June 30, 2016

எதுவும் கடந்து போகும்





அதிர்ச்சி ஆத்திரம் துயரம்
ஜாதிமத பேதம் பேதமின்மை
அரசியல் ஆதாயம்
பகிர்வு விவாதம் ஊகம்
தற்காப்ப்பு ஆலோசனை
இரங்கற்பாக்கள்
நடு நடுவே ஊடுருவும் ஹாஸ்யம்
ஐந்து நாட்களில்
திரைகள் ஒவ்வொன்றாய் களைந்து
வெறும் செய்தியாகிப் போகும்
ஸ்வாதிகளும் வினுப்ரியாக்களும்


ஒப்பனை




மையிட்டெழுதிய விழிகளின் படபடப்பு
செப்பனிட்டு செதுக்கிய வெளிப்பூச்சு
வண்ணமேற்றிய உதடு
வெட்கத்தை பூசிக்கொண்ட கன்னங்கள்
ஆபரணங்களின் நேர்த்தி
ஆடைகளின் பகட்டு
மெருகேற்றிய வண்ணக் கலவைக்குள்
எங்கோ தொலைந்தே போன முகங்கள்
ஆழ் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் அகம்.


-ஷக்திப்ரபா

June 27, 2016

ஏன் வரவில்லை...


கிட்டே நெருங்கி உன்னை
எட்டிப் பிடிக்க எத்தனிக்கையில் 
எட்டடி தள்ளிப் போகிறாய்
உணர்ந்து உன்னை கொஞ்சிக் கிடந்திருந்த
தருணத்தில் தடாலென நீ நகர்ந்ததால்
அரிச்சுவடிப் பாடமே ஆடிப்போனது

வழக்கொன்றுமில்லை எனக்கு
காவல்துறையின் இருப்பும் இல்லாமையும்புகைப்படக் கருவிகளின் துல்லியமும்
சட்ட ஒழுங்கின் அமைப்பும்
அவரவர் உயிர் போர்த்தி ஓட்டமெடுக்கும்
மானிடரிடன் பயமும் சுயநலமும்
வருத்தமொன்றுமில்லை.
எவருடனும் காழ்பொன்றும் இல்லை


உன் சரண் பற்றிய அடியவளை
இத்தனை கொடூர மரணம் எழுதி
தள்ளி நின்று
தாயத்தின் அடுத்த காயை நகர்த்தும்
உன்னிடம் மட்டுமே கேள்விகள் ஆயிரம்.
நம்பினோரை கைவிட்ட நாயகனே
உன்னை தண்டிக்க எந்த சட்டத்தில் இடமுண்டு?
வாராமலே போன மாதவனே
பிணக்கும் கோபமும் வருத்தமும்.........
உன்னிடம் மட்டுமே
ஆயிரம் ஆயிரம்.