இளையான்குடியில் பிறந்த வேளாளர். உழவுத்தொழில் இக்காலம் போலன்றி செழித்திருந்த காலம். மதிப்பும் மேன்மையும் கொண்டிருந்த காலம். பெரும் செல்வந்தாராக திகழ்தவர், தம் செல்வத்தை வீண் வழியில் வீசி இறைக்காமல், சிவனடியார்களை அழைத்து, பூசை செய்து உணவளிப்பதில் முனைந்தார். அதுவே தம் கொள்கையென வாழ்ந்தார். வறுமையிலும் அவர் உள்ளம் செழித்திருக்கும் அதிசயத்தை உலகறியச் செய்ய நினைத்த ஈசன், வளத்தைக் குறுக்கினான்.
வளம் குறுகியது, ஆனால் நாயன்மாரின் மனமும் அவர் மனையாளின் குணமும் குன்றவில்லை. அத்தனை செல்வத்தை விற்றும் தம் சேவையை தொடர்ந்து செய்தார். சிறு குத்தகை நிலத்தில் விதை-நெல் விளைவித்திருந்தார்.
அன்று பெருமழை. வீட்டிலோ சிறு தானியமும் இல்லை. இறையானார் சிவனடியாராக அவர் வீட்டுக் கதவை நள்ளிரவில் தட்டினார். இன்முகம் காட்டி வரவேற்று நல் பூஜை செய்து அமரச்செய்தனர். உணவருந்தச் செய்ய குந்துமணி நெல்லும் இல்லை. செய்வதறியாது சற்று திகைத்தவர்கள், உடனே சுதாரித்து, விதைத்திருந்த விதைநெல்லையே பெருமழையில் சேகரித்து வந்தார் நாயன்மார். விறகெறிக்க விட்டுப்போயிருந்த மேற்கூரைக் கட்டைகளை உடைத்து விறகாக்கினர். வீட்டுக் கூரையை விறகாக்கி, தோட்டத்துக்கீரையை உணவாக்கி, விதைநெல்லை சுத்தம் செய்து இடித்து அமுதாக்கி அடியவருக்கு படைத்தனர். கருணை கொண்டு இச்சிறியோரின் உணவை ஏற்றருள வேண்டும் என்று விண்ணப்பிக்க, அங்கு அடியவர் மறைந்து, உமாபதி உமையவளுடன் ஜோதி வடிவில் வானளாவ காட்சி தந்தார். இம்மையில் பெரும் செல்வ வளம் நிரம்ப பல காலம் பெருவாழ்வு வாழ்ந்து, பக்தித் தொண்டாற்றி, அதன் பின் மறுமையில் சிவபதவி அடைய திருவாய் மலர்ந்தருளினார்.
ஓம் நமச்சிவாய