November 07, 2020

நரசிங்கமுனையரைய நாயனார்

.
இவ்வடியார் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக துதித்தேற்றப்படுபவர். சிவனடியார்களை பணிந்து போற்றிக் காத்தலை தவறாது செய்து வந்தார். பகைவரிடமிருந்து நாட்டினை காத்து ரக்ஷித்து சிறப்புற பேணி வந்ததுடன், சிவ நாமம் உரைக்கும் அடியவருக்கெல்லாம் வள்ளலாக விளங்கினார். கோவில் செல்வங்களை சிறப்புற பேணச் செய்து, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார். அடியார்களுக்கு பொன்னும் பட்டும் வழங்கி சிறப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
.
ஒரு முறை சிவபூஜை முடிந்த பின், அங்கு வந்திருக்கும் அடியார்க்கு பொன் வழங்கி அமுதளிக்கும் தருவாயில், காம நோயினால் பீடிக்கப்பட்டு பிறரால் அருவெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவரும் அடியவராக வந்திருந்தார். சசிசேகரனிடம் கொண்ட அன்பின் பெருக்கால் அவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். நல்லொழுக்கம் பேணாதவராயினும் திருநீறு துலங்கும் அவரது நெற்றியைக் கண்டதும் அன்பொழுக அமுதளித்து அவருக்கு இரட்டிப்பு பொன்னளித்து, விருந்தோம்பல் செய்து கவுரவித்தார்.
.
நரசிங்கமுன்னரைய நாயானர் வீதி வலம் வரும் பொழுது, எழில் ரூபனாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுந்தரரை கண்டார். மிகுந்த பிரியத்தினால் ஆட்கொள்ளப் பட்டு, சடையனாரிடம் கொண்ட நட்பின் உரிமையில், சுந்தரரை வளர்க்கும் பெரும்பேற்றை கேட்டுப் பெற்றார். சுந்தரரின் திருமணப்பருவம் வரை அரச போகத்துடன் சீறும் சிறப்புமாக தாமே வளர்த்தார்.
.
நம்பியாரூரரான சுந்தரரை வளர்த்த பெருமைக்கும், சிவனடியார்களை பேணிப் போற்றிய சிறந்த பக்திக்கும் இறைவனைப் பிரியாது உடனுரையும் கையிலாயம் பெற்றார்.
.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment