*
நிறைய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, பேச்சு, வம்பு என்று பொழுது பயனுள்ளதாக (!) ஓடிப்போகும். அடிக்கடி 'கிட்டி பார்டி' நடக்கும். பிரீதிக்கு சமையலில் அத்தனை ஆர்வம் இல்லாத பட்சத்திலும், நட்பு தேடுவதற்காகவே அவளும் இணைந்திருந்தாள்.
*
பஞ்சாபி, சிந்தி, துளூ, தெலுங்கு, கன்னடம் என பலதரப்பட்டவர்களாக இருப்பதால், பேசுவதற்குப் பொதுவான விஷயங்கள் நிறைய உண்டு. நாடுநடப்பு, பொதுஅறிவு, புத்தகம் தவிர, அடுத்தவர் வீட்டு நடப்புகளைப் பற்றிய செய்தியும் இலவசமாகக் கிடைக்கும்.
*
"உனக்கு சமையல் டிப்ஸ் பிடிக்காது, வம்பு தும்பு வேண்டாம். அப்புறம் பிடிக்காம ஏன் போற பிரீதீ " என்ற 'கௌஷிக்'ன் கேள்விக்கு -- "எல்லா விஷயத்தையும் லைஃப்ல பிடிச்சா செய்யறோம்!" என்று பெரிய தத்துவத்தை உதிர்த்து அகன்றுவிடுவாள்.
*
கீழ் வீட்டு அம்புஜம் மாமி தினமொரு முறை பிரீதீ வீட்டுக்கு விஜயம் செய்வார். அன்றைக்கு சுடச் சுட ஒரு செய்தியுடன் வந்தார்.
-
"பிரீதி, உங்காத்துக்கு கீழ புதுசா குடிவராளாமே! "என் வயசுக்குத் தோதா வந்தா நன்னா இருக்கும், சின்னவா நீங்களெல்லாம் ஒரே வம்பு பேச்சு தான்." மெல்லச் சிரித்தாள் பிரீதி. மாமிக்குக் கூட வயதானாலும் வம்பு அதிகம்.
*
அது ஒரு அழகான காலைப்பொழுது. பிரீதீ வீட்டின் கீழ் மாடியில், ஒரே தட்டுமுட்டு சாமான் ஏற்றும் சத்தம்... யாரோ ஹிந்திக்காரார்கள் குடிவருவார்கள் என்று வீட்டு சொந்தக்காரர் ராவ் சொல்லியிருந்தார். அவர்கள் வீட்டு சாவி தன்னிடம் இருந்தது பிரீதிக்கு நினைவு வந்தது. கீழே சென்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
-
அவள் பெயர் பாயல், வீட்டுக்காரர் ரிஷப், வங்கியில் மேலாளராகப் பணிபுரிபவர். எட்டு வயது மகள், ஷீதல், பதினாறு வயது மகன் ரோஷன். அழகான குடும்பம்.
-
வந்திறங்கிய பாதி சாமாங்கள் புத்தகங்கள்! 'அட சிறிய, பெரிய வயதுடையர்கள் படிக்கும் நிறைய புத்தகங்கள் இருக்கே' என்று பிரீதி நோட்டமிடுகையில்....
"எனக்குப் புத்தகம் உயிர், எனிட் பிளைடன் முதல், ரிச்சர்ட் பாக் வரை எல்லாம் படிப்பேன் ஆன்டீ' என்றான் ரோஷன். தானும் புத்தகப்புழு என்று இவள் கூறவும், 'உங்கள் வீட்டு லைப்ரரி வந்து பார்க்கலாமா' என்று தயங்காது பளீர் என்ற புன்னகையுடன் கேட்டான்.
.
நீரைக் கண்ட வாடிய பயிர் போல் அவள் மனம் குதித்தது. அட தனக்கு பிடித்ததைப் பேச நட்பு கிடைத்ததே!
.
அன்று ஆரம்பித்தது நட்பு. பள்ளி முடிந்தவுடன், பல நாள் பிரீதீ வீட்டுக்கு ஓடிவிடுவான். அவன் படித்த, படிக்காத புத்தகங்களை அலசுவார்கள். அன்று பள்ளியில் நடந்த சில பல, விஷயங்களைக் கூறிச் சிரிப்பான். நெருங்கிய தோழர்கள், தோழிகள், ஆசைகள் , லட்சியங்கள் என்று பேசப் பேச நேரம் சிட்டென பறந்தது.
.
இப்படித்தான், வெகுளியாய் ஆரம்பித்த நட்பு.
.
"உங்களுக்கு ஐடெக்ஸ் இன்று நான் தான் போட்டு விடுவேன்" என்று அடம் பிடிப்பான். பிரீதி சமைக்கும் போது பின்னால் வந்து கண்மூடுவான்.
.
'ஏன் ஆன்டீ நீங்க என்னை விட பெரியவங்களா பிறந்தீங்க? என் வகுப்பில் இருந்தால், நீங்க என் best friend ஆகி இருக்கலாமில்ல!" -- குட்டிக் குட்டி கவிதையாகக் கழிந்தபொழுதுகள்! பிரீதிக்கு அவன் செயலில் பாசம், பரிவு, குழந்தைத்தனம் தெரிந்தது.
கௌஷிக் மட்டும், "சின்னப்பையன்னு நினைச்சு, ரொம்ப இடம் கொடுக்காத!" என்ற முறைப்புடன் பார்ப்பது அவளுக்கு ஏனென்று புரியவே இல்லை.
.
"wow ஆன்டீ உங்களுக்கு இந்த ஜீன்ஸ் அழகா இருக்கற மாதிரி வேற யாருக்கும் இருக்காது." என்று கூடை ice வைத்து பிரீதியை குளிரச் செய்வான்.
ஒரு நாள் ஷேர்வானி அணிந்து கொண்டு பெரிய மனுஷத்தோரணையில், வீட்டுக்கதத் தட்டி,
"நண்பர்களோட பார்டி போறேன். dress நல்லா இருக்கா?"
"உன் பாஷைலை சொல்லணம்னா, wow!" என்றாள். மத்தாப்பூவாய் சிரித்தான்.
*
ஒரு நாள் இறுக்கமாய் முகம் வைத்திருந்தான். கேட்டதற்கு உடம்பு சரியில்லை, ஒரே தலைவலி என்று ஒற்றையாய் பதில். திடீரென்று, முழித்துக் கொண்டது போல் "ஆன்டீ, நீங்க 'மேரா நாம் ஜோக்கர்' படம் பார்த்திருக்கீங்களா! நிகழ்வுகளைத் தான் படமாக்கறாங்க இல்லையா".. பேச்சில் தடுமாற்றும். எங்கே எப்போது அவன் நடவடிக்கை மாறிப் போனது என்பது பெரிய புதிராகவே இருந்தது.
அதன்பிறகு அவன் ஐடெக்ஸ் போடுவது, விளையாட்டாய் கண்களை மூடிவது, இரு குடும்பங்களும் வெளியே செல்கையில், பிரீதி பக்கத்தில் தான் உட்காருவேன் என அடம் பிடிப்பது, என எதுவும் செய்யவில்லை. ஆனால் தினம் வருவான், பெரிய மனுஷன் போல் பேசுவான். பிரீதிக்கு மட்டும் ஏதோ குறைந்தது போல் இருந்தது. ஒரு சிறு தயக்கம் அவன் தோரணையில், பேச்சில், செயலில்.
*
கௌஷிக்கிடம் இது பற்றி பேசிய போது
"நீ கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ, அது சின்ன பையன்"
"நான் என்ன கௌஷிக் செஞ்சேன்! சின்ன பையன்னு தானே பழகறேன்"
"சின்னப்பையனும் இல்லை... பெரியவனும் இல்லை..."
"அப்டீன்னா? நான் என்ன செய்யணும்?"
"உன்னை அவன் irritate பண்றானா?"
"சீச்சீ, நல்லவன், எனக்கு அவனைப் புடிக்கும் கௌஷிக்!"
"நல்லபையன் தான், சில காலம் அப்டித்தான் இருக்கும். வயசுதானே..."
"எனக்குப் புரியலை"
கௌஷிக் புன்னகைத்து விட்டு அகன்றான்.
*
ஒரு ஆகஸ்ட் மாதத்தின் மழை நாளில், தாங்கள் வந்து ஒரு வருடம் ஆனதால் வேறு இடம் மாற்றல் ஆகியுள்ளது எனக்கூறி, அடுத்த வாரம் காலி செய்ய இருப்பதை தெரிவித்தாள் பாயல். குடும்பமே ரொம்ப நெருங்கிப்பழகியதால், பிரீதிக்கும் கௌஷிக்கிற்கும் அவர்களின் பிரிவு சங்கடப்படுத்தியது.
அப்புறம் அடுத்த நாள் ரோஷன் வந்தான்.
"என்ன ரோஷன், கிளம்பறீங்களாமே?"
"ம்"
"நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ரோஷன்"
பதிலில்லை.....
"ஆன்டீ, சின்ன குழந்தையாவே இருந்தா நல்லா இருக்குமில்ல! ..."
"ஏன்"
"சும்மா சொன்னேன் ஆன்டீ"
""எங்களை எல்லாம் மறந்துடாத ரோஷன்"
"உங்களை மாதிரி எனக்கு friend கிடைப்பாங்களா ஆன்டீ.. இனிமே?"
"நிச்சயமா கிடைப்பாங்க.. "
"ஆனா அது நீங்களா இருக்காதே!"
"..."
"சில விஷயங்கள் life ல ஏன் நடக்குதுன்னே புரியறதில்லை ஆன்டீ"
திடீரென, குழந்தையாய்க் கேவிக்கேவி அழுதான். பிரீதி அவனை தோளணைத்து சமாதானம் செய்தாள். அப்படியே அவள் மடியில் சாய்ந்து, மீண்டும் கேவிக்கேவி அழுதான்...
"ரோஷன் என்ன இது சின்ன பிள்ளையாட்டம்!"
"தெரியாம ஏதாவது தவறு செஞ்சிருந்தா என்னை மன்னிப்பீங்களா?"
"நீ ஒரு தவறும் செய்திருக்க மாட்ட, நீ தான் நல்ல பையனாச்சே!"
"நாங்க இங்க வந்திருக்க கூடாது..."
"Meeting and parting is the way of Life! ரோஷன், இது படிக்கற வயசு, நல்லா படி, இப்போது அது மட்டும் தான் குறிக்கோளா இருக்கணும். புரியுதா?"
"நான் உங்களை மறக்க மாட்டேன்.. எப்பயும் மறக்க மாட்டேன்!"
"நானும் தான் ரோஷன்"...
அவன் சென்ற பின் பிரீதிக்கு மனம் பாரமானது.அவனை மீண்டும் சந்திப்பாள். இன்றோ நாளையோ அல்லது இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குப் பிறகோ சந்திப்பாள். அவளைப் பற்றி அவன் மறக்கலாம். மறக்காமலும் போகலாம். இல்லை இதையெல்லாம் நினைத்து சிரிக்கலாம். வெறும் நட்பு என்று உணரலாம்.
"ஒரே பதில் தான் கண்ணம்மா" என்றான் கௌஷிக்
"என்ன?"
"விடலைப்பருவம்!"
"..."
"நீயும் நானும் கூட அதைக் கடந்து தானே வந்திருக்கிறோம்!"
..... கௌஷிக் புன்னகை இப்போது அவளுக்குப் புரிந்தது.
இந்த நட்பு தந்த இனிய நினைவுகளுடன் மீண்டும் கிட்டி பார்டி ஜோதியில் கலக்க ஆயுத்தமானாள்.
**முடிந்தது***