June 19, 2020

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (ஓவியப் போட்டிக்காக எழுதியது)



டிங் டாங்க் என்று பத்து முறை அலறி ஓய்ந்தது கடிகாரம். கண்ணாடியை சரிசெய்து கடிகாரத்தை பார்த்தவருக்கு திக்கென்றிருந்தது. குளுகுளு ஏ.சி அறையிலும் உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது. இன்றுடன் சரியாக பத்து நாளாகிறது. இன்றும் அது வந்துவிடுமோ என்ற அவஸ்தையில் நெளிந்தார் செந்தில்நாதன். இரவு கடக்கவேண்டுமே என்ற கவலையில் ஒரு முழுங்கு விஸ்கி. குடியைை விட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடுமோ என்று நினைத்தார். ஒரு வேளை அத்தனையும் பிரமையா? மனம் நடத்தும் நாடகமோ!
*

நீண்ட நேரம் உறங்காமல் வலைதளங்களில் ஏதேதோ குப்பைகளையும் சில நல்ல விஷயங்களையும் புரட்டிக்கொண்டிருந்தார். இப்படியும் அப்படியும் புரண்டு படுத்தார். எப்பொழுது உறங்கினார் என தெரியவில்லை...
*

புகை மாதிரி கண்ணுக்கு சட்டென புரியாத சூழ்நிலை. சடக்கென்று அந்த உருவம் நுழைந்தது. உடலெங்கும் கருப்பு அங்கி அணிந்து தன்னை மறைத்திருந்தது. ஆணென்றோ பெண்ணென்றோ கூற முடியவில்லை. பேய் பிசாசு மாதிரி அந்தரத்தில் ஆடுகிறதே, ஒரு வேளை மனப்பிராந்தியோ? மெல்ல மெல்ல நெருங்கிய உருவம், அங்கியை விலக்கியது. விலக்க விலக்க இருதயம் ஓட்டபந்தய வேகத்தில் ஓடத்துவங்கியது. அய்யோ என அலறி எழுந்தார் செந்தில். கண்டது கனவு என எளிதில் புறந்தள்ள முடியவில்லை.
*

பத்து நாட்களாக இதே கனவு. ஒவ்வொரு நாளும் அந்த உருவம் மெல்ல மெல்ல தன்னை விளக்கிக் காட்டுகிறது. முதல் நாள் குழப்பமாக மங்கலாக தெரிந்த அதே உருவம் தன்னை வெளிப்படுத்த கொண்டே வருகிறது. அரை வழுக்கை மண்டை. நீண்ட கிருதா....ஒன்றொன்றாக விலக விலக.... அட இது நான் அல்லவா? அப்படியானால் நான் கொல்லப்போகிறேனா? யாரை? எனக்கு பகையாளிகள் யார் உள்ளனர்! சிந்திக்க சிந்திக்க தலைவலி மண்டையை பிளந்தது.

*

அன்றும் கனவு வந்துவிடும் என்று நிச்சயமாக நம்பினார். படுக்க பயந்தவர் இறுதியில் அய்யோ என அலறி எழுந்தார். நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. இனி தாமதிக்கக்கூடாது நாளையே டாக்டர் விவேக்கை சந்திப்பதென முடிவு செய்தார்.
*
வாங்க நீதிபதி அவர்களே.... கிண்டலுடன் கை குலுக்கினான் விவேக்.
--
கிண்டலெல்லாம் அப்புறம். நான் ஒரு பேஷண்டாத்தான் உன்ன பார்க்க வந்திருக்கேன்.
--
ஓ.. இந்தியவின் மிக உன்னத தலைமை நீதிபதிக்கு உதவ காத்திருக்கிறேன் சொல்லுங்க என்ன பிரச்சனை.
*

தொடர்ந்து வந்த பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே பொனார். விவேக் நீ ஒரு மனோதத்துவ நிபுணன் நீ சொல்லு நான் என்ன செய்யட்டும். தினம் படுக்கவே பீதியா இருக்கு.
.
உங்களுக்கு தெரிஞ்சு யாராவது விரோதி? பொறாம புடிச்சவங்க? இப்டி யாராவது?
.
நான் நினைவு தெரிஞ்சு யாருக்கும் வஞ்சம் எண்ணியதில்லை. ஹைகோர்ட் நீதிபதியா பணியாற்றிய போது கூட முறையா தீர்ப்பு வழங்கிருக்கேன். சில கேசுல சரியான சாட்சி இல்லாததால தவறியிருக்கலாம். என் நெஞ்சு அறிஞ்சு தப்பு செஞ்சதில்லை விவேக்.
.
புரியுது சார். சும்மாவா உங்கள தலைமை பதவில உக்காரவெச்சிருக்காங்க. ஒட்டுமொத்த ஆதரவும் உங்களுக்கு இருந்தது. தமிழன் என்கிற முறையில
எங்களுக்கெல்லாம் பெருமை.
.
சரி எப்படி உதவ முடியும்ன்னு நினைக்கறீங்க.
.
விவேக், ஒன்பது நாளா இதே கனவு. இன்னைக்கு ஏன் உன்ன பார்க்க வந்தேன் தெரியுமா?
.
சொல்லுங்க.
.
அந்த உருவம் மெல்ல மெல்ல தன்னை யாரென்று காட்டத்துவங்கி, நேற்று முழுவதுமாக அங்கி விலகிடுச்சு. உள்ளிருந்தது சாட்சாத் நான் தான். நான் யாரையாவது கொலை செஞ்சுடுவேனோன்னு பயமா இருக்குப்பா. குற்றவுணர்வும் பீதியும் கலந்து விவேக் கண்களை சந்திக்க துணிவின்றி
தலை குனிந்தார்.
.
யாரை கொல்றீங்கன்னு தெரியுதா சார்?
.
தெரியலைப்பா. தினம் த்ரில்லர் படம் பார்க்க போற மாதிரி திக்குதிக்குங்குது. இன்னைக்கு தூங்கினா அதும் தெரியுமோ என்னவோ. எனக்கு நடுக்கமா இருக்கு.
----
முதலில் படபடப்பு குறைய மன-அமைதிக்குன்னு சில மருந்து தரேன். ரொம்ப basic stuffs. அதிகம் பயப்படாதீங்க. மூச்சுப்பயிற்சி செய்யுங்க. இரவு படுக்கும் முன்ன நல்ல விஷயங்கள படிங்க, கேளுங்க. இரண்டு நாளில் சரியாகிடும்னு தோணுது. தொடர்ந்து அதே கனவு வந்தா அடுத்த கட்டத்தை யோசிப்போம்.
*

அன்று கோர்ட்டுக்குப் போகவில்லை. வீட்டில் ஏதேதோ யோசித்தார். அந்த கொலை வழக்கில் சாட்சியில்லை என்று ஜாமீன் கொடுத்துவிட்டோமே அதுல செத்துப் போனவன் ஆவியா இருக்குமோ? இன்னும் ரெண்டு நாளில் யாரென்று கனவே சொல்லிவிடும். ஒருவேளை விவேக்காக இருக்குமோ!!! சீச்சீ என்று தன்னை நொந்துகொண்டார். அதீதமான கற்பனை.
*

நான்கு மணி வரை உறங்காமல் சட்டம் சம்மந்தபட்ட புத்தகங்கள், சமீபத்திய வழக்குகள் என ஒவ்வொன்றாக புரட்டினார். சட்டென பொறிதட்டியது. ஒருவேளை அதுவாக இருக்குமோ? ஆம் அதுவே தான். அன்று உறங்கப்போன போது மணி ஐந்து. இரண்டு மணி நேரம் உறங்கியிருப்பார்.
வித்தியாசமான காது, பொருந்தாத கண்-மூக்குடன் ஒரு குழப்ப உருவம். அதை நோக்கி அவர் கத்தியுடன் நகர்கிறார். சுற்றி கூச்சலும் குழப்பமும். ஒரே கலவரம். பின்னால் சிகப்பாய், பச்சையாய் மஞ்சளாய் பல வர்ணங்கள் காற்றில் ஆடியது
சட்டென முழித்தார்.
.
தெளிவுடன் எழுந்தார். 'தாமஸ் உடனே என்னை வந்து பாரு'
*

அன்றைக்கு தீர்ப்புக்காக ஆறு பேர் காத்திருந்தனர். ஒவ்வொருத்தனும் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து உணர்ச்சியற்ற முகத்தை ஒட்டிக்கொண்டிருந்தனர்.
--
அவர்களைச் சேர்ந்தவர்களேன்று யாரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அறுவெறுத்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்நோக்கி நாடே காத்திருக்கிறது. ஆறு பேரும் ஒரே குற்றத்திற்காக தண்டனை வேண்டி காத்திருந்தனர். அவளுக்கு 38 வயது. இரண்டு மாதம் முன்பு வரை குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்று சிறிய குறுகிய உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்திருந்தாள். அவள் ஒருத்தி. அவர்கள் ஆறு பேர். மறுநாள் சின்னாபின்னமாகி சிதறியிருந்தாள்.
*

ஓநாய்களும் பன்றிகளும் வெவ்வேறு வயதொத்த
ஆண்வேடமிட்டு தீர்ப்புக்கு காத்திருந்தன. அதில் ஒருவனுக்கு வயது பதினேழு. வாய்தா மேல் வாய்தா என்று ஒரு வழியாக இன்றைக்கு படிக்கப்படும் தீர்ப்பு நாடு முழுவதும் இத்தகைய குற்றம் செய்பவர்களுக்காக எழுதப்படும் சாசமென அமைய காத்து நின்றது.
*
இரண்டு மாதமாக எழுதப்பட்டு , ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சு ஒப்புதல் வழங்கியது.
--
அன்னியன் திரைப்படம் போல கும்பீபாகம் கம்பீபாகம் இப்படி கொடூரமாக கொல்லணும் - பெண்கள் குமுறினர்.
.
இனிமே பொம்பளைங்களுக்கு துப்பாக்கி வெச்சுக்க லைசன்ஸ் குடுங்க - தவறு. தவறான நபர் கையாண்டால் அநீதியில் முடியும். - ஆளுக்கொரு ஆலோசனை.
.
ஆணித்தரமாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது
*

" கொடும் வன்புணர்வு வழக்கில் சாட்சியும் ஆதாரமும் தெள்ளத்தெளிவாக நிருபிக்கபட்டுள்ள நிலையில், வயது வித்தியாசமின்றி குற்றவாளிள் அறுவரையும் கூண்டில் ஏற்றி நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கிய தெருக்களிலெல்லாம் இழுத்துச் சென்று பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட வேண்டும். இத்தருணத்தில், சட்டத்தை தம் கையில் எடுத்து, குற்றவாளிகளை கொன்றுவிடும் முயற்சியில் ஈடுபடும் எவரும் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பதையும் உணர்த்துகிறோம். அடுத்த ஒரு மாதம் அவர்கள் தற்கொலை முயற்சியில் இறங்காவண்ணம் பாதுகாக்கப்படுவர். ஒரு மாத காலம் உயிரை தக்க வைத்துக்கொள்ள போதுமான உணவும் நீரும் மட்டுமே வழங்கப்படும். ஒரு மாத கால கெடுவிற்குப் பிறகு, காற்றுப்புகா சிறிய அறையில் அடைக்கப்படுவர். உணவும் நீரும் நிறுத்தப்படும்.
-

தீர்ப்பு படித்து முடித்ததும் இத்தனை கொடுமை அவசியமோ என்று மனம் பதறியது. தவறு செய்து விட்டோமோ என அஞ்சினார். நீதிமன்றத்திற்கு வெளியே ஒரே ஆரவாரம். பச்சையும் மஞ்சளும் சிவப்புமாக பல வர்ணங்களில் அவர்கள் அணிந்த சேலைகளும் காற்றில் சலசலத்து தீர்ப்பை ஆமோதித்தது.
--

ஆறு பேருக்கும் நா-வரண்டது. தண்ணீர் மறுக்கப்பட்டது. தூக்கு தண்டனை எதிர்பார்த்தனர். அல்லது சுட்டுத்தள்ளிவிடுவார்கள் என்று நினைத்தனர். மனதை தயார்படுத்தியே வந்திருந்தனர்.
.
அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்
"கொல்லத்தானே கூடாது...எங்க அந்த மிளகாய்த்தூளு அத குடு" - என்றாள் ஒருத்தி.

"இனிமே இன்னொருத்தன் இப்படி நினைக்கவே பயப்படணும்" - ஒரு பெண் வீரமாக முழங்கினாள்

.
'அய்யா அய்யா எப்படியானும் தூக்கு தண்டனை வாங்கி குடுத்துடுங்கய்யா....'எங்கள தெருவில நிறுத்தாதீங்க என்ற ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது.

--
உன்னிப்பாக கவனித்தார். ஒருவனின் காதும் இன்னொருவனின் மூக்கும், இதுவரை இப்படிப்பட்ட வழக்கில் தப்பித்த அல்லது தப்பிக்காத பலரின் அங்கங்கள் ஒட்டுமொத்தமாக திரண்டது....

அவர் கனவில் வந்த "அவன்"

--

காரில் ஏறியவர் கண்ணை மூடி அமர்ந்தார்.

"ஏதாச்சும் பாட்டு போடுப்பா"

"அயிகிரி நந்தினி நந்தித மேதினி....."

நெடுநாள் களைப்பு, சுகமாக உறங்கிப்போனார்.

கனவு வரவேயில்லை.


**சுபம்**


குறிப்பு:  கணேஷ் பாலா அவர்கள் நடத்திய ஓவியப் போட்டிக்காக எழுதியது.
நன்றி கணேஷ்பாலா

No comments:

Post a Comment