September 28, 2022

தேவை ஒரு துளசிச் செடி





சமீர்  வருவதாகச் சொன்ன ஐந்து மணியைத் தாண்டி நாற்பத்தியெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தன .  கூடவே சஞ்ஜயைக் கூட்டி வருவதாக சொல்லியிருந்தானே, அதனால் நேரமாகிறதோ!

.

நேற்றையிலிருந்தே நெஞ்சத்தை உழப்பிக் கொண்டிருந்த விஷயம். இது கனவா நிஜமா? நூலைப் பிடித்து, தொடரலாமா வேண்டாமா? ஒரே மன உளைச்சல்.   இன்றைய தேதியைச் சேர்த்தாலும், பதினெட்டு வயது நிரம்பாதவள் ரசிகா. தேவிகா அப்படி அல்ல. அவளை விட இரண்டு

வருடம் பெரியவள்.

.

"தேவி அவங்க வர இவ்வளவு நேரம் ஆகுதே, நாம கிளம்புவமா?" என்று கிசுகிசுத்தாள். வங்கிக்கு சென்றிருந்த அம்மா வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம்  ஆகலாம். அதற்குள் இவர்கள் திட்டத்தின் முக்கியப் பகுதியை நெருங்க வேண்டும்.

..

யார் இவர்கள்?

தேவிகா

ரசிகா

சமீர்

சஞ்ஜய் என்ற நால்வர் தான்.

..

இருவரும் உறிஞ்சிக் குடிக்கும் டீயின் சுவை கூட மனதில் பதியவில்லை. குறுஞ்செய்தி சிணுங்கியது.

.

"நாங்கள் பூங்காவின் அருகே வந்துவிட்டோம். உடனே புறப்பட்டு வரவும். சர்வ ஜாக்கிரதை!"

 

கிடைத்ததை பையில் திணித்துக் கொண்டு அவசரமாக  ஓடினார்கள்.  'இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாலாற்றங்கரையருகே இருக்க வேணும்.' சமீரும் சஞ்சயும் படபடத்தனர். மோட்டர் பைக் பறந்தது. இருபதே நிமிடத்தில் ஆற்றங்கரையை நால்வரும் நெருங்கினர்.

.

சஞ்சய் தன் கைப்பையைத் திறந்தான். இரண்டு உருட்டுக் கட்டைகள், ஒரு சைக்கிள் செயின் உட்பட ஐந்தாறு தற்காப்பு கருவிகள்.  ‘எப்படி என் திறமை’ என்று கண்களாலேயே பெருமை பேசினான்.

.

"நாம எங்க போக போறோன்னு தெரியுமில்ல!  இதெல்லாம் எதுக்குடா?"

.

"உனக்குத் தெரியாது. எல்லாம் தேவை தான். முதலில் எல்லாரும் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க" . ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  அவர்கள் எடுத்த முடிவு தவறானதா என்ற குழப்பம்.   பயமாக இருந்தது. இனம்புரியாதொரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஓடியது.   

.

குறிப்பிட்ட இந்த டகுத்துறைக்கு பொதுமக்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. 

.

"சமீர் அங்க பாரு, சொன்ன மாதிரியே படகு தயாரா இருக்கு"  படகொன்று அவர்களை நெருங்கவும்,  திடீர் சோதனை உத்தரவின் பேரில் படகுத்துறைக்கு வந்திருந்த முத்துகுமார்  கண்களில் இவர்கள் மாட்டவும் சரியாக இருந்தது.  யார் இவங்க! முதலில் இந்தத்துறையில் எப்படி படகு செலுத்தபடலாம்? என்ற குழப்பத்துடன் சிலர் பார்த்திருக்க....

.

மலரைப் போல மெல்ல மிதந்து வந்த படகில் நால்வரும் கால்பதித்து ஏறினர்.   முத்துகுமார் அவசரமாக தளக் புளக்கென்று தண்ணீரில் தள்ளாடி படகை  நெருங்கத் துவங்கினார்.    சமீரும் சஞ்சயும் குபீரென குதித்து அவரை பின்னாலிருந்து வளைத்து   தடுக்க முற்பட்டனர். 

.

"கொஞ்சம் நான் சொல்றத நிதானிச்சு கேளுங்க" ....  என்று கூவிக் கொண்டே படகை நோக்கி வேகமாக நீந்தினார்.  அவர் நெருங்குவதற்குள்,  மெல்லமாக சுற்ற ஆரம்பித்த படகு,  கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமெடுத்தது. அவரது இருகைகளும் படகை பற்றிவிட்ட சமயம்,  ரசிகா கட்டையை ஓங்கினாள்.  நெற்றியில் ஒரே அடி.      தேவிகா கதற,   பின் தொடர்ந்த   சஞ்சய், இன்ஸ்பெக்டர் கால்களை இழுக்க, அவர் நிலை தடுமாறி  குப்புற விழுந்தார். 

.

அவரை அப்புறமாகத் தள்ளி, மின்னல் வேகத்தில் சமீரும் சஞ்சயும் படகில் ஏறியதும்,  காற்றை விட வேகமாக  மிதந்த படகு, சடுதியில் தொலை தூர தொடுவானத்தை எட்டி, புள்ளியாய் மறைவதை  பார்த்துக் கொண்டே முழுவதுமாக மயங்கினார் முத்துகுமார்.  அல்லது மயங்கியது போல நடித்தார். தெளிந்து எழுந்த போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் தொடர்பின்றி இருந்தது.

.

 

“எப்படி தாக்கப்பட்டீங்க?

‘நினைவில்லை... ‘

‘யார் தாக்கினாங்க?

“யாருமில்லையே! “

“பொதுமக்கள் புழங்குவதற்கு தடைசெய்யப்பட்ட படகுத்துறையில் படகு இருக்குறதா சத்தம் போட்டாங்களே! “

“அப்படியா?

....

அவர் அருகில் இருந்தவர்களை பேட்டி கண்டனர்.

“நீங்க படகை பார்த்தீங்களா?

“அப்படி பார்த்ததா எங்களுக்கு நினைவில்லை சார்”.

.

"மர்மமான முறையில் தாக்கபட்ட முத்துகுமார்" - அலறியது மீடியா.

 

***

 

சுழன்று  சுற்றிய படகு சீர்பட்டது. நெஞ்சம் படபடத்து, தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தாள் தேவிகா. ரசிகாவை விட தேவிகாவுக்கு  எதிலும் தயக்கமும் பயமும் அதிகம். 

.

சென்ற வாரத்தின் வியாழக்கிழமை, சாதாரணமாகத் துவங்கி, அசாதாரணமாக முடிந்தது.

.

"கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே"   என்று தொலைக்காட்சியில் ஆண்டாள் எழுப்பிக் கொண்டிருந்ததையும் மீறி ரசிகா தூங்கிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்திருந்த தேவிகா பக்கத்து மேஜையில் ஒப்பனை செய்து கொண்டிருந்த போது முணுக் முணுக்கென்று சிணுங்கியது செல்ஃபோன். சமீர் கூப்பிட்டிருந்தான்.

.

"அவசர சந்திப்பு. இன்னும் ஒரு மணி  நேரத்தில் தெருகூடும் இடத்திலுள்ள "சுதந்திரப் பூங்கா"வில் சந்திக்கவும். இன்றைய தினசரி பத்திரிகை எடுத்துவா" என்னவாக இருக்கும் என்று குழம்பி, ரசிகாவையும் உலுக்கினாள். இவர்களின் சந்திப்புகள் பற்றி பெரிய அளவில் பெற்றோர்களுக்கு தெரியாது. ஏதோ சாக்குபோக்கு உளறிவிட்டு, இருவரும் பூங்கா விரைந்தனர்.

 

.

'இதப் பாரு.'  என்றான் சஞ்சய். அவனுடன் சமீரும் வந்திருந்தான். அவர்கள்  சுட்டிக்காட்டியது  அன்றைய தினசரி பத்திரிகையின் ஒரு சின்ன விளம்பரத்தை.

.

"உடன் விரைந்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு. தேவை ஒரு துளசிச் செடி" பெயர் விலாசம், தொடர்பு எண், முகவரி எதுவுமே மருந்துக்கும் குறிப்பிடப் படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அதை விட பன்மடங்கு ஆச்சரியம் அவசரமாக தங்கள் பிரதியை பிரித்தபோது காத்திருந்தது...... அப்படிப்பட்ட விளம்பரம் அவர்களது பிரதியில் தென்படவில்லை. ரசிகாவுக்கு

அட்ரினலைன் ஜிவ்வென்று ஏறியது. 'என்னடா இது. யார் இவங்க?  ஒண்ணுமே புரியலையே.  உன் கைல இருக்குற பிரதில மட்டும் இருக்குதே! '

.

அடுத்த நாள் வெள்ளியன்று வந்த தினசரியை அவசரமாக பிரித்து அங்குலம் அங்குலமாக படித்தனர். "பாலாற்றங்கரையின் படகுத்துறைக்கு அடுத்த வியாழன் விரைந்து வரவும். துளசிச் செடியை மறக்காதே!" - இப்போது  இவர்கள் தினசரியில் மட்டும் பளிச்சிட்ட செய்தி, சமீர் பிரதியிலும் சஞ்சய் வீட்டு தினசரியிலும் காணப்படவில்லை.  தேவிகா பயந்தாள். 

.

நால்வர் கூடியும், கூடாமல் குறுஞ்செய்தி மூலமாகவும், நாற்பது முறை அலசினார்கள். ஏதோ மந்திரவாதி விரிக்கும் வலை என்று அறுதியிட்டு  தீர்மானத்து, ''பின் தொடர வேண்டாம்'' என்று முதலில் முடிவெடுத்து, செய்தியைக் கடாசினாலும்... அடுத்தடுத்து ரசிகா மற்றும் சமீரின் ஆர்வக்கோளாறுக்கு இணங்கி, நால்வருமே இச்செய்தியின் ஆழம் வரை சென்றுவர முடிவெடுத்தனர்.

.

***

 

காற்றைக் கிழித்து புள்ளியாய் மறைவதாகத் தோன்றிய படகு உள்ளபடி, இன்னும் அதிக வேகமெடுத்தது. தேவிகாவுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.  அதே வினாடியில் படகு ஒரு விண்கலமாக  விரிந்து,  நாலாபுறமும் மூடிக்கொண்டு, விண்ணில் உயர்ந்தது. 

.

"கொரோனா கவசம் போல இது என்னடி"  - என்றாள். அவள் குரல் பத்து விதமாக எதிரொலித்தது. முகத்திற்கு  நேரே சுவாசக்குழாய் தானே இணைந்து கொண்டது. இத்தனையும்  கண்சிமிட்டும் நேரத்தில் அதிரடியாக நடந்தது.

.

குறிப்பிட்டு சொல்ல முடியாத  நேரத்திற்குப்  பிறகு சின்ன குலுக்கல் கூட இல்லாமல் மெத்தென்ற வெண்ணிற மண்ணில் இறங்கிய போது அது வேறு ஒரு பிரபஞ்சம் என்று யாரும் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்தது.

.

மூச்சுக்குழாய் அகன்றது. அட! சுவாசிக்க முடிகிறதே. பூமியைப் போலே பிராணவாயு எங்கும்  நிறைந்திருந்தது. பூமியை விட அழகாக, பச்சை, நீலம் சிவப்பு என்று வண்ண வண்ண மணல் மேடுகள், விவரிக்க முடியாத வண்ணத்தில் தாவரங்கள், பூக்கள். நால்வரும் திறந்த வாய் மூடவில்லை.

.

பெரிய பறவை போலொன்று பறந்து வந்தது. இல்லை. இல்லவே இல்லை. அருகே பறந்து வந்த பறவையைப் போல ஒரு நங்கையைக் கண்டு  பேச்சிழந்தனர்.

.

"கேலக்ஸி-16க்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் பாலவீதிக்கு மிக அருகில் இருக்கும் கேலக்ஸி எங்களது. என் பெயர் சுவஸ்திகா" என்றது.

.

'உங்களால் எப்படி எங்கள் மொழியில் கதைக்க முடிகிறது.'

.

“நான் எனது மொழியில் பேசினால் உங்களது மொழியில் கேட்கச் செய்யும் இணைப்பு கருவி எங்களிடம் இருக்கிறது” என்றது. தவறு என்றாள் சுவஸ்திகா.

.

சுவஸ்திகாவின் வண்ணச் சிறகைக் கண்டு கிறங்கிய சமீர் மெல்ல மீண்டு "உங்களால பறக்க முடியுதே"  என்று வழிந்தான்.

.

“எங்களால் பஞ்சபூதங்களினால் ஆகப்பட்ட எதனுள்ளும் பயணிக்க முடியும்” என்றாள். 

.

“உங்க உலகம் அற்புதமாகவும் விந்தையாகவும் இருக்கு.... வண்ணப் பூக்களும், வகைவகை பழங்களும்,  வண்ண நீர்நிலைகளும்... “

.

“நீர்நிலைகள்!!!!  உங்கள் துளசிச் செடியை அதற்குத்தான் விரும்பியிருந்தோம். எங்களது நீர்நிலைகளின் பசுந்தன்மை குறைந்து நீலமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் தாவரங்கள் அதிலுள்ள அமிலத்தன்மையை அழித்து, புத்துணர்வூட்டுவனவாக இருக்கும். நீர் நிலைகளின் தன்மை மாசு ஏற்பட்டதால் எங்கள் தேவதைகள் வலு குன்றி காணப்படுகிறார்கள். எங்களது செயலாற்றும் திறன் குறைகிறது.,....

.

“செயலாற்றுவதா?  அப்படியென்றால் உங்க  பணி   என்ன?

.

பெரிதாக நகைத்தாள். அவள் பற்கள் வசீகரமாக பளிச்சிட்டது. “உங்களது பூவுலகின் மானிடர்களுக்கு இடர் ஏற்படாமல் காக்கும் தேவதைகள் நாங்கள்!”

.

இமைக்க மறந்தனர் நால்வரும். சஞ்ஜய் முதலில் வாய் திறந்தான். "அப்டீன்னா  நீங்க தேவதையா?"

.

"உங்களைப் பாதுகாக்கும் தேவதைகள், தேவர்கள், ஏஞ்சல்ஸ், எப்படி வேண்டுமென்றாலும் விளிக்கலாம்"

.

“தேவலோகத்தில் பாரிஜாத மலரை எங்கள் உலகுக்கு கொணர்ந்த பாமாதேவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பேற்பட்ட தேவலோகத்தில்  துளசிச்செடி இல்லையா!” களுக்கென்று சிரித்தாள் தேவிகா.

.

“அதன் மூலப்பிரதியான "ப்ரோடோடைப்" தொலைந்து விட்டது. பூலோகத்திலிருந்து  வரவழைத்து இங்கு மாசு களைந்தபின், அதன் பிரதிகளை இங்கு பரவ விடுவோம்.... “  என்றாள்.

.

தன் பையிலிருந்து பத்து துளசிச் செடிகளை எடுத்த ரசிகா புன்னகைத்தாள். நால்வருக்கும் சுவஸ்திகாவை மிகவும் பிடித்துவிட்டது.

.

அடுத்த சில வினாடிகளில் விதவிதமான வண்ண அலங்காரத்துடன், பல தேவதைகள் கூடி, துளசிச் செடிகளை சில மூல நீர்நிலைகளில் முக்கி எடுத்தனர்.  சற்று நேரத்தில் நீர்நிலைகள் இளம் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.  துளசிச் செடிகளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிய சுவஸ்திகாவிடம்....

.

"நீங்க தான் இங்கு தலைமை தேவதையா? இந்திரன் மாதிரி இந்திராணி" என்றான் சமீர்.

.

"என் பேயர் சுவஸ்திகா. மேலும் தேவ ரகசியங்களை வெளியிட எங்களுக்கு உரிமையில்லை"...

.

“அதிருக்கட்டும்...இவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி உங்க பிரபஞ்சத்திற்கு வந்த எங்களுக்கு என்ன பயன்? ஒரு காவலதிகாரியை வேறு  தாக்கியிருக்கோம்....அப்பா அம்மா தேடுனா என்னத்த ....ஆஹா! நாங்கள் திரும்பி போனா பல யுகம் முடிஞ்சிருக்குமோ! இந்த மாதிரி கதை எத்தன படிச்சிருக்கோம்! "

.

“அதைப்பற்றிய கவலை வேண்டாம்.  உங்களது நேரத்திற்கே  உங்களை திரும்ப செலுத்தும் ஆற்றம் எமக்குண்டு.  உங்களை படகுத் துறையில் கண்ட நினைவு அங்கிருந்த பலருக்கும் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. மேலும்... அவர் நீங்கள் நினைப்பது போல அங்கிருந்தவர் காவலாளி இல்லை ....அவர்...அதிருக்கட்டும்... நீங்கள் நால்வரும் துப்பறியும் நண்பர்கள் தானே"

.

அசடு வழிய இளித்தனர்... "ஆமா... "ஃபேமஸ் ஃபைவ்" , சீக்ரெட் செவன்"  கேள்விப்பட்டிருப்பீங்களே...அதைப் போல எங்களது "பெண்டாஸ்டிக் ஃபோர்".  எங்க மொழியில "நம்பிக்கை நால்வர்"  பெயர் சூட்டியிருக்கோம். இதைத் துப்பறியும் ஸ்தாபனமாக்குற எண்ணம் உண்டு.    - தெளிவாக விளக்கினாள் தேவிகா.

.

“அது தான் எங்களது பரிசு, நான் ஒரு  களிம்பு தருகிறேன். அதைப் பூசிக்கொண்டால்  சில மணி நேரங்களுக்கு உங்களை யாராலும் பார்க்க முடியாது.  நாளை உங்கள் பூமியில், தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவரை, தீவிரவாதியினர் தாக்க முற்படுவார்கள். நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரே முறை தான் பயன்படும். “

.

விண்கலம்  வெண்ணிற மண்ணில் ஊன்றி அவர்களை ஏற்றுக் கொண்டது. அவர்கள் விடைபெற்றுக் கொண்டதை தூரத்தில் ஒரு முகம் கவனித்துக் கொண்டிருந்த்து.  அந்த முகத்தை நால்வருமே வனிக்கவில்லை.

.

***

கனவு போல் முடிந்தது. எப்படி சென்றனரோ, அதே வழியில், சுழன்று சுற்றி நின்ற விண்கலம், படகாக மிதந்து அவர்களை கரை சேர்த்தது. வீட்டுக்கு வந்த தேவிகா சகோதரிகளுக்கு பெரும் ஆச்சரியம்.

.

"என்னடி லைப்ரரிக்கு போய் வர மூணு மணி நேரமா!" - என்னது மொத்தம் மூணு மணி நேரமா? ரசிகா கண்ணடித்தாள்.

 

**

மறுநாள்  அதிசுறுசுறுப்பாக விடிந்தது.  அதிகாரி வீட்டை நெருங்க தடையேதுமில்லை. களிம்பைப் பூசிக் கொண்டதும் கடவுளாகி விட்டது போலத் தோன்றியது.  "மிஸ்டர் இந்தியா படத்துல அனில்கபூர் இப்படித்தான்...." இழுத்தான் சஞ்சய். "ஷ்ஷ்...அங்க பாருங்க அவங்க நடவெடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கு. கண்டிப்பா அவனுங்க தான்."  மானாவாரியாக படமும், காணொளியும் பதிவாகிக் கொண்டிருந்தது. நால்வரையும் கண்களால் கண்டு  யாரென்று கேட்க  ஆளில்லை.

.

அடுத்த மாதங்களுக்கு "நம்பிக்கை நால்வர்" பற்றிய செய்தி, வைரலாகியது. பெரிய விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இவர்களுக்கு எஸ்காட்டாக எப்போதும் "முத்துகுமார்" . பெற்றோருக்கும் மற்றோருக்கும் இவர்கள் திறமை திண்ணமாக வெளிப்படத் துவங்கியது. சின்னதும் பெருசுமாக பல சில்லறை துப்பறியும் கேசுகள் குவியத்  துவங்கின.  ஒவ்வொரு கேசிலும் இவர்களுக்குத் துணையாக ஆங்காங்கே முத்துகுமாரும் நுழைந்து விடுவதால் ஏறக்குறைய இவர்கள் நண்பராகி விட்டார்.

.

***

வேலூர் சிறையில்...

.

"எப்படிடா? அவ்வளவு சாக்ரதையா திட்டம் போட்டிருந்தமே. எங்கியிருந்து இதையெல்லாம் படம் புடிச்சுதுங்க!" –

.

"அதை விடு.... யாரோ முத்துக்குமாராம் அவரை மர்மமா தாக்கினதா வேற குற்றம் சுமத்திருக்காங்க, யாரவன்? என்னடா நடக்குது!"-யோசித்து மண்டை வெடித்தது.

 

***

“எல்லாம் என்னோட புத்திசாலித்தனம் தான். எப்படி கரெக்ட்டா துளசிச் செடியை எடுத்து வெச்சிருந்தேன் பாத்தீங்களா!”- ரசிகா

.

சமீர் இடியிடியெனச் சிரித்தான். “அந்த பேஸ்ட் மட்டும் இல்லையின்னு வையி.... நம்ம கதை கந்தல்....எல்லாம் அந்த சுவஸ்திகா....அந்த தேவதை..”.அவன் கண்களில் சுவர்கம் தெரிந்தது... 'சே! நான் அங்கயே செட்டில் ஆகியிருக்கலாமோ!'

.

"போதும் ரொம்ப பேசாத ... மூடு'  என்றாள் தேவிகா.

 

.

முணுக்முணுக் என்றது செல்ஃபோன்  இளநீலத்தில் மிளிர்ந்து,  நால்வர் தொலைப்பேசியும் "வணக்கம்" என்று கிசுகிசுத்தது....

.

'யாராவது விளையாடுறாங்களா இருக்கும். மே பீ அ ப்ராங்க் '  என்றாள் தேவிகா. ரசிகாவின் அட்ரினலைன் ஜீவ்வென்றி ஏறி.....இல்லை என்றது, ஏனெனில்  நால்வர் செல்ஃபோனிலும் அடுத்தடுத்த செய்திகள் குரல்வழி செய்திகள் ஒலித்த வண்ணமிருந்தன

.

"நம்பிக்கை நால்வர்...நம்பிக்கை நால்வர்... நம்பிக்கை நால்வர்..... வணக்கம். தொடர்பு கிரகம் "வீனஸ்டோ".  உங்களது பாலவீதியிலேயே உள்ளது.  உங்களது  இணைப்பு உடனே தேவை"......... திரையில் தெரிந்த  சுவஸ்திகாவின் முகத்துக்குப் பின், மங்கலாகத் தென்பட்ட தெளிவற்ற முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே!  

.

***

அந்த உருவம் சின்னதொரு சாக்லேட் அளவு காந்தக் கருவியை இயக்கியது...

.

"வீனஸ்டோ திட்டத்துக்கு அவர்கள் தயார் - நானும்"  என்ற செய்தியை சுவஸ்திகாவுக்கு அனுப்பியது. மோட்டார் பைக்கை விருக்கென்று செலுத்தி  ரோட்டோரக் கடையருகே நிறுத்தி "ரெண்டு இட்லி குடுப்பா"  என்றது.

.

"இன்ஸ்பெக்டருக்கு சார் சூடா ரெண்டு செட்டு இட்லி" என்ற கடைப் பையனை பார்த்து முத்துகுமார் மெல்லப் புன்னகைத்தார்.

 

***

.

“முகுந்த் இருக்காருங்களா!”

..

“சார் நான் ஸ்ரீநாத்.”

..

“ஆகிடுச்சு சார். இன்னும் பத்து நிமிடத்தில் அனுப்பிவிடுகிறேன். ...”

..

“கண்டிப்பாக. பத்து அல்லது பதினைந்து பகுதிகள் வரும்னு நினைக்கறேன் சார்.”

.

சிறுவர்களுக்கான தொடர் Famous Five சாயலில் இதை மினி தொடர்களாக தொகுக்க திட்டமிட்டு..... (இவர்கள் பயணம் தொடருமோ?).... என்ற கேள்வியுடன்,  கதைக்கான sequelஐக்  குறிப்பிட்டு,  கணினியில் சேமித்தான் ஸ்ரீநாத்.   நாளையே "வீனஸ்டோ" எழுதத் துவங்க வேண்டும். 

.

சரியாக எட்டு நிமிடங்களில் பதிப்பாசிரியர் முகுந்த்  மின்னஞ்சலுக்கு "துளசிச் செடி"  வந்து சேர்ந்தது. 

 

(முற்றும்)

 

ShakthiPrabha


(Story was written for "Short story writing contest for given pic) 

Kameshwara's Kameshwari (The first seed of "want/desire") (DEivathin kural)

 (Shaaktham)




ராஜராஜேச்வரி, லலிதா, த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களைக் கொண்டவளும் அவளேதான் என்றாலும் காமேச்வரி நாமாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. என்னவென்றால், சைவத்தில் சிவன் எப்படி சக்தி சஹிதனாகவே இருக்கிறானோ, அப்படியே சாக்தத்திலும் இந்த ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சக்தியானவள் சிவ சஹிதையாகவே பதியோடு இருக்கிறாள். பூர்ண ப்ரஹ்ம சக்திக்கு யார் பதியாக இருக்க முடியும்? அதைத் தவிர எதுவுமே இல்லாதபோது யார் பதி ஆகமுடியுமென்று ஆலோசித்துப் பார்த்தால் சக்தியைக் காட்டாமல், கார்யம் பண்ணாமல், சாந்தமாக இருந்து கொண்டிருக்கிற ப்ரஹ்மமான சிவன்தான் அந்த சக்திக்கு வேறே மாதிரி, இன்னொன்று மாதிரி தெரிவதால் அதுதான் பதியாயிருக்க முடியுமென்று தெரிகிறது.
.
இதிலிருந்து இன்னும் என்ன ஆகிறதென்றால், அந்த சிவனே நேராக சக்தி விலாஸத்தைக் காட்டும் கார்யத்தைப் பண்ணாவிட்டாலும், அப்படிப் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாக ஆகிறது. ”ஒன்றாக இருந்த ப்ரம்மம் பலவாக ஆக ஆசைப்பட்டது” என்றே உபநிஷத்துச் சொல்கிறது.
.
