February 19, 2010

குருகுல வாசத்தின் பெருமை

குருகுல வாசத்தின் அவசியத்தை காலத்தின் பரிமாணத்தின் பேரில் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். எதையும் ஆழமாகவும் முழுமையாகவும், பல கோணங்களிலும் யோசித்தால் அதன் அத்தியாவசியம் புரிந்துவிடும்.

காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் பாரதி. இப்பொழுது இருக்கும் பாட திட்டத்திற்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் பிள்ளைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் உயிரை விட வேண்டியுள்ளது. அப்படி படிக்க சொல்லும் பொழுது மாணாக்கர்களுக்கு கவனம் அவசியமாகிறது. கவனிக்குறைவு நேர்ந்தால் பாடங்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிவதில்லை. பின் மறந்தும் போகிறது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, வலையுலகம் இன்னும் எத்தனை உண்டோ அவ்வளவும் அவர்களை திசைதிருப்பும் சாதனங்கள். பரிட்சை என்றால் மனதை ஒருமுகப்படுத்தி தயார் செய்ய வெண்டியுள்ளது. இக்கால கல்விதிட்டத்திற்கே இப்படிப்பட்ட மனக்கட்டுபாடுகளும் ஒழுக்கமும் அவசியம் என்றால், பிரம்மச்சர்யம் பயிலச் செல்பவனுக்கோ, ஞானத்தை அடையும் முயற்சியில் இருப்பவனுக்கோ எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது வெளிச்சமாகிறது. அதனை வீட்டுச் சூழ்நிலை தருவதில்லை. சுற்றுப்புறச் சூழ்நிலை சற்றே மாறுபட்டாலும், அதெற்கென காத்திருந்த மனத்திற்கோ அலைபாய்வதற்கு வசதியாகிறது.

ஆகவே குருகுலவாசம் அவசியமானது. குருவினிடமே வாசம் செய்து பாடம் பயிலுதல். மாணாக்கன் பயில்வது வேதமும், ஒழுக்கமும் பாடமும் மட்டுமல்ல. குருமார்களின் வாழ்வு முறை, செயல்வழிபாடுகள், நெறிகள் என பலவும் கண்ணுற்று தெளிகிறான். அதனால் இங்கு குருவே ஆச்சார்யனாகவும் ஆகிறான். ( i.e. கற்பிப்பது போல் அவனும் நடந்து வழிநடத்திச் செல்கிறான்). குருவினிடத்தே வாசம் செய்வதால் மாணவனின் கவனம் பெரும் அளவு சிதறுவதில்லை. ஒருமுகமாக தன் இலக்கில் குறி வைத்து எட்டிப் பிடிக்கிறான். குருவிற்கு சிஷ்யன் செவைகள் பலவும் செய்யக் கடமைபட்டுள்ளான். வேதம் நெறி மட்டுமன்றி சங்கீதம் முதலிய கலைகளுக்கும் பண்டைய காலத்தில் குருகுல வாசம் இருந்து வந்திருக்கிறது. குருகுலவாசம் தோராயமாக 12 வருடகாலம் செய்யப்படும் என்கின்றனர். ஒவ்வொரு கலை அல்லது பிரிவிற்கு வெவ்வேறு குருவினிடத்து சென்று பயிலும் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பிட்ட துறையில் அதிகம் பாண்டித்தியம் பெற்றிருக்கும் வேறொரு குருவிடம் அதனை கற்றுத் தெளியலாம்.

சிஷ்யர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு குரு வகித்தாலும் சிஷ்யனின் சுயமான முயற்சி மற்றும் அவன் புத்தி-கூர்மையும் அதனை நிர்ணயிக்கிறது. பவ-பூதி எழுதிய உத்தர ராம சரிதத்தில், லவ- குசர்கள் வால்மீகி முனிவரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுடன் கூட ஆத்ரேயி என்ற மாணவியும் படிக்கிறாள். அவளின் புத்திபலம் லவ-குசர்களுடன் போட்டியிட முடியவில்லை. அதனால் அவள் அந்த குருகுலத்தை விட்டு வேறு இடம் சென்று பயின்றாளாம். குருவிற்கு எல்லா மாணாக்கனும் ஒன்று. அவர் புத்தி கூர்மையுள்ளவனுக்கும் புத்தி மட்டுபட்டவனுக்கும் ஒரே பாடத்தை பயிற்றுவிக்கிறார். அவர் சொன்ன பாடங்களை எந்த அளவு உள்வாங்கி கிரஹித்துக்கொள்கிறான் என்பது மாணாக்கனைப் பொறுத்தது. இதனை உணர்த்தும் வகையில் ஆத்ரேயி "மண்ணாங்கட்டி எவ்வாறு சூரிய ஒளியை தன்னுள் வாங்கி உமிழ்வதில்லையோ மூடனின் அறிவும் அவ்வாறே. புத்தி கூர்மை மிகுந்த மாணாக்கனோ கதிர் வீச்சை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஸ்படிக மணியைப் போன்றவன்." என்கிறாள். மாணாக்கனின் உழைப்பு, சிரத்தை, எல்லாம் பொருத்தே அவன் உயர்வும் அமையும். சரியான குரு அமைந்துவிட்டாலோ அவனுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்த பலன். வழிகாட்டிகள் குருமார்கள் என்பதாலேயே சிஷ்யன் செய்யும் பாபச்செயல்களுக்கும் குரு பொறுப்பாவான். மக்கள் செய்யும் பாபம் ராஜாவைவ் சாரும், ராஜாவின் பாபம் புரோஹிதரைச் சாரும், மனைவியின் பிழைகளுக்கு கணவன் பொறுப்பு அதே போல் சிஷ்யர்களின் ஒழுங்கீன நடத்தைகளுக்கு குரு பொறுப்பாளி என்பது பெரியோர் வாக்கு. இவர்கள் எல்லோரும் வழிகாட்டிகள். தவறான வழியில் செல்லும் தம் மக்களைத் திருத்தக் கடமைப் பட்டவர்கள்.

அப்பேர்பட்ட குருவினிடத்து, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடத்து அதிக மரியாதையும் பெறும் மதிப்பும் வைக்க வேண்டும். கொடிய நஞ்சுக்கு ஒப்புமையான விடயம் எது என்றால் குருவை அவமதித்தல் என்கிறார் ஷங்கராச்சார்யார். பிரம்மச்சர்யம் பயிற்றுவிக்கும் குரு "வித்யா-குரு". க்ருஹஸ்தன் ஆகாமல், சன்யாசம் ஏற்று அதன் பின் கிடைக்கும் குரு "தீக்ஷா-குரு"

4 comments:

 1. 'தைத்திரீய உபநிஷதம்' பற்றிய குறிப்பேடுகளோ, சாராம்சத்தைச் சொல்லும் உரைகளோ, அல்லது நூலோ கிடைத்தால் தவற விடாதீர்கள். அந்த உபநிஷதம் முற்றும் வாழ்க்கைக் கல்வி பற்றியது.

  இளம் சிறார்களின் இயல்பான ஆற்றலை ஊக்குவித்து, அவர்களை சிறப்பாக சிந்திக்க வைக்க வேண்டும் எந்தக் கல்வி முறையும்.

  இதற்கான ஒரு உரத்த சிந்தனை இன்றைய காலகட்டத்தில் தேவை.

  ReplyDelete
 2. நன்றி ஜீவி. நல்ல தவகல் :)மிக்க நன்றி.

  அஷோக் :)

  ReplyDelete
 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete