சிங்காபுரத்து சீலன் (short story) ( தேர்தல் 24)
*********************************************
The following story didn't bag any prize, but it was sent for the contest. (Please read on..) (Story was penned for the picture attached)
சிங்காபுரத்து சீலன்
*********************************
(I)
வாங்க, சிங்காபுரம் தர்மசீலன்ப்பத்தி தெரிஞ்சுக்கலாம். ஏன்னு கேக்கறீயளா? காரணம் இருக்கு….
---
காலையிலிருந்து அவருக்கு பெரிய கொழப்பம். அங்கன பாருங்க கிணத்தடியில இருக்குற ஒத்தைக் கல்லு மேல தர்மசீலன் உட்கார்ந்து கிட்டத்தட்ட நாப்பது நிமிசமா தீவிரமா சிந்திச்சிட்டு இருக்காரு. கிணத்தடி தொவைக்குற கல்லுதேன் அவருக்கு போதிமரம். எந்த பிரச்சனைக்கும் தீர்வு அந்த கல்லுலதேன் இங்கயும் அங்கயுமா பொறிச்சு வச்சிருக்கும்.
.
இருந்தாலும் முத்தையன் கொஞ்சம் ஓவராத்தான் ஏத்திவிடுறான். இப்படி ஒரு சூழ்நிலையில சீலன் சிக்கிக்குவாருனு ரெண்டு மாசம் முன்ன, அவரே கூட நெனைச்சதில்ல. எல்லாம் மொகராசி.
முந்தா நாளு என்னாச்சு தெரியுங்களா……..
..
“அண்ணே நீங்க உம் சொன்னா மொத்த சனமும் ஓங்கபின்னாடிதேன்”. - நம்ம முத்துப்பய
...
“எதுக்குடா? என்னய வச்சு செய்யவா?”
..
“உங்க மவுசு உங்களுக்குத் தெரியலண்ணே. தங்கமனசுக்காரரு நீங்க!”
..
“அது முரளி நடிச்சப்படம்’ டா சொந்தமா நாலு வார்த்த புகழ்ச்சியா பேசு பாப்பம்“
..
‘கொழாயடி-குணசீலா!’, ‘சிலேட்டு-சிங்காரத்தேவா!”
..
“போதும்டா போதும், நிப்பாட்டு”.
__
ஒட்டுமொத்த ஊரு சனத்துக்கும் தர்மசீலன் மேல பிரியமுண்டு. அதுக்கு காரணம், சுயநலமில்லாத கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனுசன் அப்டீங்கற போதுவான அபிப்ராயந்தேன். கொஞ்சம் வருசத்துக்கு முன்ன கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு மனு கொடுத்து அலைஞ்சு திரிஞ்சு, ஊருக்கு கொழாயடி நீர் கொண்டு வந்தாரு. பொதுநல வசதில பிரச்சனையினு வந்தா, பொதுசனம் சார்ப்பா புகார்மனு கொடுத்து, முதுகெலும்பு ஒடிய முன்ன நின்னு, சிக்கலத் தீத்துட்டு தான் மறுவேலய பாப்பாக.
-
“போன வருசம் தேர்தல்ல நின்ன கட்சிக்காரங்க எல்லாம் மாடிவீடு கட்டிக்கிட்டாக, நமக்கு என்னத்த செஞ்சாக? நல்ல பேர சம்பாதிச்சுருக்கீக. நீங்க நில்லுங்கண்ணே தேர்தல்ல”
--
விண்டு வாயில் போட்ட இட்லி விக்கி வெளியே வந்து விழுந்திருச்சு.
..
“என்னதே விளையாடுறியா!”
..
“நெசமாத்தாண்ணே. எந்த கட்சி சார்ப்பாவும் நிக்க வேணாம். தனியா சுயேச்சயா நில்லுங்க!”
..
“நின்னு?”
..
“பெறவு, நாற்காலி கிடைச்சா உட்காரலாம்!” மகிழினி சிரிச்சாங்க.
..
“ஏடி உனக்கு கேலியாபோச்சுதில்ல?!”-நையாண்டியா பேசுறாகன்னு சீலனுக்கு சந்தேகம்.
..
“இல்லீங்க, தம்பி சொல்லுறதும் ஒருவகையில சரியாத்தான் இருக்கு. முயற்சி பண்ணி பாப்பமே. நாலுபேருக்கு நல்லது நடக்கணுமுனு நினைக்குறவக நீங்க, அதுக்குச் சொன்னேன்”.
--
மகிழினியே சொன்னப்ப சீலனுக்கே ஆச்சரியமா இருந்துச்சு. -“பாருங்க உங்க பேர முன்மொழிய பத்து பேர புடிச்சு கொண்டாந்துட்டானே!”
.
“ஒங்கபேர பத்தென்ன பத்தாயிரம் பேரு சொல்லுவோம்…எம்புட்டு பேருக்கு சிலேட்டு குச்சி வாங்கி குடுத்து நல்லது பண்ணிருகீய, அதெல்லாம் வோட்டா வந்து விழுகப்போகுது. எந்த கட்சி பின்னாடியும் சீட்டு கேட்டு நிக்காதீய. தனியா நில்லுங்கண்ணே சிங்கம் மாதிரி!”
.
சீலனுக்கு சிலுசிலுன்னு ஆகிருச்சு. “”சிங்கம்!””
.
பவளக்கொடி பள்ளிக்கூடக் காலத்துல செல்லமா சீண்டுன வார்த்தை. “சிங்கம் மாதிரி.சிலுப்பிகிட்டு முடியப் பாரு”
..
நெனக்கையில தித்திப்பா இருந்துச்சு “இந்த மஞ்சசட்டை உனக்கு நல்லா இருக்கு சீலா….”
..
சின்னபருவத்துல பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்ச பவளக்கொடி. சிலேட்டு குச்சி.கொண்டுட்டு வராதன்னைக்கு சீலன் தன்னுடையத கொடுத்து உதவி செஞ்சது, நெடுநெடுனு நல்ல சினேகமா வளந்து பன்னண்டாங்கிளாசுல பிறந்தநாளுக்கு பேனா பரிசு கொடுக்குறதுல வந்து நின்னுச்சு. திடீருனு பவளக்கொடி ஊரவிட்டு போனதுல, பேனாவும் பாதியிலேயே எழுதறத நிப்பாட்டிடுச்சு. சீலனுக்கு ருசியே நின்னுருச்சு, வாழ்கையே ஒருமாதிரி சப்புன்னு போயிருச்சு. ஊடால இருந்தது நட்புதானா, அதுக்கும் மேலயானு யோசிக்க நேரமில்ல. அடுத்தடுத்து படிப்பு, உத்தியொகம்ன்னு நாட்கள் ஓடிருச்சே!!
--
மகிழினிய மொத முறை கொழயடியில பாத்தப்ப, மத்தாப்பூ மாதிரி அவுக சிரிச்சது எப்படியோ பவளக்கொடிய நியாபகப்படுத்த. குடிநீர்-கொழா பழுதானப்ப மகிழினிக்காகவே முன்ன நின்னு பிரச்சனைய தீத்து வெச்சவரு. அப்புறம் நடந்தது ஊருக்கே தெரிஞ்ச விசயம்.
--
நல்லநாளு போதுன்னா அன்னதானம் செய்யுறது, பிள்ளைங்களுக்கு சிலேட்டு குச்சி வாங்கித்தர்றது (மகிழினி கிட்ட சிலேட்டப் பத்தி சொல்லிடாதீய), நல்ல மதிப்பெண் வாங்குற பிள்ளைகளுக்கு பேனா பரிசா கொடுக்குறது (பேனா! இதயும்-தேன்…இதெல்லாம் நமக்குள்ளாற ரகசியம்) இது போல நல்ல காரியம் செஞ்சு, அக்கபக்க சனத்து மனசுல ஆணி அடிச்சாப்ல நின்னுட்டாரு.
..
“சரிப்பா முத்து, நீ சொல்லுறத யோசிக்கறேன்”
****
(II)
நேத்தே ராத்திரி முழுக்க தூங்காம கொட்டகொட்ட முழிச்சிருந்தாப்ல. ஒருவித படபடப்பு.. கண்ணசந்த கொஞ்ச நேரத்துல கனவில சிங்கம் விசில் அடிச்சு சிரிச்சுது. ஒரு சிங்கத்தை இன்னொரு சிங்கம் தொரத்தித் தொரத்தி கல்யாணம் கட்டிகிச்சு. டீவி சீரியல் பார்க்கறாப்ல இருந்துச்சு. சிங்கத்தையே நம்ம சின்னமா அறிவிச்சா என்ன! சீலனுக்கு புத்தியில பல்பு எரிஞ்சுச்சு. பிரச்சார பேச்செல்லாம் அடுக்குமொழியில சும்மா தூள் கிளப்பலாம்…
...
மதங்கொண்ட யானைகள் என்ன செய்யும் தெரியுமா?
..
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!
..
இது சாம்பிளு தான், இதப்போல நாலஞ்சு பஞ்சு டைலாக் மனப்பாடம் செஞ்சு வெச்சிருந்தாரு.
--
மஞ்சக்கலர் சட்டை தான் போடுவேனு அடம்புடிச்சு, அதே கலருதேன் கட்சி ஆதரவாளங்களும் போட்டே ஆகணும்னு அடாவாடி செஞ்சாரு.
--
ஆனா பாருங்க, பிரச்சாரத்தனைக்கு மொதோ நாளு, சினங்கொண்ட சிங்கத்துக்கு தொண்டகட்டி போச்சு, முழுங்கின விக்ஸ் மாத்திரைக்கு டிமிக்கி குடுத்து, சீறும் சிங்கம், கதவிடுக்குல மாட்டின பூனையாட்டமா மைக்கப் புடிச்சு முழங்க, மொத்த ஊரே மொகத்தைப் பொத்தி சிரிச்சுதே!
--
எல்லாம் தேர்தல்ல ஜெயிக்குற வரைதேன். அதுக்குப்பெறவு அவர் மஞ்ச-சாயம் வெளுத்துப் போச்சு. எப்பேர்பட்ட நல்லமனுசன்!! ஊருக்கு நல்லது செய்யுறேனு அளந்துவுட்ட வாக்குறுதிகள காத்துல பறக்கவுட்டு, வில்லங்கமான அரசியல்வாதியா மாறுவாருனு கனவுலகூட ஒருத்தரும் நெனக்கல!
--
தனிப்பட்ட சலுகைய பயன்படுத்தி, ஊழல்லயே ஊறி, சொந்தபந்தத்து மச்சானுக்கும் மாமனுக்கும் கம்பேனி வச்சு கொடுத்தத கூட மன்னிச்சு வுட்டுடலாம்…..ஆனா இந்த் பக்கமும் அந்தப் பக்கமுமா அஞ்சு-பத்துன்னு ஏகத்துக்கு கையநீட்டி சொத்து-பத்த பெருகிக்கிட்டு, நல்ல வெளயுற நஞ்சை நெலங்கள, சினீமா கம்பேனிக்கு வித்துட்டுடாக.
---
ஆத்தீ! பணமும் பதவியும் இப்படியுமா எம்ஜியாரா இருந்தவர, நம்பியார் ரேஞ்சுக்கு வில்லனா மாத்திப்புடும்!?
தொகுதிக்காரவுங்க கொதிச்சு போயிருந்தாங்க. பெரியப்பெரிய பேனருங்கள தூக்கிட்டு சீலனுக்கு எதிரா கூட்டம் கூட்டினாங்க.
--
சிங்கமாமுல்ல சிங்கம்!
.
சீச்சீ-சீலா நீ ஒரு அசிங்கம்! அப்டீன்னு ஒருத்தரு கொடி புடிச்சிருந்தாரு.
..
சீலனையும் அவருக்கு துணையா நின்ன அக்குணி துக்கிணி பசங்களயெல்லாம், நாலஞ்சு சிங்கங்க பாஞ்சு வந்து காயப்படுத்துற மாதிரி கேலிச்சித்திரம் வரஞ்சு, அந்தப் போஸ்டர வீதிக்கு வீதி ஒட்டிட்டு இருந்தாங்க.
--
மறுநா “சிங்கம் சின்னத்துல போட்டியிட்டு வெற்றி பெற்ற சீலன், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால, அவையனைத்தும் சிங்கங்களாக மாறி அவரைக் கொன்று தின்றன”
--
– செய்தி சேனல்கள் சீலனுக்கே சீல் வெச்சுருச்சு.
“சீலன் போட்டியிட்ட சின்னம் சரியில்ல. கொய்யாக்கா, வேர்க்கடல, பூசணிப்பூ, கனகாம்பரம்…இது போல சின்னம் வெச்சிருந்தா இந்த ஆபத்து வந்திருக்காது.“- அரசியல் ஆய்வுகள் சூடு பறந்திச்சு. ஒவ்வொரு செய்தி ஊடகத்துலயும் இதே பேச்சு.
---
“இல்லயில்ல அது நா இல்ல…நா இல்ல….”
..
அலறிப்புடைச்சு எழுந்தாரு சீலன். வியர்த்து வழிந்திருந்திச்சு.
..
சிங்கம்னதும் சிலுத்துகிட்டியா சீலா’- கிண்டலடிச்ச மைண்டு-வாய்ஸ அதட்டி உக்காரவெச்சு. அடுத்து என்னன்னு யோசனைலதான் காலையிலிருந்து கிணத்தடில வந்து உக்காந்துட்டாப்ல ….. நாஞ்சொன்ன மாதிரியே கிணத்தடி கல்லு பிரச்சனைக்கு தீர்வு சொல்லிருச்சு. இப்ப முழுவேகத்தோட முத்தையனப் பாக்கத்தான் கிளம்பிட்டாக. வாங்க நாமளும் பின்னாடியே போவோம்.
….
இல்லடா முத்து எனக்கு சரிப்பட்டு வராது, நா நிக்கல
..
முன்வச்ச கால பின் வக்காதண்ணே, அரசியல்ல குதிச்சிடு
..
நான் எங்கடா கால வெச்சேன். காலையிலிருந்து கிணத்தடில தான் உக்காந்துட்டு இருந்தேன்!
..
பத்து பேராண்ட கையெழுத்து வாங்கிட்டு வந்தா, இப்டி நக்கல் பண்றியே தலைவா!
..
என்னென்னவோ சொல்லிப்பார்த்தாக, ஆனா முத்தையன் மசியல.
..
சரிடா ஆனா ஒண்ணு, எனக்கு “சிங்கம்” தேர்தல் சின்னமா வேணாம்.
..
சிங்கத்தை சின்னமா தரதா எவஞ்சொன்னான்? தேர்தல் ஆணையம் இலவசமா சில சின்னங்களத் தாண்ணே குடுக்கும். அதுலருந்து உங்களுக்கு தோதா தோணுற மூணு சின்னத்த தேர்ந்தெடுத்துடுவோம். அதுல ஒண்ண உங்களுக்குன்னு ஒதுக்கிருவாங்க. சிங்கமெல்லாம் ஏற்கனவே பெரிய கட்சிங்க வெச்சிருக்காங்கண்ணே!
..
அய்யய்யோ … கடிச்சே கொன்னுடுமேடா. சீலன் மனசுல கனவுரீலு மறுகா வந்துபோச்சு..
..
என்னண்ணே சொல்லுதீய?
__
சீலன் சடக்னு இடத்த விட்டு பழையபடி கிணத்தடிக்கே நழுவிட்டாரு.
