ஆரம்பத்திலிருந்து லேசாக இருந்து அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக வலுப்பட்டுக் கொண்டுவந்த மோக்ஷ ஆசையை நன்றாக புத்தி பூர்வமாக, மனப்பூர்வமாகத் தீவிரப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றாகிறது.
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
August 11, 2022
Trust in your guru, trust in god, trust in your path and yourself - தெய்வத்தின் குரல் (volume 6)
August 07, 2022
In pursuit of "self-realisation" - #Deivathin_kural Volume 6
ஆத்ம சாதனையின் ஆறு அங்கங்கள்: “சமம்”, “தமம்”, “உபரதி”, “திதிக்ஷை”, “ச்ரத்தை”, “ஸமாதானம்”
August 01, 2022
திமிரு புடிச்சவ
(This story was posted for Notionpress national short story writing contest. I had been rated with 51000 points from editors and few friends. Thankyou everyone)
அதுக்கு காரணம் ரேவதி.
ஆரம்பத்துலருந்தே ரேவதிய அவளுக்குப் பிடிக்கல.
நாலுபேரு மத்தில தனியாத் தெரியறாளே அவதான் ரேவதி. மிடுக்கா நடக்கறா. வானத்து தேவதையே கீழ வந்தமாதிரி விழுந்தடிச்சு பலபேர் அவகிட்ட பேசத் துடிக்கறாங்க. ஆனாலும் அவ யார் கிட்டயும் பெருசா பேசினதா தெரியல. எல்லாரும் வெக்கும் வணக்கத்துக்கு லேசா சிரிச்சு, தலைய மட்டும் அசைச்சு நகர்ந்துட்டே இருக்கா. கொஞ்சமா மேக்கப் போட்டிருக்குற மாதிரிதான் தெரியுது. அம்பது வயசத் தாண்டியாச்சுன்னு அங்கங்க எட்டிப் பாக்கும் வெள்ளமுடி சொல்லுது.
"நல்லா கேட்டுக்க பவானி, இப்படியொரு மாமியார் இருந்தா உன்னால காலந் தள்ளவே முடியாது. தூக்கி சாப்புட்டு ஏப்பம் விட்டுடுவா. கவனமா இருந்துக்க" - ஈஸ்வரி பவானி காதுல ஓதுறா.
***
ஈஸ்வரி ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டவ. அது பெரிய கதை, சின்னதா நாலுவரியில முடிக்க முடியாது. சிவனேசனுக்கு ராசாத்தின்னு அம்சமா பொண்டாட்டி இருந்தா. அவ மேல உசுரையே வெச்சிருந்தாலும், ஈஸ்வரிய கட்டினது அரைநிமிச சபலத்துனால நேர்ந்து போச்சு. ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டவங்க வீட்டையே ஆட்டி வெக்குறத கேள்விப் பட்டிருப்பீங்க. இங்க நடந்ததே வேற.
"அப்படி எங்கிட்ட இல்லாதத இவகிட்ட என்னத்த கண்டீங்க? அடியே, ஆம்பள எப்ப வருவான்னு நீயும் காத்துட்டு இருந்தியா!" - இதெல்லாம் ராசாத்தி நல்லவிதமா, சாந்தமா இருக்கும்போது பேசற பூமாதிரியான வார்த்தைங்க.
ராசாத்தி அழகுல மயங்கியும், செஞ்ச தப்புக்கு வெக்கப்பட்டும் சிவனேசன் அவ எது சொன்னாலும் மறுபேச்சு பேசினதில்ல. ஈஸ்வரிய எனாமா கெடச்ச வேலக்காரிப் பொலத்தான் நடந்த்தினா. விதி பாருங்க, ராசாத்தி புள்ளகுட்டி சுமக்கல. ஈஸ்வரிக்குத் தான் பவானி பொறந்தா. அழகா இருக்குறவங்க மனசுல அகங்கார பிசாசு புகுந்துக்குன்னு ஈஸ்வரி நம்பினா. பவானிக்கும் அத சொல்லிச் சொல்லி வளத்தா. சரிசரி ஈஸ்வரி பழங்கத நமக்கெதுக்கு!
