February 19, 2010

குருகுல வாசத்தின் பெருமை

குருகுல வாசத்தின் அவசியத்தை காலத்தின் பரிமாணத்தின் பேரில் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். எதையும் ஆழமாகவும் முழுமையாகவும், பல கோணங்களிலும் யோசித்தால் அதன் அத்தியாவசியம் புரிந்துவிடும்.

காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் பாரதி. இப்பொழுது இருக்கும் பாட திட்டத்திற்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் பிள்ளைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் உயிரை விட வேண்டியுள்ளது. அப்படி படிக்க சொல்லும் பொழுது மாணாக்கர்களுக்கு கவனம் அவசியமாகிறது. கவனிக்குறைவு நேர்ந்தால் பாடங்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிவதில்லை. பின் மறந்தும் போகிறது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, வலையுலகம் இன்னும் எத்தனை உண்டோ அவ்வளவும் அவர்களை திசைதிருப்பும் சாதனங்கள். பரிட்சை என்றால் மனதை ஒருமுகப்படுத்தி தயார் செய்ய வெண்டியுள்ளது. இக்கால கல்விதிட்டத்திற்கே இப்படிப்பட்ட மனக்கட்டுபாடுகளும் ஒழுக்கமும் அவசியம் என்றால், பிரம்மச்சர்யம் பயிலச் செல்பவனுக்கோ, ஞானத்தை அடையும் முயற்சியில் இருப்பவனுக்கோ எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது வெளிச்சமாகிறது. அதனை வீட்டுச் சூழ்நிலை தருவதில்லை. சுற்றுப்புறச் சூழ்நிலை சற்றே மாறுபட்டாலும், அதெற்கென காத்திருந்த மனத்திற்கோ அலைபாய்வதற்கு வசதியாகிறது.

ஆகவே குருகுலவாசம் அவசியமானது. குருவினிடமே வாசம் செய்து பாடம் பயிலுதல். மாணாக்கன் பயில்வது வேதமும், ஒழுக்கமும் பாடமும் மட்டுமல்ல. குருமார்களின் வாழ்வு முறை, செயல்வழிபாடுகள், நெறிகள் என பலவும் கண்ணுற்று தெளிகிறான். அதனால் இங்கு குருவே ஆச்சார்யனாகவும் ஆகிறான். ( i.e. கற்பிப்பது போல் அவனும் நடந்து வழிநடத்திச் செல்கிறான்). குருவினிடத்தே வாசம் செய்வதால் மாணவனின் கவனம் பெரும் அளவு சிதறுவதில்லை. ஒருமுகமாக தன் இலக்கில் குறி வைத்து எட்டிப் பிடிக்கிறான். குருவிற்கு சிஷ்யன் செவைகள் பலவும் செய்யக் கடமைபட்டுள்ளான். வேதம் நெறி மட்டுமன்றி சங்கீதம் முதலிய கலைகளுக்கும் பண்டைய காலத்தில் குருகுல வாசம் இருந்து வந்திருக்கிறது. குருகுலவாசம் தோராயமாக 12 வருடகாலம் செய்யப்படும் என்கின்றனர். ஒவ்வொரு கலை அல்லது பிரிவிற்கு வெவ்வேறு குருவினிடத்து சென்று பயிலும் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பிட்ட துறையில் அதிகம் பாண்டித்தியம் பெற்றிருக்கும் வேறொரு குருவிடம் அதனை கற்றுத் தெளியலாம்.

சிஷ்யர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு குரு வகித்தாலும் சிஷ்யனின் சுயமான முயற்சி மற்றும் அவன் புத்தி-கூர்மையும் அதனை நிர்ணயிக்கிறது. பவ-பூதி எழுதிய உத்தர ராம சரிதத்தில், லவ- குசர்கள் வால்மீகி முனிவரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுடன் கூட ஆத்ரேயி என்ற மாணவியும் படிக்கிறாள். அவளின் புத்திபலம் லவ-குசர்களுடன் போட்டியிட முடியவில்லை. அதனால் அவள் அந்த குருகுலத்தை விட்டு வேறு இடம் சென்று பயின்றாளாம். குருவிற்கு எல்லா மாணாக்கனும் ஒன்று. அவர் புத்தி கூர்மையுள்ளவனுக்கும் புத்தி மட்டுபட்டவனுக்கும் ஒரே பாடத்தை பயிற்றுவிக்கிறார். அவர் சொன்ன பாடங்களை எந்த அளவு உள்வாங்கி கிரஹித்துக்கொள்கிறான் என்பது மாணாக்கனைப் பொறுத்தது. இதனை உணர்த்தும் வகையில் ஆத்ரேயி "மண்ணாங்கட்டி எவ்வாறு சூரிய ஒளியை தன்னுள் வாங்கி உமிழ்வதில்லையோ மூடனின் அறிவும் அவ்வாறே. புத்தி கூர்மை மிகுந்த மாணாக்கனோ கதிர் வீச்சை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஸ்படிக மணியைப் போன்றவன்." என்கிறாள். மாணாக்கனின் உழைப்பு, சிரத்தை, எல்லாம் பொருத்தே அவன் உயர்வும் அமையும். சரியான குரு அமைந்துவிட்டாலோ அவனுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்த பலன். வழிகாட்டிகள் குருமார்கள் என்பதாலேயே சிஷ்யன் செய்யும் பாபச்செயல்களுக்கும் குரு பொறுப்பாவான். மக்கள் செய்யும் பாபம் ராஜாவைவ் சாரும், ராஜாவின் பாபம் புரோஹிதரைச் சாரும், மனைவியின் பிழைகளுக்கு கணவன் பொறுப்பு அதே போல் சிஷ்யர்களின் ஒழுங்கீன நடத்தைகளுக்கு குரு பொறுப்பாளி என்பது பெரியோர் வாக்கு. இவர்கள் எல்லோரும் வழிகாட்டிகள். தவறான வழியில் செல்லும் தம் மக்களைத் திருத்தக் கடமைப் பட்டவர்கள்.

அப்பேர்பட்ட குருவினிடத்து, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடத்து அதிக மரியாதையும் பெறும் மதிப்பும் வைக்க வேண்டும். கொடிய நஞ்சுக்கு ஒப்புமையான விடயம் எது என்றால் குருவை அவமதித்தல் என்கிறார் ஷங்கராச்சார்யார். பிரம்மச்சர்யம் பயிற்றுவிக்கும் குரு "வித்யா-குரு". க்ருஹஸ்தன் ஆகாமல், சன்யாசம் ஏற்று அதன் பின் கிடைக்கும் குரு "தீக்ஷா-குரு"

February 09, 2010

குரு க்ருபை (சோ-வின் எங்கே பிராமணன் -பகுதி 2)


ஆச்சார்யர்-குரு-வாத்தியார் என்போரின் பேதங்களை நாம் முன்பே கண்டிருக்கிறோம். அச்சார்யன் தம் போதனைப் படி நடந்து முன்னுதாரணமாக இருந்து வழிநடத்திச் செல்பவர். குரு அவரையும் ஒரு படி மேல். அவரையும் கடந்தவர். அவர் பார்வையாலேயே தம் போதனையை போதிப்பவர். i.e. நயன தீட்சை செய்யக்கூடியவர். ஸ்பரிசத்தால் தீட்சை தரவல்லவர். மானச தீட்சை தரும் சக்தி படைத்தவர்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணக் கதையொன்றை முன்பே அலசியிருக்கிறோம்.


ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.




(முந்தைய பகுதியிலிருந்து).

"நீ சகல சாஸ்திரங்களையும் கற்றாவன் ஆவாய்" என்று சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு ஞானோபதேசம் கிடைத்துவிட்டது (குருவில் க்ருபையால்). குருவின் உபதேசம் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.

உபதேசிக்கும் வகையில் இன்னொரு வகையும் உண்டு. எதிர்கேள்விகளால் ஞானத் தீ மூட்டி வழிநடத்தி செல்வர். ஸ்வேதகேதுவின் தகப்பனான உத்தாலகர் தம் மகனுக்கு கேள்விக் கணைகளாலேயே உபதேசம் நடத்துகிறார். ஆலமரத்து பழம் கொண்டு வரச் செய்கிறார்.

