.
காவிரிக்கரையின் வடகரையில் இராஜேந்திர சிம்ம வளநாட்டில் உள்ள மிழிலை நாடு என்றொரு இடத்தில் மிழிலைக்குறும்பர் அவதரித்தார். இது சங்க காலத்து ஊர். தற்போது இவ்வூர், மானபாடிக்கு தென்மேற்கே கோவிலாச்சேரி என்ற கிராமத்தின் அமைந்த சிறு உட்கிராமமாக உள்ளது.
.
குறும்பனார் தமது காலத்தில் பெருமிழிலை என்ற இவ்வூரில் தலைவராக விளங்கினார். சிவனடியார்களை நெஞ்சகத்தே அன்பொழுக நிறுத்தி அவர்களுக்கு செவ்வனே பணி செய்வதை தமது நல்வழிக்கு உகந்தது என்று உணர்ந்திருந்தார். சிவநாமம் தனை க்ஷணப்பொழுதும் மறவாமல் மனதுள் நிறுத்தி சிவபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிவனடியார்களைப் போற்றும் இயல்புடையவர் குறும்ப நாயனார், ஆரூரரின் புகழைக் கேள்வியுற்று வாளாயிருந்திருப்பாரா?
.
நம்பியாரூரரை தனது ஆசானாக்கிப் பணிந்தார். சிவனடியர்களைத் தொழுதல் முக்திக்கு வழி என்று உணர்ந்தார். ஆரூரர் திருவடியை வணங்கி வாழ்த்தி சிவ நெறியில் வழுவாமல் நின்றார். நம்பியாரூரர் என்ற சுந்தரரின் திருவடியை நினைந்து சிவ நாமம் நிறுத்தியதால் அணிமா மஹிமா முதல் அஷ்டமா சித்திகளை தமது வசமாக்கினார்.
.
சுந்தரமூர்த்தி நாயனார் மறுநாள் கயிலை அடையும் பெரும்பேறு பெறப்போகிறார் என்பதை தமது யோக சக்தியின் மூலம் ஒரு நாள் முன்பே உணர்ந்து, அவரைப் பிரிந்து நான் வாழேன் என்று மனதால் உறுதி செய்து, ஒரு நாள் முன்பே, தவ நெறியில் கருத்தை நிறுத்தி, பிரமநாடி வழியே உடலினின்று உயிரை உகுத்து, யோக சித்தியால் சிவன் தாள் சென்றடைந்தார்.
.
நமச்சிவாய
No comments:
Post a Comment