June 20, 2011

நிலையற்ற உலக இன்பம் (சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)

அநித்யமானது உலகம். அப்படியெனில் அங்குள்ள பொருளும் நித்தியமில்லாதவை. அங்கு பெறப்படும் இன்பமும் துன்பமும் மாறக்கூடியவை. மாறாமல் இருப்பது சத்தியம் ஒன்றே. எனினும் நித்தியமில்லாத சுகத்தையும் இன்பத்தையும் போகத்தையும் புகழையும் மனம் நாடுகிறது. அப்படி நாடினாலும் கூட ஏதேனும் ஒரு கட்டத்தில் திருப்தி ஏற்படுமா என்பதும் சந்தேகமே. மேலும் மேலும் நாடிச் செல்வதால் திருப்தி ஏற்படுவதே இல்லை. ஆசைகளின் பசி அடங்குவதே இல்லை . இலக்கை எட்டி விட்ட நிலையில் இன்னொன்று முடிவின்றி முளைத்துக் கொண்டே இருக்கும்.

சுவர்கமும் நரகமும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. நம் மனமே நமக்கு நண்பன், மனமே நமக்குப் பகைவனும் கூட என்பது அனைவருக்கும் புரியும். எனினும் ஆசைகள் முடிவற்று நீண்டு கொண்டே இருக்க, 'இன்னும் இன்னும்' என்று மனமும் சபலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஞானம் ஒன்றே சத்தியம். சொத்தும் சுகமும் நிரம்பப் பெற்றிருந்தாலும், மன நிம்மதியை நிச்சலமில்லா அமைதியை அளிப்பது ஞானம். லோபமுத்திரை என்பவள் ராஜகுமாரி. பொன்னும் பொருளும் படைபலமும் நிரம்ப பெற்றிருந்தும், இகத்தே பணமும் பதவியும் அற்ற அகஸ்திய மாமுனிவரை திருமணம் செய்தார். காசும் பணமும் படையும் மட்டுமே சொத்து என்றால் அது அழிந்து விடக் கூடியது. அழியா கல்வியும் ஞானமும் அவர் சொத்தாக இருந்தது. தமிழ் இலக்கணம் இயம்பியவர். அசாத்யக் கல்வியறிவு நிரம்பப் பெற்றவர். அவரையே பெரும் சொத்தாக மதித்தாள் அரசகுமரி. அவர் மூலமாய் ஆயிரம் பேருக்கு சமமான கீர்த்தி பெற்ற ஒருவனை புதல்வனாகப் பெற்றாள். அழியாப் புகழ் பெற்றாள். இகத்தின் சுகத்தை காட்டிலும் பரத்தின் சுகம் நீண்ட ஆயுள் உள்ளது. அதனைக் காட்டலும் உயர்ந்தது தெளிந்த ஞானம். போதுமென்ற மனம் அதற்கு வித்து.

போதுமென்ற மனம் எவனுக்கு வரும்? இன்பம் என்னவென்று ருசித்தவனுக்கே அமையும். அறியாது பசியுடன் இருப்பவனுக்கு போதுமென்ற மனம் வருவதில்லை. யயாதியின் இளமை வெகு முன்னதாகவே சாபத்தின் பேரில் பறிக்கப்பட்டு விட்டது. ஆசைகள் அடங்காமல், அனுபவிக்கும் எண்ணம், மனம், வயது எல்லாம் இருக்க, உடல் முதுமை அடைவது எவ்வளவு கொடுமையானது! அவனால் தன் ஆசைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. தன் மகனின் இளமையை பணயமாகக் கேட்டான். தந்தை மேல் அத்தனை பற்று கொண்ட மகனும் தன் இளமையை தானமாகக் கொடுத்து முதுமையை பெற்றுக் கொண்டான். எப்பேர்பட்ட மகன்! பல காலம் இன்புற்று எல்லா சுகங்களும் அனுபவித்தான் யயாதி. இறுதியில் ஆசைகளை அனுபவித்து தணிப்பது இயலாத காரியம், விட்டொழிப்பதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தான். தன் ராஜ்ஜியத்தையும் இளமையையும் மகனுக்கே கொடுத்து விட்டு, முதுமை ஏற்று, காற்றிலும் பனியிலும் கடும் வெப்பதிலும் தளராது கடும் தவமியற்றி, ஞான நிலையில் நற்கதி அடைகிறான்.

ஆசைகளும் அஹங்காரமும் மனிதப் பிறவியைத் தாண்டியும் நம் உடன் வருவது. சுவர்க லோகத்தில் அவரை பெரும் மதிப்பும் மரியாதையுடனும் வாழ்த்தி வரவேற்கின்றனர். இந்திரன் முதல் அனைவரும் அவரை தங்கள் வழிகாட்டியாய் மதித்து, ஞான உபதேசிக்க வேண்டுகின்றனர். யயாதியின் ஞானமும் அறிவும் அனைவரின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. "உமக்கு சமமான ஞானம் உள்ளவர்கள் எவரேனும் உண்டா?" என்று கேள்வி எழுப்ப, யயாதி "தேவர்களிலோ ரிஷிகளிலோ கந்தர்வர்களிலோ கூட எனக்கு சமமான ஒருவனை நான் கண்டதில்லை" என்று சற்றே அஹங்காரம் மேலிட பதிலளிக்கிறார். அஹங்காரம் குடி கொண்டு விட்டபடியால், மறுபடி பூலோகம் செல்ல நேரிடுகிறது. தன் தவறை உடன் உணர்ந்த யயாதி, தன்னை மேன்மையானவர்ள் அல்லது சாதுக்களின் நடுவிலும் விழச் செய்யும் மாறு வேண்டுகிறார். அங்கே ரிஷிகள் பலரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.

சுவர்கம் செல்ல ஏழு வழிகள் இருப்பதாக சொல்கிறார்.

தவம்
தானம்
நிதானம்
அடக்கம்
இந்திரியங்களை அடக்கி ஆளுதல்
எளிமை


போன்ற குணங்களை ஒருவன் பெற்றித்தல் அவசியமாம். சுவர்கமும் புகழும் கீர்த்தியும் கூட நித்தியம் இல்லதவை. நித்தியமானது இறைவனடி ஒன்றேயாம்.

2 comments:

  1. நீங்கள் கூறும் ஏழு குணங்களுடன் வாழ்ந்தால் இகமே சுகம் தரும். சுவர்க்கம் எதற்கு.? அனைவரும் நலமா.? வலையுலகில் நீண்ட நாளாகக் காணோமே.

    ReplyDelete
  2. நன்றி gmb sir. நலமே. தாங்கள் நலமா? வீட்டில் கொஞ்சம் வேலை. இன்னும் ஒரு மாதம் போல் கொஞ்சம் பிஸி. அப்புறம் அதிகம் வருவேன். :)

    ReplyDelete