October 13, 2024

வாணி களிநடம் புரிவாய் நீ

 


ஆயக்கலைகளெலாம்,
அம்மா உன் சரணமதில்
தூய மலராகி தூமணம் வீசுதடி.
தேவாதி தேவர்கள்
ஆற்றும் வினைகளெலாம்,
மையப் பொருளான
மதியுனையே பேசுதடி.
.
காயத்தால் தரித்து;
சாயத்தால் திரிக்கும்,
மாயக்கலைகளின்
மனங்கவர் வடிவழகி!
ஆயர்குலத்தழகன்,
நேயக்குழலிசையின் ;
ரீங்காரமாகி நிற்கும்
ஓங்கார உறைபொருளே!
.
இயலிசை காவியத்தை
ஓட்யாண நகையாக்கி,
ஒய்யாரமாகவே
இடைபுனைந்த இனியவளே!
ஞானமெனும் ஊற்றே!
பேறிவின் பெருநிதியே!
பையப்பையவே
பாரெலாம் நிறைந்தவளே!
.
நான்முகன் நாயகியே!
நானுனைப் பாடிடவே,
பாமகளே என்
நாவினில் பூத்துவிடு.
வீணைமீட்டியே
விதவிதமாய்க் கவியெழுது.
திமிதிமியெனவே
என்னுள் நர்த்தனம் ஆடிவிடு.
.
சூக்குமமெல்லாம் குறையறவே
சூதனமாய் ஊட்டி விடு.
நாவடக்கம் வேண்டுமென
நிச்சயமாய் சொல்லிவிடு.
வெண்தாமரை தண்டதனை
தேனில் குழைத்தெடுத்து,
ஊனில் கலந்தே
உதிரத்தில் நிறைத்துவிடு.
- ShakthiPrabha

No comments:

Post a Comment