September 06, 2009

சந்திரமுகி - A pheonix



( படம் வெளியானவுடனேயே, சுடச்சுட திரையரங்குகளில் பார்த்த அனுபவம் மிகக் குறைவு. அப்படிப் பார்த்த ஒரு சில படங்களுள் இதுவும் ஒன்று. ப்ளாகர்கள் ஷை, ஜீவ்ஸ், மரவண்டு உட்பட பல நண்பர்களுடன் சேர்ந்து ரசித்த படம். பயந்தாங்கொள்ளியான என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஜீவ்ஸ்-ஐயும் பயமுறுத்திய புண்ணியம் என்னைச் சாரும். அவனுக்கு தனியே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். )


'பேய்ப் படம்' என்ற முன்னறிவிப்பு யாரும் தரவே தராததால், சவுண்ட் இ·பெக்ட் அதிகமாய் இருக்கும் இடமாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் பெரும் பாக்கியம் கிட்டியது. 'பாபா படம் முழுசாய் ஊத்திக்கிச்சு' என்று பரபரப்பாய் பேசப்பட்டதால் இதில் சிரமம் எடுத்து ஏதேனும் செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது. ரஜினி கதாபாத்திரத்தின் அறிமுகத்தின் பொழுது, ஜிகினா பேப்பர்கள் தியேட்டரில் (அதுவும் பெங்களூரில்!) பறந்தன. (யாரும் எழுந்து வீசியதாய் தெரியவில்லை) இதெல்லாம், ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த, படச்சுருளிலேயே இணைத்து எடுத்துவிடுவார்களா எனப் புரியவில்லை.


தமிழ்ப் பட டைரக்டர்களுக்கு, 'பேய்ப் படங்களோ', 'த்ரில்லர்'களோ, 'டிடெக்டிவ்' படங்களோ 'சஸ்பென்ஸ் படங்களோ' எடுக்கத் தெரியும்...ஆனால் எடுக்க மாட்டார்கள்.
அப்படியே இது போல் எதேனும் கதை இருந்தால், அதில் நாலு சண்டை, இரண்டு டூயட், சலிப்பூட்டும் காமெடி என்று கலவையாய் ஒரு விருந்திட்டு, திகட்ட வைப்பதில் மன்னர்கள். இந்தப் படமும் அதில் விதிவிலக்கல்ல.

இந்தப் படத்தின் கதைப்படி, ரஜினிக்கு சண்டைக்காட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கே ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து ஓடிவிடுவார்களோ என்று பயந்து, சின்னக் குழந்தைகளுக்கு சொல்லும் காக்கைக் கதையையே சும்மா ஒப்புக்கென்று சில மசாலாக்களை சேர்ப்பது போல், சண்டை என்று ஓரிரண்டு காட்சிகளை சேர்த்து, உணர்ச்சி வசப்படும் ரசிகர்களை முதலில், லாலிபாப் கொடுத்து உட்கார்த்தி வைத்து விடுகிறார்கள்.

கொஞ்சமே கொஞ்சம் கதையும் எதிர்பார்க்கும் சிலர், தேவையில்லாத சண்டைக்காக முகம் சுளிக்கும் சமயம், தடாலென்று 'வேட்டையபுரம் அரண்மணை', 'அகிலாண்டேஸ்வரி' என்று பில்ட் அப் கொடுத்து, நம்மை சற்றே நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டு, கே.ஆர்.விஜயா காணாமல் போய் விடுகிறார்.

அதுக்கப்புறம், நடக்கும் கதை எல்லாமே வேட்டையபுர அரண்மனையும், அதைச் சுற்றியிருக்கும் கிராமத்திலும் நடப்பது. தன் மனைவிக்காகத் துடிக்கும் பிரபு, நெகிழ வைக்கிறார். செம்மின் ஷீலாவிலிருந்து, மாளவிகா வரை, நாசரைலிருந்து பிரபு வரை, எல்லோரும் தன் பாத்திரத்தை மிகைப்படுத்தாமல் நன்றாகவே செய்ய....

காமெடி என்றாலே, தொண்டை கிழிய கத்துவது என்று, கவுண்டமணி காலத்திலிருந்து வந்த பாரம்பர்யத்தை விடாமல் கைப்பற்றி, மிகவும் மிகையாய் நடித்து, எரிச்சலூட்டுகிறார் வடிவேலு. வடிவேலு கேரக்டர், 'ஒரு வரிக்கதையை எப்படி மூன்று மணிநேரம் ஓட்டுவது' என்ற பயத்தில், காமெடிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது. முகமும் உடலும் சேறு அப்பிக்கொண்டு, வண்டியில் ஏற மறுப்பதும், உடனே ரஜினி 'அப்போ நான் ஊருக்கு போகமாட்டேன்' என்றவுடன், அதே 'வரட்டு ஜம்ப' முகத்துடன்.... "என்ன வில்லத்தனம்!!" என்று மனதுள் பொருமுவது மட்டும் புன்னகைக்க வைக்கிறது.

வடிவேலுவின் காமெடியிலும், கதை இம்மி அளவும் நகராத அலுப்பிலும் நாம் சீட்டில் கடுப்புடன் நெளிகையில், மணிமணியாய் பாடல்கள் சற்றே சாந்தப்படுத்துகின்றன. "அத்திந்தோம்" பாடல் நாட்டுப்புற மெட்டை நன்றாய் நினைவூட்டி, தாளமிட வைக்கிறது என்றால், "கொக்கு பற பற" பாட்டு, அதன் குரல் வளத்திற்கும், இசைக்கும் ரசிக்க வைக்கிறது.

"·பாசில்'-ன் 'மணிச்சித்ரதாழு' கதையின் தழுவல் இல்லவே இல்லை என்று பி.வாசு முழங்கிக் கொண்டிருக்க, பார்த்த அத்தனை பேருக்கும், ஏனோ 'மணிச்சித்ரதாழு'வும், கன்னடத்தின் 'ஆப்த-மித்ர' வும் நினைவிற்கு வராமல் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை இவ்விரு படங்களையும் பி.வாசு சரியாய் பார்க்கவில்லையோ?

இந்தப் படத்தில் இன்னொரு கவனிக்கத் தக்க விஷயம், ரஜினியின் புதுமையான தோற்றம். குறைந்தது பத்து வயது இளமையாய்த் தெரிகிறார். போடும் உடைகளில் நவீனத்துவம் எட்டிப் பார்ப்பதற்கு அவர் மகள் ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார். இது தவிர, ஃபேஸ் லி·ப்டிங் செய்துள்ளார் என்றும் சிலர் அரசல் புரசலாய் பேசுகிறார்கள். எது எப்படியிருப்பினும் அவர் உடையும், முகமும் "பளிச்".

ஒரு வழியாய், கதையை இடைவெளை வரை படாத பாடு பட்டு நகர்த்தி,

"இனி...சந்திரமுகி"

என்று ஸ்டில் போடும் போது, மீண்டும் நமக்கு லேசாய் நம்பிக்கை பிறக்கிறது.

பிறகு தான் புரிந்தது, இது ரஜினி படமே அல்ல! இது சந்திரமுகியின் படம்; படத்தை தூக்கி நிறுத்துவது சந்திரமுகி. படத்தின், நாயகன், நாயகி, ஆதாரம் எல்லாமே "சந்திரமுகி". சந்திரமுகியின் படத்தை சிறுவன் ஒருவன் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு ஏற்படுகிறது. "சிறந்த கவிதையோ கதையோ தன்னைத் தானே எழுதிக் கொள்ள வேண்டும்" என்று கூறுவது போல், சந்திரமுகி தன்னைத் தானே எழுதிக் கொள்கிறாள். கதையில் அவள் வரும் அத்தியாயங்கள், நம்மை அவளின் உள்ளுணர்வுகளுடன் ஒன்ற வைக்கிறது.

சந்திரமுகி தன்னை மறந்து ஆடும் நேரம், ஒலிக்கும் வீணையிசை உயிரோடு ஒலிக்கிறது. மற்றோர் உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் விமானம் போல், அவ்வீணை ஒலி, நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது. இங்கு ஏனோ, வித்யாசாகரின் நிழலில் என்னால் இளையராஜாவைத் தான் காண முடிகிறது. குறைந்த பட்சம் 'ரா...ரா...' பாடலிலேனும் இளையராஜாவின் சாயை இருக்கிறது என்று அவர் இசையைக் கேட்ட எல்லோராலும் அடித்துக் கூற முடியும்.

நூறு வருடத்திற்கு முன் அமைந்த நாகரிகம், நம் கண்முன் விரிகிறது. சந்திரமுகியின் அறை என்று காட்டப்படும் அறையின் interiors பிரமிக்க வைக்கிறது.

எல்லோரும் குறிப்பிட்டது போல் நிறைய விடையில்லா 'எப்படி?'க்களும் 'ஏன்?'களும் மண்டியிருக்கின்றன. இக்கதையில், ஸ்ப்லிட் பர்சனாலிடியை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்றால், பாம்பு எதற்காய் வருகிறது? இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்குத் தோன்றிய விடை அளித்துக் கொள்ள ஏதுவாய், இயக்குனர் முடிவை நம்மிடம் விட்டு விட்டார்.

கதைகளைப் படித்து, அல்லது படங்களைப் பார்த்து, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரமாய் தன்னையே பாவித்துக் கொள்பவர்கள் பலர் உண்டு (நான் உட்பட). அவர்களுக்கெல்லாம் இப்படிப் பட்ட வியாதி இருப்பதாய் கூறிவிட முடியாது. இம்மனோபாவத்தையும் தாண்டிய பலமான மன-பாதிப்புகள் இருக்க வேண்டும். அந்த பின்னணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணம், 'யார் சந்திரமுகி' என்ற விறுவிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காய் இருக்கலாம். யாரென்று தெரியச் செய்யாமலே, பின்னணிக் கதைக்கும் குழந்தைப் பருவத்திற்கும் அதிக கவனத்தைத் திருப்பியிருக்கலாம். தேவையற்ற காமெடிக்கு பதில் இத்தகைய காட்சிகள், மேலும் கதைக்கு வலுவூட்டியிருக்கும்.

ஜோதிகாவின் நடிப்பிற்கு பக்கபலமாய் இருப்பது அவர் கண்கள், அப்புறம், அதிக இஃபெக்டிற்காக கண்களில் அடிக்கும் 'டார்ச் லைட்'. ஷோபனாவிற்கு 'மணிச்சித்ரதாழு' வின் சிறந்த நடிகை விருது கிடைத்தது என்றால், ஜோதிகாவிற்கு குறைந்து நம்மூர் ·பில்ம்-·பேர் அவார்ட் நிச்சயம் கிடைக்கும். சிரமம் எடுத்திருக்கிறார்.

சாடிஸ்டிக் பாத்திரம் வேட்டையராஜாவினுடையது. அவர் வரும் பொழுதே, அவையினர் ஒருவரின் தொப்பி கீழே விழுந்து விட, கைக்கொட்டி ஆர்பரித்து மகிழ்கிறார். ஒரே வெட்டாய் குணசேகரனை வெட்டிய வேட்டையராஜா, கீழே விழுந்திருக்கும் தோட்டை மெதுவாய், ஜதி பாடியபடி ஆர்ப்பாட்டமின்றி, முகத்தில் அதே வெறிகலந்த மௌன சிரிப்புடன், எடுத்து அணியும் இடம் மகுடம். சந்திரமுகி காணும், கற்பனைச்சூழலை, பாட்டுடன், கலந்து, நிஜத்திற்கும், நிழலுக்கும் தாவும் picturisation / choreography பாராட்டத்தக்கது.


சிக்கென்ற முகத்துடனும், ஆடையலங்காரத்துடனும், ரஜினி வேட்டைய ராஜாவாய் மனதில் நிற்கிறார். 'பதினாறு வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'அவள் அப்படித்தான்'- இந்தப் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும், ரஜினியின் வில்லத்தனம் என்னவென்று! அவர் செய்யும் ஹீரோயிஸத்தில், மனதைப் பறி கொடுத்த தமிழ் சினிமா, நிச்சயம் 'ரஜினி' என்ற ஒரு அருமையான 'வில்லன்' நடிகரை இழந்து விட்டது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'ரஜினி' என்ற நடிகர் படத்தில் மிளிர்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து இன்னும் அதிகமாய் மின்னுகிறார் ஜோதிகா.

படத்தின் மைன்ஸ் பாண்ட். டிரெக்ஷன், காமெடி.

ப்ளஸ் பாய்ண்ட். ரஜினி, ஜோதிகா எல்லோரையும் விழுங்கி விட்டு, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கும் "சந்திரமுகி". நடிகர்களையும் தாண்டி, கதையையும் தாண்டி, கதாபாத்திரமாய் வெற்றி பெறுகிறாள் சந்திரமுகி.

ஒரு முறை பார்க்கலாம். ரஜினி, ஜோதிகா, மற்றும் இசைக்காக!

இன்னொரு முறையும் பார்க்கலாம். 'சந்திரமுகி'க்காக!!

12 comments:

  1. கே ஆர் விஜயா படத்தில் நடித்து இருந்தார்களா? நான் கவனிக்கவில்லை அல்லது மறந்திருப்பேன்.

    படம் பார்த்தபோது, படம் முழுவதும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது, நகைச்சுவை காட்சிகள் சில தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. உங்கள் விமர்சனம் படித்தபின் அட இப்படியும் இருக்குமோ என எண்ண வைத்தது. மிகவும் அழகாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.

    பார்க்கும் படங்களில் சில படங்களே தாக்கம் ஏற்படுத்துவதுண்டு. மேலும் நடுநிலை விமர்சகர்கள் மிகவும் குறைவு! உங்கள் பார்வையில் சந்திரமுகி நன்றாகவே இருக்கிறாள். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. சந்திரமுகிக்கு இப்போ விமர்சனம்???
    //இங்கு ஏனோ, வித்யாசாகரின் நிழலில் என்னால் இளையராஜாவைத் தான் காண முடிகிறது. குறைந்த பட்சம் 'ரா...ரா...' பாடலிலேனும் இளையராஜாவின் சாயை இருக்கிறது என்று அவர் இசையைக் கேட்ட எல்லோராலும் அடித்துக் கூற முடியும். //
    அத்திந்தோம் பாடலில் அதிகமாகவே இருக்கும்.. வித்யாசாகரிடம் இருக்கும் மெலோடி மனசும் அப்படி எண்ண வைத்திருக்கலாம்.(ராஜாவுக்கு அப்புறம் இவரைக் கொஞ்சம் நம்பி இருந்தேன்)இப்போதான் ஆளையே காணோம்.
    ரா...ரா... பாடல் கன்னட இசையமைப்பாளர் யாரோ போட்ட பாடல் எனக் கேள்வி...
    //. அந்த பின்னணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணம், 'யார் சந்திரமுகி' என்ற விறுவிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காய் இருக்கலாம்.//
    அப்படித்தான் நினைக்கிறேன். அல்லது பி.வாசுவுக்கு அவ்வளவுதான் கதை சொல்ல முடிஞ்சிருக்கும்...
    மற்றபடி சாருநிவேதிதா விமர்சனம் மாதிரி நீஈஈஈளமான விமர்சனம்...

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம் கொஞ்சம் லேட்டானாலும்

    ReplyDelete
  4. சந்திரமுகி விமர்சனம் அருமை...

    மீண்டுமிருமுறை பார்த்த திருப்தி.....

    ReplyDelete
  5. நன்றி இராதாகிருஷ்ணன், கோபி, லதானந்த், தமிழ்ப்பறவை. :)

    இந்த விமர்சனம், சுட சுட படம் பார்த்ததும், வேறொரு குழுமத்தில் முன்பு எழுதியது. என் பழைய எழுத்துக்களையும் வலையில் பதிக்கும் எண்ணத்தால், இதில் சேர்த்திருக்கிறேன்.

    நன்றி. :)

    ReplyDelete
  6. // வெ.இராதாகிருஷ்ணன் said...
    கே ஆர் விஜயா படத்தில் நடித்து இருந்தார்களா?
    //

    சென்னை வீட்டில் இருக்கும் பிரபுவின் அம்மாவாக வருவார்.

    // தமிழ்ப்பறவை said... ரா...ரா... பாடல் கன்னட இசையமைப்பாளர் யாரோ போட்ட பாடல் எனக் கேள்வி...//

    ஆஹா அப்படியா! ...

    // அல்லது பி.வாசுவுக்கு அவ்வளவுதான் கதை சொல்ல முடிஞ்சிருக்கும்... //

    இது தான் சரின்னு நினைக்கறேன் :)))))

    //மற்றபடி சாருநிவேதிதா விமர்சனம் மாதிரி நீஈஈஈளமான விமர்சனம்... //

    ஹி ஹி :D

    ReplyDelete
  7. சூப்பர் சக்திபிரியா. ரொம்ப நீண்ட அருமையான விமர்சனம். அண்மையில் வெளிவரும் படங்களுக்கும் இப்படியொரு விமர்சனம் எழுதுங்க.

    ReplyDelete
  8. என்னங்க சந்த்ரமுகிக்கு எவ்ளவு லேட்டா விமர்சனம் எழுதி இருக்கீங்க?லேட்டா எழுதினாலும் நல்லா எழுதிருக்கீங்க..நான் வேட்டயராஜவிர்க்கும்,ஜோ விற்கும் மே மூன்று முறை பார்த்தேன்..

    அன்புடன்,
    அம்மு.

    ReplyDelete
  9. அம்மு, பாலமுருகன், மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. "·பாசில்'-ன் 'மணிச்சித்ரதாழு' கதையின் தழுவல் இல்லவே இல்லை என்று பி.வாசு முழங்கிக் கொண்டிருக்க, பார்த்த அத்தனை பேருக்கும், ஏனோ 'மணிச்சித்ரதாழு'வும், கன்னடத்தின் 'ஆப்த-மித்ர' வும் நினைவிற்கு வராமல் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை இவ்விரு படங்களையும் பி.வாசு சரியாய் பார்க்கவில்லையோ?
    //


    கன்னடத்தில் இயக்கியது பி.வாசு. மூலக் கதை மணிசித்திரதாழு - இதில் எந்த மாற்றமும் இல்லை. மணிசித்திரத்தாழுவின் மொத்தமும் அப்படியே ( நகைச்சுவைக் காட்சிகள் தவிர்த்து.) ஜோதிகாவின் நடனம், முகபாவம் எல்லாம் டிட்டோ ஷோபனாவினுடையது


    இல்லை என்று வாசு மறுத்தால் அது ஜமுக்களத்தில் வடிகட்டிய பொய்
    கன்ன

    ReplyDelete
  11. //
    இல்லை என்று வாசு மறுத்தால் அது ஜமுக்களத்தில் வடிகட்டிய பொய்
    கன்ன//

    அதெல்லாம் சரி, ஜமுக்காளத்தில் எப்டி பொய்யை வடிகட்றதுன்னு கொஞ்சம் சொல்லேன்...

    ReplyDelete
  12. ஏன் சந்திரமுகி படம் வரும்போது நீங்க ஊர்ல இல்லையா? இல்ல வலைப்பூ ஆரம்பிக்கலையா?

    ReplyDelete