இதனைப் பிளந்து பார்த்தால் என்ன தெரிகிறது?

விதை!

"விதையை பிளந்து பார்த்தால் என்ன காண்கிறாய்?

சூட்சுமமான பெரிய ஆலமரமே விதைக்குள் இருக்கிறது!

(நீர் கொண்டு வரச் செய்கிறார். பின் உப்பிட சொல்கிறார். )

இப்போது அருந்தும் நீரில் உப்பு நடுவிலா, முதலிலா முடிவிலா உப்பு இருக்கிறது?

அதே போல் ஆன்மாவும் நீக்கமற எங்கும் வியாபித்திருக்கிறது என்று உதாரண விளக்கம் அளிக்கிறார். குறிப்பறிந்து பொருள் கொள்ளல் என்ற முறையில் கேள்விகளாலேயே ஆன்மவிளக்கம் உபதேசிக்கிறார்.

மனிதன் ஒருவனின் கண்ணைக் கட்டி பொருட்களை திருடிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவ்ட்டால் அவன் எவ்வாறு திண்டாடி வழிதெரியாது தவிப்பானோ அப்படிப்பட்டது சம்சாரம். கர்மவினையை திருடனுக்கு ஒப்பிடலாம். ஆசை காமம் க்ரோதம் போன்ற குணங்கள் அவன் கண் மறைக்க வழி தெரியாது திண்டாடுகிறான். அப்படிபட்டவனுக்கு துணை கிடைத்து அவனை வழி சேர்ப்போனே குரு எனப்படுபவன்.

போலிகுருமார்கள் பற்றியே அதிகம் கேள்வியுற்று, குருகுலம், குருபக்தி என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை அற்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். எங்கும் எதிலும் போலிக்களைக் கண்டு சலித்து விட்ட நமக்கு, இறைவனை நாடும் பாதையிலும் போலிசாமியார்களைக் கண்டு நோகும் நிலை தான். அதனாலேயே இப்பாதையில் கால் வைக்க தயங்குபவர்கள் அதிகம்.

கலியுகம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் உட்கொள்ளும் உணவு முதல் மருந்துகள் வரை, மருத்துவர்கள் முதல், ஜோதிடர்கள் வரை எங்கும் போலிகள் அதிகமாகிவிட்டன. உறவினில், அன்பினில், வார்த்தைகளில், போலி தன்மை அதிகரித்து உண்மைகள் குறைந்துவருகின்றன. இக்கால கட்டத்திற்கேற்ப குருமார்களும் ஆசிரமங்களும் கூட சில தவறான நோக்கத்துடன் செயல்பட்டுவிடுவதால், இம்மார்க்கமே தவறு என்றோ இதில் செயல்படும் அனைவரும் வேடதாரிகள் என்றோ கூறிவிட இயலாது. போலிகளின் நடுவே நல்ல உணவும், மருந்தும், மருத்துவனும், அன்பும், உறவும் அவ்வப்போது தட்டுப் படுவதைப் போல் சிறந்த குருமார்களும் ஆச்சார்யர்களும் இன்றும் இருந்துவருகின்றனர். பல சன்மார்க ஆசிரமங்கள் உலகளாவிய முறையில் நிறைய சேவைகள் செய்த வண்ணம் உள்ளனர். இவர்களின் தன்னலமற்ற சேவை தொடர்ந்து வருகிறது.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என விளம்பரம் செய்வது, தற்கால குருகுலம், குருமார்கள் ஆசிரமங்களுக்கும் சாலப் பொருந்தும்.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். போலிகளை நாடாதீர்கள்" உண்மையான குருவை எவ்விதம் கண்டு கொள்வது? பண்ட பதார்த்தங்களைப் போல் இதற்கென விதிமுறைகள் கிடையாது. உண்மையை பிரித்துணரும் பக்குவம் வளர்த்துக் கொள்வது தான் வழி. உண்மையான பக்தனுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. அவன் பிரித்துணரும் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பான். உண்மையான குருவை எளிதில் கண்டுணர்வான்.