்கி இளமைத் தேகம் பெறுகின்றனர். சிவனடியார் மறைந்து அங்கே ஈசன் காட்சியளித்து புலனடக்கம் மிகுந்த அவர்களை வாழ்த்தி அருளியதாக வரலாறு கூறுகிறது.

நன்றி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

(for further reference on thiru-neelakanta nayanaar)