April 15, 2019

சேரமான் பெருமான் (கழற்றி அறிவார்) நாயனார்

Image result for சேரமான் பெருமான்
மகோதை என்று பெயர்கொண்டு திகழ்ந்த கொடுங்கோளூரில் சேரர் குலம் தழைக்க அவதரித்தார் கழற்றி அறிவார் நாயனார். பெருமாக்கோதை என்ற பெயருடன் விளங்கிவந்தார். அரசாட்சி செய்ய உதவும் பயிற்சிகள் எதையும் கொள்ளாமல் சிவ வழிபாட்டில் கவனம் செலுத்தினார். நந்தவனம் அமைத்து, மலர் கொய்து மாலைகள் சாற்றி, திருவெண்ணீரணிந்து இறைவனை பாடிப் போற்றும் பணியிலேயே மனம் செலுத்தினார். சேரகுலத்து அரசன் செங்கொற்பொறையன் அரச வாழ்வை துறந்து துறவரம் மேற்கொள்ளும் பொருட்டு கானகம் சென்றான். மந்திரிகளின் விண்ணபத்தின் பேரில், பெருமாக்கோதையார், அரச வாழ்வால் தம் தவத்துக்கு ஊறு விளையுமோ என முதலில் தயங்கினாலும், பிறகு சிவபெருமானின் ஆக்ஞை ஏற்று சேர அரியணையை அலங்கரித்து, சேரமான்பெருமான் ஆனார்.

அரியணை ஏற்று நகர் உலா வரும் நேரம், வண்ணான் ஒருவன் உடம்பில் வியர்வையுடன் கலந்து படிந்திருக்கும் உவர்மண் வெளுத்திருக்க, அது திருவெண்ணீர் சாற்றிய சிவனடியாரைப் போல் காட்சியளிப்பதென மிக்க மகிழ்ந்து மன்னன் யானையை விட்டு கீழிறங்கி அவனை வணங்கி சிறப்பித்தான். இப்படிப்பட்ட ஒரு சிவப்பேரருளானை அரசனாகப் பெற்றமைக்கு மக்களும் சிவபக்தர்களும் அமைச்சர்களும் பேருவகை கொண்டனர்.

இவர் அரசு செலுத்தும் காலத்தில் பகைமை அற்று சிவநெறி தழைத்தோங்கும்படி அரசாட்சி செய்தார். சோழரும் பாண்டியரும் நண்பர்களாயிருந்தனர். பல தேசத்து சிற்றரசர்கள் மிகுந்த மதிப்புடன் கப்பம் கட்டி வந்தனர்.

நாள் தவறாது தூப தீபம் சந்தனம், திருநீறு அளித்து அமுது படைத்து, சிறந்த முறையில் பூஜை செய்து வந்த பக்தியிலும் அன்பிலும் மெய்மறந்த சிவனார், அன்றாடம் பூஜை முடியும் தருணம் தனது கால் சிலம்பொலியின் திருவோசையை கேட்டு அரசர் மகிழுமாறு அருளினார். ஈசன் சிலம்பொலியை கெட்டதால் "கழற்றி அறிவார்" என்று பெருமைப்படுத்த பட்டார். (கழறுதல் என்றால் உறுதி செய்தல் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளலாம்)

பாணபத்திரர் என்ற புலவரின் கனவில் தோன்றி சேரமான்பெருமானிடம் ஸ்ரீமுகம் (அறிமுகம்) கொண்டு வேண்டிய பொருள் பெற்றுக்கொள்ளும்படி அருளினார் ஈசன். அறிமுக ஓலையை கொண்டு சென்று மன்னரிடம் நிதி கேட்க, 'இறைவன் தன்னை பணித்த கருணை தான் என்னே' என்று பரவசம் அடைந்த மன்னன், நவநிதியும் யானையும் குதிரையும் தன் பொருளனைத்தையும் மூட்டை மூட்டையாய் கட்டி யானையிலும் குதிரையிலும் வாகனங்களிலும் தர முற்பட, மன்னனின் கொடையை வாழ்த்தி தனக்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றார் பாணபத்திரர். இன்னிகழ்ச்சி, மன்னர் ஈசன் மேல் கொண்ட பக்தி, அன்பு மற்றும் செல்வத்தின் மேல் கொள்ளாத அபிமானத்தை எடுத்துரைக்கிறது.

சிறப்பாக பூஜை நடந்த பின்னும் ஒரு நாள் சிலம்பொலி கேட்காதிருக்க, மிக துன்பப்பட்டு, தனது பிழையை பொறுத்தருள வேண்டி, பூஜையினால் சிவனை மகிழவைக்காத வாழ்வு தமக்கு வேண்டாமென தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தார். சிவனார் அதிவேகமாக சிலம்பொலியை தொடர்ந்து ஒலிக்கச் செய்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) எனும் தன் தோழரின் இனிய தென்தமிழ் பாடல்களில் தமை ஒரு கணம் மறந்துவிட்டதாக இறைவன் உரைத்தார்.

இத்தகைய பக்தரைக் காணாத வாழ்வும் வீணே என நினைத்து சுந்தரரை தரிசிக்கும் பேராவல் கொண்டார் சேரமான். அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து சுந்தரைக் காண புறப்பட்டார். வழியில் பல சிவஸ்தலங்களையும் தரிசித்து பாக்கள் இயற்றினார். சுந்தரரை திருவாரூரில் கண்டு மகிழ்ந்து இருவரும் பெரும் அன்பில் கட்டுண்டிருந்தனர். இறைவனை பாடி பக்தி செய்வதில் மகிழ்ந்திருந்தனர்.

சுந்தரரும் சேரமானும் பல சோழ, பாண்டிய சிவத்தலங்களை சேர்ந்து தரிசித்து, பாக்கள் இயற்றி துதித்தனர். சுந்தரர், சேரமான் விருப்பத்திற்கிணங்கி சேரமான் அரசாளும் கொடுங்கோளூரையும் அடைந்து அங்கு மன்னருடன் பல காலம் தங்கியிருந்த பிறகு, திருவாரூர் புறப்பட்டார். சுந்தரரின் பிரிவாற்றலைத் தாங்க முடியாத சேரமான் பெருமான் போகாதபடி தடுத்தும் சுந்தரர் கேளாததால், சுந்தரரை என்றும் மறவாத சிந்தையினராக அவர் ஆணைப்படியே கொடுங்கோளூரை சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார்.

பல காலத்திற்குப் பிறகு சுந்தரர் திருக்கையிலாயம் போக சிவபெருமானால் அனுப்பபட்ட வெள்ளை யானை மேல் ஆகாயவழியில் புறப்படுவதை அறிந்து, தாமும் தம் குதிரையின் செவியில் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஆகாய மார்க்கமாக சென்றதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அரசர் கண்முன் ஆகாய வீதியில் மறைந்ததை கண்ட படை வீரர்கள் சிலர் உடன் உயிர் துறந்து அவர்களை பின் தொடர்ந்து கைலாயம் சென்றனர் என்றும் கருத்து. சுந்தரர் சிவனை வணங்கி நிற்க, பின்னே சென்ற சேரமானை "நாம் அழையாதிருக்க நீ எங்கனம் வந்தாய்" என பெருமானார் கேட்க, ஈசனிடமும் கொண்ட அன்பை உரைத்து "திருக்கைலாய ஞான உலா" பாடினார் சேரமான் நாயனார். "திரு வுலாப் புறம்' என்று

இன்னூலை பெரிய புராணம் குறிப்பிடுகிறது. பாடலை கேட்டு அகமகிழ்ந்த பெருமான் சேரமான் பெருமான் நாயன்மாரை தமது கணங்களுக்கு தலைவராக்கினார்.

ஓம் நமச்சிவாய 

No comments:

Post a Comment