September 10, 2021

விநாயகர் ஸ்துதி


முழுமுதற் கடவுளே மூத்தோனே!
மோதகப்ரியனே குறை தீர்ப்போனே!
உயர் மறைகள் ஓதி; ஓங்கு புகழ் பாடி,
மாந்தர்கள் தொழுதிடும் மங்களரூபனே.
.
பிரணவத்தின் வடிவான தூயனே,
வேழ முகத்தோடு பேழை வயிறதிர
ஞாலம் வலம்வந்த தீரனே,
ஞானப்பழம் உண்ட சிவபாலனே!
.
பெருந்துயர்களை தினம் செவிமடுத்து
வருவினைகளை சடுதியில் களைந்து
தும்பிக்கையாலே தலைகோதி-நல்
நம்பிக்கையூட்டும் கணநாதனே!
.
தெருகூடும் முச்சந்தி முனைகளிலும் - சிறு
உருதாங்கி அரசாளும் உமைமைந்தனே!
அரசமரமே நீயமரும் அரியாசனம் -அப்பம்
பொரிபோதுமே உந்தன் பசி தீர்க்குமே!
.
மூஷிகத்தின் தேரேறி புலன் ஆண்டவன்-எங்கள்
சித்திக்கும் புத்திக்கும் பிரியமானவன்
எத்திக்கும் புகழ்பாடும் இறையானவன்-ஔவை
தித்திக்கும் பாவிற்கு தமிழ்தந்தவன்.
.
அருகம்புல் மாலையும் அணிசேர்க்குமே-எருக்கம்
பூவும் உன் தோள்சேர மணம்வீசுமே
ஏழைக்கும் வரமருளும் எழில்ரூபமே -சூழும்
பிறவிப் பிணிபோக்கி இருள் நீக்குவாய்!
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

September 04, 2021

வணக்கத்துக்குரிய ....




என்னுடைய ஆசிரியர்களில் முதலில் நினைவுக்கு வருபவர், எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்த சுந்தரி அம்மாள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தியாகராஜர் கிருதியாகட்டும், பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும் முதலில் அதன் பொருளைக் கூறிவிட்டு, அதிலிருக்கும் பக்தியின் சாரத்தை மனதில் பதித்த பின்னரே  பாட்டு வகுப்பைத் துவங்குவார்.  பாடலோடு ஊடே பக்தியையும் ஊட்டியவர் என்ற தனிமரியாதையும் பாசமும் அவரிடம் உண்டு.

.

அடுத்து என் ஆங்கில ஆசிரியை. Ms.Louward . Shakespeareல் துவங்கி, அவர் பாடம் எடுக்கும் ஒவ்வொரு  கதையிலும் கவிதையிலும் இலக்கிய ரசனையை மாணவர்களுக்கு ஊட்டினார்.  எங்களை பாவத்துடன் நடித்தும் பேசியும் பழகச் செய்தார். ஆங்கில கவிதைகள் கதைகளின் பால் பெருந்தாக்கம் இந்த ஆசிரியையால் உருவானது.  ஆங்கில வகுப்பு என்றாலே எங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தொஷமாக இருக்கும்.

ஆசிரியர்களில்  சிலர் என் மனதிலும் ஆன்மாவிலும் கலந்து நீங்கா இடம் பெற்றவர்கள். 

என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூடவே இருந்து வாழ்ந்து காட்டிய (காட்டும்) ஆசிரியர்கள். Contentment, Simplicity, Humility, Humanity, அத்தனைப் பேருக்காகவும் சந்தோஷப்படும் குணம்,  இன்னும் பலப்பல  நற்குணங்களை போதித்தும், அதன்படி வாழ்ந்தும் என் மனதில் பதியவைத்தவர்கள். September ஐந்து என் பெற்றோர் திருமண தினம். 

இவர்கள் மட்டுமா!!  நம்மைசுற்றி எத்தனை ஆசிரியர்கள்! தத்தாத்ரேயர்   ஏற்கனவே வழிகாட்டியதைப்  போல,   பாரில் உள்ள  ஒவ்வொன்றும் பாடம் கற்றுத் தரும்.  பறவைகளும், விலங்கும், புலன்களும், பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்,  பேரண்டமும்,.. இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்! பட்டியலிட்டு முடியுமா!

எனக்கு தெய்வமும், குருவும், ஆச்சார்யருமான மஹாபெரியவா  "உபாத்யாயர்" என்ற ஸ்தானத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் இந்தப் பதிவில் அவரை  சேர்க்கவில்லை.