Showing posts with label குறும்பதிவுகள். Show all posts
Showing posts with label குறும்பதிவுகள். Show all posts

September 28, 2022

நமக்கு நாமே



நான் மட்டுமே
என் நினைவுகளை
காற்றில் கரைக்கிறேன்,
நான் மட்டுமே 
என் உணர்வுகளை
உதாசீனப்படுத்தி
கடாசி எறிகிறேன்.
தனியாக நான் மட்டுமே.
இனிமேலும் கூட

ShakthiPrabha

June 09, 2019

காணாமல் போனவன்




நகைக்கடைகளில் தினமும் திருதியை
கடற்கரைகளில் அடிக்கடி போராட்டம்
கோவில்களில் நித்திய ஆராதனை
மசூதிகளில் மாறாத பிரார்த்தனை
தேவாலையங்களில் அறிவு போதனை
பல்சுவை விருந்தகங்களில் வழியும் கூட்டம்
பலப்பல கேளிக்கைப் பந்தல்கள்...
கூட்டத்துப் பேரொலிகளால் கைவிடப்பட்ட
யாசகனொருவன் தூரத்தில்
காலிப் பாத்திரத்தில்
கண்மூடி மெட்டிசைத்துக் கொண்டேயிருந்தான்....

March 26, 2019

முத்துக்கள் அரிதானவை





அறிவுப்பசியின் ஆராய்ச்சி 
அரட்டைகளின் அலசல்கள்
அனைத்திலும் வளவளவென
ஆர்பரிக்கும் சத்தம்.
ஆழ்கடலின் அமைதியில்
அமிழ்ந்திருக்கும் அறிவைத் தேடி
அரிதாய் சிலரே
மூழ்கி முத்தெடுக்கப் போவதால்;
மேலெழும்பி நிற்பதெல்லாம்
சலசலவென
கரையெங்கும் உமிழப்படும்
அலைகளின் பேரிறைச்சல்.

January 22, 2019

குறுகிப் போனவை




நின்று நிதானிக்க பொழுதில்லை..
கவிதைகள் ஹைக்கூகளாக
குறுநகை பதித்து விரைந்தோடுகிறது.
குறுங்கதைகள்: குறும்படங்கள்: குறுநாடகங்கள்:
காலம் போன்சாய் வடிவில்
வலைக்குள் குறுகிக் கொண்டது .
நேசிக்க நேரமில்லை...
அன்பை அரைநொடிக் குறுஞ்செய்தியாக்கிய
பிழையால் பிறழும் குறுங்காதல் .
ஒரு வரியில் அறம் போதித்த ஆத்திச்சூடியும்
ஒன்றரை அடியில் உலகை அளந்த குறளும்
தீர்க்கதரிசனத்தில் விளைந்த குறுமுத்துக்கள்

December 31, 2018

சின்ன சின்னதாய்






சந்தோஷப் பொழுதெல்லாம்
சாதனைக் கணங்கள்.
அன்றாடப் பணியிலும்
மறைந்திருக்கும் பெருவெற்றி.
மலர் கொண்ட நறுமணம்,
தினம் சிந்தும் புன்னகை,
மனம் பூக்கும் நற்சிந்தனையென
விரியும் வண்ணக் கொண்டாட்டம்.
வாய்மொழியும் வாழ்த்துக்களே
முடிசூடா மகுடங்கள்.
பிறக்கும் ஒவ்வொரு நொடியும் புதுசு.
இயற்கையின் அரிய பரிசு.

December 26, 2018

சார்புடைமை




இடப்பக்கம் வலப்பக்கம்
மேலும் கீழுமாய்
எண்ணங்கள் சிதறியிருந்தன.
எல்லோரும் எல்லாவற்றையும்
எடுத்துக் கோர்த்தனர்;
எடுத்தாண்ட வார்த்தையிலெல்லாம்
இன்னொருவரின் வாசம்
இருந்துகொண்டே இருந்தது