'சூடு ஆறிப்போகும் முன்ன காபியக் குடிச்சிடு வடிவு' என்றாள் மரகதம்.
.
கோப்பை முழுவதும் நிரம்பி, வட்டத்தட்டிலும் கொஞ்சம் சிந்தியிருக்கும் மணம் மிகுந்த காபி, வடிவுக்கரசியை இவ்வுலகுக்கு இழுத்துவர இயலாமல் தோற்றுப் போனது. மனசு பாறாங்கல்லாக ஏகத்துக்கு கனத்திருந்தது.
.
இப்படித்தான் சோமுவும் காபி பைத்தியமாக இருந்தான். எத்தனை சிரமம் வந்தாலும் இரண்டு சொட்டு காபியில் தீர்வு கண்டுவிடுவான்.
*
காபிக்கடையில் தான் சோமுவை முதன்முதலில் சந்தித்தாள். வடிவு குடும்பத்திற்கு பேச்சியாத்தா தான் குலசாமி. அடிக்கடி பூஜை போடுவார்கள். பூஜைக்கு பூ வாங்கிவர சந்தைக்கு சென்று கொண்டிருந்தவள், காப்பிக்கடையில் குத்தகையிட்டு குடியிருந்த சில விடலைப் பசங்களும், வாலிபர்களும் தன்னை குறிப்பிட்டு கேலி செய்ததை அலட்சியமாகக் கடந்து கொண்டிருந்தாள்.
.
‘போற வர்ற பொண்ணுங்கள கிண்டலடிச்சு சாடைமாடையா பாட்டுப் பாடி வம்பு வளக்குற நேரத்துல உருப்புடுற சோலியப் பாரு" - ராணுவ உடையின் மிடுக்குடன் குரலுயர்த்தி மிரட்டிய சோமுவைக் கண்டதும், மொத்த கூட்டமும் சத்தமின்றி நழுவியது.
*
வடிவு ஆச்சரியத்துடன் சோமுவை ஏறிட்டாள். இருவருக்மிடையே இருந்த ஈர்ப்பு, முதல் பார்வையில் துளிர்த்த நன்றியுடன் நிற்காமல், காரணம் கற்பித்து தினமொரு முறை சந்திக்கச் சொன்னது. ஒவ்வொரு நாளும் படிப்படியாக கனிந்த காதல். எல்லை மீறாத குறும்பு, தவறென்றால் அதைத் கேட்கும் துணிவு, கொண்ட கனிவு, நேர்மையான கொள்கைகள் இன்னும் பலப்பல சுவாரஸ்ய முகங்கள் அணிந்து அவனும் வசமாகி, அவளையும் தன் வயப்படுத்தியிருந்தான்.
.
திருமணத்திற்கு பெரியதாக தடையொன்றுமில்லை. வடிவின் வீட்டில் காதலை அங்கீகரிக்கத் தயங்கவில்லை. சோமுவுக்கு தூரத்து சொந்தமென்று மாமா வகையிலும் அத்தை வகையிலும் சிலர் இருந்தனர். அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.
.
"எங்க சோமு தனிக்கட்டயாவே இருந்துடுமோன்னு பயந்துட்டு இருந்தோம். வடிவு நல்ல வடிவா இருக்குது, அதான் மயங்கிட்டான்" - கல்யாண வீடே களை கட்டியது.
*
நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும். இந்திய-பாகிஸ்தானின் 1965ம் வருட போர்-நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு மறுபடியும் 1971ம் வருடம் மார்கழி மாதத்திற்கு முன்னரே போர் மூளும் அபாயம் அதிதீவிரமாகி இருந்ததால், ராணுவத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே பயணப்பட வேண்டியதாகி இருந்தது. பதட்ட நிலையில் போர் சில நாட்கள் நீடித்தது. அப்போது வடிவு சோமுவின் வாரிசை வயிற்றில் சுமந்திருந்தாள்.
.
தாங்கொணாப் பிரிவுத் துயரம் வாட்டியது. வேண்டியதை செய்து தர பெற்றோரும் உற்றோரும் இருந்தாலும், சோமுவின் குரலுக்கும் அணைப்புக்கும் உடலும் உள்ளமும் ஏங்கியது. மெலிந்தாள். சாப்பிட மறுத்தாள். பிள்ளைக்காக சாப்பிட வெண்டும் என்றவர்களிடம் எரிந்து விழுந்தாள்.
.
போர் நிலவரம் என்பதால், தபால் டெலிக்ராம், தொடர்புகள் அற்றுப் போயிருந்தன. கிராமத்தில் வெகு சில வீடுகளில் வானொலி இருந்தது. செய்திக்குத் தவம் கிடப்பாள். எத்தனை பேர் இருந்தனர், இறந்தனர் என்ற எண்ணிக்கைகள் வாசிக்கப்படும்போது இதயமே நின்றுவிடும். இல்லாத கற்பனைகள் செய்து ஈர்குச்சியாகத் தேய்ந்தாள். ஒரு வேளை அவன் வாராது போனால், என் உயிரும் அவனுடனேயே துணைபோகட்டும் என்ற வேண்டுதலுடன் பேச்சியாத்தாவுக்கு பூமாலை தொடுத்து மருகினாள்.
"வடிவு, நீ உன்ன வதைச்சுக்கற, அதுக்கே உனக்கு உரிமை இல்ல, உன் வயித்துல இருக்குற பச்சபுள்ள என்ன பாவம் பண்ணுச்சு! அதுக்காச்சும் நாலு வாய் சோறு சாப்பாடு. அன்னாடம் அழுதுட்டு இருந்தா புள்ளைக்கு தெம்பே இருக்காது."
.
அவள் காதில் எதுவும் விழவில்லை. பிரிவு ஒரு நோயே இல்லை. நிறைந்த காதல் தரும் அதிகபட்ச வேதனை. அதை நோயென்று அணுகினாலும், குணப்படுத்தும் மருந்து வெளியில் இல்லை. அவரவர் மனப் பக்குவத்தில் அடங்கியிருக்கிறது. சோர்வும் களைப்பும் மிஞ்சிய நிலையில் அடம்பிடிக்கும் குழந்தையாகிப் போனவளை குணப்படுத்த சோமுவைத் தவிர யாருக்கும் சாத்தியப் படாது.
.
சில நாட்கள் தொடர்ந்த எல்லைப் போர் முடிவுக்கு வந்தது. யார் எஞ்சியிருந்தனர் என்று கேட்டு சொல்ல அன்றைய கிராமத்தில் வசதிகள் இல்லை. சுடலைத் தாத்தாவுக்கு பட்டணத்திலும் டவுனிலும் சிலரைத் தெரியுமென்பதால் விவரம் அறிந்து வருவதற்கு பக்கத்திலிருக்கும் ராணுவ முகாமை அணுகலாம் என்று அறிவுறுத்தினார்.
.
வடிவின் உடல் மட்டும் இங்கிருக்க, உள்ளம் சிந்திக்க மறந்தது. செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தெளிவும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியிருந்தது.
.
மறுநாள் விடியல் மொத்த கிராமத்துக்கும் விழாவாக அமைந்தது. மன உளைச்சல்களுக்கெல்லாம் தீர்வாக சோமு வந்தான். வடிவு ஓடிச் சென்று அணைத்தாள். அழுதாள். அடுத்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக, சோமு ஏறக்குறைய கதாநாயகனைப் வலம் வந்தான். போரில் நடந்த இழப்புகள், ஓலங்கள், இரு நாடுகளுக்கிடையே நிலவிய இறுக்கம் என ஒவ்வொன்றாக விளக்கினான். கிராமமே அவனைக் கொண்டாடியது.
.
'ஏ வடிவு, நீ பெருமப் படணும்டீ. உன் புருசன் அம்புட்டு தகிரியமா நாட்டுக்க்காக ராணுவத்துல செய்யுறது வேலையில்லடி, அது சேவை. அதுல பாதித் துணிவு உனக்கு வேணாமா! வீரத்துக்கு பேர் போன தமிழ் மண்ணு இது.'
.
உண்மை. அவள் இன்னும் உரமேற வேணும். அவனே அவள் உலகமென்றாலும் நாட்டுக்கு உயிர் கொடுக்க துணியும் ராணுவ வீரனின் துணைவி என்ற வலிமை வளர்க்க வேணும்.
.
திவாகரும் சசிரேகாவும் பிறந்த பின் வடிவு நிறையவே மாறிப்போனாள். பணி நிமித்தமாக பல மாதங்கள் வடிவை விட்டு பிரிந்திருக்க வெண்டிய சூழலிலும் நம்பிக்கை இழக்காமலிருந்தாள். எல்லைப் பாதுகாப்புக்கு அழைப்பு வரும் போதெல்லாம் கலங்காமல் விடை கொடுத்தாள். அவன் வருவான் என பேச்சியாத்தாவுக்கு பூஜை போட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
.
பிள்ளைகள் திருமணம், பேரப்பிள்ளைகள் வரவு என எந்த குறையுமின்றி சோமுவுடன் சுகித்து வாழும் ஆசி பேச்சியாத்தா வழங்கியிருந்தாள்.
.
சோமுவுக்கு ராணுவமும் அரசாங்கமும் பெரும் மரியாதை செய்து, ஓய்வூதியம் கொடுத்து பல வருடங்கள் ஆகியிருந்தது. அவ்வப்பொழுது டவுனுக்கு சென்று சில எளிய வேலைகள் செய்து வந்ததில் வந்த வருமானமும் போதியதாக இருந்தது. யாருக்குத் தான் குறைகள் இல்லை! சின்னச் சின்ன தோல்விகள், சங்கடங்களை சமாளித்து சீறப்பாக வாழ்ந்தனர்.
.
"வடிவு கொஞ்சம் காபி கொண்டு வா" என்பான். அது அவர்களுக்கான நேரம். காபியிலேயே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடுவான். அதைப் பற்றி அவளிடம் ஆலோசிப்பான். காபிக்கடையில் துவங்கியக் காதல் காபியுடன் முடிந்தது.
.
பாரத மண்ணுக்கு தன் இன்னுயிரை அர்ப்பணிக்க இயலாத வாழ்வு இனி போதுமென்று நினைத்தானோ! இளங்காலை வேளையில் காபி குடித்த சுவை மறைவதற்குள் பூவைப் போல் சில வினாடிகளில் பூமியில் விழுந்தான். கொடுத்து வைத்த முடிவு என்று உறவும் நட்பும் சிலாகித்தது. பெரிய மாலை மரியாதைகளுடன் ராணுவ குழாமிலிருந்தும் சில நண்பர்கள் வந்திருந்து வழியனுப்பினர்.
.
'வடிவு காபி குடி வடிவு' என்று மரகதம் எத்தனை முறை உலுக்கியிருப்பாளோ தெரியவில்லை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் வெளியூரில் சம்பாத்தியம் என்றான பிறகு, தூரத்து சொந்தமெனச் சொல்லிக் கொள்ளும் மரகதம் தான் இந்த சின்ன கிராமத்து வீட்டில் அவளுக்குத் துணை.
.
சோமு விட்டுப் பிரிந்து மூன்று மாதங்களாகியிருந்தன. முப்பது ஜன்மமெனத் தோன்றியது. தைரியமான வடிவாகத் தான்
தன்னை திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் பிரிவின் ஆற்றாமை தாங்கும் வலிமை அவள் வயதுக்கு இல்லை. தனது நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
.
‘இப்படிப் பேசாத வடிவு. பிள்ளைங்களுக்கு நீ தான் கூட இருந்து எல்லாம் செய்யோணும்.'
.
யாருக்கு யார் துணை! சோமு, என்னை எப்படி நீ பரிதவிக்க விட்டுப் போனாய்! துன்பத்தில் எனை ஆழ்த்தி தனியே விட துணிந்தாயே. அவள் மனம் அரற்றியது. வெளியே புன்னகைத்தாள். பேசினாள். சோறு உண்டாள். மனம் மட்டும் இறந்திருந்தது. சாவுக்கு அஞ்சவில்லை. ஒரு வேளை இன்னொரு பிறவி என்று இருக்குமானால் சோமுவும் அவளும் இதே கிராமத்தில் பிறந்து வயல் வெளியில் விளையாட வேண்டும்.
.
இன்னொரு பிறவி, வாழ்வைப் பற்றியெல்லாம் கண்டவர்கள் யார்!? பிரிவெல்லாம் உறவென்று மறுபடியும் கூடுமா? இறந்த பின் எங்கு செல்வோம்! கண்காணாத உலகமா? அங்கு என் சோமு இருப்பானா? எனை நினைத்திருப்பானோ, உணர்வானோ அல்லது மறந்திருப்பானோ யார் அறிவார். உறவெல்லாம் பிரிவதற்கே என்றால் பிறப்பே வேண்டாம். இறந்தால் பேச்சியாத்தா மடியில் போய் படுத்துறங்க வேண்டும். 'இன்னொரு முறை பிறக்க வேணாந்தாயீ' என்று இறைஞ்ச வேண்டும்.
.
'அப்படியே பொறந்தா, என் சோமுவையும் மறக்காம எனக்குத் துணையா அனுப்புவியா' என்று கேட்க வேண்டும். முன்பு பொல் குலசாமிக்கு பூஜை போடும் தெம்பு இல்லை. ஆத்தாள் அல்லவா! அவள் மகள் கேட்டதை மறுப்பாளா என்ன!
.
********முற்றும்******
Divine blessings
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDelete