December 16, 2022

மார்கழிக் கோலங்கள்



புள்ளினங்கள் கூவும் பூங்காலைப் பொழுதில்
கள்ளியவள் எழுதியுள்ள புள்ளிகளின் இலக்கியம்;
தள்ளித்தள்ளி தெறித்திருக்கும்
வெள்ளிப் பூக்களை - கரத்தில்
அள்ளியள்ளி தொடுத்த மலரோவியம்;
சித்திரவீதிகளில் சிந்தியிருக்கும் அதிசயம்- என்
சிந்தையெங்கும் பூத்திருக்கும் பூவனம் - இது
பள்ளிகொண்ட சித்தன்ன-வாசல் காவியம்.
.
- ShakthiPrabha



( Maargazhi kolam two years ago)


December 13, 2022

நான்

 

எங்கேனும் விட்டுவிட நினைத்து;
எப்படியோ கொன்றுவிடத் துடித்து;
காததூரம் கடத்திச்சென்று
கைவிடவே விழைந்து;
காசியிலே தொலைந்த கர்மமென்றே
கழித்துக்கட்டி கைவீச முயன்று;
ஒழிந்து போ என்றே ஓலமிட்டு;
அதட்டி அடக்கி; மிரட்டி மடக்கி
அடாவடியாக அதிகாரம் செய்து;
அத்தனையும் தோற்றதால்,
அடிபணிந்து தொழுதேத்தி;
கெஞ்சிக் கூத்தாடி; கொஞ்சிக் குழைந்து
தஞ்சமே புகுந்திடினும்;
அகங்காரமெனும் அலங்கோலமாகி
மிஞ்சியே மிரட்டும்,
"நான்"
- ShakthiPrabha




December 05, 2022

World of Cinema - Drama : changing scenarios (Deivathin kural Volume 7 )

( தெய்வத்தின் குரல் பகுதி 7  தொகுப்பிலிருந்து) 

.
சினிமா, நாடகக் கலை இப்போது எப்படி இருக்கிறது? ரொம்ப ஜனங்களை இழுக்கிற சக்தி – mass media வாக இருக்கிற சக்தி – ஜனங்களை இழுத்து இந்திரியங்களைக் கிளறி அனுப்பிவிட்டால் போதுமா? அது சரியா? டிராமாவால், சினிமாவால் எத்தனையோ நல்லது செய்யலாம், செய்யலாம் என்கிறார்கள். ‘லாம்’ என்பது வாஸ்தவம்தான். வாஸ்தவத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி. அணு சக்தியால் நல்லது செய்யலாம் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டே ‘பாம்’களைக் குவித்துக் கொண்டு போகிற மாதிரிதான் நடந்து வருகிறது.
.
பொறுப்புணர்ந்த நாடகாசிரியரும், நாடகம் நடத்துகிறவரும் சினிமாக் காரர்களும் என்ன செய்ய வேண்டும்? ஜனங்களின் மனஸை உயர்த்தப் பாடுபட வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளை நல்வழியில் திருப்பிக் கட்டுப்படுத்தி, லோகத்தோடு அவர்கள் ஸௌஜன்யமாக இருக்கும்படியாகவும் தங்களுக்குள் சாந்தமாக ஆகும்படியாகவும் செய்யக்கூடியவைகளை எழுதி நடிக்க வேண்டும். இப்போது நடப்பது நேர்மாறாக இருக்கிறது.
.
ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கிறவன் அது முடிந்து வெளியே போகிறபோது முன்னைவிட மனசு கெட்டுப் போகிற ரீதியிலேயே இப்போது இருக்கிறது. காமமும் குரோதமும்தான் ஜீவனின் பரம விரோதிகள் என்பது கீதாவாக்கியம். இப்போது படங்களில் இந்த இரண்டும்தான் பிரதானம்.
.
வெவ்வேறு வகுப்பு ஜனங்களை, வெவ்வேறு கட்சிக்காரர்களைப் பரஸ்பரம் சண்டைக்குத் தூண்டிவிடுகிற நாடகங்களும் சினிமாக்களும் ஜாஸ்தியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விரசத்துக்கோ எல்லையே இல்லாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.
.
Olden day Traditions
.
முன்னெல்லாம் இந்த கலைக்கு வரம்புகள் இருந்தன. அந்த வரம்புகள் போன பின் அந்தக் கலையே வீணாகி விட்டது. இன்னின்ன காட்சிகளைத்தான் காட்டலாம் என்ற விதிகள் முன்பு இருந்தன. சில விதமான ஸம்பவங்களை ஸ்தூலமாகக் கண் முன் காட்டி மனஸை விகாரப்படுத்த மாட்டார்கள்.
.
நாடகம் நடிப்பதற்கென்றே ‘பரத புத்திரர்கள்’ என்று தனியாக ஒரு ஜாதியார் இருந்தார்கள்; மற்றவர்கள் அதில் நுழையவிட மாட்டார்கள்.
யார் வேண்டுமானாலும் சினிமாவில் சேரலாம். அப்பாவை விட்டு விட்டுப் பிள்ளை ஓடிப்போய் சினிமாவில் பிழைத்துக் கொள்ளலாம், ஸ்திரீகள் வீட்டை விட்டு ஓடிப்போய் ஸ்டாராகி விடலாம் என்பதற்கெல்லாம் அப்போது இடமே இல்லை. இதெல்லாவற்றையும் விட, அந்தக் காலத்தில் எத்தனையோ கௌரவமான வரம்புகளுக்கு உட்பட்டே ஸ்திரீ புருஷர்கள் நடித்த போதிலும்கூட வாஸ்தவத்தில் புருஷன் பெண்டாட்டியாக இருப்பவர்கள்தான் நாடகத்திலும் தம்பதிகளாக வருவார்கள். நடீ-ஸுத்ரதார tradition என்று இதைச் சொல்லுவார்கள். இப்போது இந்த நல்ல ஒழுக்க விதிகள் எல்லாம் போய்விட்டன. ரொம்பக் குழந்தைகள் திருட்டுப் புரட்டில் விழுவதற்குச் சினிமாக் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். பெண் குழந்தைகள் மானம் மரியாதை இல்லாமல் ஆகியிருப்பதற்கும் இதுதான் காரணம்.
.
நானும் எல்லோருக்கும் நல்லவனாகப் பேர் எடுக்க வேண்டுமென்று, என் மனசுக்குத் தப்பு என்று தோன்றுவதைச் சொல்லாமல் இருந்தால் அதைவிடப் பெரிய தப்பு இல்லை. நான் சொல்வதற்காக எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கவில்லை; மாறுமோ மாறாதோ, சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொன்னேன்.

Chapter: இன்றைய இழிநிலை

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)