பவானி ரெண்டாம் வகுப்பு படிக்கறப்ப, பெரிய கண்ணு மொழுமொழு கன்னத்தோட வெள்ளவெளேர்னு இருந்த கனகா காரணமே இல்லாம இவளச் சீண்டி அழவிடுவா. இவளும் தனியா உக்காந்து தேம்புவா.
பதனஞ்சு வயசு இருக்கும்போது, மணிகண்டன் கூட தொடக்கத்துல நல்ல தோஸ்தாத் தானே இருந்தான், 'நல்லா படிக்குற புள்ள நீ, எனக்கும் கணக்கு சொல்லிக்குடு'ன்னு இவள சுத்திச் சுத்தி வருவானே.., அதெல்லாம் ரோசலின் வகுப்புல சேர்ற வரைக்குந்தான். அப்படியே அள்ளிட்டுப் போயிட்டா. அவ சினேகிதத்துக்கு தவமிருந்த பசங்க ஒண்ணா ரெண்டா! ரோசலின் ரொம்பத்தான் கெத்து காட்டினா. மணிகண்டன் அப்புறம் ஏன் பவானிய திரும்பி பாக்கப் போறான். இதமாதிரி பலபேரு. அதுக்கப்புறம் வனப்பா இருக்குறவங்கள பவானி கண்டாலே ஒதுங்கி போயிடுவா.
***
பவானி இன்னமும் ரேவதியத்தான் பாத்துட்டு இருக்கா. அந்த டவுனப் பொருத்தவரை ரேவதி கொஞ்சம் பரிச்சியமான முகந்தான். சின்னச் சின்ன நாடக மேடையில கூட பாத்திருப்பீங்களே. இத்தன மனுஷங்க இவ பின்னாடியே போறாங்கன்னா அதுக்குக் காரணம் ஆள மயக்குற பேச்சும் தோரணயுந்தான். நீங்களே பாக்கறீங்களே, முடி நரைச்சது கூட அவளுக்கு கம்பீரமாத் தானே இருக்கு! ரேவதியப் பாக்கப் பாக்க பவானிக்கு எரிச்சலா இருந்தது. இருக்காதா பின்ன, ராசாத்திய விட எக்கச்சக்க அழகும் திமிரும் நடையிலயே தெரியுதே!
"ரேவதியப் பாத்தியா அடங்கி ஒடுங்கி போறமாதிரி சாதுவான பொண்ண கூட்யாந்துட்டா! அது வீட்டோட கெடக்க போவுது இவ ஊரச் சுத்திட்டு திரியுவா" - பவானி காதுபடவே பேசுறாங்க.
***
அது ஒரு சின்ன கிராமம். அப்பாவுக்கு சொற்ப வருமானம் அதனால அம்மாவும் சேர்ந்து வீடுவீடாக தின்பண்டம் வித்துத்தான் குடும்பத்தை நடத்தினாங்க. சிட்டு போல பறந்து திரிஞ்ச வயசு.
"என்னடி பாப்பா உனக்கு நீலக் கண்ணு! வெள்ளக்காரனுக்கு போறந்த மாதிரி மின்னுற!" - அம்மா இதக் கேட்டு கூசினாலும் அவளுக்கு பெருமையாத் தான் இருந்தது. 'அம்மா நான் வெள்ளக்காரனுக்கு பொறந்தெனா?" ஒரு நாள் ஆர்வத்துல கேட்டுட்டா. அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி அடிச்சு ஏன் துவம்சம் செய்யறாங்கன்னு அவளுக்கு புரியல.
பன்னண்டு வயசு இருக்கும். பேச்சுப்போட்டி அறிவிச்சிருந்தாங்க. இயற்கையாவே பேச்சுல ஆர்வம் இருந்தது. திறமையும் இருந்தது. முதல் பரிசுத்தான் வாங்கினா. பேச்சுப் போட்டியில அவளுக்கு இணையா போட்டிபோட யாரால முடியும். வானத்துல பறந்தா.
"தளுக்கி மினுக்கிட்டு வந்து என்னத்தயோ பேசி பரிச தட்டிட்டுப் போயிருச்சு. அடுத்த முறை நீ வாங்கலாம்"- பரிசு கெடக்காத பிள்ளைங்க்ள பெத்தவங்களும் மத்தவங்களும் உற்சாகப் படுத்திட்டிருந்தாங்க.
