November 12, 2020

முருக நாயனார்



.
திருப்புகலூரில் பிறந்த அந்தணர் குலத்தவர். அறுபத்து மூவருள் ஒருவர் முருக நாயனார்.
.
சிவனாரிடம் கொண்ட பேரன்பினால் நீராடி அன்றாடம் நந்தவனத்தில் நறுமலர்கள் கொய்வார். பல்வகைப் பூக்களை செகரித்து கூடைகளில் கொணர்ந்து, தனித்தனியே வகை வகையாக வண்ணவண்ண மாலைகள் தொடுப்பார். வர்த்தமானீச்சரம் எனும் ஆலயத்தில் இருக்கும் ஈசனுக்கு மாலைகள் சூட்டி அழகு பார்ப்பார். நறுமணம் கமழும் எழில் வண்ண மலர்களால் அர்ச்சனை செய்வார். பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து ஈசனுடன் இடையறாது இணைந்திருந்தார்.
.
பூக்களில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ என நால்வகைகள் உண்டென குறிப்பு. நீர்ப்பூ நீரில் முகிழ்ப்பன. நிலப்பூவும் கொடிப்பூவும் முறையே நிலத்திலும் (செடிகளில்), கொடியிலும் பூக்கும் வகைக்கள். கோட்டுப்பூ என்பன மரக்கொம்புகளில் பூக்கும் பூக்கள்.
.
திருஞானசம்பந்தர் வருகையில் அவருடன் அன்பு பூண்டு கொண்டாடினார். சம்பந்தருடன் வர்த்தமானீஸ்வர ஈஸ்வரனை வழிபடும் பேறு பெற்றார். நாவுக்கரசரை சந்திக்கும் பாக்கியம் பெற்றார். நாவுக்கரசரும், சம்பந்தரும் சில காலம் முருகனாருடன் தங்கியிருக்குங்கால், நீலநக்கர் மற்றும் சிறுத்தொண்டர் நாயன்மார்களும் அங்கு வந்தமையால் அனைவருடனும் அளவளாவி இறைபக்தியில் ஈடுபட்டு இன்பத்தில் திளைத்திருந்தார்.
.
தாம் செய்த பூஜாபலனால், சம்பந்தருக்கு இனிய நண்பராகும் பெருமை பெற்ற முருக நாயனார், அவர்தம் திருநல்லூர் பெருமணத்தில் கலந்துகொண்டு, ஜோதியில் இணைந்து இறைவனடியில் மீளா இன்பம் அடைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment