பெரும்பாலும் இறைவனை சாக்கிட்டு, நாம் கும்மி அடித்து குதூகலிக்க ஒரு சந்தர்ப்பமாகவே, திருவிழாவும், கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. அதற்கப்பால் கோவிகளில் இறை உணர்வு மேலிட ஜபம் தபத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை சற்று மெலிந்து காணப்படும்.
இன்றைக்கும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோவிலில் எள் சிந்த இடமில்லை. அடிக்கடி கோவிலில் வந்து குசலம் விசாரித்தால் தான் அன்பு என்று அர்த்தமில்லை. இறைவனை அகத்திலேயே இன்னும் சொல்லப்போனால் நம் அகமெனும் மனத்துள் தரிசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தாலும், எண்ணை, திரி, பூ பழம் சகிதம் வந்திருந்து, ஆரத்தி காண்பிக்கும் அரை க்ஷணத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டதும், பக்கத்திலிருப்பவரிடம் வாய் நோக, விட்டு விஷயங்கள், தெரு சமாச்சாரங்கள், சமுகத்தின் சீர் கேடு அங்கலாய்ப்புகள் தொடங்கி, நடுவில் இரண்டு நொடி தீர்த்தம் வாங்கி சேவித்து, இடையே என்ன பிரசாதம் என்று கண்களை மேய விட்டு, மீண்டும் தொடரும் கதைகள்.
நம் வீட்டுக்கு வந்த ஒருவன், நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தால் அஹங்காரம் தலைக்கேறி தாம் தூம் என்று குதிக்கும் நம்மை நினைத்து வெட்கப்படவேண்டும். இவ்வளவு உதாசீனத்தை புன்னகையுடன் ரசித்து கடாட்சித்து கொண்டிருக்கும் பெருமாளின் கருணைக்கு இணையே இல்லை....
இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு சில வழக்கு முறைகளில் உள்ளபடி ஆலயங்களில் பேச்சு சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக குறைப்பது நல்லதோ என்று தோன்றுகிறது.
இவ்வளவு ரணகளத்திலும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஹனுமான் சாலிஸா-வை உச்சஸ்தாயியில் தப்பும் தவறுமாய் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
உபன்யாச சிடி ப்ரஹல்லாதனின் பக்தியை எடுத்துரைத்து கொண்டிருந்தது, இத்தனை ஜன அலறலில் கரைந்தே போனது.