*
தேடிய இரையைக் துறந்து, உணவுப் பசியை மறந்து இன்னொரு ஆதரவற்ற ஜீவனிடம் அன்பு செலுத்தும் உள்ளம், அன்னை உள்ளம். இங்கு தான் தாய்மையின் உச்சம் மிளிர்கிறது.
-
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!
என்கிறார் பாரதிதாசன். வீடு, சுற்றம், நாடு எனும் வட்டங்கள் கடந்து அன்பு பொழியப்பட வேண்டும்- எத்தனை ஆழமான கருத்தை கூறியிருக்கிறார்.
*
"மதர் - இந்தியா" (Mother India) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். தீமையின் பக்கம் சாய்ந்த தன் மகனை கொன்று பாரத அன்னையாக உருவெடுக்கும் சிறந்த தாயின் க்தை. தன் உதிரமெனப் பாராது, பிற உயிர்க்கு தீங்கிழைக்கும் கொடியவனை அழித்து பலர் வாழ வழி வகுக்கும் அன்னையாய் கோபுரத்தில் உயர்ந்து நிற்கிறாள். இறைவியை அன்னை என்று போற்றுகிறோம். பூவுலகின் இன்னுயிர்களை எல்லாம் தம் பிள்ளையென காத்து நிற்கும் அன்னையே அம்பிகை வடிவாகி அருள் பொழிகிறாள்.
*
தாய்மை என்பது, 'தனது பிள்ளைகள்' என்ற குறுகிய வட்டத்தில் முடிந்து விடுவதல்ல. பிற உயிர்களையும் தன் உயிர் போல் பாவிப்பது. இரத்தத்தின் பந்தத்தையும், பாசத்தையும் தாண்டி மின்னுவது. ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடு இன்றி தோன்றுவது.
*
எங்கெல்லாம் பசித்தவனுக்கு இன்னொருவன் உணவிடுகிறானோ, எங்கெல்லாம் அன்பால் ஒரு உயிர் இன்னொரு உயிரை அரவணைக்கிறதோ அங்கெல்லாம் தாய்மை பிரகாசிக்கிறது. தன் நலத்தை மறந்து பொதுச் சேவையில் உணவிட்டும், உறவுக்கு பாலம் இட்டும் சுயநலமின்றி பாடும் படும் எளியவர்கள் பலர். பணத்திற்கும் புகழுக்கும் இதனைச் செய்யாது, மகத்தான தொண்டாக செய்யும் இவர்களது நோக்கத்தில் தான் குத்துவிளக்காக சுடர் விடுகிறது அன்னை மனம்.
*
அன்பின் வெளிப்பாடு அனைத்துமே தாய்மையின் வெளிப்பாடு. இத்தகைய உயர்ந்த பண்பை ஒவ்வொருவரும் தம்முள் தேட வேண்டும். தாய்மை எனும் உணர்வை குறுகிய வட்டத்தில் கட்டிப் போடாமல், பாரெங்கும் மனிதம் வளரவும், அமைதி, நல்லிணக்கம் தோன்றவும் பரந்து விதைக்கப்பட வேண்டும்.