November 29, 2020

விறன்மிண்ட நாயனார்



செங்குன்றூரில் தோன்றிய விறன்மிண்டார் சிவனாரை சிந்தையில் நிறுத்தி , புறப்பற்றுகள் அறுத்து, சிவ பற்றைத் தவிர பிறிதொன்றை எண்ணாதிருந்தவர். சென்ற இடமெங்கும் அடியார்களை பணியும் இயல்புடையவராக இருந்தார். அடியார்களை வணங்கும் பண்புடையவர் என்பதால் ஆலயம் உள் நுழையும் முன்னர், அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் கூட்டத்தை வணங்கிவிட்டு பின்னரே ஆலயம் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். 
.
நாயன்மார் அவதரித்த செங்குன்றூர் சேரநாட்டில் இருக்கும் திருத்தலம். ஈசனை திருத்தலங்கள் பல சென்று வழிபடும் பேராவல் கொண்டதால் சேரநாட்டு ஆலயங்கள் தரிசித்து முடித்த பின்னர், சோழமண்ணில் துலங்கியுள்ள ஆலயங்களை வழிபடும் ஆவலால் சோழ நாடெங்கும் பயணம் மேற்கொண்டார். 
.
அவ்வாறு பயணிக்கும் காலத்தில், திருவாரூரை வந்தடைந்தார். அப்பொழுது சுந்தரர் அங்கு இறைவனை தரிசிக்க வந்திருந்தார். ஆலய கூட்டத்தை கண்டு சற்று ஒதுங்கியவாறு சென்றவரை சுந்தரரைக் கண்டவர், 'திருக்கூட்டத்தை வணங்காது சென்ற இவனும் புறகு, இவனை ஆளும் சிவனும் புறகு' என்று உரைத்தார். (புறகு என்றால் புறம்பானவன் என்று பொருள்)
.
விறன்மிண்டரின் பெருமை அறியக் கேட்டார் சுந்தரர். ஆலயத்துள் எம்பெருமானை வணங்கி, "இவ்வடியவர்களுக்கெல்லாம் யான் அடியேன் ஆகும் நாளும் என்றோ என்று உருகினார். 'அடியாரைப் பாடு' என்று கருணை கொண்டு எம்பெருமானாரே, "தில்லை வாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுத்தார். அடியார்களைப் போற்றும் திருத்தொண்டர்த்தொகையை "தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி அமைத்து மெய்யுருகப் பாடி நின்றார் சுந்தரர்.  திருத்தொண்டத்தொகை அமையக் காரணமானவர் விரன்மிண்ட நாயனார். அடியாரை பாடும் சுந்தரரைக் கண்டு மகிழ்ந்தார் விறன்மீண்டார். 

சிறப்புற வாழ்ந்து சிவ நெறி போற்றி இறுதியில், எம்பெருமான் திருவடி நிழலடைந்து கணங்களுக்கு தலைவரானார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment