March 28, 2011

யார் நண்பன்? -ராஜ நீதிக் கதை (சோ-வின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து

பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்த கதை: யார் நண்பன்?



ஆல மரப் பொந்து ஒன்றில் எலி வாழ்ந்து வருகிறது. இயற்கையின் விதிப்படி பூனைக்கு அது ஆகாரமென்பதால், ஆலமரப்பொந்தின் அருகே எலியின் வரவை எதிர்நோக்கி பூனையொன்று காத்திருக்கிறது. பூனைக்கு பயந்து எலியும் வளைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறது.


ஒரு சமயம் அவ்வழியே சென்ற வேடன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வலை விரிக்க, பூனை அதில் அகப்பட்டுக்கொண்டது. இனி பகைவனின் பயம் ஒழிந்தே விட்டது என்று குதூகலித்த எலியும் மெதுவாக வளையை விட்டு வெளியெ வருகிறது. வெளியே வந்த நொடி, வேறு வகையில் ஆபத்தான சூழ்நிலை.


கோட்டான் எலியின் மேல் எந்தக் கணமும் பாய்ந்து குதற தயாராய் காத்திருக்க, வேறு புறமாக ஓடி ஒளியலாம் என்றால் அங்கே கீரிப்பிள்ளையின் கொடூரம். என்னதான் செய்யும் எலி? எதிரி என்றாலும் தற்போது துணிந்து அணுகக்கூடிய நிலையில் இருப்பது பூனை மட்டுமே. அதன் தலைக்கே ஆபத்து எனும் நிலையில் தவிப்பதால் பூனையே தாற்காலிகமாக நமக்கு உதவக்கூடியவன் என்று முடிவு செய்கிறது எலி. அதனிடம் தன் நிலையைக் கூறி, அதனிடத்தில் அண்டி இடம் கொடுத்தால், கோட்டானோ, கீரியோ தன்னை ஒன்றும் செய்யாது, என்று முடிவு செய்து பூனையை அணுகி நண்பனாக்கிக் கொள்கிறது. பதிலுக்கு தானும் வலையை கடித்துப் பூனையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கிறது.

சிறிது நேரம் காத்திருந்த கீரியும் கோட்டானும் எலியை ஒன்றும் செய்ய முடியாமல் அதன் வழியே சென்று விட, பூனையின் உதவியால் எலி தப்பியது. இனி வலையை அறுத்து காப்பாற்று என்று பூனை கேட்க, எலியொ மறுத்து பேசுகிறது. "நீ உன் சத்தியத்தை அல்லவா மீறுகிறாய்" என்கிறது பூனை. "உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லவில்லை. வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து விட்டால், உயிர் காத்துக்கொள்வதே உன் தலையாய கவனமாய் இருக்க, என்னை விட்டு விடுவாய். இப்பொழுது வலையை அறுத்தால், அடுத்து உன் பசிக்கு நானல்லவோ உணவு" என்று புத்திசாலி எலியின் பதில்.


வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து பூனையை தப்பிக்க விடுகிறது. மறுபடி தன் பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்ட எலியுடன் நைச்சியமாய் பேச்சு கொடுக்கிறது பூனை. "என் உயிரைக் காத்த நீ இனி என் நண்பன், இருவரும் இனி நல்ல நண்பர்களாய் வாழலாம்"


"அது எப்படி முடியும்? நீ என் விரோதி என்பது இயற்கையின் நியது. உன் ஆகாரமே நான். ஒரு காரண காரியத்திற்காக தோன்றிய நட்பு அத்துடன் முடிந்தது. உறவும் நட்பும் கூட காரிய காரணத்திற்காகத் தான். தேவைகள் முடிந்து விட்டால் அங்கு நட்பும் உறவும் யாரும் பாராட்டுவதில்லை. இது உலக இயல்பு, நியதி" என்கிறது எலி.


எலியின் புத்தி சாதூர்யம் நட்பு பாராட்டும் போது பல நேரம் அவசியமாகிறது. இல்லையெனில், நைச்சியமாகப் பேசும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் சிக்கித் தவிக்க நேரிடும்.


நம் அன்றாட வாழ்விலும் இது போன்ற நட்பு வட்டங்கள் இருக்கின்றன. எனக்கென்னவோ இது தேர்தல் நேரமாகையால் இக்கால அரசியல் கூட்டணிகள் கூட நினைவிற்கு வருகிறது. உங்களுக்கு?

March 01, 2011

துரோகம் - நீதிக் கதை (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)


துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிதோபதேசத்தில் ஒரு கதை. பயந்து பரிதாப வாழ்வு வாழ்ந்து வந்தது. முனிவர் ஒருவரை அண்டி, தன்னை பூனையிடமிருந்து பாதுகாக்கும் படி வேண்டிக்கொண்டது. முனிவரும் பரிதாபப் பட்டு, அதனை பூனையாக மாற்றிவிடுகிறார். விட்டதா தொல்லை? உலகத்தில் தொடர்ந்து ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றாக இன்னல்களும், சவால்களும், சந்தோஷங்களும் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இப்பொழுது பூனைக்குப் புதிய பயம், நாயைப் பற்றியது. "என்னை நாய் துரத்துகிறது, முனிவரே அபயம்". பரிதாபப்பட்டு முனிவரும், அதனை நாயாக மாற்றுகிறார். சிறுத்தையொன்று தன் வேட்டைக்கு நாயை குறிவைக்கவே, 'பயந்து ஓளிதல்' முடிவற்றதாகிறது. முனிவரும் இம்முறையும் கருணை கொண்டு அதனை சிறுத்தையாக்குகிறார். சிறுத்தையின் பலம் வந்ததும், அதன் புத்தி முனிவனுக்கு முரணாக வேலை செய்யத் துவங்குகிறது. 'தன்னைப் போலவே இன்னொரு பலசாலி சிறுத்தையை இவர் உருவாக்கினால் என்ன செய்வது!' என்றெண்ணி, முனிவரை கொன்று விட தீர்மானித்து அவரைத் தாக்குகிறது. விழித்துக் கொண்ட முனிவர் அதனை மறுபடி எலியாக்கி விடுகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள கதையில் எலியின் பாத்திரத்தில் நாம் சந்திக்கும் பல மனிதர்களை நிரப்பலாம்.
'செய் நன்றி மறப்பது' மனிதனுக்கு மிகவும் எளிது. துரோகத்திற்கு எடுத்துக்கட்டாக கூறப்பட்ட கதைகளில் மிருகங்களே பாத்திரமானாலும், பல நேரங்களில் மனிதனின் குதர்க்க புத்தியின் விளைவாகவும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் நிகழும் நிகழ்வுகள் துரோகத்திற்கு நல்ல உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்களால் விளைந்த சம்பவங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினை. ஒரு சமயம் கிணற்றிலிருந்து அபயக்குரல் கேட்டு அவ்வழியே சென்ற குடிமகன், மிகுந்த யோசனைக்குப் பின், அதில் மாட்டியிருந்த மிருகங்களை காப்பாற்றுகிறான். எம்மை காப்பாற்றினால் நாங்கள் உன்னை கொன்று விட மாட்டொம் என்று சத்தியம் செய்கின்றன. பின்னர் கிணற்றில் தவித்திருந்த மற்றொரு மனிதனையும் காப்பாற்றுகிறான். பேராசையால் இறுதியில் சக மனிதன் தான் இவனை அரசனிடம் காட்டிக் கொடுக்க, மிருகங்களோ செய் நன்றி மறவாமல் உதவுவதாகக் கதை.
சிறு வயதில் அனைவரும் "கல்/கத்திரிக்கோல்/காகிதம்" விளையாட்டு விளையாடியிருப்போம். சைகையால்ஒரே சமையத்தில் கல் அல்லது கத்திரி அல்லது காகிதத்தை தேர்வு செய்யலாம். நம் எதிராளி என்ன தேர்வு செய்கிறார் என்பதைப் பொருத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். கத்திரி காகித்தை கத்தரித்து விடும். கல் கத்திரியை மழுங்கச் செய்து விடும். ஆனால் காகிதத்தால் கல்லை சுற்றி விடலாம். எது வல்லமை பொருந்தியது? அந்தந்த நேரத்தில் எந்த இரண்டு மோதிக்கொள்கிறதோ அதனையொட்டி வெற்றி தோல்வி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. vicious circle என்பது தான் உண்மை. மனிதனுக்கு தன்னை விட வலிமை பொருந்திய இன்னொரு ஜந்துவினால் நிகழும் இழப்பை விட சக மனிதனால் படும் துயரும் இழப்புமே அதிகம்.