"ஏமா நான் நல்லா பேசலயா? மினுக்கிட்டு வந்து எதையோ பேசி பரிசு வாங்கிட்டேனு சொல்லிட்டாங்களே!"
"இந்த உலகத்துல திறமைய விட அழகுக்குத் தாண்டி பவுசு. அதுதான் கண்ணுக்குத் தெரியும்" - அம்மா விரக்தியா பதில் சொனாலும், அதையே மந்திரம் மாதிரி திரும்பத் திரும்ப மனசுல உருவேத்துனா ரேவதி.
***
சரவணனை காதலிக்கும் போது ரேவதி மாதிரி அம்மா இருப்பாங்கன்னு பவானி சத்யமா நினைக்கல. அம்மாவைப் பத்தி அவனும் அதிகம் சொன்னதில்ல. கல்யாணத்துக்கு ரேவதி மறுப்பெதுவும் சொல்லல. பவானிகிட்ட பேருக்கு ரெண்டு கேள்வி கேட்டா. பட்டும் படாம விலகின மாதிரித்தான் இருந்தா.
கல்யாணமும் முடிஞ்சு பதினஞ்சு இருவது நாளாச்சு. ரேவதி அதிகமா பேசுறதில்லன்றத பவானி கவனிச்சா.
‘வலியப் போயி பேசினாலும் காதுல விழாத மாதிரில்ல நகந்து போறாங்க! அப்படியே பேசிட்டாலும் அதிகம் போனா ரெண்டு வார்த்தை. என்ன அலட்டல்! எங்கெருந்து அகங்காரம் வந்து ஒட்டிகுதோ!’- பவானி மனசுக்குள்ள சலிச்சுகிட்டா.
'அத்த சில நாளைக்கு வீடு வரவே லேட்டாகுதே என்ன வேலையாப் போறாங்க வராங்க?' சரவணனை கேட்டத்துக்கும் திருப்தியா பதில் எதுவும் கெடைக்கல.
'அப்படியொண்ணும் வீட்டுல வசதி கொட்டிக் கெடக்கல. பணமெல்லாம் எங்க போகுதுன்னே தெரியல. வீட்டுக்கு யாராரோ வர்றாங்க போறாங்க. யார் வந்தாலும் ரேவதி எங்கனு தான் தேடுறாங்க. இவங்க எது சொன்னாலும் தலையாட்டுறாங்க. மாமாவும் மறுத்து பேசுறதில்ல. இவங்க வெக்குறது தான் சட்டம்’ - பவானிக்கு எரிச்சலா இருந்துச்சு.
***
சில பேருக்கு எல்லாமே கைவந்த கலையா இருக்கும். ரேவதிக்கு அப்படித்தான். படிப்புல பாட்டுல கெட்டிக்காரியா இருந்தா. "அவளுக்கென்னடி எல்லாத்துலயும் முன்ன நிப்பா. அவ பாட்றதுதான் பாட்டு. அவ எழுதறத்துக்குத்தான் மொதோ மார்க்கு. அவ சிரிப்புக்கு மயங்கியே வாத்தியாருங்க மார்க்கு போட்டுடுவாங்க" - வகுப்பு புள்ளைங்க கிண்டலாக சொன்னது சுருக்குன்னுத்து.
" நான் நல்லா படிச்சு மார்க்கு வாங்கலியா ? - ஒரே கேள்வி.
"அழகுக்குத் தாண்டி பவுசு" - அதே பதில்.
பொண்ணுங்க அவள நெருங்கத் தயங்கினாங்க. "இவ பக்கத்துல நின்னா நம்ம யாரு கண்டுக்கப் போறாங்க! அவ பேசற தோரணையும் நடையும் மூஞ்சியும் மொகரையும்.....திமிரு புடிச்சவ"' - பட்டப்பேர் தங்கிப் போச்சு. செய்யாத குத்ததுக்கு எதுக்கு தண்டனை?
"ஏம்மா?"
"பொறாமை"
.
காலேஜு படிப்பு முடியறத்துக்குள்ளாற பகுதி நேரமா கெடச்ச வேலையில சேந்தா. வேல பாத்துக்கிட்டே தான் படிச்சா. படிப்பு முடிஞ்சதும் நாடகக் கம்பேனிக்கும் போனா. தொடக்கத்துல சின்னச்சின்ன வேசந்தான் குடுத்தாங்க. மெல்லமெல்ல கதையில முக்கியப் பங்கு, சரித்திர-நாயகி பாத்திரமெல்லாம் கெடெக்க ஆரம்பிச்சுது. வீட்டு வறுமை கொஞ்சங் கொஞ்சமா சரியாச்சு.
கிட்டவர்ற சாக்குல கையத்தொட்டு இங்க அங்க இடிக்குறதும், ஆபீஸ்ல பலபேர் இம்சை தாங்கல. நீங்களே சொல்லுங்க, எல்லாரும் அப்படியில்லனாலும், பொதுவா பொண்ணுங்களுக்கு அப்படித்தான நடக்குது? ரேவதி மாதிரி பொண்ண விட்டு வெப்பாங்களா. மறைமுகமாவும் வெளிப்படையாவும் தூது அனுப்பி வலை வீசினாங்க. வயசுக்காரங்க, வயசக் கடந்தவங்கன்ற வித்தியாசமே இல்ல. அழகுக்காக எது வேணா செய்வாங்கன்னு கொஞ்சங் கொஞ்சமா புரிஞ்சுகிட்டா.
***
"சரவணா நாளைக்குத் தானே பவானிக்கு..." - ரேவதி கேட்டா.
உதட்டுமேல ஆள்காட்டி வெரல வச்சு. "ஷ்...... மெதுவா பேசு. நாளைக்குத் தான்" - ரேவதிய அடக்குனான் சரவணன்.
அந்தப் பக்கமா துணி காயப்போட போன பவானி இதைக் கேட்டதும் அப்படியே நின்னுட்டா. உடம்பெல்லாம் ஒருமாதிரி வெலவெலத்துப் போச்சு.
***
பரசு மூர்த்தி ரேவதி எல்லாம் ஒண்ணா நாடகக் கம்பனியில வேலை பாத்தவங்க. அன்னைக்கு பரசுவுக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. பெத்தவங்கள எதுத்து நிர்மலாவ திருமணம் செஞ்சிருந்தான். கையெழுத்து போட ரெஜிஸ்டார் ஆபீசுக்கு மூர்த்தியும் ரேவதியும் போயிருந்தாங்க. சரசரன்னு வேகமா வந்த பெத்தவங்க கன்னாபின்னான்னு கத்தினாங்க. பக்கத்துல நின்னுட்டு இருந்த ரேவதிய பாத்து கொஞ்சநேரம் வாயடச்சு நின்னவங்க. "வாடீ ரதி-ரம்ப, எதக் காட்டி மயக்கின எம்புள்ளய" - தடித்த கூரான வார்த்தைங்க தெரிச்சது.
'நிறுத்துங்க அவங்க என் கூட வேல பாக்குறவங்க. நான் கட்டுனது இவள” முதுகுக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னுட்டு இருந்த நிர்மலாவ இழுத்து நிறுத்தினான். பெத்தவங்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்ச மாதிரி இருந்தாலும் எப்படியோ சமாதானமா பேசி சுமூகமாவே முடிஞ்சது.
ரேவதிக்குத்தான் எங்க தப்பு நடந்துச்சுன்னே தெரியல. மூர்த்தி வந்து உலுக்குனதும் சுதாரிச்சா. "ஏன் மூர்த்தி நான் சும்மா பக்கத்துல நிக்கறது கூடவா தப்பு! என்ன ஏதுன்னு விசாரிக்காம என்ன பாத்ததும் அப்படி என்ன எரிச்சல் " ?
"நீ ரதி-ரம்ப - கேட்டல்ல, அதனால தான்" சிரிச்ச மூர்த்தி மேதுவா கேட்டான், "என் கூடவே இருந்துடு. எனக்கு ரதி ரம்பைங்கள ரொம்பப் புடிக்கும்"
ரேவதி நிமிர்ந்து அவனயே பார்த்தா. கொஞ்சம் அலுப்பாவும் வெறுப்பாவுங்கூட இருந்துச்சு. "அழகுக்குத் தானே பவுசு" – அப்பதான் அவ மனசுல தீவிரமான, தீர்மானமான திட்டம் உருவாச்சு.
***
‘சரவணன ரொம்ப நம்பிட்டமா? என்ன செய்யப் போறாங்க'னு பவானி யோசிச்சிட்டே இருந்தா. 'நாளைக்கா? நாளைக்கு என்ன?’ சட்டுனு நெனைவுக்கு வந்ததுச்சு. ‘அட! நாளைக்கு எம்பொறந்த நாளாச்சே! ஒரு வேள எதானும் சர்ப்ரைஸ் தரப்போறாங்களோ. நாமதான் தப்புத்தப்பா கற்பனை செஞ்சுட்டமா’- எப்படி மாத்தி யோசிச்சாலும் தூக்கம் என்னவோ போயே போச்சு.
மறுநா காலையில யாரும் வாழ்த்து எதுவும் சொல்லல. பெறகு என்னத்த பேசினாங்க ரகசியமா?
ஈஸ்வரியும் சிவனேசனும் ஃபோன் பண்ணியிருந்தாங்க. வீட்டுக்கு வரதா சொன்னவங்கள பவானி தடுத்துட்டா. 'இங்க என்ன நடக்குதுன்னே தெரிலம்மா ' -
'ஏண்டி எதுனா பிரச்சனையா'
அறைக்கு பக்கத்துல யாரோ வரமாதிரி இருந்துச்சு. 'இல்லமா அப்புறமா பேசறேன்'
***
மூர்த்தியக் கண்டாலே ரேவதி ஒதுங்கிப் போகத் தொடங்கினா. திடுப்புனு அவ பேச்சுல வித்தியாசம் தெரிஞ்சது. எங்கெல்லாமோ போயி யாரையெல்லாமோ பார்த்துட்டு வரான்னு புரிஞ்சுகிட்டு, ஒருநா வழிமறிச்சு விசாரிச்சான். 'அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன். பிடிக்கலைன்னா சொல்லிட வேண்டியது தானே!'
அவ பேசப்பேச அவனுக்கு சுருக்குன்னுது. 'இப்புடியும் ஒருத்தியா! இவள விடவேக் கூடாது'’ன்னு தீர்மானிச்சான்.
***
ரேவதி பரபரப்பா நுழைஞ்சா. "பவானி என் கூட வா"
" சரவணனயும் கூட்டிகிட்டு.... " இழுத்தா பவானி.
"அவந்தான் வெளிய போயிருக்கானே. நீ மட்டும் வா" - மகாராணி ஆணை போட்டா மறுக்கவா முடியும்!. இருந்ததுலயே நல்ல துணியா உடுத்திப் பொறப்பட்டா.
'அட இவன் ஆட்டோ ஓட்டுறவனா, இவனை வீட்டில் அப்பப்ப பார்த்திருக்கனே'. ஆட்டோ சந்து பொந்தெல்லாம் புகுந்து போயிட்டே இருந்தது. ஆள் நடமாட்டம் மெல்ல கொறயத் தொடங்கிச்சு. எங்க போறோம்னு பவானிக்கு புரியல. முதல் முறையா வயத்துல பயம் பந்து மாதிரி அடைச்சது.
'எங்க போறோம் அத்த'
'பேசாம வா'
.
ஒரு விசாலமான இடத்துல ஆட்டோ சரக்குன்னு நின்னுது. பவானி முதுகில் சில்லுனு ஒரு கை.
'ம்ம் இறங்கு"- தோளப் புடிச்சு வலுக்கட்டாயமா பவானிய இறக்கினா.
‘தூரத்துல நிக்குறது யாரு சரவணனா? அந்த இடத்துல சரவணன் கூட மூர்த்தி மாமாவுமில்ல நின்னுட்டு இருக்காங்க!’ தலை கிறுகிறுன்னு சுத்திச்சு. ஏன்ன ஏதுன்னு புரியறதுக்குள்ளாற......
"பிறந்தநாள் வாழ்த்துகள்!!" திடீருனு எங்கெருந்தோ எக்கச்சக்க பேர் கூட்டமா வாழ்த்துனாங்க. உள்ளருந்து ஈஸ்வரி, சிவனேசன் தவிர, ராசாத்தி பெரியம்மாவும் வந்தது ஆச்சரியமா இருந்தது. அவள சுத்தி சின்னதும் பெருசுமா ஆதரவற்ற வயசானவங்களும் எள வயசு புள்ளைங்களுமா நின்னுட்டு இருந்தாங்க. அது ஒரு சேவை மையம்.
