கடைசியாய் நானும் ஒரு கதை படித்து விட்டேன். பார்டியோ பார்டி என்று சென்ற மாதம் பார்டி கொண்டாடி விட்டு, என் சொந்த ஊரான சேலத்தில், சொந்த வேலை விஷயமாய் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன்.
அவர் ஒரு சுஜாதா வெறியர் என்று முன்பே தெரிந்திருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு தமிழில் கிறுக்கும் ஆர்வம் இல்லை. வெறும் வாரப் பத்திரிகைகளை மேய்ந்து விட்டு அவசரமாய் அடுத்த வேலையில் என்னை அமிழ்த்திக் கொள்வேன்.
இம்முறை, இலக்கிய கூட்டத்தில் அலசு அலசு என்று பலர் அலசி காய வைத்து, புது சாயம் பூசி, ஒரு வழி பண்ணிவிட்டனர். நான் மட்டும் பாவப்பட்ட ஜந்துவைப் போல் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளின் நடுவே, சுருதி சேராது கூடக் கூவும் கோரஸ் பாடகியைப் போல், சம்மந்தமில்லாது அவ்வப்பொழுது எதையோ உளறிக்கொண்டிருந்தேன். இல்லாவிடில், இறுக்கி வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஏன்? ஒரு அரையணாப் பெறக்கூடிய ஒரு நாவலைக் கூட இது வரை படித்தறியாத பாமரத்தனத்தினால். இந்த உண்மை என்னை மிகவும் சுடவே, என் மாமா வீட்டின் புத்தக அலமாரியை குடைந்து சுஜாதாவின் குட்டிக் குட்டிக் கதைகள் இரண்டைப் படித்தேன்.
1. குருப்ப்ரசாதின் கடைசி தினம்
2. தேடாதே
3. இறுதிப் புன்னகை
இவையெல்லாம் ஒரே புத்தகத்தில் இருந்ததால் என் கண்களிடமிருந்து தப்ப முடியவில்லை. எல்லாக் கதையும் வெகுவாய் ரசித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நன்றாய் இருந்தது.
குருப்ப்ரசாத் இறப்பு தெரிந்தே அவனுடன் பயணிக்கிறோம். நடுநடுவே தெரிந்தோ தெரியாமலோ, கிளுகிளுப்பு என்ற பெயரில், அரைகுறை மார்புடன் உலாவரும் பெண்கள் வர்ணிக்கப் படுகின்றனர். தேவையா என்பதெல்லாம் யோசிக்க அவகாசம் இல்லை. ஏனெனில் குருபிரசாத் பாவம் இறக்கப் போகிறான், இன்னும் சிறிதே நேர அவகாசம் தான். மார்பகத்தை ரசித்து விட்டுப் போகட்டுமே என்ற பச்சாதாபமாய் இருக்கலாம். அவன் மனைவியுடன் புணர்ந்ததை இன்னும் அழகாய் கூறவே முடியாது. கல்யாணம் ஆகாத எந்தப் பெண்ணும் அதைப் படித்தால் இனி திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவு இருந்தது அந்த விவரிப்பு. புசுபுசுவென்று புகைவிடும் எஞ்சின்களை இனி யாரும் ரசிக்க முடியாது. குருபிரசாத் இறந்ததும் கதையில் பிடிப்பு வருகிறது. அதற்குள் கதையும் முடிந்து போகிறது.
'இறுதிப் புன்னகை' நெஞ்சில் ரொம்ப பதிந்தது என்று சொல்ல முடியாது.
'தேடாதே' ரசிக்கும்படி இருந்தது. கடைசிவரை யார் என்று சொல்லாமல் நாளை பேப்பரை பார்த்து தெரிந்துக் கொள்ள சொல்கிறார். நானும் மூன்று நாளாய் பேப்பர் பார்க்கிறேன். இன்னும் புரியவில்லை.
எல்லாக் கதைகளிலும் ஒரு குட்டி சம்பவத்தை வைத்து, எத்தனை அழகாய் கதை வளர்க்கலாம் என்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. கதை முழுதும் பேச்சுகளால் நிரப்பப்பட்டிருந்தாலும், ஒரு தேர்ந்த எழுத்து என்பது என்ன என்று கற்றுக்கொள்ள முடிகிறது. கதை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்ல இயலாது. ரசிக்கலாம். ரசித்தேன்.
_____
_____
சுஜாதா கதைகள் படிப்பதற்கு முந்தைய நாள், மூன்றே மணி நேரத்தில் புத்தகத்தை கீழே வைக்க முடியாமல், கதையில் மூழ்கி, பாத்திரத்தோடு ஒன்றி, அழுது, சிரித்து மாய்ந்து போய் படித்து முடித்த பிறகும், முதன் முறையாய் நான் படித்த சில ஆங்கிலக் கதைகளுக்கு ஈடாய் என்னை வெகு நேரம் பாதித்தது என்று இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" கதையைச் சொல்வேன். நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கும் விச்வம், பரசு சிரிக்கின்றனர். அழுகின்றனர். கனவுகள் தொலைக்கின்றனர், பின் அதுவே வாழ்க்கையாகிப் பழகிப் போய், இருக்கும் வாழ்வில் இன்பம் தேடும் வழியில் திணிக்கப் படுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் விச்வம் பரசுவாகும் வரையில் நடக்கும் கதைகள். இம்மி பிசகாமல் எடுத்துக்கூறுகிறார். ஒரு வரியில் கூட சலிப்பு தட்டவில்லை. வரிக்கு வரி, உங்கள் வாழ்க்கையை, என் வாழ்க்கையை படம் பிடித்துள்ள இந்துமதிக்கு மனம்கனிந்த பாராட்டுகள்.
விச்வம், ருக்மணி உறவு அழகான நட்புறவு. ஒருவேளை ருக்மணி பரசுவுக்கு மனைவியாய் வந்திராவிட்டால், இவனுக்கே நல்ல தோழியாய், பின் வாய்ப்பிருந்தால் காதலியாய் மனைவியாய் வாய்த்திருக்கக் கூடும் என்று பல இடங்களில் தோன்றுகிறது. கொச்சைப் படுத்தப் படாத நட்புறவு. யாரேனும் இக்கதை படிக்கவில்லையெனில் ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள். நம்முள் இருக்கும் விசுவம் இங்கு பாத்திரமாய் பேசுவது புரியும்.
______
நிற்க. ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன் மரத்தடியில் பதிவிட்ட மீள் பதிவு.