November 04, 2020

திருநீலகண்ட நாயனார்



தில்லையம்பதி தமிழுக்கும் பக்திக்கும் ஈன்றுள்ள நாயன்மார்களுள் ஒருவர் நீலகண்ட நாயனார். குயவர் தொழில் புரிந்த இவரின் இயற்பெயர் அற்றுப்போகும் அளவிற்கு அவர் தில்லை நடராஜனிடம் பக்தி பூண்டிருந்தார். ஈசனின் நாமங்கள் பலவற்றுள் "திருநீலகண்டன்" எனும் திருப்பெயரையே மந்திரமாக உச்சரித்து "திரு நீலகண்டம்" என்று கூறுவாராதலால், திருநீலகண்ட குயவர் என்றே வழங்கப்பட்டார்.
.
குயவனாகிய இவர் தாம் படைத்த உயர்ந்த ஓடுகளை இறைவனின் அடியவர்களுக்கு அமுது படைக்க அளித்து தொண்டாற்றி வந்தார். இடையறாது சிவ சிந்தனையில் ஆழ்ந்து "திரு நீலகண்டம்" என்ற மந்திரச் சொல்லையே உரைத்தும் வாழ்ந்திருந்தார். இவரின் உயர்குணத்திற்கு ஈடு கொடுக்கும் நல்லாளாக இல்லாள் அமைந்திருந்தாள்.
.
இப்படி வாழும் காலத்தே விதி வசத்தால் சிற்றின்பத்தில் மனம் மிக நாடுபவரானார். பரத்தையரில் ஒருவளிடம் தன் இளமையை பங்கிட்டு இன்புற்றார். இதனையறிந்த மனைவி மிகவும் மனம் வருந்தியவளாக, கணவன் தமை நெருங்கும் வேளையில் "எமை தீண்டாதீர் திருநீலகண்டம்" என்று இறைவன் மேல் ஆணையிடுகிறாள். எமை என்று கூறியதால் இனி எந்தவொரு மாதையும் மனதாலும் தீண்டேன் என்று சபதம் மேற்கொண்டு வாழலானார். இல்லறத்திலும் துறவறம் மேற்கொண்டு இறைச் சிந்தனையன்றி இன்னொன்று இல்லாது இருவரும் வாழ்ந்து முதுமை எய்தினர்.
.
பக்தர்களின் பெருமையை உலகிற்கு உணரத்த எண்ணிய இறைவன் திருவிளையாடல் புரிந்தான். அடியவராக நாயன்மாரை அண்டினார். அடியவரை வரவேற்று அமுதளித்து தம்பதியினர் இனிது உபசரித்தனர். யாத்திரிகனான தம்மிடம் ஒரு அபூர்வ திருவோடு உள்ளதென்றும் அது கல்ப தருவைப் போன்று பெருமை வாய்ந்தது, அத்திருவோட்டை இவர்களிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்வதாக கூறி, தாம் வந்து திருவோட்டை மீட்டுக் கொள்வதாக கூறிச் சென்றார்.
.
சில நாட்களுக்குப் பிறகு அவர் மனையடைந்து திருவோட்டை திரும்பத் தருமாறு கேட்டார். பாதுகாப்பாக வைத்த திருவோடு இறைவன் லீலையால் மாயமாக மறைந்திருக்க, தம்பதியினர் திகைத்தனர். அடியவராக வந்திருந்த சிவனார், நாயன்மார் பொய்யுரைப்பதாக பெருங்கோபம் கொண்டு, அவர் பொய்யுரைக்கவில்லை என்றால் தமது மகனின் மீது ஆணையிடச் சொல்கிறார். தனக்கு பிள்ளைகள் ஏதுமில்லை என்ற நாயன்மாரிடம், மனைவி மீது ஆணையிடும்படி கூற அதற்கும் தயங்கியவர் தாம் மனைவியை தீண்டுவதில்லை எனச் சொல்ல, பொய் மேல் பொய்யுரைக்கும் உன்னை அந்தணர் முன் அழைத்து வழக்காடப் போகிறேன் என்று சினம் மிகுந்து வெகுண்டார்.
.
தில்லை அந்தணர் சபையில் தமது அந்தரங்கம் வெளிப்படும் வகையில் உண்மை கூறி தாம் மனைவியை தீண்ட முடியாது என்றுரைத்து மூங்கில் கழியின் ஒருபக்கத்தை நாயனாரும் மறுபக்கத்தை மனைவியும் பிடித்து குளத்தில் மூழ்கி சபதம் செய்தனர்.
.
மூழ்கி எழுந்தவர்கள் முதுமை நீங்கி இளமைப் பொலிவோடு எழுந்தனர். எதிரே சினம் மிகுந்த அடியவருக்கு பதில் சங்கரியுடன் சங்கரனார் ரிஷப வாகனனாக புலனின்பம் வென்ற தம்பதியரை வாழ்த்தி, நீளாயுள் அருளி மறைந்தார். இருவரும் நீண்ட நாட்கள் இறைப்பணிகள் செய்து, பின்னர் சிவலோகம் சென்று நீங்கா இன்பம் பெற்றனர்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment