November 15, 2009

பள்ளிக்கூடம் போகமாட்டேன் ('சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009')

அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு என் கதை பிடித்தமானதாக இருந்தால், உங்கள் வாக்குகளை இங்கே பதிக்கவும் மிக்க நன்றி। அன்புடன், ஷக்தி
_________________________________________________________________

தினம் ஒரு சினிமா, கூத்து எல்லாம் இன்றுடன் முடிந்தது. நாளை முதல் மீண்டும் பாழாய்ப் போன பள்ளிக்கூடம். வருடம் முழுவதும் விடுமுறை விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! பள்ளிக்கூடமும் புஸ்தகமும், பாடமும் யார் தான் கண்டுபிடித்தார்களோ! ஷண்முகத்தின் முகம் சுண்டிய கத்தரிக்காயாக வாடி விட்டிருந்தது.

"முகமெல்லாம் ஏன் சுருங்கி போயிருக்குது!" - கலை தான் முதலில் கண்டுபுடித்தாள்.

"ஒண்ணுமில்ல"

"அப்பத்தா.... பாருங்க ஒங்க பேரக் கொளுந்த!.. நாளைக்கு ஸ்கூல் போக இம்புட்டு வாட்டம்" "- கலை சூள் கொட்டினாள்.

அப்பத்தா அழாத குறையாய் கெஞ்சி பள்ளிக்கு அனுப்பியதெல்லாம் ஒரு காலம். அப்பொழுது அவன் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். பழைய சோற்றை தின்றுவிட்டு ஸ்லேட்டுப் புத்தகத்துடன் வயக்காட்டுப் பக்கம் ஓடிவிடுவான். மூச்சிரைக்க ஓடி வரும் அய்யனோ அப்பத்தாவோ தரதரவென்று இழுத்துக் பள்ளியில் விட்டு வருவார்கள்.

"அப்பத்தா அய்யன் கோவிச்சுக்கும், நானு....வாச வளியா ஒடிட்டு குறுகால புகுந்து தோட்டத்து வளியா உள்ள வந்துரவா"

"எலே போலே, இஸ்கூல் போனாத் தான் எங்கள மாதிரி வயக்காட்டுல அவதிபடாம, டவுசர் சர்ட் பொட்டு சுகமா வேலைய பாப்ப"

இயல்பிலேயே ஷண்முகம் பயந்த சுபாவம். யாருடனும் அதிகம் கைகலப்பு சண்டைகள் கிடையாது. சத்தியமூர்த்திக்கும் இவனுக்கும் தினமும் தகராறு வரும். இவன் பலப்பத்தை பிடிங்கிக்கொண்டு விடுவான். டவுரை கிழித்துவிடுவான். பயத்தில் ஓரிரு முறை நிக்கர் கூட ஈரமாக்கியிருக்கிறது. படிப்பிலும் ஷண்முகம் சத்தியமூர்த்தியை விட சுமார் தான். தமிழரசி மட்டும் தான் இவன் கட்சி. "லே ஏன் அவனோட தெனமும் சண்ட இளுக்கற" என்று சத்தியமூர்த்தி காலரை பிடித்து கேட்கும் தைரியம் அவளுக்கு மட்டும் உண்டு.

"அந்த பொட்ட புள்ளைக்கு இருக்குற தகிரியம் கூட ஒனக்கு இல்ல" - அய்யன் சொல்வது வெப்பங்கொழுந்தாய் கசந்தாலும் அப்பட்டமான உண்மை.

"அப்பத்தா கத சொல்லேன்... "

"அப்ப அந்த ராஜா தன்னோட மவன குருகுலத்துக்கு அனுப்பிட்டாங்களாம்"

'அப்டீன்னா?"

"அப்டீன்னா, நீ இஸ்கூல் போவுர இல்ல, அது மாதிரி இல்லாம, வாத்தியாருங்க வீட்டுலையே தங்கி படிக்கோணும். ஒரு பத்து வருசத்தில அம்புட்டும் கத்துகிட்டு அப்புறம் தான் வூட்டப் பார்க்க போவணம்."

"இதெல்லாம் எப்ப அப்பத்தா" ஷண்முகத்தின் கண்கள் பயத்தில் விரியும்.


"அது கெடக்கும் நூறாயிரம் வருசத்துக்கு முன்ன"

"செயிலு மாதிரி இருக்குமா"

"இல்லடா கண்ணு, நல்லதெல்லாம் சொல்லி தருவாங்க"

"நல்லவேள அப்ப நான் பொறக்கல" அப்பத்தாவை இறுக்கமாய் பிடித்து உறங்கினாலும் கனவில் ராமசுப்பு வாத்தியாரின் பிரம்புக்கு கை கால் முளைத்து மிரட்டும். கொம்பை பிடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி இடி-இடியென சிரிப்பான். அப்பத்தாவின் கதையின் காரணமாக கனவில் சத்தியமூர்த்திக்கு குடுமி முளைத்திருக்கும்.

'பேசாதைக்கு வயக்காட்டுல அய்யனுக்கு கூட மாட வேலைக்கு போய்ட்டா என்ன!' இந்த ரகசியத்திட்டம் தோன்றிய மாத்திரத்தில் அய்யனும் ராமசுப்பு வாத்தியாரைப் போல் பிரம்புடன் மனக் கண் முன் காட்சியளித்து, திட்டத்தை தவிடுபொடியாக்கி விடுவார்.

இந்த வருடம் ஷண்முகம் எட்டாம் வகுப்பு. புது பாடத்திட்டம். மாநில அளவில் பொதுத்-தேர்வு வைக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை பள்ளியில் எழுந்த வண்ணம் இருக்கிறது. பொதுத்-தேர்வு என்றால் இன்னும் அதிகம் பொறுப்பு, அதிகம் உழைப்பு, படிப்பு. சினிமா கூத்து எல்லாம் மூச்! இனி நேரமே இருக்காது. போதாத குறைக்கு சென்ற வருடம் ரௌடிப் பட்டம் தக்கவைத்துக் கொண்ட மாரியப்பன் இந்த வருடம் இவன் வகுப்பில் மாற்றப்பட்டிருக்கிறானாம். அரசல் புரசலாய் சத்தியமூர்த்தி சொல்லியிதிலிருந்து பள்ளி இன்னும் பிடிக்காமல் போனது. மாரியப்பன் மற்ற மாணவர்களை விட வயதில் மூத்தவன் என்பதாலேயே அவன் ஆதிக்கம் சக நண்பர்களிடையே செல்லுபடியாகும். அவன் கிண்டலுக்கு பயந்து பள்ளியை விட்டு மாற்றல் வாங்கியவர்கள் பலர். அவன் அப்பா பெரிய மிராசுதார் என்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் முதல் சக மாணவர்கள் வரை அனைவரும் அவன் சட்டைப் பையில்.

சத்தியமூர்த்திக்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறவனுக்கு இப்போது மாரியப்பன் பிரச்சனை பூதாகாரமாய் பயமுறுத்தியது. பள்ளியில் செட்டு சேர்த்துக்கொண்டு, புள்ளைகளை கிண்டலடிப்பது, ஆசிரியர் தலையை குறி பார்த்து சாக்பீஸ் விட்டடிப்பது போன்றவை குறைந்தபட்ச இன்னல்கள் விளைவிக்கக் கூடியவை. ஏன் என்று கெட்ட சக மாணவனின் சைக்கிள் காற்று புடுங்கப்பட்டது. கூடவே அவனை பற்றி இல்லாத, இருக்கிற, அந்தரங்க நடவேடிக்கைகளை பள்ளிச்சுவர்கள் பரப்பிக்கொண்டிருந்தன.

ஆசிரியர்களையும் விட்டு வைத்ததில்லை. போன முறை தமிழாசிரியர் புகழேந்தியின் உணவு டப்பாவை மேய்ந்து விட்டு, அதனுள் ரப்பர் பாம்பு ஒன்றை பரிசாக விட்டு வைக்க, மதியம் டப்பாவை திறந்த புகழேந்திக்கு பயத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, அடுத்த ஒரு மாதம் பள்ளிக்கு வரவே இல்லை.

'ஓகோ இந்த வருசன் பூகோளப் பாடம் புதிசா சேர்ந்திருச்சா!' கலை சோற்றுடன் கருவாட்டை வைத்து ஊட்டி விட்டாள்.

"எத்தன பெருசா இருக்கு பாரு புத்தகம்!" - கண்கள் அசர புத்தகத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஷண்முகத்தை கலை கண்டுகொள்ளவே இல்லை.

"நான் ஒரு பத்து நாள் லீவு எடுத்து பெரியய்யா வீட்டுல போய் இருந்துட்டு வர்ரேனே." - கெஞ்சல்களுக்கும் அவள் மசிந்ததாய் தெரியவில்லை.

"வந்ததும் ஸ்கூலுக்குத்தான் போவேன். நிசம்மா"

"நல்லா படுத்து தூங்கு, பள்ளிக்கூடம் போக இம்புட்டு ரகளை!"

இவர்களுக்கு என்ன தெரியும், தன்னை இழிவாக பார்க்கும் சத்தியமூர்த்தியைப் பற்றி அல்லது புதிதாக வகுப்புக்குள் நுழைந்திருக்கும் மாரியப்பனைப் பற்றி! கோபமும் வருத்தமுமாய் பொங்கி வந்தது. கலையை பக்கத்திலேயே படுத்துறங்கிப் போனான்.

அன்று கனவில் நல்லவேளை யாரும் வரவில்லை.

"என்னலே பள்ளிக்கூடம் தொறந்தாச்சு இன்னமும் தூக்கம். ஒம்பது மணிக்கு மணி அடிச்சுருவாங்க. போன வருசம் மாதிரி பத்து மணி இல்லை" கரவைப் பசுவின் கத்தலுக்கு முன், கோழியின் கொக்கரிப்பிற்கும் முன்னமே வாசலில் கூவியபடி சத்தியமூர்த்தி நின்றிருந்தான். எரிச்சலாய் வந்தது ஷண்முகத்திற்கு.

"நான் இந்த வருசம் ஒம்பதாம் க்ளாஸ் தெரியுமா" பெருமையும் கிண்டலும் குரலில் மண்டிக்கிடந்தது.

"ஆங் சொன்னியே॥ ரெண்டு க்ளாஸ் மேல போட்டுடாங்க போல" முகமெல்லாம் பல்லாக இளித்த சத்தியமூர்த்தியை காளை மாட்டை விட்டு முட்டச் சொல்ல வேண்டும்!

"சரி பொறவால பாக்கலாம், சுளுவா வந்திரு...என்ன!"

தலைமை ஆசிரியருக்கு எப்போதுமே சத்தியமூர்த்தி என்றால் பிரியம் அதிகம். அதான் இரண்டு க்ளாஸ் மேல பொட்டுடாங்க. இயலாமையுடன் கருவிக்கொள்ளத் தான் முடிந்தது. கதவோரமாய் தயங்கி நின்றவனை அய்யன் அப்போது தான் கவனித்தார்.

"என்னப்பா பள்ளிக்கூடம் போவல?"

"இல்ல...நானும் வயக்காட்டு பக்கம்...வந்திரவா, ஒனக்கும் கூட மாட வேலைக்கு...."

"அடி செருப்பால"

"என்னத்த சொல்ல, அன்னியலெருந்து இன்னிய வரை இதே ரோதனை இவனோட. பள்ளிக்கூடம் போக தொரத்தி விட்டே எங்காலம் ஓஞ்சு போச்சு." அப்பத்தாவின் பொலம்பல் தெரு முக்கு வரை கெட்டிருக்கும்.

***

ஷண்முகம் போகும் போதே மணி அடித்துவிட்டிருந்தார்கள். வகுப்பை நோட்டமிட்ட படி உள்ளே நுழைந்தான். எல்லாரும் இவனையே பார்ப்பது போல் பிரமை. பிரமை என்ன அது தான் உண்மை. அதோ அங்கே மாரியப்பனும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வகுப்பு நிறைந்திருந்தது. இந்த வருடம் நிறைய புது மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் போலும்.

***

"ஹ்ம்ம் இவனும் பாங்கி கீங்கி ன்னு பெரிய உத்தியோகம் பார்ப்பான்னு நினைச்சுத் தான் அனுப்பி வெச்சது। இப்படி ஸ்கூலையே கட்டிட்டு அளணம்ன்னு தான் அவன் தலையில எளுதிருக்குது போல"

அப்பத்தா சொல்லச் சொல்ல கலைக்கு சிரித்து மாளவில்லை.

***

"வணக்கம் பசங்களா. நான் தான் இந்த வருசம் ஒங்க எட்டாம் வகுப்பு வாத்தியார். எம்பேரு ஷண்முகம். எங்க.... ஒவ்வொருத்தரா உங்க பேரைச் சொல்லுங்க. "


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

28 comments:

  1. ஷக்தி

    நெத்தி அடி கிளைமாக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    இவ்ளோ பவர்ஃபுல்லான க்ளைமாக்ஸ் நான் எதிர்பார்க்கலை...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  2. உடன் கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி கோபி. :)

    ReplyDelete
  3. முதல் பேரா படிக்கும் போதே கிளைமாக்ஸை யூகிக்கமுடிகிறது ஷக்தி...

    //வருடம் முழுவதும் விடுமுறை விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்// இதுதான் எனது ஆசையும். அதனால் பிடித்த வரி :)

    உங்க slangs எனக்கு பிடிபடல... உங்க slangs தெரிஞ்சவங்க விமர்ஸிச்சா சரியாயிருக்கும்

    ReplyDelete
  4. உடன் விமர்சனத்திற்கும் வெளிப்படையான விமர்சனத்திற்கும் நன்றி அஷோக். :)

    இந்தக் கதை என் கன்னி முயற்சி இல்லாவிட்டாலும், அரை மணியில் எழுதிய அவசர முயற்சி.

    எனக்குத் திருப்தி தரவில்லை என்பதும் உண்மை. கதையின் ஆரம்பம் கெட்டவுடனேயே எங்கள் வீட்டிலேயே இரண்டு பேர் இதுவரை யூகித்து விட்டனர்.

    நச் இஃபெக்ட் போயே போச்சு. அவர்களுக்கு படித்துக் காட்டிய உடன் யூகித்ததும் டக்-கில் அவுட் ஆகி பெவிலியன் போன பேட்ஸ்மென் மாதிரி ஆகிப்போச்சு என் முகம்! :)))))))

    சும்மா நானும் கலந்துக்கலாமேன்னு தான் அனுப்பியிருக்கிறேன். :)

    Those Slangs were tougher for me. நான் சரியாக உபயோகித்திருக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது.

    ReplyDelete
  5. நான் படிக்கிறப்போ டிவிஸ்ட் இருந்தது. என்னால் யூகிக்க முடியலை..
    இதுபோல் கதை படித்திருந்தாலும் முடிவை யூகிக்க முடியவில்லை...
    இது எந்த ஊர் ஸ்லாங்..? பிடிபடவில்லை. கொஞ்சம் மதுரைப் பக்கம் போல் தெரிகிறது(நான் மதுரைப் பக்கம்தான்.)
    வாழ்த்துக்கள் கன்னி முயற்சிக்கு,...

    ReplyDelete
  6. //இந்தக் கதை என் கன்னி முயற்சி இல்லாவிட்டாலும், அரை மணியில் எழுதிய அவசர முயற்சி.//

    //சும்மா நானும் கலந்துக்கலாமேன்னு தான் அனுப்பியிருக்கிறேன். :) //

    உங்களின் வெளிப்படையான பதில் அசத்தல் மேனகா...

    போட்டியில் கலந்து கொள்ளலே முக்கியம்...

    ReplyDelete
  7. நன்றி கொபி :)

    நன்றி தமிழ்ப்பறவை :)ஒண்ணு ரெண்டு பேர் கண்டுபுடிக்கலைன்னு சொன்னதே பெரிய சந்தோஷத்தைத் தருது. :)))

    மதுரை பக்கம் தான் என்று நினைக்கிறேன். எனக்கு சென்னைத் தமிழைத் தவிர வேறு தமிழ் பலக்கம் இல்லை என்பதால், ஒரே குழப்பம் ஹிஹிஹி :D


    கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  8. //"வணக்கம் பசங்களா. நான் தான் இந்த வருசம் ஒங்க எட்டாம் வகுப்பு வாத்தியார். எம்பேரு ஷண்முகம். எங்க.... ஒவ்வொருத்தரா உங்க பேரைச் சொல்லுங்க. "//

    முடிவு அட போடா வைத்தது.

    ReplyDelete
  9. சர்வேசன் டாப் 20 லிஸ்ட்டில் செலெக்ட் ஆனதற்கு வாழ்த்துக்கள். (டாப் 20 ல் நானும் கூட ஓரமா இருக்கேன் மேடம்)

    ReplyDelete
  10. nandri mohankumar. :)

    //சர்வேசன் டாப் 20 லிஸ்ட்டில் செலெக்ட் ஆனதற்கு வாழ்த்துக்கள். //

    idhu eppothu? enakkE theriyathE. nandri mohankumar :)


    vaNakkam chelladurai,

    //இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

    http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html
    //

    nichayam padithuvittu pathil ezhuthugiren.

    anbudan,
    shakthi

    ReplyDelete
  11. முதல் சுற்றில் பெற்றிருக்கு வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷக்தி. கதையும் எழுத்து நடையும் அருமை. முடிவும் நல்லாயிருக்கு:)!

    ReplyDelete
  12. நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  13. என்னம்மா சக்தி கதை 20ல ஒண்ணா வந்திருக்குபோல்ருக்கு சொல்லவே இல்ல வாழ்த்துகள் பாராட்டுக்கள் ஷக்தி பெருமையா இருக்கு!

    ReplyDelete
  14. ரொம்ப நன்றி ஷை! உங்கள் வாழ்த்து எனக்கு priceless

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  15. வாழ்த்துகள்! ஓட்டு போட்டு கடமையை ஆத்திட்டேன்! :-)

    ReplyDelete
  16. தூத்துக்குடி , மதுரை வட்டார மொழியின் கலவையில் எழுதியுள்ளீர்கள் . கதை அருமை .

    ReplyDelete
  17. நன்றி மதார். :) எனக்குப் பழக்கமில்லாத வட்டார மொழி. சரியா தவறா என்று தெரியாமல் ஒரு சிறு முயற்சி.

    சந்தனமுல்லை,

    மிகவும் சந்தோஷங்க :) ரொம்ப நன்றி :) :)

    ReplyDelete
  18. Nice Climax. Story is good.My best
    wishes for your success.

    ReplyDelete
  19. Thanks c2. Thanks for dropping by and for ur encouraging words. Nice to know u blog :)

    ReplyDelete
  20. இயல்பாக வட்டார மொழியைக் கலந்து கதையை நடத்திச் சென்றது அதன் சிறப்பைக் கூட்டுகிறது.
    வாழ்த்துக்கள், ஷக்தி!

    ReplyDelete
  21. soopperaana thiruppam! Well done, SP! Congrats! You have passed in your attempt at local dialect too!

    ReplyDelete
  22. Thanks pp maam :) I am glad I got a pass mark from an agmark madhurai person like u :)

    ReplyDelete
  23. அருமையான கதை. அவன் மன ஓட்டத்தோடு நாமும் பயணிக்கிறோம்

    ReplyDelete
  24. நன்றி கோமா...வருகைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  25. இன்றைய 19.12.2011 வலைச்சரத்தில் பார்த்த பிறகு உள்ளே நுழைந்துள்ளேன்.

    அருமையாக இயல்பாக வட்டார மொழியில் கதையைக் கொண்டு சென்றது நல்லாயிருக்கு.

    கன்னி முயற்சி அதுவும் அரை மணியில் எழுதியது என்பது, தங்களின் தனித்திறமையைக் காட்டுகிறது.

    'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' என்பதே என்னவென்று நான் இதுவரை அறிந்திருக்கா விட்டாலும், அதில் டாப் 20 க்குள் இந்தச்சிறுக்தையும் வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  26. நான் மிகவும் ரசித்த இடங்கள்:

    //"நல்லவேள அப்ப நான் பொறக்கல" அப்பத்தாவை இறுக்கமாய் பிடித்து உறங்கினாலும் கனவில் ராமசுப்பு வாத்தியாரின் பிரம்புக்கு கை கால் முளைத்து மிரட்டும். கொம்பை பிடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி இடி-இடியென சிரிப்பான். அப்பத்தாவின் கதையின் காரணமாக கனவில் சத்தியமூர்த்திக்கு குடுமி முளைத்திருக்கும்.//

    //தமிழரசி மட்டும் தான் இவன் கட்சி. "லே ஏன் அவனோட தெனமும் சண்ட இளுக்கற" என்று சத்தியமூர்த்தி காலரை பிடித்து கேட்கும் தைரியம் அவளுக்கு மட்டும் உண்டு.//

    //"அந்த பொட்ட புள்ளைக்கு இருக்குற தகிரியம் கூட ஒனக்கு இல்ல" - அய்யன் சொல்வது வெப்பங்கொழுந்தாய் கசந்தாலும் அப்பட்டமான உண்மை.//

    //மாரியப்பன் மற்ற மாணவர்களை விட வயதில் மூத்தவன் என்பதாலேயே அவன் ஆதிக்கம் சக நண்பர்களிடையே செல்லுபடியாகும். அவன் கிண்டலுக்கு பயந்து பள்ளியை விட்டு மாற்றல் வாங்கியவர்கள் பலர். அவன் அப்பா பெரிய மிராசுதார் என்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் முதல் சக மாணவர்கள் வரை அனைவரும் அவன் சட்டைப் பையில்.//

    //ஏன் என்று கெட்ட சக மாணவனின் சைக்கிள் காற்று புடுங்கப்பட்டது. கூடவே அவனை பற்றி இல்லாத, இருக்கிற, அந்தரங்க நடவேடிக்கைகளை பள்ளிச்சுவர்கள் பரப்பிக்கொண்டிருந்தன.//

    //ஆசிரியர்களையும் விட்டு வைத்ததில்லை. போன முறை தமிழாசிரியர் புகழேந்தியின் உணவு டப்பாவை மேய்ந்து விட்டு, அதனுள் ரப்பர் பாம்பு ஒன்றை பரிசாக விட்டு வைக்க, மதியம் டப்பாவை திறந்த புகழேந்திக்கு பயத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, அடுத்த ஒரு மாதம் பள்ளிக்கு வரவே இல்லை.//

    //இவர்களுக்கு என்ன தெரியும், தன்னை இழிவாக பார்க்கும் சத்தியமூர்த்தியைப் பற்றி அல்லது புதிதாக வகுப்புக்குள் நுழைந்திருக்கும் மாரியப்பனைப் பற்றி! கோபமும் வருத்தமுமாய் பொங்கி வந்தது. கலையை பக்கத்திலேயே படுத்துறங்கிப் போனான்.

    அன்று கனவில் நல்லவேளை யாரும் வரவில்லை.//

    //"வணக்கம் பசங்களா. நான் தான் இந்த வருசம் ஒங்க எட்டாம் வகுப்பு வாத்தியார். எம்பேரு ஷண்முகம். எங்க.... ஒவ்வொருத்தரா உங்க பேரைச் சொல்லுங்க. "//

    வாழ்த்துக்கள். பிரியமுள்ள vgk

    ReplyDelete
  27. மிக்க நன்றி வை.கோ sir. பொறுமையாக வாசித்து, பிடித்த இடங்களெல்லாம் சுட்டிக்காண்பித்துளீர்கள். மிகவும் மகிழ்ச்சி :)

    ReplyDelete