November 07, 2020

திருநீலகண்ட யாழ்ப்பாணர்





யாழ் இசைத்தல் பாணர் குலத்தின் சிறப்புக் கலை. யாழ் இசைத்த பாணர் என்பதால் யாழ்ப்பாணர் எனப்படுகிறார். திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தில் பாணர் குலத்தில் பிறந்து சிவனாரின் அரும்புகழை யாழ் மீட்டி, பண் இசைத்து, தொண்டாற்றினார். திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து இவர் யாழ் இசைக்க, இவரது மனைவியார் மதங்கசூளாமணி, திருப்பாடல்கள் பாடி இருவரும் இறைவனுக்கு இசைமாலை சூட்டி வழிபட்டனர். அக்கால வழக்கப்படி பாணர்கள் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஆலயத்தின் புறத்தே நின்றே இறைவனை துதித்து வந்தனர்.
.
சோழ நாடெங்கும் தலயாத்திரை செய்தவர்கள், பாண்டி நாட்டின் மதுரையை அடைந்து திருவாலவாய் கோவிலில் இறைவனுக்கு பண் இசைத்தனர். இறைவன் தொண்டர்கள் கனவில் தோன்று அவர்களை தம் முன் அழைத்து வரும்படி ஆணையிட்டார். பாணரும் இறைவன் விருப்பப்படி திருவாலவாய் கோவிலில் இறைவன் புகழை இசைக்க, தரையிலமர்ந்து  பண் இசைத்தால் சீதம் தாக்கி, யாழ் நரம்பு தளர்ந்துவிடுமென்று பலகை கொண்ரும்படி அசரீரி ஒலித்தது. அவ்வாக்கை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தொண்டர்கள் பலகையில் பாணரை அமரச்செய்ய, பாணரின் இன்னிசை ஆலயமெங்கும் முழங்கியது.
.
பின்னர் திருவாரூரை அடைந்த பாணர் தம்பதியர் தமது மரபுப்படியே புறத்தே நின்று வழிபட்டனர். இன்னிசைக்கு இரங்கிய இறையனார், வடத்திசையில் வேறு வாயில் அருளி நாயனாரும் மனைவியும் அதனுள் சென்று யாழ்ப்பண் இசைத்து மகிழ்ந்தனர்.
.
யாழ்பாண நாயனார் திருஞானசம்பந்தரின் மேலான சிறப்பை உணர்ந்து அவரைக் காணும் ஆவல் கொண்டார். அவர் இயற்றும் பதிகத்திற்கு யாழ் இசைக்கும் விருப்பமும் கொண்டவராகி, சம்பந்தர் சென்ற இடமெல்லாம் உடன் சென்று இன்னிசை தொண்டாற்றினார்.
.
யாழ்பாணர் இசையினால் தான் சம்பந்தர் பாடல்கள் திறம்பட அமைகிறது என்ற சுற்றத்தினரின் பேச்சினால் மனம் ஒடிந்தவர், தம்மால் வாசிக்க முடியாதபடி பதிகம் இயற்ற சம்பந்தரை வேண்டினார். அவ்வாறே சம்பந்தர் "மாதர் மடப்பிடியும்” என்ற பாடல் பாட, அதன் நுணுக்கங்களை யாழில் இசைக்க முடியாமல் யாழை முறிக்க முயன்ற நாயன்மாரை தடுத்து தேறுதல் சொன்னதாகக் குறிப்பு. இவ்வகைப் பண்ணை யாழ்முறிப்பண் என்று கூறிவந்தனர். அதனையே இப்பொழுது நீலாம்பரி என்று சிலரும் அடாணா என்று சிலராலும் வழங்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
.
திருநீலநக்க நாயனார், சம்பந்தர் சொல்லுக்கிணங்கி தமது வீட்டின் நடுவில் வேள்வி செய்யும் நித்தியாக்கினி வேதிகை அருகே யாழ்பாணருக்கும் அவர் மனைவியாருக்கும் இடம் அமைக்க, வெள்வித்தீ மேலும் சுடர் விட்டெரிந்து இவர்களை பெருமைப்படுத்தியது.
.
இவ்வாறு ஈடில்லா இசைத்தொண்டாற்றியவர் தமது துணைவியார் மதங்கசூளாமணியுடன் சம்பந்தர் திருமணத்தில் கலந்து பெருஞ்ஜோதியில் கலந்து ஈஸ்வரன் திருவடியில் இணையிலா பெருவாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment