1993 ஆண்டு பெரியவாளைப் பார்க்கவும் என் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்கவும் நான் என் பெற்றொருடன் சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து அன்று தான் அவரை அருகில் காணும் பாக்கியம் கிடைத்தது. சிறுமியாய் இருந்த பொழுது இரு முறை கண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் பேசியதில்லை. பேசும் பக்குவமும் இல்லை.
ஆனால் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்க சென்ற பொழுது, அவரைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது உண்மை. இத்துனை வயதாகி விட்டதே இவருக்கு. நினைவு இருக்குமோ தெரியவில்லை. அவர் பார்ப்பதும் ஆசீர்வதிப்பதும் அவருக்கு உணர முடியுமோ புரியவில்லை. 'உடல் தளர்ச்சி-மூப்பு' போன்ற விஷயம் எத்தனை பெரிய மனிதரையும் பொம்மையாக்கிவிடுகிறதே என்று நினைத்து வருந்தினேன்.
ஆசீர்வாதம் செய்து பொழுதும் கூட அவர் 'தன்- நினைவில்' பூர்ணமாய் இருப்பாரோ இல்லையோ என்றே என் மனம் பரிதவித்தது.
இத்தனை வருடங்கள் கழித்து இந்த மரமண்டைக்கு உரைக்கிறது, அவர் வயதையும் மூப்பையும் கடந்தவர் என்று. வெளித் தோற்றத்தை மட்டுமே கண்டு ஒரு ஞானியை உணர முடியாத முட்டாளாகவே என் மதிப்பிற்குறிய குரு முன் இறுதியாக நின்றிருந்தேன்.
அவரைப் பற்றி பெரிய குரு பக்தி கூட இருந்ததில்லை. அப்பாவும் தாத்தாவும் எங்கள் வீட்டில் ஆச்சார்யரின் படம் வைத்திருந்தனர். அதை எல்லாம் பக்தியுடன் பார்த்ததும் இல்லை.
அவரே என்னை ஆட்கொண்ட சம்பவம் நடந்த வரை...இப்படித் தான் இருந்திருக்கிறேன்.
என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அவர் தம் கடைக் கண் பார்வை செலுத்தி, அருள் சுரந்து என் மனதுள் குருவாய் உயர்ந்த என் ஆச்சார்யருக்கு கோடி வந்தனங்கள்.