பவானிக்கு சட்டுனு ஒண்ணுமே வெளங்கல.
***
ரேவதி கண்மூடி உக்காந்திருந்தா. சுத்தி மூணு பேரும் உக்காந்திருந்தாங்க. அவங்க வீட்டு ஹால் சிறுசு தான். அதான் முன்னமே பாத்திருக்கமே.
ரேவதி பேசத் தொடங்கினா. அப்பாடி! இவ்வளவெல்லாம் பேசுவாளா!
"திமிர் புடிச்சவ" சின்ன வயசுல அதிகங்கேட்ட வார்த்தையிது பவானி. யாரு என்னன்னு பழகிப் பாக்காமயே முதுகுல குத்தின பட்டம். திறமையே இல்லாம சிரிச்சு பசப்பி முன்னுக்கு வந்துட்டதா பேசுவாங்க. சராசரி தோற்றம் இருக்குறவங்க உழைச்சு செய்யும் சாதனைக்கு அதிகம்பேரு சந்தோசப் படுவாங்க. ஆனா எங்கள போல உள்ளவங்களுக்கு கெடக்கிற சின்னச்சின்ன வெற்றிக்கும் பொறாம படுவாங்க.
இதத் தவிர பொம்பளைங்கனா பல்ல இளிக்கறவங்க மத்தியில அதிக கவனமா இருந்துக்க வேண்டிருக்கு. வார்த்தையால உடல்மொழியால வன்முறைய, நெறய அவமானத்த சந்திக்கறோம். எப்படியும் வாழலான்னு நினைக்கறவங்களுக்கு பிரச்சனயில்ல. இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கறவங்க பாடுதான் திண்டாட்டம். அதுவும் வசதிவாய்ப்பு படிப்பு அதிகமில்லாத கிராமத்துல டவுனல உள்ளவங்களுக்கு பிரச்சனைங்க அதிகம். தொடக்கத்துல வெறுப்பே வந்துடுச்சு. அழகு ஆபத்தானது மட்டுமில்ல, உண்மையான நேசத்தை நமக்கு சுலபமா தந்துடறதில்ல.
அழகுன்னா என்ன? நீ சொல்லு. இன்னிக்கு இருந்து நாளைக்கு சுருங்கி தொங்கிப் போகும் வாளிப்பான உடம்பா? அழகு எதை சாதிக்கும்னு யோசிச்சேன். அப்பத்தான் தோணிச்சு. எது நம்ம கிட்ட இருக்குறதா உலகம் பேசுதோ அதையே உலகத்துக்கு திரும்பக் குடுக்கணும்.
அழகு எதைத் தருது? அனுபவிக்கறவங்களுக்கு சந்தோசத்தைத் தானே குடுக்குது. எது சந்தோசம்?
சாப்பாடு இல்லாதவனுக்கு சோறு அழகு. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு மருந்து அழகு. நாம வாழற இந்த பூமிக்கு மரமும், செடியும், கொடியும் அழகு. குடிக்க சுத்தமான தண்ணி அழகு. ஆபத்துக்கு காலத்துல உதவுற மனசு அழகு. அன்பா ஆறுதலா பேசுற வார்த்தை அழகு. எல்லாருக்குமே படிப்பும் அறிவுந்தான் அழகு. அப்படிதான் தேடித்தேடி அழகத் திரும்ப குடுக்கறேன். இப்படி செய்யுறப்ப மனசும் அழகாகுது."
கொஞ்ச நேரம் மௌனமா இருந்தா...
"பொதுவா நா அதிகம் பேசறதில்ல. பேசிப்பேசியே மயக்கறேன்னு சொல்லியிருக்காங்க. யோசிச்சுப் பாத்தா அதைத்தான் இப்பவும் செய்யறேன். நடிக்கற நாடங்கங்கள்ல இதையே கருத்தா சொல்றேன். பாடுற பாட்டுல இந்தக் கருத்த்தான் பரப்புறேன். அதுல வர பணத்த வெளிய குடுத்துடுவேன்"
பவானிக்கு தொண்டையத் தாண்டி வார்த்தயே வரல.