**
(III)
மறுநா சொன்னபடியே முத்து ரெண்டாளுங்கள கூட்டி வந்தான். வேட்பாளர் மனு கொடுக்க நல்ல நேரம் பார்த்து கெளம்பினாரு.
..
டே முத்து இன்னையிலிருந்து நீயும் , உங்கூட வந்த இவங்க ரெண்டு பேருந்தேன் எனக்கு சிஷ்யகோடிகங்க. தனியா விட்டுப் போயிறாதீக.
நம்மத் தொகுதில நீங்கதாண்ணே. தைரியமா வேட்புமனு தாக்கல் பண்ணுங்க.
..
டெப்பாசிட்டே போயிறாம இருந்தாச்சேரி.
..
தேர்தல் ஆணயம் வெளியிட்ட சுயேச்சை சின்னங்களோட மாதிரிய, உள்ளாட்சி அமைப்பு அறிவிப்பு பலகையில ஒட்டியிருந்தாங்க.
..
தர்மசீலனுக்கு சிரிப்பு தாங்கல. என்னடா இது, டீ.வி. பிரிட்ஜு, பொம்பளைங்க காதுக்கு போடுற கம்மலு, பாட்டிலு, சீப்பு கண்ணாடின்னு பலசரக்கு கடையாட்டமா எல்லா சின்னமும் இருக்குதே?
..
மெதுவா பேசுங்கண்ணே! எம்புட்டு வேட்பாளருங்க நிக்கறாங்க, ஆளுக்கொரு சின்னம் வேணாமா? எங்க போவுறது!
..
வேட்பு மனுவை நிரப்பிட்டே வந்தவரு எந்த சின்னம் சரியாவரும்னு யோசிச்சு, ஆளுக்கு நாலு இலவசமா அள்ளிக்கொடுத்து பிரசாரத்துல பட்டைய கிளப்ப, இதுதான் சரின்னு ‘பேனாவையும்’, ‘புத்தகத்தையும்’ தேர்ந்தெடுத்தாரு. ஆனா மொதோ தேர்வா அவர் குறிப்பிட்டிருந்தது தண்ணீர்-பம்பு, அடிக்குழாய்!.
“தலையெழுத்தை மாற்றியமைக்கும் தலைமைப் பேனா”
..
“அகத்து இருளை அகற்றும் புத்தகமே நமது சின்னம்”- எப்புர்ரா? சூப்பரா இல்ல?
..
“தண்ணியடிப்போம் தங்கங்களே!” நல்லாருக்காணே? சீலன் முறைக்க, சரிசரி இப்படி வச்சுக்குவோம்….
..
“மறக்காம வாக்களியுங்கள்….உங்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர்பம்பு”
..
சூட்டோட சூடா, எம்பது பக்க நோட்டு ஒண்ணு புதுசா வாங்கி, அவருடைய வாக்குறுதிகள வரீசயா எழுதிட்டு இருக்காரு.
* 1. எக்காரணத்தக் கொண்டும் ஊழலுக்கு துணை போக மாட்டேன்
* 2. வாக்குறுதிகள நெறவேத்த என்னென்ன முயற்சி செய்யணுமோ செய்வேன்
* 3. வெளயுற நெலத்துக்கும் விவசாயிக்கும் தூணா நிப்பேன்
*4. கிராமத்துக்கு பேருந்து வசதிய அதிகரிச்சு, நெடுஞ்சாலை திட்டப்பணிய துவக்கி வெப்பேன்.
* 5. பழுதான கொழா-பம்ப சரிசெஞ்சு தண்ணி பிரச்சனைய தீப்பேன்.
___
இதத்தவிர, செய்யவே கூடாத விசயங்கள பட்டியலிட்டு அந்தப் பேப்பர அஞ்சா மடிச்சு, ரகசியமா பொட்டிக்குள்ள பூட்டி வெச்சிருக்காரு. தெனம் ஒருகா மனப்பாடம் செஞ்சிட்டிருக்காரு.
__
* 1. சொந்தபந்ததுக்கு சல்லிக்காசு கெடையாது
* 2. பவளக்கொடி ஜாடையில நடிகைங்க போஸ்டரு இருந்தாலும் சினீமா கம்பேனிக்கு நஞ்சைய விக்கமாட்டேன்
* 3. சிங்கம் என் சின்னம் கிடையாது
* 4. இனி எனக்கு நீலக்கலருதான் புடிக்கும்
....
‘ரொம்பவே நல்லவனா இருக்கியேடா தர்மா’ - மனசு உருகிச்சு.
..
அடுத்தடுத்த ராத்திரி கனவுல ‘தண்ணீர்-பம்பு’ கண்ணடிச்சு தண்ணி-தண்ணியா சிரிச்சுது. பேனாவும் புத்தகமும் இறக்கைகட்டி பறந்துச்சு. தேர்தல்ல தர்மசீலன் நிக்குற சேதி அம்புட்டு சனத்துக்கும் எட்டி, தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் கையெடுத்து கும்பிட்டுகிட்டாங்க. ராசா மாதிரில்ல வீதியில நடந்தாரு!
...
“சீலனைய்யா, எங்க பள்ளிக்கூட கணக்கு வாத்திக்கு வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கொடுங்க.…வாத்தி ஒரே சிடுமூஞ்சி”.
சீலன் சிரித்தார். "வாத்தியார மரியாதக் கொறவா சொல்லக்கூடாதுப்பா,".அவன் தலய கோதிவிட்டு ரெண்டு பேனாவ கையில திணிச்சாரு.
..
வாரக்கடசீயில எந்த சின்னம் ஒதுக்கியிருக்கிறாங்கனு தெரிஞ்சுரும். வீடுவிடா போயி ரெண்டு பேனாவோ, ஒரு பாட்டில் தண்ணியோ, வள்ளுவர் எழுதின புத்தகமோ கொடுக்கணும். பிரசாரகெடு முடியுற வரை சின்னத்தை பாக்கெட்டிலேயே வச்சுகிட்டு அலையலாம். ஜாடமாடயா நினைவுபடுத்திட்டே இருக்கலாம்.
..
எட்டாங்களாசு படிக்குற சின்னப்பய மொத, வயசானவங்க வரை, எத்தன கனவு வெச்சிருக்காங்க. எல்லாத்துக்கும் வசதிகள செஞ்சு கொடுத்து, அவுங்கள சந்தோசப்படுத்தணும். - தர்மசீலங்கற பேருக்கேத்தாப்ல சிந்திச்சுட்டுருந்தான்.
..
சீலன் நடந்து போற வயக்காட்டுப் பக்கமா நானும் கூடவே நடக்கேன். ஒத்தையடி பாதையில நல்லதொரு தலைவன் நடந்து போறதா எங்கண்ணுக்குத் தெரியுது. எங்க கிராமம் உதாரணமா நிக்கப்போவுதுன்னு உள்மனசு சொல்லுது.
........
தேர்தல் நேரமும் நெருங்கிருச்சு. அடுத்த ஒரு மாசத்துல முடிவு தெரிஞ்சுரும். நீங்களும் தேர்தல் முடிவுகள கண்டிப்பா பாருங்க. ....
..,,,
இனி எனக்கு வசந்தகாலம். வயலோரத்துல பச்சைப்பாவாட கட்டி நிப்பேன். பூக்களால அலங்காரம் பண்ணிக்குவேன். தண்ணி பாயற இடமெல்லாம் ஜிலுஜிலுன்னு ஓடுவேன்…
நா யாருன்னு கேக்கறீயளா? நான் இந்த ஊரு கிராமதேவதை…என் பேரு, ‘சிங்கமுகீ’. அட நில்லுங்க….ஏன் ஓடுதீய?!
சுபம்
ShakthiPrabha
No comments:
Post a Comment