சாந்த ப்ரம்மம் அப்படியே இல்லாமல் கார்ய ப்ரம்மமாயிற்று என்றால், அப்போது அந்தக் கார்யத்துக்கெல்லாம் முந்தி, அது கார்ய பிரம்மமாகணும் என்று ஆசைப்பட்டிருக்கணும் தானே? ‘ஆசைப்பட்டது’ – என்றே உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. எப்போதும் சித்சக்தியான ஞானசக்தியை உள்ளே வைத்துக் கொண்டுள்ள பிரஹ்மம் – சிவம் – சக்தியை வெளிப்படுத்தி பிரபஞ்ச லீலை பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதே அதனுடைய இச்சா சக்தி எனப்படுகிறது.
.
அப்புறம் வாஸ்தவமாகவே பஞ்ச க்ருத்ய லீலை செய்தது க்ரியா சக்தி. அது இருக்கட்டும். இப்போது விஷயம், தன்னில் தானாயிருந்த பிரம்மம் வெளிமுகப்படும்போது முதலில் தோன்றியது அதன் இச்சை, ஆசை; ‘காமம்’ என்று உபநிஷத் சொல்வது. ‘காமம்’ என்பது இங்கே தப்பர்த்தம் தருவதில்லை. சுத்தமான இச்சைக்கே அப்படிப் பேர்.
.
பூர்ண ப்ரஹ்மம், சக்தி பிரஹமத்திலிருந்து வேறே மாதிரி கொண்ட முதல் ஆவிர்பாவம் அந்தக் காமம். அதுவேதான் அவனுக்குப் பத்னி. அப்பா அம்மா சேர்ந்து ப்ரஜைகள் உண்டாகிறாற்போல சாந்த ப்ரஹ்மமான சிவன் இந்த இச்சா சக்தியோடு சேர்ந்தால்தான் ப்ரபஞ்ச லீலை, பஞ்ச க்ருத்யங்கள் எல்லாம் என்பதால் அவர்கள் பதியும் பத்னியும் ஆகிறார்கள்.
.
அவனுடைய இச்சையின், காமத்தின் ஸ்வரூபமானதால்தான் அவளுக்குக் காமேச்வரி என்று பெயர். அதுதான் முதல் பெயர். பிரஹ்மத்திடமிருந்து முதல் evolute [பரிணாம தத்வம்] காமம் என்றால் அதை வைத்து ஏற்பட்ட [காமேச்வரி என்ற] பேர்தானே ப்ரஹ்ம சக்தியின் முதல் நாமாவாக, ப்ரதான நாமாவாக இருக்க வேண்டும்? எவன் இப்படி ஆசைப்பட்டானோ அவன் காமேச்வரன்.
.
வெறும் பிரஹ்மமாக இருந்த அவன் ஆசைப்பட்டதோடு ஸரி. அந்த ஆசையைக் கார்யமாக்கி ப்ரபஞ்ச லீலையாகப் பஞ்ச க்ருத்யம் என்று வாஸ்தவமாகவே பண்ணிக் காட்டுவது முழுக்க முழுக்க சக்தியான அவள்தான். அதாவது, காமேச்வரிதான் விக்டோரியா, எஸிபெத் ராணிகள் மாதிரி, தானே பூர்ண ஆட்சியதிகாரத்துடன் இருப்பவள்; ஸமஸ்த ஜகத்துக்களையும் ஜீவர்களையும், தேவர்களையும் ஆள்கிறவள்.
.
ஆள்கிற ராஜாவுக்குப் பெண்டாட்டிக இருப்பதால் மட்டும் ராணியில்லை; தானே நேராக ஆட்சிப் பொறுப்பு வஹிக்கிற ராணி! ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவாக ‘ஸ்ரீமாதா’ என்று அவளை அன்போடு அம்மாவாகக் கூப்பிட்டவுடனேயே அடுத்த இரண்டு நாமாக்கள் அவளுடைய ஆட்சியதிகாரத்தை – அவள் அகிலாண்ட, ப்ரம்மாண்ட சக்ரவர்த்தினியாக இருப்பதைத் தான் – ‘ஸ்ரீமஹாராஜ்ஞி’ என்றும், ‘ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி’ என்றும் சொல்லியிருக்கிறது.
.
Chapter: பஞ்ச க்ருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

நமக்கு நாமே



நான் மட்டுமே
என் நினைவுகளை
காற்றில் கரைக்கிறேன்,
நான் மட்டுமே 
என் உணர்வுகளை
உதாசீனப்படுத்தி
கடாசி எறிகிறேன்.
தனியாக நான் மட்டுமே.
இனிமேலும் கூட

ShakthiPrabha

September 23, 2022

Meditate upon AmbaaL with Thandangam (தோடு-earrings) (Deivathin Kural)




தாலி பாக்யத்தைதான் அவளுடைய “தாடங்க மஹிமா” என்று சொல்லியிருக்கிறார். ஸெளமாங்கால்யச் சின்னமான தாடங்கம் என்று

சொல்லியிருக்கிறார்! ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார்.
.
வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலிதான்! இதென்ன புதிர் போடுகிறேனே என்றால், நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாஸன்
சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன்.
.
“தாலீ பலாச தாடங்காம்” என்பது காளிதாஸன் வாக்கு. தாலம், தாலீ என்றால் பனை, பலாசம் என்றால் புரசு என்று ஒரு அர்த்தம். ஆதிகாலத்தில்
ஜனங்கள் படாடோபமில்லாமல் எளிமையாக இருந்தபோது ஸ்த்ரீகளுடைய பரம ஸெளமாங்கல்ய ஆபரணங்களான மங்கள ஸூத்ரப் பதக்கம், காதுத்தோடு இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால் மங்கள ஸூத்ரப் பதக்கமாயிருந்த ஒலை நறுக்குக்கே தாலி என்று பெயர் வந்துவிட்டது. ‘தோடு’ என்பதும் பனையோலையின் பெயர்தான். காதிலும் அந்த ஒலையைச் சுருட்டித்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன், அநேக குடியான ஸ்திரீகள் அப்படி போட்டுக்கொண்டு.
.
பிற்கால ஜம்ப வழக்கங்கள் வராத ஆதி நாட்களில் காளிதாஸன் வாக்குப்படி ஸாக்ஷாத் பராசக்தி உள்பட – எல்லோரும் ஒலைத்தோடு போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
.
‘கம்மல்’ என்றும் தோட்டைச் சொல்வது. ‘கமலம்’, ‘கமல்’ என்பதுதான் அப்படி ஆனது. நடுவே ஒரு கல், சுற்றிலும் ஆறு என்று, நடுவே
கர்ணிகையும் சுற்றி இதழுமாக ஒரு தாமரை இருக்கிறார்போலத் தோடு கட்டியதால் ‘கமலம்’ என்று பேர் வைத்து ‘கம்மல்’ ஆயிற்று.
.
இத்தனை ஜம்பம், டம்பம், டாம்பீகம் வந்துவிட்ட இன்றைக்கும் அம்பாள் பூஜையில் அவள் போட்டுக் கொள்கிற பரம எளிமையான கருகுமணியும் பச்சோலையும் ஸுமங்கலிகளுக்குக் கொடுக்கிறோம்.
.
‘தாலீ பலாசம்’ என்ற பனையோலையே ‘தாட பத்ரம்’ என்பதும். ‘தாட(da)ங்கம்’ என்பதே அப்புறம் ‘தாட(ta)ங்கம்’ என்று வந்திருக்கிறது.
தோடு, அதற்கு வேறாகக் குண்டலம் (இந்த நாள் லோலாக்கு, ஜிமிக்கி) என்று இல்லாமல், தோடு குண்டலம் இரண்டும் சேர்த்துப் பண்ணிய நகை
தாடங்கம் என்று தோன்றுகிறது.
THandanga mahimai
“பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறானென்றால் அது உன் மஹிமை தானம்மா! – தவ ஜநநி
தாடங்க மஹிமா!” என்கிறார்.
.
ச்ரோத்ரத்திற்கு (காதுகளுக்கு) விசேஷம் ஜாஸ்தி. பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ருஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி என்றே பேர் பெற்றிருப்பது? உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈச்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே?
.
இதனாலெல்லாந்தானோ என்னவோ, அம்பாளுடைய தாடங்கத்தில் நம்முடைய ஆசார்யாளுக்கு ரொம்ப பக்தி, பற்றுதல். ‘ஸர்வ மங்களா’ எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. ஸூர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு தாடங்கம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: தாடங்க-யுகளீ-பூத தபனோடுப மண்டலா என்று.
.
Her Thandangam Nourishes and protects Jivas
அதே ஸூர்ய சந்திரர்களை நமக்குப் பால் கொடுக்கிற அம்மாவின் இரண்டு வக்ஷோருஹங்கள் என்று ஆசார்யாள் இதே ஸெளந்தர்ய லஹரியிலேயே சொல்லி இருக்கிறார். [ச்லோ. 34] ஆகையால் அந்தத் தாடங்கங்களும் ஒரு பக்கம் பரமேச்வர பத்னியின் ஸெளமாங்கல்ய சின்னம், இன்னொரு பக்கம் குழந்தைகளான நமக்கெல்லாம் பாலூட்டுகிற மாத்ரு வாத்ஸல்யத்தின் சின்னம் ஆகிறது.
.
ஆகையாலேதான் ஜம்புகேச்வரத்திலே அகிலாண்டேச்வரியின் சக்தி ஜனங்கள் தாங்க முடியாத அளவுக்கு ஆனபோது அவர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி அதில் அதிகப்படி சக்தியை ஆகர்ஷணம் பண்ணி அம்பாளை சமனப்படுத்த நினைத்தபோது அந்த ஸ்ரீசக்ரத்தை தாடங்க ரூபத்தில் பண்ணி அவளுடைய ச்ரோத்திரத்திலேயே ப்ரதிஷ்டித்து விட்டார்.
.
ப்ருத்வி க்ஷேத்ரமும், ப்ருத்வியின் மத்ய ஸ்தானமுமான காஞ்சீபுரத்தில் அம்பாள் காமாக்ஷியின் சக்தி இதே மாதிரி அபரிதிமாயிருந்தபோது அவளுக்கு எதிரே ப்ருத்வியிலேயே – பூமியிலேயே – ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் பண்ணினார்.
.
‘சிவயுவதி’ என்று அவளை அவனுடைய பத்னி என்று பேர் கொடுத்துச் சொல்லியிருப்பது அவளுடைய ஸெளமாங்கல்யத்தையும்,
உக்ரமில்லாத, ரௌத்ரமில்லாத சிவமான அநுக்ரஹ சித்தத்தையும் தெரிவிப்பதாக இருக்கிறது.
.
Chapter: அம்பாளின் தாடங்கம் Volume 6
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)