"அத்தியாவசியத்தத் தவிர வீட்டுல வசதிங்க செஞ்சுக்கக் கூடாதுன்னு அம்மா பிடிவாதமா இருந்தாங்க. இப்பவும் அப்படித்தான் இருக்காங்க. கைக்கு கெடக்குற கொஞ்சம் பணத்தை அவசியமானவங்களுக்கு குடுத்துடுவாங்க. தெரிஞ்சவங்க தெரியாதவங்க, உதவி மையங்களுக்கு தன் பேரை வெளிப்படுத்திக்காம உதவுவாங்க. இவங்களப் பத்தி தெரிஞ்சுகிட்டு கொஞ்சங் கொஞ்சமா சிலபேர் வீடுதேடி உதவின்னு வர ஆரம்பிச்சாங்க"- சரவணன் தொடர்ந்து சொல்லிட்டே போனான்.
'இப்ப இவ்ளோ பேசற, ஒரு வார்த்தை இவங்கள பத்தி இதுவரை நீ சொன்னதே இல்லியே சரவணா!'
"செய்யறத வெளிய சொல்லிகறதுல எனக்கு உடன்பாடு இல்லம்மா. அப்படி சொல்லிகிட்டா அதெல்லாம் ஆடம்பரத்துலத்தான் போயி நிக்கும்."
"தப்பு அத்த. நீங்க செய்யறது வெளிய தெரிஞ்சா, உங்கள மாதிரி நாலு பேரு நல்லது செய்யப் புறப்படுவாங்களே! அத ஏன் நீங்க யோசிக்கல? உங்களப் பத்தி பொரளி பேசுற ஊர்வாயக்கூட அடச்சிடலாம். "
"என்ன விட உசந்தவங்க கோடிபேரு இருக்காங்க. சத்தமில்லாம பூமிக்கும் சாமிக்கும் ஆசாமிக்கும் அத்தன நல்லது செய்யறாங்க அப்படி ஒண்ணும் நா பெருசா செஞ்சுடல. அப்புறம் இன்னொண்ணும்மா, நாம எப்டி நடந்துகிட்டாலும் நாலு பேருக்கு புடிக்கும் இன்னும் நாலு பேருக்கு புடிக்காது. அவங்கள பத்தியெல்லாம் கவலப்பட முடியுமா".
"ரேவதியப் பத்தி நீ என்ன புரிஞ்சுகிட்ட தெரியலம்மா - இவள மாதிரி ஒருத்திய தவற விட்றவே கூடாதுன்னு பிடிவாதமா இருந்து கல்யாணம் கட்டிக்கிட்டேன். பெரிய பணக்காரங்க பணங்குடுத்து உதவுறது பெருசில்லம்மா, அதிக சேமிப்பு வெச்சுக்காம இவ செய்யுறா பாரு... "- மூர்த்தியோட குரல் உடைஞ்சு போகுது.
''உண்மைதான் மாமா. யாரையும் சரியா புரிஞ்சுக்குறதில்ல. வெளிய தெரியற தோற்றத்த வச்சுத்தான் மனுசங்கள எடை போடறோம். முகங்காட்டும் கண்ணாடி போல மனசக் காட்ற கண்ணாடி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் "' - பவானி குரல்ல கூட லேசா குற்றவுணர்ச்சி இருக்கு.
***
'ராசாத்தியக்காவயே பேசிப்பேசி சேவை மையத்துக்கு வர சம்மதிக்க வச்சுடாங்கடீ உன் அத்த. பெரிய கெட்டிக்காரி. அவங்கள மறுத்து பேசவே முடியல'. ஈஸ்வரி சொன்னத நினைச்சுப் பாத்தா பவானி. ரேவதி பேசுனது எதுவுமே மனசவிட்டு அகலவே இல்ல. பேசிப்பேசியே மயக்கிட்டாங்களே!..
ராத்திரி சாப்பிட்ட இனிப்பு பவானிக்கு நெஞ்செல்லாம் நிறைஞ்சு போச்சு. ரொம்ப நாளைக்குப் பெறகு அன்னைக்குத் தான் நல்ல தூக்கம். அடுத்தநா ரேவதி போற எடத்துக்கெல்லாம் தானும் போக முடிவு பண்ணுனா.
நாங்கூட அவங்க பின்னடியே போயி என்னதான் செய்யறாங்கனு பாக்கப் போறேன். அப்ப நீங்களும் வரீங்களா?
சுபம்.