December 24, 2019

அழகான ராக்ஷசியே



ஆழ்ந்த பெருங்கிணற்றில் பதுங்கியபடி
இருட்டிலிருந்தே ஏவலிடுகிறாள்
அலையாய் அலைந்து அழுது புரண்டு
ஆவேசமாய் ஆடி ஓடி
சிறுகச் சிறுக சேமித்து
அவளுக்கே அர்பணிக்கிறேன்.
ஓராயிரம் நாட்களின் உழைப்பை
ஒரே முழுங்கில் கபளீகரம் செய்கிறாள்
இன்னும் இன்னும் என விரட்டுகிறாள்
முடியும் அடியும் இல்லா ராக்ஷசி அவள்
அவள் தாகசாந்தியில் அடங்கியிருக்கிறது
என் தாபசாந்தி.
-ஷக்திப்ரபா

December 16, 2019

சத்தி நாயனார்


Image result for சத்தி நாயனார்"

வரிஞ்சையூரில் வேளாளர் பரம்பரையில் அவதரித்த சத்தி நாயனார், கைலாச நாதனின் திருவடிகளையே எண்ணி கசிந்துருகுபவராக இருந்தார். அடியார்களை பணிந்து வணங்கி மரியாதை செலுத்தியவரானார்.
.
எவரேனும் கொடும் அபராதமாகிய சிவனடியார்களை நிந்திப்பதை துணிந்து செய்தால் அவரது நாவை தம் குறடால் பற்றி அறிவார். இதனால் இவருக்கு சத்தி நாயனார் என்று பெயர் ஏற்பட்டது. தமது ஆயுட்காலம் தொட்டும் இப்பணியை வழுவாதும் அன்புடனும் செய்திருந்து, இறுதியில் இறைவன் நிழலைப் பற்றி இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய
.
,
(குறிப்பு: சில அடியார்கள் கதைகளை படிக்கும் போதும் கேட்கும் போதும் சற்று வேறுபட்ட சிந்தனை ஏற்படலாம். சிவ அபராதம் செய்வதோ அல்லது அடியார்களை நிந்திப்பதோ கொடும் அபராதமாக கருதப்படுவதால் இதனை தவறியும் செய்யும் ஜீவனுக்கு பெரும் பாபச்சுமை ஏற்பட்டுவிடும். அப்பாபச் சுமையிலிருந்து விடுவித்தும், கொடும் வினையை கழிப்பதாலும் இறைவன் அடியின் அருகாமைக்கு அந்த ஜீவனை கொண்டு சேர்ப்பதாலும் இத்தகைய செயல்கள் அன்போடு செய்யப்படும் தொண்டு என்று கருதப்படுகிறது. அதனால் அவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் ஆகிறார்கள் என்பது கருத்து. ) 

December 01, 2019

சண்டேசுவர நாயனார்



Image result for சண்டேஸ்வர நாயனார்



சோழத்திரு நாட்டில் தான் அத்தனை நாயன்மார்களும் பிறக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார்கள் போலும். எச்சதத்தன் பவித்திரை என்ற இருவருக்கும் சேய்ஞ்லூரில் பிறப்பால் அந்தணராகப் பிறந்தார். விசாரருமா என்று திருப்பெயரிட்டு அருமை பெருமையாய் வளர்த்து வந்தனர். சிவனன்றி வேறாரும் சிந்தையில் நுழையாமல் அவரையே படைப்பின் முதற் காரணமாகப் போற்றி வந்தார். 
.

மழலைப்பருவத்தில் விளையாட்டில் சக தோழர்களுடன் ஈடுபட்டிருந்த சமயம், பசுவொன்று தன்னை முட்ட வந்த காரணத்தால் அதனை மேய்க்கும் இடைச்சிறுவன் பசுவை நையப்புடைத்து விட்டான். 
.

பசுவின் வேதனை பொறுக்காத நாயனார், இடைச்சிறுவனுக்கு பசுவின் மேன்மையை போதித்தார். வெண்ணை பால் தயிர் போன்ற உயிரமுதங்களை ஈன்ற பசு தாய்க்கு சமானம். திருநீறு, பஞ்சகவியம் என்ற அனைத்தையும் நமக்கு தரும் பசு தெய்வத்திற்கு ஈடு. பசுவினது உடலில் தெய்வங்களும் தேவர்களும் வசிக்கின்றனர் என்ற பேருண்மைகளை எடுத்துக்கூறிய விசாரருமருக்கு வயது பத்து கூட நிரம்பவில்லை. 
.

இப்படிப்பட்ட வியத்தகு அறிவை பெற்றிருக்கும் விசாரருமரிடமே ஆநிரை மேய்க்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகினான் இடைச்சிறுவன். 
.

சேயினைப்போல் பரிவு காட்டி ஆநிரைகளை நன்கு பேணி வந்தார் விசாரருமர். பசுக்கள் முன்பை விட அதிகம் பால் சுரந்தது. இத்தனை பால் பெருகுவதை கண்டவர் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் ஆவல் கொண்டார். அத்திமரத்தின் கீழ் சிவலிங்கமொன்றை மணலினால் அமைத்து, அபிஷேகம் செய்து பூஜித்து ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தார். இதனை கேள்வியுற்ற மாட்டின் சொந்தக்காரர் பால் வீணாவதாக உணர்ந்து விசாரருமரின் தந்தையான எச்சதத்தனை தமது மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார்.
.

விசாரருமரை கண்காணித்தார் தந்தை. கண்டித்தார். பலனற்றுப் போனது. விசாரருமரை தொடர்ந்து சென்றார். மண்ணினால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பால் வீணாக்குவதை கண்ணுற்ற தந்தை சினம் மிகுந்து, அபிஷேக பால் குடங்களையும் பூஜை பொருட்களையும் எட்டி உதைத்தார். 
.

எம்பெருமானுக்கு வைத்திருந்த பால்குடத்தை எட்டி உதைத்து சிவ அபராதம் செய்த தந்தையை தமக்கு முன் கிடந்த கோலை எடுத்து தந்தையை நோக்கி வீசி, தனது பூஜையை சலனமின்றித் தொடர்ந்தார் நாயனார். தந்தையை நோக்கி சென்ற கோல் மழுவாக மாறி அவர் காலை வெட்டி, ஜீவனை பிரித்தது. 
.

உமையொருபாகனாக அவ்விடத்தில் பெருஞ்சோதியென காட்சி தந்து பகவானை தொழுது வணங்கினார். "எம் பொருட்டு தந்தை இழந்த உமக்கு நாமே இனி தந்தையானோம் என்று அணைத்து அருளினார். "எமக்கு அளிக்கப்படும் பரிவட்டமும், மாலைகளும், உடுப்பவை, சூடுபவை அனைத்தும் உமக்கும் உரிமையாகும்" என்றார். தமது தொண்டர்களுக்கு தலைவனாக்கினார். சண்டீச பதவி வழங்கினார். முடிமேல் கொன்றை மாலையைச் சூட்டி சண்டேஸ்வர நாயனார் ஆக்கினார். சிவ அபராதம் செய்தும் சண்டீசரால் தண்டிக்கப்பெற்று பாசம் நீங்கிய எச்சதத்தன் சிவலோகம் அடைந்தார். 
.

(மேலும் ::: 
.

சிவன் கோவிலில் அமர்ந்திருக்கும் சண்டீஸ்வரரை முழுவலம் செய்தற் கூடாது என்று நம்பிக்கை. மும்முறை மெதுவாக கைதட்டி முக்குற்றங்களால் விளையும் தீங்கை விலக்கிக்கொள்கிறோம் என்பது நம்பிக்கை. (தன்னால் வரும் துன்பம், சூழலால் வரும் துன்பம் இயற்கையால் வரும் துன்பம்) ஒருமுறை எங்கள் வீட்டின் அருகிலுள்ள பெருமையும் பழமையும் வாய்ந்த ஒரு சிவாலயத்திற்கு சென்ற போது அங்குள்ள சிவாச்சாரியார், சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பவர் அவரை கை தட்டி எழுப்புதல் வேண்டேமென்றும் மும்முறை "ௐம் நமச்சிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திர உச்சாடனமே அவரை திருப்தி படுத்தும் என்று விளக்கினார். )
.
ஓம் நமச்சிவாய