January 20, 2020

பணம் படைத்தவள்






கதிரவனின் கதிர்கள் செல்லமாய் என்னைத்தொட்டு எழுப்ப, கூடவே சுப்ரபாதம் பாடியது குயில்கள். தினம் தினம் அந்த ஏழுமலை வெங்கடேசனுக்கு மட்டுந்தானா சுப்ரபாதம்? எனக்கும் கூடத்தான்! இந்த குயில்களின் இன்னிசையை விட வேறு கானம் முதல் பரிசை தட்டிச்சென்று விடுமா என்ன?

*
'ராஜீவ், எழுந்துக்கறீங்களா!! ராஜீவை உலுக்கி எழுப்ப வேண்டியதில் துவங்கி 11 மணி வரை எக்ப்ரெஸ் வேகத்தில் தொடரும் காலைப் பணிகள். அதற்குள் வேகமாக நகர்ந்த கடிகார முட்கள் மணி 11.30 என்றது. இன்னும் சிறிது நேரத்தில், கணிப்பொறி வகுப்புக்கு
போக வேண்டும். முகத்தின் களைப்பு தீர 'சில்' என்ற தண்ணீர் முத்தமிடக் கிளம்பிக்கொண்டிருந்த பொழுது...என் வீட்டுக் காலிங்பெல்லின் ஒலி "தில் தீவானா பின் சஜ்னா கே" என்று ஒலித்தது திறந்த கதவின் பின் நின்றிருந்தவன்... வெங்கடேசன்..

*
அட கிளம்பும் முன் இந்த தறுதலை தரிசனமா! வேங்கடேசன் வேறு யாரும் அல்ல, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன்.

*
ஆறு அடி உயரம், மிக வசீகரிக்கும் முகம் என்ற எண்ணத்தால், சிறிது கர்வம்கூட அவனுக்கு உண்டு. தேவை இல்லாத நேரத்தில், என்னிடம், வந்து post தருவதற்கென்று கதவைத் தட்டுவான். என் தபால் பெட்டியில் போட்டு விடு என்று பலமுறை கூறியாகிவிட்டது, கேட்பதில்லை. அறுவை ஆசாமி. என் மூன்று வயது மகளை ஐந்து நிமிடமாவது கொஞ்சிவிட்டுதான் செல்வான். நான் ஏதோ அவன் தூரத்து சொந்தக்கார பெண் போல் இருக்கிறேன், என் தங்கச்சி மாதிரி என்று வழிந்தபடி நிற்பது கொசுறு. இதைத் தவிர நான் கேள்விப் பட்ட விஷயம் உறுத்திக்கொண்டிருந்தது..

*
குடியிருப்பில் இருந்த இன்னொருவர், 100 ரூபாய் கொடுத்து ஏதோ வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். 50 ரூபாய் பெருமான சாமான் மட்டுமே வாங்கி, 50 ரூபாய்தான் அவர்கள் கொடுத்தனர் ன்று சாதித்துவிட்டான். செந்தில் வாழைப்பழ கதை நடைமுறையில் நடந்தால் நகைப்பிற்கிடமில்லை. ஒரு நியாயம் நியதி எதுவுமே இல்லாத மோசக்காரன் என்ற எண்ணம் அவனைப்பற்றி என் மனதில் படிந்து
விட்டது.


"என்ன வாட்ச்மேன்?"


"இல்லை மேடம் நீங்க மெயிண்டனன்ஸ் பணம் தரனும்...500ரூபாய் இந்த மாசம் இன்னும் நீங்க பணம் தரல" என்றான் ரெஜிஸ்டரும் கையுமாய்..


நேற்று எனக்குத் தலைவலி, காய்ச்சல். மூன்று முறை கதவைத் தட்டினான். சேல்ஸ் ஆசாமிக்குக் கதவை திறக்கட்டுமா என்று கேட்க ஒரு முறை, மற்ற இரு முறை மெயிண்டனன்ஸ் வாங்க. ரெஜிஸ்டர் கொண்டு வர மறந்துவிட்டேன் என்று கூறினாலும் நான் 500 ருபாய் கொடுத்து, அப்புறம் என்ட்ரீ போடச்சொல்லியிருந்தேனே!?


"என்ன வாட்ச்மேன் நீங்க, அதுக்குள்ள மறந்து போச்சா?"


"என்ன மேடம் இப்படி சொல்றீங்க? யோசிச்சு சொல்லுங்க, நான் வந்த போது, ரெஜிஸ்டர் இல்லைன்னு சொல்லி அப்புறம் தரேன்னு
சொன்னீங்களே!"


எனக்கே கொடுத்தேனா இல்லையா என்று சந்தேகம் வலுப்பட்டது. அக்கம் பக்கத்து வீடுகளில் இது பற்றிக் கூறியதும், அவர்கள் எல்லோரும் என் பக்கம் சேர்ந்து கொண்டனர். 'நான் கூட அன்று 50 ருபாய் கொடுத்தேன், அதை இல்லை என்று சாதித்து விட்டான் என்று அவரவர் அவரவர் கதைகளைக் கூறி என் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தினர்.


பர்சில் இருந்த 500ரூபாய் காணவில்லை. அதை என் சிநேகிதியின் திருமணத்திற்குப் பரிசு வாங்க என்று வைத்திருந்தேன். எனவே நான் தீர்மானமே செய்து விட்டேன், நேற்று இவன் வந்த பொழுது மெயிண்டனன்ஸ்க்குக் கொடுத்திருக்க வேண்டும், அதை இவன் இல்லை என்று ஒரேயடியாய் சாதிக்கிறான்.


"மேடம் சத்தியமா நான் வாங்கலை.. சாமி சத்தியமா மேடம்" அவன் எல்லார் முன்னிலையிலும் கண்ணீரும் கம்பலையுமாய்க் கதற
ஆரம்பித்துவிட்டான்.


இதற்கிடையில் ஃப்ளாட் பிரசிடண்ட் அவனை வேலையை விட்டுத் தூக்குவது பற்றிப் பேசினார். அவன் முகத்தில் வேதனையின்,
பயத்தின், அவமானத்தின் சாயல்.


"சார் என்னை நம்பி என் குடும்பமே இருக்கு. நான் ஏதோ சுமாராய்த் தான் படிச்சேன், அதனால தான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனா ஏமாத்து வேலையெல்லாம் செய்யத் தெரியாது சார்"
*
இதற்குள் டெலிபோன் மணி அடிக்க....ரிசீவரில் ராஜீவ்..

"என்ன ராஜீவ் இந்த நேரத்துல? நான் க்ளாஸுக்குக் கிளம்பனும்"

"இல்ல நீ ஏதோ கிஃப்ட் வாங்கணம்னு சொல்லி 500 வச்சிருந்தியே... அதை நான் எடுத்திருக்கேன். எனக்கு அவசரமா தேவையா இருந்தது ... sorry.. try and manage.... or கிஃப்ட் நாளைக்கு வாங்கிக்கோ"

வெளியில் கேட்கும் இரைச்சல், என் நெஞ்சத்து இரைச்சலைவிட வெகுநிதானமாய் இருந்தது. ஒரு திரைப்படக் காட்சி போல், வெங்கடேசன், ஃப்ளாட் பிரசிடண்ட் காலில் விழுந்தான். "சார் நான் பணம் வாங்கலை சார்"

நான் மெதுவாக மிக மெதுவாகப் பிரசிடண்டை நோக்கிச் சென்று விஷயத்தைக் கூறினேன்.

"என்னோட 500ரூபாய ராஜீவ்தான் எடுத்துட்டு போயிருக்கார். நேத்திக்கு எனக்குக் காய்ச்சல், கொடுத்தேனா இல்லையானு மறந்து போச்சு... Sorry!"


கூடியிருந்த எல்லோரும் என்னைப் பரிதாபமாய், கோபமாய், கேலியாய்ப் பார்த்து அவர்களுக்குள் ஏதோ முனங்கிக் கொண்டார்கள்.


"பரவாயில்லை ஷக்தி, பணம் கிடைச்சிடிச்சு இல்லையா? அதே பெருசு" என்று சிலர் ஆறுதல் கூறினர்.

இன்னும் கண்ணீர் சிந்தியபடியே தான் நின்று கொண்டிருந்தான்.. வெங்கடேசன்.


தவறு செய்தது நான். எனக்குத் தண்டனை கிடையாது. ஏனெனில் என் கணவன் உயர்ந்த உத்தியோகம் பார்க்கிறார். நான் ஒரு நகரத்தின் விலை உயர்ந்த குடியிருப்பில் வசதியாய் வாழ்பவள். எனக்கு தண்டனை கிடையாது. ஏனெனில்... நான் பணம் படைத்தவள்!.

முள்ளாய் நெஞ்சில் குத்தியது நிதர்சனம். என்னைச் சத்தமின்றி பார்த்தபடி நின்றிருந்தான் வெங்கடேசன். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.


'என்னைப்போய் இப்படி நினைச்சுடீங்களே மேடம். நான் உங்கள் மேல் ப்ரியம் வச்சிருந்ததற்கு இதுவா தண்டனை?' என்று கூறுவது போல் இருந்தது.


அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருக்க.. "வெங்கடேசன் என்னை மன்னிச்சுடுங்க.... நான் அவசரப்பட்டுடேன். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்.." என்று கூறுகையிலே என் கண்ணீர் பெருகியது. வெங்கடேசன் காலில் அழுதபடி விழுந்தேன்.


வெங்கடேசன் பதறினான்...என்ன மேடம் நீங்க போய் என் காலுல....


"என்ன ஷக்தி எழுந்திரு, அவன் வாட்ச்மேன்" என்று எவர் கூறியதும் என் காதில் விழவில்லை.


""மேடம் பாருங்க, பாப்பா பயந்து போச்சு", என்று என் பெண்ணைத் தூக்கி மறுபடி கொஞ்சியபடி, "விடுங்க மேடம், நீங்க என்ன தெரிஞ்சா செஞ்சீங்க? பரவாயில்லை, நான் தப்பு பண்ணலைன்னு புரிஞ்சுக்கிட்டிங்களே அதுவே போதும்" என்ற வெங்கடேசனை,.. முதல் முறையாய், மனித குணங்களுக்கு சற்றே அப்பாற்பட்ட தெய்வமாய்த் தான் பார்த்தேன்!



January 12, 2020

சாக்கிய நாயனார்


.Image result for சாக்கிய நாயனார்"


எல்லா உயிர்களிடத்திலும் அடியவர்களிடத்திலும் பேரன்பு கொண்டவராக திகழ்ந்த சாக்கிய நாயனார், திருச்சங்கமங்கை எனும் ஊரில் வெளாண்குடியில் பிறந்தவர். உயிரின் நிலை, ஜனன - மரண தொடர்ச்சி முதலியவற்றை தினம் சிந்தித்தவராக பல நூல்களை ஆராய்ந்து தகுந்த வழிகாட்டலை தேடும் பொழுது காஞ்சி நகரத்தில் தங்கியிருந்த பௌத்தர்களிடம் தமது சம்சயத்திற்கு தீர்வுண்டென்று எண்ணி பௌத்த மதத்தை தழுவினார். நெடுங்காலம் பல சமயத்து நூல்களை ஆராய்ந்தவராக எதிலும் திருப்தியுறாமல், எம்பெருமான் பெருங்கருணையால் சிவ\நெறி முறைகளையும் ஓதித் தெளிந்தார். சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நூல்களை ஆராய்ந்ததில் அவருக்கு தேடலின் விடை புலப்பட்டது.
.
*ஜீவனாகிய சித்தும் (chit /jeeva/ soul particle)
*அது செய்யும் வினையும் (deeds / action)
*வினைப்பயனும் (destiny / karma)
*கர்ம-பல-தாதா ஆகிய இறைவனும் (God principle)
-
என்று சைவ சமயத்தில் கூறபட்டுள்ள நான்கு ஆதாரங்களை அறிந்து, பிறவிப்பெருங்கடலை கடத்தற்கு வழிவகுப்பது இத்தத்துவமே என்றுணர்ந்தார் . அல்லும் பகலும் இறைவன் திருவடி மறவாது புத்த மத அடையாளங்களைக் களையாமல், சிந்தனையில் சிவஅன்பு ஒழுக நித்தம் எம்பெருமானை தியானித்திருந்தார்.
.
சிவலிங்கத்தின் தத்துவம் உணர்ந்தவர் தினமும் லிங்கத்தை தரிசித்து வழிபட்ட பின்பே உணவுண்ணும் நோன்புற்றார். ஒரு சமயம் வெட்டவெளியில் சிவலிங்கம் பூசையின்றி கிடந்ததை கண்டார். லிங்கத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அன்பின் பெருக்கால் அருகிலிருந்த கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். சிறு பிள்ளைகளின் அன்பை பெருமகிழ்ச்சியோடு ஏற்கும் பிரபஞ்சத் தந்தையானவர் அதனை உவப்புடன் மலரென கருதியேற்றார். மறுநாள், முந்தைய தினம் தான் லிங்கத்தின் மேல், செங்கல் எறிந்ததை எண்ணி, இது நிகழ்ந்தது இறைவனின் கருணை என உணர்ந்து அதையே நித்திய வழிபாடாக செய்து வந்தார்.
.
மறந்து போஜனம் செய்யப்போன ஒரு நாள், அடடா மறந்தேனே என்று மிக பக்தியுடன், பதபதைத்து, விரைந்தோடி சிவலிங்கத்தின் மேல் அன்பு மேலிட பஞ்சாட்சர மந்திரம் ஓதி கல்லை எறிந்தார். அக்கல்லானது இறைவனின் திருக்காட்சியை அவர் கண்முன் கொணர்ந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள் சமேத இறையனார் ஆகாயத்தில் காட்சியளித்து நாயனாருக்கு பிறவா பேரின்பம் அருளினார்.
.
ஓம் நமச்சிவாய