முழுமுதற் கடவுளே மூத்தோனே!
மோதகப்ரியனே குறை தீர்ப்போனே!
உயர் மறைகள் ஓதி; ஓங்கு புகழ் பாடி,
மாந்தர்கள் தொழுதிடும் மங்களரூபனே.
.
பிரணவத்தின் வடிவான தூயனே,
வேழ முகத்தோடு பேழை வயிறதிர
ஞாலம் வலம்வந்த தீரனே,
ஞானப்பழம் உண்ட சிவபாலனே!
.
பெருந்துயர்களை தினம் செவிமடுத்து
வருவினைகளை சடுதியில் களைந்து
தும்பிக்கையாலே தலைகோதி-நல்
நம்பிக்கையூட்டும் கணநாதனே!
.
தெருகூடும் முச்சந்தி முனைகளிலும் - சிறு
உருதாங்கி அரசாளும் உமைமைந்தனே!
அரசமரமே நீயமரும் அரியாசனம் -அப்பம்
பொரிபோதுமே உந்தன் பசி தீர்க்குமே!
.
மூஷிகத்தின் தேரேறி புலன் ஆண்டவன்-எங்கள்
சித்திக்கும் புத்திக்கும் பிரியமானவன்
எத்திக்கும் புகழ்பாடும் இறையானவன்-ஔவை
தித்திக்கும் பாவிற்கு தமிழ்தந்தவன்.
.
அருகம்புல் மாலையும் அணிசேர்க்குமே-எருக்கம்
பூவும் உன் தோள்சேர மணம்வீசுமே
ஏழைக்கும் வரமருளும் எழில்ரூபமே -சூழும்
பிறவிப் பிணிபோக்கி இருள் நீக்குவாய்!
No comments:
Post a Comment