January 03, 2022

ஸ்ரீதேவி

 


அடேங்கப்பா! முப்பது வருடத்தில் எத்தனை மாற்றங்கள்! ஜேஜேவென கூட்டத்தின் நடுவில் கொண்டாடப்படும் அம்பாள்.
.
அன்றைக்கெல்லாம் பத்து பேருக்கு மேல் ஒரே நேரத்தில் சேர்ந்தாற் போல் காண்பதரிது.
*
"நிறைஞ்ச வெள்ளிக்கெழமையா இருக்கு. கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்டி பாகீ" என்றாள் பாட்டி. கசகசவென்ற வெயிலுக்கு மேலும் குளுமை சேர்க்க, பட்டுப்பாவாடையை இறுக்கி விட்டார்கள். இவ்வளவு மல்லிகைப் பூ அள்ளி குடுமியில் சொருகிக் கொண்டு, பாட்டியுடன் குதித்துக் கொண்டு கிளம்பினேன். கோவிலில் சர்க்கரைப் பொங்கலோ புளியோதரையோ கொடுப்பார்கள் என்று ஆசை காட்டி கூட்டிச் சென்றாள்.
*
கோவிலுக்குப் போக பிடிக்காதென்பது இல்லை. ஆனால் சாமியைப் பார்த்தா பயம். 'சாமி ஊர்வலம் வருது பாரு' என்று அத்தனை பேரும் கன்னத்தில் தபதபவென போட்டுக்கொள்வார்கள். கொஞ்சம் சிரிப்பு வரும். இருந்தாலும் பயம். இருட்டு வேளையில், ஜோதியின் நடுவில், தெரியும் சிரித்த தெய்வத்தின் முகம். யாரோ முகம் பெயர் தெரியாத ஒருவரிடம் / ஒன்றிடம் அனைவரும் காட்டும் பயம். கன்னத்தில் போட்டுக்கொள்ளா விட்டால் அவள் தண்டித்து விடுவாளோ! பயம்.
.
"அம்மா சாமி கண்ண குத்திடுமா"
-
"சாமிக்கு பயப்பட கூடாதுடீ, அவா கிட்ட பக்தி பண்ணணும்" - என்பாள் அம்மா.
-
"Shailu we need to educate our bagi, regarding bhakthi" - அப்பாவின் திட்டவட்டமாகத் தீர்மானித்தார்.
-
ஷைலஜா என்கிற ஷைலு தான் என் அம்மா. அவள் படித்து வளர்ந்த டவுனுக்குத் தான் நான் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்தேன்.
.
ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முந்தைய நினைவு.
-
"நீ பிராகாரத்தை சுத்தி ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு வா, பாட்டி அங்க சித்த உட்கார்ந்து தியானம் பண்றேன்"
*
பிரகாரம் முழுவதும் அழகாக இருந்தது. ஆங்காங்கே சுடர் விடும் தீபங்களைத் தாண்டி இருட்டாக இருந்தது, அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. பெரியதாக சிலா வடிவங்கள். அத்தனையும் கண்ணை சிமிட்டி வா வா என்றழைப்பது போல் இருந்தது.கொஞ்சம் புன்னகை சிந்தியது. வேகமாக நடந்தேன். கிட்டத்தட்ட ஓடினேன். கோவிலில் அதிகம் கும்பலில்லை.
*
தூரத்தில் என்னைப் போலவே வெயிலுக்கு இதமாக பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஒரு அம்மா வந்து கொண்டிருந்தாள். அப்பாடாவென்று கொஞ்சம் மனசு அமைதியடைந்தது. பாட்டி பிரதக்ஷிணம் இடமிருந்து வலமாகத் தானே வரச் சொன்னார். இந்த மாமி எதிரில் வருகிறாரே என்று நினைத்தேன்.
-
கையில் தேங்காய், பூ பழக்கூடை சகிதம் மாமி நடந்து வந்து கொண்டிருந்தாள். இந்த மாமியை இதுவரை இந்தத் தெருவில் பார்த்ததில்லை. தெரியாதவர்களிடம் பேசக்கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்கிறார். அந்த மாமி எனை நெருங்கி வந்தாள். நான் வேகமாக கடக்க நினைத்தேன். தடுத்து நிறுத்தி புன்னகைத்து, தீர்க்கமாகப் எனைப் பார்த்தாள், என்னால் அப்பார்வையை தவிர்க்க முடியவில்லை. தீக்ஷண்யமான பார்வை. என் உடல் சிலிர்த்தது. அவள் கண்கள், நெற்றித் திலகம், பட்டுப் பீதாம்பரம், அவளைக் காணக் காண உடலெல்லாம் நடுங்கியது. ஓடிவிடவும் முடியாமல் ஸ்தம்பித்து நின்றேன். என் நெற்றியில் மெல்ல திலகமிட்டாள், உடலின் அத்தனை நாடி நரம்புகளும் உயிர்த்தெழுந்தது. அவள் கடந்து சென்றாள்.
-
நான் வேகமாக இப்புறம் ஓடி வந்தேன். பிரகாரத்தின் இந்தப் பக்கம் அந்த மாமியைக் காணவில்லை. பிரகாரம் சுற்றி இப்புறம் வராமல் எப்படி எங்கு சென்றிருக்க முடியும்! மாயமாக இருந்தது! எங்கு சென்றாள்? யாரவள்? அவளை அக்கம்பக்கத்துத் தெருக்களில் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் பிறகு பல சந்தர்பங்களில் அம்மாவின் சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் கூட பல தெருக்களில் அவளைப் பற்றி விசாரித்தும், தேடியும் பார்த்தேன். தகவல் ஏதும் கிடைக்கவே இல்லை. ரொம்ப நாளைக்கு இதுபற்றி யாரிடமும் நான் கூறவில்லை.
*
அந்த சம்பவத்திற்குப் பிறகு வாழ்விலும் தாழ்விலும் எதனைக் கண்டும் நான் பயம் கொண்டதில்லை. கோடு போட்டாற் போன்ற அன்றைய நிகழ்வு எனது வாழ்வை திருப்பிப் போட்டதாக நான் உணர்ந்தேன். என்னுள்ளும் புறமும் பல மாற்றங்கள். சுலோகங்கள் சொல்வதும், பூஜைக்கு உதவுவதுமாக மாறிப்போன பாகீரதியை அம்மா, அப்பாவுக்கு ரொமபப் பிடித்தது. பல வருடங்கள் கழித்து பாட்டி இறக்கும் தருவாயில் ஒரு முறை இது பற்றி அவரிடம் மட்டும் கூறினேன்.
-
"போடி பைத்தியக்காரி, அப்போ உனக்கு பத்து வயசிருந்தா அதிகம். அதெல்லாம் பிரமை, யாரானும் பக்கத்து தெரு மாமியா இருக்கும்" எனப் புறந்தள்ளினாள்.
*
சந்தோஷங்கள் மட்டுமே நிலைத்து விடுவதில்லை. நிறைந்து விடுவதில்லை. பல சவாலான நேரத்தில் சஞ்சலப்பட்டு தவிக்கும் போது, கண்மூடி தீர்வு தேடும் போது, அனேக தருணங்களிலெல்லாம் அம்பாள் என்றாலே அந்த முகம் என் மனக்கண் முன் வந்து போகும். சொடக்கு போடும் நேரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், அல்லது மன நிம்மதி நல்கும். எனது நம்பிக்கையால் விளைந்த இந்தப் பழக்கம் இன்றும் வேறூன்றி நிற்கிறது.
*
பாட்டி இறந்த பிறகு அந்த வீட்டிலிருந்த சொத்து பாத்யதைகளை பிரித்துக் கொடுத்ததில் அவ்வூருடன் எங்களுக்கு இருந்து வந்த கொஞ்சநஞ்ச உறவும் விட்டு போயிற்று. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் சொந்த ஊர் வந்திருக்கிறேன். அதே கோவில், கோபுரம்.. அமைதியான இடம் கொஞ்சம் ஆரவாரமாக மாறியிருந்தது.
*
"நில்லும்மா, பிரசாதம் வாங்கிட்டு போ" என்ற குரல் என்னை நிகழ்காலத்துக்கு கொணர்ந்தது. மூதாட்டி ஒருவர் நின்றிருந்தார்.
-
"எம் மகளுக்கு கல்யாணம் நடந்ததும் சௌதரவல்லி அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம் நேர்ந்துகிட்டோம். இன்னைக்குத் தான் நேர்த்திக் கடன் முடிஞ்சது. இந்தா தாம்பூலம் வாங்கிக்கத் தாயீ." என் கால்கள் அவளை நோக்கி தனிச்சையாக நடந்தன.
-
கை நிறைய குங்குமம் எடுத்து என் நெற்றியில் வைத்தாள். வயதானவள். நரைதட்டியிருந்தது, முப்பு கண்களில் தங்கியிருந்தது. எனினும் கண்கள் சூர்யகோடி பிரகாசத்துடன் ஜொலித்தது. நீலபுடவை கட்டியிருந்தாள்.
-
"நீ நல்லா இருப்ப தாயீ" தாம்பூலத்தை கையில் திணித்து விடுவிடுவென நடந்து கோவிலுள் சென்றாள், கூட்டத்தில் புள்ளியாய் மறைந்து போனாள்.
*
அர்ச்சகரிடம் விசாரித்தேன். இன்றைக்கு புஷ்ப அலங்காரம் செய்த உபயதாரர் யார்? இல்லைம்மா இன்றைக்கு யாரும் அலங்காரத்துக்கு நேர்ந்துக்கலை. இன்றைய தினம் விசேஷ பிரார்த்தனையின்னு யாருமே வரலையே. அம்பாளுக்கு இன்னிக்கு குங்கும அர்ச்சனை தான். புஷ்ப அலங்காரம் நாளைக்கு.
*
இங்குமங்கும் ஓடினேன். சரசரக்கும் நீலப் புடவையைக் காணவில்லை. வயது முதிர்ந்தவள். அதற்குள் கோவிலை விட்டு வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.
*
அதே சௌந்தரவல்லித் தாயார். நின்று நிம்மதியாக சேவிக்கிறேன். அந்த பிரகாரம், அவள், அவளின் நீலப்புடவை, வாத்ஸல்யமான புன்னகை, என்னுடனேயே தங்கிப் போன அவள் நினைவு. இதோ இன்றைக்கும் அந்த பிரகாரமெங்கும் அவள் ஓம்காரம் ஒலிப்பதாகவே உணர்ந்தேன்.
*
வீடு வந்து பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தியானம் செய்த நேரம், நீலப் புடவை சரசரக்க, பூச்சூடி உத்யத்பானுவைப் போன்ற அவள் அழகு முகம் பளீரென முன் நின்று சிரித்தது, மெல்ல என் அம்மாவின் முகமாக மாறி எனை அணைத்தது, அரை நொடியில் அம்முகம் மூப்பேறி நரைதிரண்டு எனை கேலி செய்தது. எல்லாம் கரைந்து ஒரே ஓம்காரமாக உயர்ந்து "பாகீரதி" என அழைத்தது...
.
எங்கோ தூரத்தில் சஹஸ்ர நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது...
.
".....நவ சம்பக புஷ்பாப நாஸா தண்ட விராஜிதா. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா. கதம்ப மஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா....."
.
ஆம். அது அவள் தான்...
.
(முற்று பெறாதது)

கொடுத்து வைத்தவள்'சூடு ஆறிப்போகும் முன்ன காபியக் குடிச்சிடு வடிவு' என்றாள் மரகதம்.
.
கோப்பை முழுவதும் நிரம்பி, வட்டத்தட்டிலும் கொஞ்சம் சிந்தியிருக்கும் மணம் மிகுந்த காபி, வடிவுக்கரசியை இவ்வுலகுக்கு இழுத்துவர இயலாமல் தோற்றுப் போனது. மனசு பாறாங்கல்லாக ஏகத்துக்கு கனத்திருந்தது.
.
இப்படித்தான் சோமுவும் காபி பைத்தியமாக இருந்தான். எத்தனை சிரமம் வந்தாலும் இரண்டு சொட்டு காபியில் தீர்வு கண்டுவிடுவான்.
*
காபிக்கடையில் தான் சோமுவை முதன்முதலில் சந்தித்தாள். வடிவு குடும்பத்திற்கு பேச்சியாத்தா தான் குலசாமி. அடிக்கடி பூஜை போடுவார்கள். பூஜைக்கு பூ வாங்கிவர சந்தைக்கு சென்று கொண்டிருந்தவள், காப்பிக்கடையில் குத்தகையிட்டு குடியிருந்த சில விடலைப் பசங்களும், வாலிபர்களும் தன்னை குறிப்பிட்டு கேலி செய்ததை அலட்சியமாகக் கடந்து கொண்டிருந்தாள்.
.
‘போற வர்ற பொண்ணுங்கள கிண்டலடிச்சு சாடைமாடையா பாட்டுப் பாடி வம்பு வளக்குற நேரத்துல உருப்புடுற சோலியப் பாரு" - ராணுவ உடையின் மிடுக்குடன் குரலுயர்த்தி மிரட்டிய சோமுவைக் கண்டதும், மொத்த கூட்டமும் சத்தமின்றி நழுவியது.
*
வடிவு ஆச்சரியத்துடன் சோமுவை ஏறிட்டாள். இருவருக்மிடையே இருந்த ஈர்ப்பு, முதல் பார்வையில் துளிர்த்த நன்றியுடன் நிற்காமல், காரணம் கற்பித்து தினமொரு முறை சந்திக்கச் சொன்னது. ஒவ்வொரு நாளும் படிப்படியாக கனிந்த காதல். எல்லை மீறாத குறும்பு, தவறென்றால் அதைத் கேட்கும் துணிவு, கொண்ட கனிவு, நேர்மையான கொள்கைகள் இன்னும் பலப்பல சுவாரஸ்ய முகங்கள் அணிந்து அவனும் வசமாகி, அவளையும் தன் வயப்படுத்தியிருந்தான்.
.
திருமணத்திற்கு பெரியதாக தடையொன்றுமில்லை. வடிவின் வீட்டில் காதலை அங்கீகரிக்கத் தயங்கவில்லை. சோமுவுக்கு தூரத்து சொந்தமென்று மாமா வகையிலும் அத்தை வகையிலும் சிலர் இருந்தனர். அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.
.
"எங்க சோமு தனிக்கட்டயாவே இருந்துடுமோன்னு பயந்துட்டு இருந்தோம். வடிவு நல்ல வடிவா இருக்குது, அதான் மயங்கிட்டான்" - கல்யாண வீடே களை கட்டியது.
*
நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும். இந்திய-பாகிஸ்தானின் 1965ம் வருட போர்-நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு மறுபடியும் 1971ம் வருடம் மார்கழி மாதத்திற்கு முன்னரே போர் மூளும் அபாயம் அதிதீவிரமாகி இருந்ததால், ராணுவத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே பயணப்பட வேண்டியதாகி இருந்தது. பதட்ட நிலையில் போர் சில நாட்கள் நீடித்தது. அப்போது வடிவு சோமுவின் வாரிசை வயிற்றில் சுமந்திருந்தாள்.
.
தாங்கொணாப் பிரிவுத் துயரம் வாட்டியது. வேண்டியதை செய்து தர பெற்றோரும் உற்றோரும் இருந்தாலும், சோமுவின் குரலுக்கும் அணைப்புக்கும் உடலும் உள்ளமும் ஏங்கியது. மெலிந்தாள். சாப்பிட மறுத்தாள். பிள்ளைக்காக சாப்பிட வெண்டும் என்றவர்களிடம் எரிந்து விழுந்தாள்.
.
போர் நிலவரம் என்பதால், தபால் டெலிக்ராம், தொடர்புகள் அற்றுப் போயிருந்தன. கிராமத்தில் வெகு சில வீடுகளில் வானொலி இருந்தது. செய்திக்குத் தவம் கிடப்பாள். எத்தனை பேர் இருந்தனர், இறந்தனர் என்ற எண்ணிக்கைகள் வாசிக்கப்படும்போது இதயமே நின்றுவிடும். இல்லாத கற்பனைகள் செய்து ஈர்குச்சியாகத் தேய்ந்தாள். ஒரு வேளை அவன் வாராது போனால், என் உயிரும் அவனுடனேயே துணைபோகட்டும் என்ற வேண்டுதலுடன் பேச்சியாத்தாவுக்கு பூமாலை தொடுத்து மருகினாள்.
"வடிவு, நீ உன்ன வதைச்சுக்கற, அதுக்கே உனக்கு உரிமை இல்ல, உன் வயித்துல இருக்குற பச்சபுள்ள என்ன பாவம் பண்ணுச்சு! அதுக்காச்சும் நாலு வாய் சோறு சாப்பாடு. அன்னாடம் அழுதுட்டு இருந்தா புள்ளைக்கு தெம்பே இருக்காது."
.
அவள் காதில் எதுவும் விழவில்லை. பிரிவு ஒரு நோயே இல்லை. நிறைந்த காதல் தரும் அதிகபட்ச வேதனை. அதை நோயென்று அணுகினாலும், குணப்படுத்தும் மருந்து வெளியில் இல்லை. அவரவர் மனப் பக்குவத்தில் அடங்கியிருக்கிறது. சோர்வும் களைப்பும் மிஞ்சிய நிலையில் அடம்பிடிக்கும் குழந்தையாகிப் போனவளை குணப்படுத்த சோமுவைத் தவிர யாருக்கும் சாத்தியப் படாது.
.
சில நாட்கள் தொடர்ந்த எல்லைப் போர் முடிவுக்கு வந்தது. யார் எஞ்சியிருந்தனர் என்று கேட்டு சொல்ல அன்றைய கிராமத்தில் வசதிகள் இல்லை. சுடலைத் தாத்தாவுக்கு பட்டணத்திலும் டவுனிலும் சிலரைத் தெரியுமென்பதால் விவரம் அறிந்து வருவதற்கு பக்கத்திலிருக்கும் ராணுவ முகாமை அணுகலாம் என்று அறிவுறுத்தினார்.
.
வடிவின் உடல் மட்டும் இங்கிருக்க, உள்ளம் சிந்திக்க மறந்தது. செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தெளிவும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியிருந்தது.
.
மறுநாள் விடியல் மொத்த கிராமத்துக்கும் விழாவாக அமைந்தது. மன உளைச்சல்களுக்கெல்லாம் தீர்வாக சோமு வந்தான். வடிவு ஓடிச் சென்று அணைத்தாள். அழுதாள். அடுத்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக, சோமு ஏறக்குறைய கதாநாயகனைப் வலம் வந்தான். போரில் நடந்த இழப்புகள், ஓலங்கள், இரு நாடுகளுக்கிடையே நிலவிய இறுக்கம் என ஒவ்வொன்றாக விளக்கினான். கிராமமே அவனைக் கொண்டாடியது.
.
'ஏ வடிவு, நீ பெருமப் படணும்டீ. உன் புருசன் அம்புட்டு தகிரியமா நாட்டுக்க்காக ராணுவத்துல செய்யுறது வேலையில்லடி, அது சேவை. அதுல பாதித் துணிவு உனக்கு வேணாமா! வீரத்துக்கு பேர் போன தமிழ் மண்ணு இது.'
.
உண்மை. அவள் இன்னும் உரமேற வேணும். அவனே அவள் உலகமென்றாலும் நாட்டுக்கு உயிர் கொடுக்க துணியும் ராணுவ வீரனின் துணைவி என்ற வலிமை வளர்க்க வேணும்.
.
திவாகரும் சசிரேகாவும் பிறந்த பின் வடிவு நிறையவே மாறிப்போனாள். பணி நிமித்தமாக பல மாதங்கள் வடிவை விட்டு பிரிந்திருக்க வெண்டிய சூழலிலும் நம்பிக்கை இழக்காமலிருந்தாள். எல்லைப் பாதுகாப்புக்கு அழைப்பு வரும் போதெல்லாம் கலங்காமல் விடை கொடுத்தாள். அவன் வருவான் என பேச்சியாத்தாவுக்கு பூஜை போட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
.
பிள்ளைகள் திருமணம், பேரப்பிள்ளைகள் வரவு என எந்த குறையுமின்றி சோமுவுடன் சுகித்து வாழும் ஆசி பேச்சியாத்தா வழங்கியிருந்தாள்.
.
சோமுவுக்கு ராணுவமும் அரசாங்கமும் பெரும் மரியாதை செய்து, ஓய்வூதியம் கொடுத்து பல வருடங்கள் ஆகியிருந்தது. அவ்வப்பொழுது டவுனுக்கு சென்று சில எளிய வேலைகள் செய்து வந்ததில் வந்த வருமானமும் போதியதாக இருந்தது. யாருக்குத் தான் குறைகள் இல்லை! சின்னச் சின்ன தோல்விகள், சங்கடங்களை சமாளித்து சீறப்பாக வாழ்ந்தனர்.
.
"வடிவு கொஞ்சம் காபி கொண்டு வா" என்பான். அது அவர்களுக்கான நேரம். காபியிலேயே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடுவான். அதைப் பற்றி அவளிடம் ஆலோசிப்பான். காபிக்கடையில் துவங்கியக் காதல் காபியுடன் முடிந்தது.
.
பாரத மண்ணுக்கு தன் இன்னுயிரை அர்ப்பணிக்க இயலாத வாழ்வு இனி போதுமென்று நினைத்தானோ! இளங்காலை வேளையில் காபி குடித்த சுவை மறைவதற்குள் பூவைப் போல் சில வினாடிகளில் பூமியில் விழுந்தான். கொடுத்து வைத்த முடிவு என்று உறவும் நட்பும் சிலாகித்தது. பெரிய மாலை மரியாதைகளுடன் ராணுவ குழாமிலிருந்தும் சில நண்பர்கள் வந்திருந்து வழியனுப்பினர்.
.
'வடிவு காபி குடி வடிவு' என்று மரகதம் எத்தனை முறை உலுக்கியிருப்பாளோ தெரியவில்லை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் வெளியூரில் சம்பாத்தியம் என்றான பிறகு, தூரத்து சொந்தமெனச் சொல்லிக் கொள்ளும் மரகதம் தான் இந்த சின்ன கிராமத்து வீட்டில் அவளுக்குத் துணை.
.
சோமு விட்டுப் பிரிந்து மூன்று மாதங்களாகியிருந்தன. முப்பது ஜன்மமெனத் தோன்றியது. தைரியமான வடிவாகத் தான்
தன்னை திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் பிரிவின் ஆற்றாமை தாங்கும் வலிமை அவள் வயதுக்கு இல்லை. தனது நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
.
‘இப்படிப் பேசாத வடிவு. பிள்ளைங்களுக்கு நீ தான் கூட இருந்து எல்லாம் செய்யோணும்.'
.
யாருக்கு யார் துணை! சோமு, என்னை எப்படி நீ பரிதவிக்க விட்டுப் போனாய்! துன்பத்தில் எனை ஆழ்த்தி தனியே விட துணிந்தாயே. அவள் மனம் அரற்றியது. வெளியே புன்னகைத்தாள். பேசினாள். சோறு உண்டாள். மனம் மட்டும் இறந்திருந்தது. சாவுக்கு அஞ்சவில்லை. ஒரு வேளை இன்னொரு பிறவி என்று இருக்குமானால் சோமுவும் அவளும் இதே கிராமத்தில் பிறந்து வயல் வெளியில் விளையாட வேண்டும்.
.
இன்னொரு பிறவி, வாழ்வைப் பற்றியெல்லாம் கண்டவர்கள் யார்!? பிரிவெல்லாம் உறவென்று மறுபடியும் கூடுமா? இறந்த பின் எங்கு செல்வோம்! கண்காணாத உலகமா? அங்கு என் சோமு இருப்பானா? எனை நினைத்திருப்பானோ, உணர்வானோ அல்லது மறந்திருப்பானோ யார் அறிவார். உறவெல்லாம் பிரிவதற்கே என்றால் பிறப்பே வேண்டாம். இறந்தால் பேச்சியாத்தா மடியில் போய் படுத்துறங்க வேண்டும். 'இன்னொரு முறை பிறக்க வேணாந்தாயீ' என்று இறைஞ்ச வேண்டும்.
.
'அப்படியே பொறந்தா, என் சோமுவையும் மறக்காம எனக்குத் துணையா அனுப்புவியா' என்று கேட்க வேண்டும். முன்பு பொல் குலசாமிக்கு பூஜை போடும் தெம்பு இல்லை. ஆத்தாள் அல்லவா! அவள் மகள் கேட்டதை மறுப்பாளா என்ன!
.
********முற்றும்******

December 16, 2021

Dear Diary

திருமணத்திற்கு முன்பு வரை நாட்குறிப்பு (diary) எழுதும் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக சில நிகழ்வுகளும் நிகழ்ந்தது. மறக்க முடியாதவையும் கூட. டைரி பக்கங்கள் சொல்ல மறந்த கதை நிறைய. சொல்ல முடியாத கதைகளும். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியப் பங்கு டைரிக்கு உண்டு. இப்போதெல்லாம் என் டைரி... வெள்ளைக் காகிதங்களாகவே பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது.

பொக்கிஷமான சில நினைவுகளை நமக்காக சிலர் சுமக்கலாம்...அல்லது சுமை என விலக்கலாம். எவரும் நம் உள்ளாடும் உணர்வுகளை செவி மடுக்க்காவிட்டாலும்....Diary செவி மடுப்பாள். உற்ற தோழியவள்.

kOra kagaz tha

என்ற பாடல் கேட்கக் கிடைக்கும் போது diary பற்றிய நினைவுகளும் கோர்வையாக பல நிகழ்வுகளும் வந்து போகும். உடனிருந்த சில மனிதர்களும்.


பின் குறிப்பு: இப்பொழுதெல்லாம் டைரியில் "ஸ்ரீராமஜயம்" மட்டுமே எழுதுகிறேன். என்னைப் போலவே என் டைரியும் மாறிவிட்டாள்.

September 10, 2021

விநாயகர் ஸ்துதி


முழுமுதற் கடவுளே மூத்தோனே!
மோதகப்ரியனே குறை தீர்ப்போனே!
உயர் மறைகள் ஓதி; ஓங்கு புகழ் பாடி,
மாந்தர்கள் தொழுதிடும் மங்களரூபனே.
.
பிரணவத்தின் வடிவான தூயனே,
வேழ முகத்தோடு பேழை வயிறதிர
ஞாலம் வலம்வந்த தீரனே,
ஞானப்பழம் உண்ட சிவபாலனே!
.
பெருந்துயர்களை தினம் செவிமடுத்து
வருவினைகளை சடுதியில் களைந்து
தும்பிக்கையாலே தலைகோதி-நல்
நம்பிக்கையூட்டும் கணநாதனே!
.
தெருகூடும் முச்சந்தி முனைகளிலும் - சிறு
உருதாங்கி அரசாளும் உமைமைந்தனே!
அரசமரமே நீயமரும் அரியாசனம் -அப்பம்
பொரிபோதுமே உந்தன் பசி தீர்க்குமே!
.
மூஷிகத்தின் தேரேறி புலன் ஆண்டவன்-எங்கள்
சித்திக்கும் புத்திக்கும் பிரியமானவன்
எத்திக்கும் புகழ்பாடும் இறையானவன்-ஔவை
தித்திக்கும் பாவிற்கு தமிழ்தந்தவன்.
.
அருகம்புல் மாலையும் அணிசேர்க்குமே-எருக்கம்
பூவும் உன் தோள்சேர மணம்வீசுமே
ஏழைக்கும் வரமருளும் எழில்ரூபமே -சூழும்
பிறவிப் பிணிபோக்கி இருள் நீக்குவாய்!
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

September 04, 2021

வணக்கத்துக்குரிய ....
என்னுடைய ஆசிரியர்களில் முதலில் நினைவுக்கு வருபவர், எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த சுந்தரி அம்மாள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் . தியாகராஜர் க்ருதியாகட்டும், பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும் முதலில் அதன் பொருள் கூறிவிட்டு, அதலிருக்கும் பக்தியின் சாரத்தை மனதில் பதித்த பின்னரே  பாட்டு வகுப்பைத் துவங்குவார்.  பாடலோடு ஊடே பக்தியும் ஊட்டியவர் என்ற தனி மரியாதை உண்டு.

.

அடுத்து என் ஆங்கில ஆசிரியை. Ms.Louward . Shakespeareல் துவங்கி, அவர் பாடம் எடுக்கும் ஒவ்வொரு  கதையிலும் கவிதையிலும் இலக்கிய ரசனை மாணவர்களுக்கு ஊட்டினார்.  எங்களை பாவத்துடன் நடித்தும் பேசியும் பழகச் செய்தார். ஆங்கில கவிதைகள் கதைகளின் பால் பெருந்தாக்கம் இந்த ஆசிரியையால் உருவானது.  ஆங்கில வகுப்பு என்றாலே எங்களுக்கெல்லாம் அவ்வளவு சந்தொஷமாக இருக்கும்.

ஆசிரியர்களில்  சிலர் என் மனதிலும் ஆன்மாவிலும் கலந்து நீங்கா இடம் பெற்றவர்கள். 

என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூடவே இருந்து வாழ்ந்து காட்டிய (காட்டும்) ஆசிரியர்கள். Contentment, Simplicity, Humility, Humanity, அத்தனைப் பேருக்காகவும் சந்தோஷப்படும் குணம்,  இன்னும் பலப்பல  நற்குணங்களை போதித்தும், அதன்படி வாழ்ந்தும் என் மனதில் பதியவைத்தவர்கள். September ஐந்து என் பெற்றோர் திருமண தினம். 

இவர்கள் மட்டுமா!!  நம்மைசுற்றி எத்தனை ஆசிரியர்கள்! தத்தாத்ரேயர்   ஏற்கனவே வழிகாட்டியதைப்  போல,   பாரில் உள்ள  ஒவ்வொன்றும் பாடம் கற்றுத் தரும்.  பறவைகளும், விலங்கும், புலன்களும், பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்,  பேரண்டமும் இப்படி நீண்டு கொண்டே போகுமே! 

எனக்கு தெய்வமும், குருவும், ஆச்சார்யருமான மஹாபெரியவாளை இந்தப் பதிவில் நான் சேர்க்கவில்லை.  

August 19, 2021

 பாலருந்தி பளிங்குத்தரையில் தவழும்போது
உனையே இறுகப் பற்றியிருந்தேன்.
தாவணி அணித்துவங்கும் முன்பே
உன்னைத்தான் கண்டெடுத்தேன்
பாடும் பாடல்களில் உனையே இசைத்தேன்
மனமேடையில் உனக்கெனவே நடமாடினேன்.
பற்றேதுமின்றியே உனைப் பற்றியிருந்தேன்
.
நாற்பது பேரும் மேலும் - தரதரவென
நாற்திசையும் பற்றியிழுக்க
சிதறிப் போனேன்.
உடைந்த துகளிலும்
உன் தங்கமுகமே தேடுகிறேன் ..
...
பாசமென்னும் புழுதி மறைக்கிறது
அகந்தையெனும் அழுக்கு அடைத்திருக்கிறது
ஆசையெனும் பூதம் சற்றும் உனை
அண்டவிடாமல் அப்புறம் தள்ளுகிறது
நீயின்றியே தேம்புகிறேன்
.
எங்கிருந்தாலும் வந்துவிடு
எனைக் கண்டெடுத்து உன்
பூங்குழலில் பதுக்கிவிடு
மயிற்சிறகால் மறைத்துவிடு
பிரபஞ்சப் பார்வையிலிருந்து அகற்றிவிடு
பிறவாமல் செய்துவிடு
பற்றிய திருக்கரத்தை உதறாமல்
முற்றிய பக்தியை எனக்களித்து - என்றும்
பிரியாமல் இருந்துவிடு
மற்றே என் காமங்களை
மிச்சமேதுமின்றி மாற்றிவிடு
.
©ShakthiPrabha

August 15, 2021

Short - nilaa kaaigiradhu (song)Nila kaaygirathu (short version) Thanks to co-singer Sumesh for the invite