May 12, 2022

உபகாரமும் அபகாரமும் (Deivathin Kural)

ரொம்பவும் ஸாத்விகமாக ஒரு நல்லது செய்யப் போனால்கூட ஒருத்தருக்கு உபகாரமென்று செய்வது வேறு யாராவது ஒருத்தருக்கு ஏதாவது அபகாரம் செய்துவிடுகிறது.
.
நான் ஒன்று நினைத்துக் கொள்வதுண்டு : — மில் துணி பஹிஷ்காரம் பண்ணிக் கதரை அபிவிருத்தி பண்ண வேண்டுமென்று காந்தி தீவ்ரமாக இருந்த காலம். இந்தக் கொள்கைகளில் எனக்கும் அபிமானம் உண்டு. அப்போது* ராமேச்வர யாத்ரை போயிருந்தோம். இந்த நல்ல ஸமயத்தில் மடத்துச் சிப்பந்திகளையெல்லாம் ஆலைத் துணியை விட்டுவிட்டுக் கதர் உடுத்தும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்யவேண்டும் என்று தோன்றிற்று.
.
அக்காலத்திலே அங்கங்கே மில்துணிகளைச் சொக்கப்பானை மாதிரி கொளுத்தி ஸ்வதேசி அபிமானிகள் விழா நடத்துவது வழக்கம்.
எனக்கென்னவோ, அசேதனமான துணிதான் என்றாலும் அதைக்கூட நெருப்பில் போட்டுக் கொளுத்துவது என்றால் ஹிம்ஸைமாதிரி தோன்றிற்று. இப்படியில்லாமல், ஸாத்விகமாக குளிர்ச்சியாக, ‘ஜலஸமாதி’என்று ஆலையில் உற்பத்தியான வஸ்திரங்களை ஸமுத்ரத்தில் போட்டுவிட்டு, (மடத்துச் சிப்பந்திகள்) எல்லாரையும் கதர் கட்டிக்கொள்ளும்படிப் பண்ணலாமென்று நினைத்தேன்.
.
கைத்தொழிலை ஆதரிப்பது, (உடலுழைப்பு) என்றால் மட்டமாக நினைக்காமல் யாராயிருந்தாலும் ராட்டினத்தை சுற்றி நூற்பது, அதனாலேயே வீண்பேச்சு முதலியவற்றில் போகாமல் ஒரு டிஸிப்ளினில் வருவது, நம் தேசத்துக்கு என்று என்ன உண்டோ அதோடு த்ருப்தியாயிருந்து, விதேசச் சரக்குகளில் மோஹத்தை விட்டு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுவது, நம் நாட்டுப் பணம் அநியாயமாக வெளி தேசத்துக்குப் போகாமல் தடுப்பது, பல ஏழைகளுக்கு ஜீவனோபாயம் கிடைக்கப் பண்ணுவது — என்று இத்தனை அம்சங்கள் இருக்கிறதல்லவா? அதனால் இது ரொம்ப நல்ல திட்டமாகத்தானே தெரிகிறது?
.
ஆனால் இப்படிப் பண்ணினால் தங்கள் வியாபாரமே போய்விடும். தாங்கள் தலையில் துணியைப் போட்டுக் கொள்ளும்படியாகிவிடும் — என்று லங்காஷயர், மாஞ்செஸ்டர் மில்காரர்களெல்லாம் கூ கூ என்று கூப்பாடு போட்டார்கள். யோசித்துப் பார்த்ததில், ‘வெள்ளைக்காரர்கள் தேசத்தில்
கருப்பு நிலக்கரியையும் வெளுப்புச் சாக்குக் கட்டியையும் விட்டால் வேறே விளைபொருள் கிடையாதே! ஆனதால் அவர்கள் ஆலைத் தொழில் பண்ணி ஏற்றுமதி செய்து பிற தேசங்களிடமிருந்துதானே தங்களுடைய எல்லா வாழ்க்கைத் தேவைகளுக்குமானதை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும்? இங்க்லாண்ட் மாதிரியேதான் இன்னும் சில தேசங்களும், ஏற்றுமதி பண்ணினால்தான் அவற்றைச் சேர்ந்த ஜனஸமூஹங்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும்.
.
அதற்கப்புறம் என்னைப் பொறுத்தமட்டில் மில் துணி வேண்டாம் என்று வைத்தது வைத்ததுதான் என்று ஆக்கிக் கொண்டுவிட்டாலும் மற்றவர்கள்
விஷயமாக எதுவும் ‘கம்பெல்’ பண்ண வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
.
எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நம் தேச ஜனங்களின் தொழில் கெட்டுப்போகப்படாது என்பதற்காக ஒரு நல்ல ஏற்பாடு செய்தால், அதனாலுங்கூட எவனாவது பாதிக்கப்படுகிறான்! வெளி தேசக்காரன்தான் என்றில்லை, கதர் கதர் என்று அதையே ஆதரிப்பதென்றால் உள்ளூரிலேயே கைத்தறிக்காரன், மில்காரன் தன் தொழில் போச்சு என்று அழுகிறான், ஆக்ஷேபம் பண்ணுகிறான்.
.
கைத்தொழிலுக்கு நல்லது செய்யப் போனால் ஆலைத் தொழிலுக்குக் கெடுதல் ஏற்படுகிறது. ஆலைத்தொழிலுக்கு நல்லது செய்யப்போய் அதில் வேலை செய்கிற ஆயிரம் பேருக்கு நல்லது ஏற்படுத்தும்போதோ பத்தாயிரம், இருபதாயிரம் கைத்தொழில்காரர்களின் வயிற்றிலடிக்க வேண்டி வருகிறது!
.
என்ன அர்த்தம்? எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்!
.
ஒரு பாஷையை அபிவ்ருத்தி செய்தால் இன்னொரு பாஷை க்ஷீணிக்கிறது! பண்ணையாளுக்கு நல்லது பண்ணினால் நிலச் சொந்தக்காரனுக்குக் கெடுதலாகிறது. முன்னேறிய வர்க்கம், பின்னேறிய வர்க்கம் என்று பிரிவு செய்திருப்பதில் ஒன்றுக்கு நல்லது பண்ணுவதில் இன்னொன்று படும் அவஸ்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
.
ஒரு உயிரைக் காப்பாற்றுவது எத்தனை உத்தமமான கார்யமாகத் தெரிகிறது? அதிலேகூடக் கெடுதல் வருகிறது!
.
ஸாதுவான ஒரு மானைப் புலியிடமிருந்து காப்பாற்றினால்கூட, மானுக்குச் செய்யும் உபகாரம் புலியைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துவதாக ஆகிறது! அதுவும் ஒரு உயிர்தானே? அது வேண்டுமென்றா தன்னைத் தானே துஷ்ட ப்ராணியாகப் படைத்துக் கொண்டிருக்கிறது?
.
ப்போதாவது ஒரு நாள் மனஸ் காரியமில்லாமல் நிற்பதற்குக் கொஞ்சம் பக்குவப்படும்போதுகூட, அதே ஸேவை, கீவை என்று அதிகப் பரஸங்கித்தனம் பண்ணி மறுபடி த்வைதத்திற்கே இழுத்துக்கொண்டு வராமல், ‘நாம் யார் ஸேவைகூட செய்ய? ஸேவை என்று போகிறோம். அது என்னவாக முடியுமோ? எவனோ ஒரு ஈச்வரன் இன்னாருக்கு இன்னபடி என்று லோகத்தை நடத்திக்கொண்டு போகிறான் . ஆகையால் ‘நாமாக்கும் பண்ணுகிறோம்’ என்ற அஹங்காரம் என்பது-வராமலே பண்ணிக்கொண்டிருப்போம். மற்றபடி நாமாக ஒன்றும் ப்ளான் போட்டு லோக ஸங்க்ரஹம் உள்பட எதற்கும் கார்யம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய ப்ளான்படிதான் நடக்கும் என்கிறபோது, அவன் ‘இன்ஸ்பயர்’ பண்ணமால் நாம் என்ன முந்திரிக்கொட்டை மாதிரி லோக ஸங்க்ரஹம் தான் பண்ண முடியும்? நாமாக எத்தனை நல்ல ப்ளான் போட்டாலும், அது வெளிப்பார்வைக்கு ஸேவை, த்யாகம் என்றெல்லாம் எத்தனை உசத்தியாகத் தெரிந்தாலும் அதில் ‘ஈகோ’ இல்லாமல் போகாது. ‘ஈகோ’ போகாமலோ மோக்ஷம் என்பது நாளுமில்லை’ என்று விவேகமாயிருப்போம்.
.
Chapter: உபகாரப் பணியிலும் அபகாரம்! Volume 5
Chapter: கர்த்தாவின் அஹம்பாவம் நீங்கவே நல்லதிலும் கெடுதல் Volume 5

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment