March 09, 2020

செருத்துணை நாயனார்




தஞ்சாவூர் மருகனாட்டில் பிறந்த சிவத்தொண்டர். உள்ளன்போடு சிவத்தை வழிபட்டு தொண்டுகள் புரிந்து வாழ்ந்திருந்தார். பல்லவ அரசரான கழற்சிங்கர் தனது பட்டத்து ராணியுடன் சுவாமி தரிசனம் செய்து சிவத்தோண்டுகள் புரிய திருவாரூர் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். சிவ பூஜைக்கென சேகரித்த மலர் விதிவசமாக கீழே விழுந்திருந்தது. அதை அறியாத அரசியார், கீழே விழுந்த மலரை எடுத்து அதன் எழிலிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்து அதனை முகர்ந்தார். அதனை கண்டு சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதென துடித்து அரசியாரின் மூக்கினை அரிந்துவிட்டார். சிவ அபராதம் பொறுகாத அபிரீமிதமான அன்பை இறைவன் பால் கொண்டிருந்து, மேலும் பல காலம் நெடிது வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
(பல்லவ அரசரான கழற்சிங்கரும் ஒரு நாயன்மார். இவரது வரலாறு முன்னமே நினைவுகூர்ந்தோம்)
.
ஓம் நமச்சிவாய

March 07, 2020

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்






அன்னையின் ஸ்தானத்திற்கு தரும் மரியாதையும் அன்பும் மகத்தானது. தான் பட்டினி கிடந்தும் பிள்ளைகளுக்கு பிடி கவளம் அதிகம் ஊட்டி, பாசத்தால் கட்டுண்டு உருகும் அன்னையின் உள்ளத்திற்கு ஈடு இணை இல்லை. கருவில் சுமந்து தன் உயிரையே பணயம் வைத்து இன்னொரு உயிரை  ஈன்றெடுக்கிறாள். உதிரத்தால் பால் புகட்டுகிறாள். வணங்கப்பட வெண்டிய முதல் தெய்வம் என்பதில் ஐயமில்லை.
*
தாயன்பின் என்பது அன்பு என்றால் அதன் விசாலமான பரிமாணத்தையும் பார்க்கலாம்.
-
"தாய்மை மகத்தானது" என்ற குறும்படம் இணையம் வழியே உலா வந்தது. குரங்கை வேட்டையாடிய புலிக்கு, இறந்த குரங்கின் உடலைத் தழுவியபடியிருந்த குட்டிக் குரங்கின் பால் அன்பு கசிகிறது. தன் இரையை கீழே போட்டு விட்டு, குரங்குக் குட்டியை நக்கிக் கொடுத்து அன்பு செலுத்துகிறது. குட்டிக்கு மரம் ஏறக் கற்று கொடுக்கிறது. தப்பி விழும்பொழுது தாங்கிப் பிடித்து முன்னேற உதவுகிறது. இறுதியில் குட்டியை தன் அருகியிலேயே படுக்கச் செய்து தடவிக் கொடுத்தபடி தானும் உறங்கிப் போகிறது. இயல்பாக நடைபெற்ற பத்தே நிமிடக் காட்சியை படமாக்கியிருந்தனர்.
*
தேடிய இரையைக் துறந்து, உணவுப் பசியை மறந்து இன்னொரு ஆதரவற்ற ஜீவனிடம் அன்பு செலுத்தும் உள்ளம், அன்னை உள்ளம். இங்கு தான் தாய்மையின் உச்சம் மிளிர்கிறது.

-
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

என்கிறார் பாரதிதாசன். வீடு, சுற்றம், நாடு எனும் வட்டங்கள் கடந்து அன்பு பொழியப்பட வேண்டும்- எத்தனை ஆழமான கருத்தை கூறியிருக்கிறார்.
*

"மதர் - இந்தியா" (Mother India) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். தீமையின் பக்கம் சாய்ந்த தன் மகனை கொன்று பாரத அன்னையாக உருவெடுக்கும் சிறந்த தாயின் க்தை. தன் உதிரமெனப் பாராது, பிற உயிர்க்கு தீங்கிழைக்கும் கொடியவனை அழித்து பலர் வாழ வழி வகுக்கும் அன்னையாய் கோபுரத்தில் உயர்ந்து நிற்கிறாள். இறைவியை அன்னை என்று போற்றுகிறோம். பூவுலகின் இன்னுயிர்களை எல்லாம் தம் பிள்ளையென காத்து நிற்கும் அன்னையே அம்பிகை வடிவாகி அருள் பொழிகிறாள்.
*
தாய்மை என்பது, 'தனது பிள்ளைகள்' என்ற குறுகிய வட்டத்தில் முடிந்து விடுவதல்ல. பிற உயிர்களையும் தன் உயிர் போல் பாவிப்பது. இரத்தத்தின் பந்தத்தையும், பாசத்தையும் தாண்டி மின்னுவது. ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடு இன்றி தோன்றுவது.
*

எங்கெல்லாம் பசித்தவனுக்கு இன்னொருவன் உணவிடுகிறானோ, எங்கெல்லாம் அன்பால் ஒரு உயிர் இன்னொரு உயிரை அரவணைக்கிறதோ அங்கெல்லாம் தாய்மை பிரகாசிக்கிறது. தன் நலத்தை மறந்து பொதுச் சேவையில் உணவிட்டும், உறவுக்கு பாலம் இட்டும் சுயநலமின்றி பாடும் படும் எளியவர்கள் பலர். பணத்திற்கும் புகழுக்கும் இதனைச் செய்யாது, மகத்தான தொண்டாக செய்யும் இவர்களது நோக்கத்தில் தான் குத்துவிளக்காக சுடர் விடுகிறது அன்னை மனம்.
*
அன்பின் வெளிப்பாடு அனைத்துமே தாய்மையின் வெளிப்பாடு. இத்தகைய உயர்ந்த பண்பை ஒவ்வொருவரும் தம்முள் தேட வேண்டும். தாய்மை எனும் உணர்வை குறுகிய வட்டத்தில் கட்டிப் போடாமல், பாரெங்கும் மனிதம் வளரவும், அமைதி, நல்லிணக்கம் தோன்றவும் பரந்து விதைக்கப்பட வேண்டும்.

March 01, 2020

பாடும் பறவைகள்






அரங்கன் நாமத்தை
அனுதினமும் அரங்கேற்றும்
கிளிகளிரண்டும் – வறண்ட
கிளைகளில்
பையக் காலூன்றி
ரங்கா ரங்கா என்றே
ராகமிசைத்து
மென்சிறகின் வர்ணத்தை
மெல்லத் தோய்த்ததில்,
உலர் மேனி சிவந்து
கிளர்ந்தெழுந்த பூந்துளிர்.