December 16, 2022

மார்கழிக் கோலங்கள்



புள்ளினங்கள் கூவும் பூங்காலைப் பொழுதில்
கள்ளியவள் எழுதியுள்ள புள்ளிகளின் இலக்கியம்;
தள்ளித்தள்ளி தெறித்திருக்கும்
வெள்ளிப் பூக்களை - கரத்தில்
அள்ளியள்ளி தொடுத்த மலரோவியம்;
சித்திரவீதிகளில் சிந்தியிருக்கும் அதிசயம்- என்
சிந்தையெங்கும் பூத்திருக்கும் பூவனம் - இது
பள்ளிகொண்ட சித்தன்ன-வாசல் காவியம்.
.
- ShakthiPrabha



( Maargazhi kolam two years ago)


December 13, 2022

நான்

 

எங்கேனும் விட்டுவிட நினைத்து;
எப்படியோ கொன்றுவிடத் துடித்து;
காததூரம் கடத்திச்சென்று
கைவிடவே விழைந்து;
காசியிலே தொலைந்த கர்மமென்றே
கழித்துக்கட்டி கைவீச முயன்று;
ஒழிந்து போ என்றே ஓலமிட்டு;
அதட்டி அடக்கி; மிரட்டி மடக்கி
அடாவடியாக அதிகாரம் செய்து;
அத்தனையும் தோற்றதால்,
அடிபணிந்து தொழுதேத்தி;
கெஞ்சிக் கூத்தாடி; கொஞ்சிக் குழைந்து
தஞ்சமே புகுந்திடினும்;
அகங்காரமெனும் அலங்கோலமாகி
மிஞ்சியே மிரட்டும்,
"நான்"
- ShakthiPrabha




December 05, 2022

World of Cinema - Drama : changing scenarios (Deivathin kural Volume 7 )

( தெய்வத்தின் குரல் பகுதி 7  தொகுப்பிலிருந்து) 

.
சினிமா, நாடகக் கலை இப்போது எப்படி இருக்கிறது? ரொம்ப ஜனங்களை இழுக்கிற சக்தி – mass media வாக இருக்கிற சக்தி – ஜனங்களை இழுத்து இந்திரியங்களைக் கிளறி அனுப்பிவிட்டால் போதுமா? அது சரியா? டிராமாவால், சினிமாவால் எத்தனையோ நல்லது செய்யலாம், செய்யலாம் என்கிறார்கள். ‘லாம்’ என்பது வாஸ்தவம்தான். வாஸ்தவத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி. அணு சக்தியால் நல்லது செய்யலாம் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டே ‘பாம்’களைக் குவித்துக் கொண்டு போகிற மாதிரிதான் நடந்து வருகிறது.
.
பொறுப்புணர்ந்த நாடகாசிரியரும், நாடகம் நடத்துகிறவரும் சினிமாக் காரர்களும் என்ன செய்ய வேண்டும்? ஜனங்களின் மனஸை உயர்த்தப் பாடுபட வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளை நல்வழியில் திருப்பிக் கட்டுப்படுத்தி, லோகத்தோடு அவர்கள் ஸௌஜன்யமாக இருக்கும்படியாகவும் தங்களுக்குள் சாந்தமாக ஆகும்படியாகவும் செய்யக்கூடியவைகளை எழுதி நடிக்க வேண்டும். இப்போது நடப்பது நேர்மாறாக இருக்கிறது.
.
ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கிறவன் அது முடிந்து வெளியே போகிறபோது முன்னைவிட மனசு கெட்டுப் போகிற ரீதியிலேயே இப்போது இருக்கிறது. காமமும் குரோதமும்தான் ஜீவனின் பரம விரோதிகள் என்பது கீதாவாக்கியம். இப்போது படங்களில் இந்த இரண்டும்தான் பிரதானம்.
.
வெவ்வேறு வகுப்பு ஜனங்களை, வெவ்வேறு கட்சிக்காரர்களைப் பரஸ்பரம் சண்டைக்குத் தூண்டிவிடுகிற நாடகங்களும் சினிமாக்களும் ஜாஸ்தியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விரசத்துக்கோ எல்லையே இல்லாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.
.
Olden day Traditions
.
முன்னெல்லாம் இந்த கலைக்கு வரம்புகள் இருந்தன. அந்த வரம்புகள் போன பின் அந்தக் கலையே வீணாகி விட்டது. இன்னின்ன காட்சிகளைத்தான் காட்டலாம் என்ற விதிகள் முன்பு இருந்தன. சில விதமான ஸம்பவங்களை ஸ்தூலமாகக் கண் முன் காட்டி மனஸை விகாரப்படுத்த மாட்டார்கள்.
.
நாடகம் நடிப்பதற்கென்றே ‘பரத புத்திரர்கள்’ என்று தனியாக ஒரு ஜாதியார் இருந்தார்கள்; மற்றவர்கள் அதில் நுழையவிட மாட்டார்கள்.
யார் வேண்டுமானாலும் சினிமாவில் சேரலாம். அப்பாவை விட்டு விட்டுப் பிள்ளை ஓடிப்போய் சினிமாவில் பிழைத்துக் கொள்ளலாம், ஸ்திரீகள் வீட்டை விட்டு ஓடிப்போய் ஸ்டாராகி விடலாம் என்பதற்கெல்லாம் அப்போது இடமே இல்லை. இதெல்லாவற்றையும் விட, அந்தக் காலத்தில் எத்தனையோ கௌரவமான வரம்புகளுக்கு உட்பட்டே ஸ்திரீ புருஷர்கள் நடித்த போதிலும்கூட வாஸ்தவத்தில் புருஷன் பெண்டாட்டியாக இருப்பவர்கள்தான் நாடகத்திலும் தம்பதிகளாக வருவார்கள். நடீ-ஸுத்ரதார tradition என்று இதைச் சொல்லுவார்கள். இப்போது இந்த நல்ல ஒழுக்க விதிகள் எல்லாம் போய்விட்டன. ரொம்பக் குழந்தைகள் திருட்டுப் புரட்டில் விழுவதற்குச் சினிமாக் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். பெண் குழந்தைகள் மானம் மரியாதை இல்லாமல் ஆகியிருப்பதற்கும் இதுதான் காரணம்.
.
நானும் எல்லோருக்கும் நல்லவனாகப் பேர் எடுக்க வேண்டுமென்று, என் மனசுக்குத் தப்பு என்று தோன்றுவதைச் சொல்லாமல் இருந்தால் அதைவிடப் பெரிய தப்பு இல்லை. நான் சொல்வதற்காக எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கவில்லை; மாறுமோ மாறாதோ, சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொன்னேன்.

Chapter: இன்றைய இழிநிலை

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

November 23, 2022

பாதைகளின் ஆலிங்கனம்




திரும்பிப் பார்க்கவே எத்தனிக்கிறேன்..
மாறிய தடங்கள்
மீண்டு(ம்) வர முரண்டு பிடித்தன.
முறுக்கி நின்ற பாதைகள்
மறுபடியென் முகம் பார்க்கவில்லை.
சாலையோரங்களின் மணல்வெளியிலும்
சோலைமலர்களின் மடியினிலும்
நினைவுகளின் எச்சத்தை சுவாசிக்கிறேன் .
தூரத்தில் புள்ளியாய் மறைந்து போனவை
நினைவுகளாகி நெருங்கி நின்றது
உயிர்த்தெழுந்து உடன் நடந்தது
நட்புடன் கைகோர்த்து
காதலுடன் கைபிடித்து
என்னில் நானாகிப் போனது.
இதயமெங்கும் இறந்தகாலம்
மணம்வீசிச் சென்றது
நிகழ்காலத்தையும் மெருகேற்றிப் போனது.

November 22, 2022

What is True Secularism ( Deivathin_kural Volume 7 )

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை 'ஸெக்யூலரிஸம்' என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது.
.
'செக்யூலரிஸம்' என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவது போல் -"அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று"- இருப்பதல்ல. மாறாக , அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் 'மட்டும்' சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பது தான் சரியான பொருள்.
.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான 'செக்யூலரிஸம்' ஆகும்.
.
இன்று அநேகமாக எல்லா நாடுகளிலுமே பல்வேறு மதத்தினர் கூடி வாழ்வதால், எல்லா மதங்களையும் சமநோக்குடன் ஆதரித்து, அவற்றின் அபிவிருத்திகளுக்கான போஷணையை அரசாங்கங்கள் அளிப்பதே 'செக்யூலரிஸம்' எனப்பெயர் கொண்ட கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கும்.
.
Symbol of Chakra for Independant India

நமது சுதந்திர பாரதத்தின் கொடிக்கு நடுவில் நடுநாயகமாக பகவானது தர்மஸ்வரூபமான சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இக்கொடியின் அமைப்பைத் திட்டமிட்ட தலைவர்களின் கருத்து வேறுவிதமாக இருப்பதாகத் தோன்றினாலும்ட, நாமோ, அவரது காப்பு சுதந்திர பாரதத்திற்கு எப்போதும் உண்டு என்று காட்டு முகமாகவுந்தான் அவரது இத் தர்ம சக்கரம் நமது கொடி நடுவில் இடம் பெறக் கருணை கூர்ந்திருக்கின்றாரென எண்ணுகிறோம்.
.
Chapter: அரசும் மதமும், தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்
Chapter: உண்மையான 'ஸெக்யூலரிஸம்'
Chapter: அரசு புரிய வேண்டிய மத போஷணை அதனால் அரசு பெறும் லாபம்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

November 01, 2022

தேவார திருமுறைகள் - ராஜராஜ சோழனின் பங்களிப்பு (தெய்வத்தின் குரல்)



RajaRaja Sozhan's thirst

அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள்.

சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து ப்ரகாசப் படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது. 'எப்படியாவது' என்றால் நடைமுறையில் எப்படி? அதுதான் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

Nambiyandaan nambi's childhood

அப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது. "சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மஹான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். 

அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம். இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்யம் பண்ணினாராம். பிள்ளையார் நிஜமாகவே நைவேத்யத்தைச் சாப்பிடுவார்கள் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக் கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் ப்ரஸன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலேவே அத்தனை நைவேத்யத்தையும் சாப்பிட்டாராம்!

"இதற்குள் பள்ளிக்கூட வேளை தப்பி விட்டதாக நம்பி மறுபுடி அழ ஆரம்பித்தாராம். உடனே பிள்ளையாரே அவருக்கு வித்யாப்யாஸம் பண்ணி ஆத்ம வித்யை உள்பட எல்லாக் கல்வியிலும் தேர்ச்சி பெறச் செய்த விட்டாராம். 

Pillaiyaar blessing Nambi and  RRC 

அந்தப் பெரியவர் (Nambiyandaan nambi) பிள்ளையாரோடு ஸஹஜமாகப் பேசுகிறாராம். அவரைக் கேட்டால் தேவார ஸமாசாரம் தெரியலாம்" என்று ராஜராஜ சோழனுக்குச் சேதி சொன்னார்கள்.அப்படியா?" என்று அவன் உடனே நம்பியுடைய பிள்ளையாருக்காக ஏகப்பட்ட நைவேத்யங்கள் ஸித்தம் செய்து கொண்டு அவரிடம் ஓடினான். ராஜராஜசோழன் ஸமர்பித்த நைவேத்யங்கள் நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே தும்பிச்சுக் கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார் ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், "உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு சொல்லவேணும் 

இன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் 'திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக ஸுந்தரர் பாடல் இருக்கிறதோல்லியோ? அந்த மஹாநுபாவர்களின் திவ்ய சரித்ரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அநுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக் கொண்டான். இவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, "அநுக்ரஹிக்கணும்" என்று வேண்டிக் கொண்டார்.

இந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். "சிதம்பரத்திலே நடராஜா ஸந்நிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகள் வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். (லாஞ்சனை என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையைத் தமிழில் இப்படிச சொல்வது. அதுதான் அதிகாரப்பூர்வமான அடையாளம், முத்திரை முதலானது.) அப்படி அந்தச் சிதம்பர மேலண்டை அறையில் தேவார மூவரே அதிகார பூர்வ அடையாளமாகத் தங்களுடைய கையை அழுத்திய இலச்சினைகளை வைத்து மூடியிருக்கிறார்கள். அங்கே பாய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ" என்றார்

அறுபத்து மூவர் சரித்ரங்களையும் சொன்னார். 'நம்பிக்கு தும்பி சொன்னார்' என்பார்கள். 

Rushing to Chidambaram

தேவாரக் கதை என்ன ஆச்சு என்றால், நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

மூவர் விக்ரஹங்களுக்கு விமிரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான். எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார ஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

தீக்ஷிதர்கள் மனஸ் உருகிக் கதவைத் திறந்தார்கள்.

உள்ளே போய்ப் பார்த்தால்!'ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே' என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே எண்ணூறுக்கும் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.

எல்லாரும் சோகாக்ராந்தர்களாக இருக்கும்போது அசரீரி கேட்டது.  திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆச்சு. அது மாத்திரமில்லாமல் இந்த 796 பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்" என்று அசரிரி சொல்லிற்று. 

Treasures- Thirumurai 

எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான். அவரும் அப்படியே தேவாரப் பதிகங்களையும், இன்னும் அப்போது தெரிந்திருந்த மற்ற சைவப் பெரியார்களுடைய பாடல்களையும் 'திருமுறைகள்' என்ற பேரில் பதினொன்றாகப் பகுத்துக் கொடுத்தார். 

Chapter: 'திருமுறை' கிடைக்கச் செய்தவர்

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 31, 2022

சுந்தரருக்கு பொன்னின் மாற்று உரைத்த பிள்ளையார் (தெய்வத்தின் குரல்)

 #Deivathin_kural Volume 7:

***************************
Leelas of the Lord (shiva) and Ganesha's assistance for Sundarar (short cute story)
------------------------------------------------
ஃப்ரெண்ட் என்கிற முறையிலே ஸுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) ஸ்வாமிகிட்டே (ஈசனிடம்) எதை வேணாலும் கேட்பார். பரவை நாச்சியார் என்று அவருக்கு ப்ரியாமானவள். அவள் ஸுந்தரமூர்த்திகளின் ஊரான திருவாரூர் கோவிலில் நாட்யம் பண்ணுகிறவர்களில் பரம பக்தையான ஒரு உத்தமி. ரொம்பவும் தானதர்மிஷ்டை. அவள் வாரிக் கொடுக்கிறதற்காக ஸுந்தரர் அப்பப்போ "பொன்னு தா", "நெல்லு தா" என்றெல்லாம் ஸ்வாமியிடம் நச்சரித்துப் பெற்றுக் கொள்வார்.
.
ஒருமுறை விருத்தாசலத்திலேயும் அவர் பொன் கேட்டு, ஸ்வாமியும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். ஸுந்தரர் அதோடு விடாமல் "கொடுத்தது மட்டும் போறாது. இதைக் காபந்து பண்ணி எடுத்துண்டு நான் ஊர் ஊராப் போயத் திருவாரூர் சேருகிறது கஷ்டம். ஆனதாலே இதை நீயே எப்படியாவது அங்கே சேர்த்திடு" என்றார்.
.
ஸ்வாமியும் "ஸரி" என்றார். ஆனால் கொஞ்சம் லீலை பண்ண நினைத்து, "இந்தப் பொன்னை இங்கே ஓடற மணிமுத்தாற்றிலே போட்டுடு. அப்பறம் ஊர் ஊரா என்னைப் பாடிண்டு திருவாரூருக்குப் போய் அங்கே கமலாலயத்திலே - அதுதான் அங்கே உள்ள பிரஸித்தி பெற்ற திருக்குளம் - ஈசான்ய 'வடகிழக்கு' மூலையிலிலேருந்து கலெக்ட் பண்ணிக்கோ" என்றார்.
.
"அப்படியே" என்று மணிமுத்தாற்றிலே பொன் மூட்டையைப் போடப் போன ஸுந்தரருக்கு ஒரு ஸந்தேஹம் வந்தது. "நாம் ஸ்வாமியை படுத்தியெடுக்கிறோம் என்கிறதாலே, ஸ்வாமி இங்கே உசந்த மாற்றுத் தங்கமாக் குடுத்துட்டு கமலாலயத்தில எடுக்கறப்போ மாற்று கொறைச்சுடப்போறார்" என்று நினைத்தார். இரண்டு இடத்திலேயும் உரைத்து மாற்றுப் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்தார்.
.
உடனே அவருக்கு ஸஹாயம் செய்வதற்காகப் பிள்ளையார் வந்து நின்றார். பொன்னை உரைத்துப் பார்த்து, பத்தரை மாற்று - 24 காரட் - என்று - 'ஸர்டிஃபை' பண்ணினார். விருத்தாசலம் கோவிலில் அறுபத்து மூவருக்குப் பக்கத்தில் 'மாற்றுரைத்த பிள்ளையார்' என்றே அவர் இருக்கிறார்,
.
அந்தப் பொன்னில், பின்னாடி 'கம்பேர்' பண்ணுவதற்காக ஸாம்பிளாக ' ஒரு துணுக்கை ஸுந்தரர் வெட்டியெடுத்துக் கொண்டு மூட்டையை அப்படியே மணிமுத்தாற்றில் போட்டு விட்டார். அப்புறம் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் பாடிக்கொண்டே போய்த் திருவாரூரை அடைந்தார்.
.
பரவை நாச்சியாரைக் கமலாலயத்தின் ஈசான்யத்தில் படித்துறையில் நிறுத்தி விட்டுக் பொன்னை எடுப்பதற்காக குளத்துக்குள் இறங்கினார். இவர் நினைக்காததை ஸ்வாமி விளையாடினார். இவர் தேடு தேடு என்று தேடியும் பொன் மூட்டையே அகப்படவில்லை!
.
பரவையானால், "எங்கேயோ ஆத்துலே போட்டுட்டு இங்கே கொளத்துலே தேடறீரே ஸ்வாமி" என்று பரிஹாஸம் பண்ணினாள். அவள் சொன்னது பிற்பாடு வசனமே ஆகிவிட்டது! ஸுந்தரருக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. உணர்ச்சி ஜாஸ்தியானால் அவருக்குப் பாட வந்துவிடும். "பொன் செய்த மேனியினீர்!" என்றே ஆரம்பித்துப் பாடினார். (பிறிதொரு சமயத்தில்) "பொன்னார் மேனியனே!" பாடினதும் ஸுந்தரர்தான்.
.
ஸ்வாமி இவருடைய பாட்டைப் பெறணுமென்றே தான் சோதித்தது இவர் பாடினவுடனே பொன் அகப்படும்படிப் பண்ணிவிட்டார்! இங்கேயும் பிள்ளையார்தான் வந்து மாற்றுப் பார்த்தார். அதனால் திருவாரூரிலும் ஒரு மாற்றுரைத்த விநாயகர் உண்டு. ஸுந்தரர் பயந்த விளையாட்டையும் ஸ்வாமி இப்போது பண்ணியிருந்தார்!மச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்று குறைந்திருந்தது!14 காரட்!
.
பாட்டு ப்ரியரை ஸுந்தரர் மறுபடி ஸ்துதித்தார். ஸ்வாமியும் பதினாலை இருபத்து நாலாகவே மாற்றிக் கொடுத்தார்.
.
Chapter: சுந்தரருக்கு அருள் (VOLUME 7)
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 30, 2022

Lord Ganesha heeded to the plea (cute n short incident) (Deivathin Kural)

 

செவிசாய்த்த வினாயகர்

லால்குடிக்குக் கிட்டே அன்பில் என்று ஒரு ஊர். தேவாரத்தில் அதை அன்பில் ஆலந்துரை என்று சொல்லியிருக்கிறது. அப்பரும் ஸம்பந்தரும் அந்த க்ஷேத்ரத்திற்குக் கிளம்பினார்கள். வழியிலே கொள்ளிடம் குறுக்கிட்டது. ஒரே வெள்ளம் பரிசலா, படகா ஒன்றுமே போக முடியாத வெள்ளம் இப்படி ஆச்சே என்று அவர்கள் அக்கரையில் நின்று கொண்டே ஸ்வாமியிடம் முறையிட்டார்கள்.
.
அப்போது ஸ்வாமி கேட்டுக் கொள்கிறதற்கு முன்னாடி அங்கேயிருந்த பிள்ளையார்தான், "வெள்ளச் சத்தத்தோட யாரோ ப்ரலாபிக்கிற குரலும் கேக்கறாப்ல இருக்கே" என்று காதை அந்தப் பக்கம் கொஞ்சம் சாய்த்து உன்னிப்பாகக் கேட்டார். 'செவி சாய்க்கிறது' என்பதை நிஜமாகவே பண்ணினார் .
.
மஹா பக்தர்களான அப்பர் - ஸுந்தரர்களின் குரல் என்று தெரிந்து கொண்டார். உடனே அப்பாவுக்கு 'ரிலே', 'ரெகமன்டேஷன்' எல்லாம் பண்ணினார். அப்பாவும் உடனே வெள்ளம் வடியும்படிப் பண்ணி அவர்களைக் கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டார்.
.
அன்பிலாலந்துறையில் 'செவிசாய்த்த விநாயகர்' என்றே அந்தப் பிள்ளையார் விக்ரஹ ரூபத்தில் அழகாகக் காதைச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார்.
.
Chapter: தேவார கர்த்தர் இருவருக்கு அருள்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 27, 2022

Lord Vinayaka guided Sambandhar (short incident at thErezhundhur) (தெய்வத்தின் குரல்)

சம்பந்தர் குமாரஸ்வாமி அவதாரம்.

..
தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழ் கவிச் சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீச்வரர் என்றே
பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக் கவி பிறந்திருக்கிறார் அங்கே "ஞான ஸம்பந்த விநாயகர்" என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.
.
சம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.
.
ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது. ஒன்று ஈச்வரன் கோவில்.
இன்னொன்று பெருமாள் கோவில்.
.
அனன்யமான பக்தியை - அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனஸைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை - ஈச்வரனிடமே வைக்கவேண்டுமன்று தான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.
.
ரொம்பவும் ஸந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின ஸம்பந்தர் ஸ்வாமியிடம், "எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று
என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்ட வேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தர்சனமும் அந்த ஸந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
.
அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானஸம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின் போது இன்றைக்கும் அங்கேதான் ஆர்த்ரா தர்சன வைபவம் நடத்தப்படுகிறது.
.
Chapter: சம்பந்தருடன் சம்பந்தம் Volume 7
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 25, 2022

வானத்தில் திருவிழா

(Pic Credit: Bharath G. Babu)

அடிவானத்து அடுப்பு
பொன்னெனக் கனன்றெறிய;
அழகான வெண்முகிலும்
அரிசியெனத் திரண்டெழும்ப;
அந்தி சூரியனே வெல்லப்பாகாகி,
வானத்துப் பானையில்
வாழ்த்தொலிக்க பொங்கலிட்டு..
தென்றலது வேதம் முழங்க,
தேவதைகள் பூத்தூவ,
பூமகளும் பசும்பாய் விரித்து,
விண்ணகத்து தேவதைக்கு
விரைந்தமுதளிக்கும்
கவின்மிகு திருவிழா !
புரட்டாசி மகளுக்கு
புவிதன்னில் பெருவிழா!
எழிற்காட்சி கண்ட
என்னகமும் களிப்பேறி;
ஈடிலா இயற்கையின்
இதமான மடி சாய்ந்து;
இசைந்தே அசைந்தாடி
மதிமயக்கம் கண்டதே!

October 23, 2022

Mother Ganga, SriLakshmi and Deepavali (Excerpts From Deivathin Kural)

‘கங்கா ஸ்நானம்’ என்று ஏன் தீபாவளியன்று வைத்திருக்கிறது?

.
’இந்த நாளை பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள்.
.
இதிலே தனது பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.
.
இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம் எல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாள். அவள் நரகனுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் அல்லவா? Mother earth என்றே இங்கிலீஷில்கூடச் சொல்கிறார்களே! பசு, பூமி, வேதம் மூன்றையும் ஸகலருக்கும் தாயாராகவே சொல்லியிருக்கிறது.
.
இருந்தாலும் நரகனை நேரே தான் பெற்றதால் அவனிடம் அதிகப் பிரியம் வைத்து இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ என்றே பேர் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டாள். ஆனாலும் இப்போது பஞ்சாங்கத்தில்தான் அந்தப் பேர் போட்டிருக்கிறதே தவிர, நாம் தீபாவளி என்றே சொல்கிறோம். ‘தீபாவளி’ என்றால் தீப வரிசை. வடக்கேதான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாக்க் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்.
.
Chapter: ஏன் கங்கா ஸ்நானம்?
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

கீதை : தீபாவளியின் தம்பி (Excerpts from Deivathin Kural)

பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா
என்று ’பஜகோவிந்த’த்தில் சொல்கிறார்.
...
‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை – அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல், புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம். கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.
.
இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம், இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி ஸம்பந்தம் இருப்பதுதான்!
.
பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புஸ்தகங்களில் கீதை உச்சியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார்.
.
முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க ‘முராரி ஸமர்ச்சா’ என்றே சொல்கிறார். நரகாசுரனின் ஸகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரியானார்.
.
ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகத்தின் ஞாபகமும் யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. அதுவும் தவிர, தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.
.
ஆசார்யாள் சொல்கிற கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’::: (we will briefly read about it tommmorrow)
.
Chapter: கீதை : தீபாவளியின் தம்பி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 01, 2022

Where does Sri.Lakshmi Reside (Deivathin kural)

 



லஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து.

.
* ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு,
* மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம்,
* யானையின் மஸ்தகம் (தலை),
* வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு
* பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது.
.
ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை.
.
Chapter: கோமாதாவும் லக்ஷ்மியும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

அம்பாள் திருவடி மகிமை ( #Deivathin_kural Volume 6: )

Thiruvadi Mahimai




திருவடித் தூளி என்னவெல்லாம் அநுக்ரஹம் செய்கிறதென்று மூன்றாம் ச்லோகத்தில் சொல்கிறார். ப்ரபஞ்சத்திலுள்ள ஜீவர்களுக்கு அது எப்படியெல்லாம் அநுக்ரஹிக்கிறது; ப்ரபஞ்சத்திலிருந்தே விடுவித்தும் அநுக்ரஹிக்கிறது என்று சொல்கிறார்.
.
அவித்யா என்றால் அஞ்ஞானம். அது ஒரு பெரிய இருட்டு; ‘திமிரம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் இருட்டு. ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.
.
அவித்யை என்பது ஆத்மாவைத் தெரிந்து கொண்ட மஹான்களைத் தவிர பாக்கி அத்தனை பேரையுமே பிடித்திருப்பது. மஹா புத்திமான்கள், கெட்டிகாரர்களுங்கூட அவித்யையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். '
.
அவர்கள் அறிவு வறண்டு போயிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அதற்குள்ளே அம்பாளின் பாததூளி ஒரு தேனான ப்ரவாஹத்தை ஃபௌன்டனாகப் பீய்ச்சியடித்து பசுமையாகப் பண்ணுகிறது. தேனென்றால் அது ஒரு புஷ்பத்திலேதானே ஊறும்? இங்கே அப்படிப்பட்ட புஷ்பம் எது? எதுவென்றால், 'ஜீவ ஓட்டமுள்ள அறிவென்கிற பூங்கொத்து'. சைதன்யம் என்பது சித் என்கிற பரம ஞானந்தான். அதுவே மந்த புத்திகாரர்களுக்கு புத்திப் பிரகாசத்தை தேனாகப் பாய்ச்சுகிற பூங்கொத்தாக இருக்கிறது.
.
சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதை எல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். நாம் என்ன இஷ்டப்பட்டாலும் அதை உண்டாக்கிக் கொடுத்துவிடும்.
.
இப்படி மூன்று இருக்கின்றன– காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று.
..
சிந்தாமணி அசேதனமான ஜட பதார்த்தத்தைச் சேர்ந்தது – கல்லு, மண்ணு மாதிரியான பதார்த்த வகை.
.
கல்பக வ்ருக்ஷம் சேதனமும் ஜடமும் சேர்ந்த தாவர வகை. தாவரங்கள் ஜலத்தைக் குடிக்கிறது, வேர் கிளை என்று வளர்கிறது, இனவிருத்தி பண்ணிக் கொள்கிறது ஆகிய அம்சங்களால் சேதன ஜாதியில் வருகின்றன. ஆனால் அவை இருந்த இடத்தை விட்டு நடக்க முடியாது;
காமதேநு பூர்ணமான சேதன ஜீவன். ரூபத்தில் மிருகமான பசுவாயிருப்பது. அறிவிலோ மநுஷ்யர்களுக்கும் மேலே திவ்யமான நிலையிலிருப்பது. இப்படி, இஷ்டத்தைக் கொடுப்பதில் மூன்று தினுஸான ஸ்ருஷ்டியினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று. Animal Kingdom , Vegetable Kingdom , Mineral Kingdom என்ற மூன்றில் ஒவ்வொன்றிலும் ஸகல இஷ்ட பூர்த்தி பண்ணுவதாகக் காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று ஒவ்வொன்று இருக்கின்றன.
.
அதில் அம்பாளின் பாததூளி தரித்ரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது.
இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயே சிந்தாமணிகளைக் கோத்துச் செய்த ஜப மாலையையே உருட்டிக் கொண்டு சில மஹா பாக்யசாலிகள் அம்பாள் மந்திரத்தை ஜபிக்கிறார்களென்று வருகிறது: ஒரு சிந்தாமணியே கேட்டதையெல்லாம் கொடுத்து விடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ பங்கு [மடங்கு] அம்பாள் பாததூளி கொடுக்குமாதலால் பல சிந்தாமணிகளைக் கோத்த மாலையாக அதைச் சொல்லியிருக்கிறார்.
.
கல்பக வ்ருக்ஷம் பற்றியும் சொல்லியிருக்கிறார். அதுவும் பாத மஹிமையைச் சொல்வதுதான். கல்பகம் மாதிரியே இன்னும் நாலு தேவலோக விருக்ஷங்களும் கேட்டதையெல்லாம் கொடுப்பவையாதலால் எல்லாவற்றையும் சேர்த்து ‘தேவலோக தருக்கள்’ என்கிறார்.
.
அந்த நாலு என்னவென்றால்
பாரிஜாதம் ஒன்று.
மந்தாரம் இன்னொன்று.
ஸந்தானம்,
ஹரிசந்தனம் என்பவை பாக்கி இரண்டு [தெய்விகமான மர வகைகள்]:
.
என்ன சொல்கிறாரென்றால், கல்பக விருக்ஷம் முதலான ஐந்தும் அதன் கீழே வந்து நிற்பவர்களுக்கு அந்த ஸமயத்தில் மாத்திரம் தங்கள் கிளை நுனியிலுள்ள துளிர்கள் மூலம் இஷ்ட பூர்த்தி தருகின்றன. தேவலோகவாஸிகள் மாத்திரந்தான் அப்படி அந்த விருக்ஷங்களுக்குக் கீழே போய் நிற்க முடியும். ஆனால் ஸர்வ ஜனங்களுக்குமே, உன் பாதங்கள் ஸதாகாலமும் இஷ்ட பூர்த்தி தருகின்றன” — என்று சொல்லி, இன்னும் சில சமத்காரங்களும் பண்ணியிருக்கிறார்.
.
இப்படியாக, அம்பாளின் பாததூளி அவித்யை இருட்டுக்கு ஸூர்யோதயமாயும், ஜடத் தன்மை போக்கும் சைதன்யத் தேனாகவும், தரித்ரம் போக்கும் சிந்தாமணியாகவும் இருக்கிறது.
.
இன்னும் என்ன பண்ணுகிறது அந்தப் பாததூளி? நமக்கு முக்யமாகத் தெரிவது அறிவாளியாவதும், ஐச்வர்யவானாவதுந்தான். ஆனால் ஆசார்யாளுக்கு முக்யம் நம்முடைய அவித்யை போய் நாம் ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவதுதான்.
.
‘பிறவிப் பெருங்கடல்‘ என்று திருவள்ளுவர் சொல்கிறாரே, அதுதான் ‘ஜன்ம ஜலதி’. ‘பொய்ம் மாயப் பெருங்கடல்‘ என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிற ஸம்ஸார ஸாகரமும் அதுதான். அதிலே நாம் அப்படியே முழுகிப் போயிருக்கிறோம். ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிப் போனவர்களுக்கு அம்பாளுடைய பாததூளி என்னவாக இருக்கிறது என்றால், – ”முரரிபு வராஹஸ்ய தம்ஷ்ட்ரா பவதி”: வராஹமாக வந்த மஹாவிஷ்ணுவின் கோரைப் பல்லாக இருக்கிறது. ‘தம்ஷ்ட்ரம்’ என்றால் கோரைப் பல்.
.
வராஹாவதாரத்தின் கோரைப் பல்லாக இருக்கிறதென்று சொன்னால் என்ன அர்த்தம்? சம்ஸார ஸாகரத்தில் முழுகியுள்ள நம்மையெல்லாம் அதிலிருந்து வெளியிலே கொண்டுவந்து தூக்கி நிறுத்தும் கோரைப் பல்லாக அம்பாளின் சரண பாம்ஸு [பாததூளி] இருக்கிறது:
.
Chapter: இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

September 28, 2022

தேவை ஒரு துளசிச் செடி





சமீர்  வருவதாகச் சொன்ன ஐந்து மணியைத் தாண்டி நாற்பத்தியெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தன .  கூடவே சஞ்ஜயைக் கூட்டி வருவதாக சொல்லியிருந்தானே, அதனால் நேரமாகிறதோ!

.

நேற்றையிலிருந்தே நெஞ்சத்தை உழப்பிக் கொண்டிருந்த விஷயம். இது கனவா நிஜமா? நூலைப் பிடித்து, தொடரலாமா வேண்டாமா? ஒரே மன உளைச்சல்.   இன்றைய தேதியைச் சேர்த்தாலும், பதினெட்டு வயது நிரம்பாதவள் ரசிகா. தேவிகா அப்படி அல்ல. அவளை விட இரண்டு

வருடம் பெரியவள்.

.

"தேவி அவங்க வர இவ்வளவு நேரம் ஆகுதே, நாம கிளம்புவமா?" என்று கிசுகிசுத்தாள். வங்கிக்கு சென்றிருந்த அம்மா வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம்  ஆகலாம். அதற்குள் இவர்கள் திட்டத்தின் முக்கியப் பகுதியை நெருங்க வேண்டும்.

..

யார் இவர்கள்?

தேவிகா

ரசிகா

சமீர்

சஞ்ஜய் என்ற நால்வர் தான்.

..

இருவரும் உறிஞ்சிக் குடிக்கும் டீயின் சுவை கூட மனதில் பதியவில்லை. குறுஞ்செய்தி சிணுங்கியது.

.

"நாங்கள் பூங்காவின் அருகே வந்துவிட்டோம். உடனே புறப்பட்டு வரவும். சர்வ ஜாக்கிரதை!"

 

கிடைத்ததை பையில் திணித்துக் கொண்டு அவசரமாக  ஓடினார்கள்.  'இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாலாற்றங்கரையருகே இருக்க வேணும்.' சமீரும் சஞ்சயும் படபடத்தனர். மோட்டர் பைக் பறந்தது. இருபதே நிமிடத்தில் ஆற்றங்கரையை நால்வரும் நெருங்கினர்.

.

சஞ்சய் தன் கைப்பையைத் திறந்தான். இரண்டு உருட்டுக் கட்டைகள், ஒரு சைக்கிள் செயின் உட்பட ஐந்தாறு தற்காப்பு கருவிகள்.  ‘எப்படி என் திறமை’ என்று கண்களாலேயே பெருமை பேசினான்.

.

"நாம எங்க போக போறோன்னு தெரியுமில்ல!  இதெல்லாம் எதுக்குடா?"

.

"உனக்குத் தெரியாது. எல்லாம் தேவை தான். முதலில் எல்லாரும் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க" . ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  அவர்கள் எடுத்த முடிவு தவறானதா என்ற குழப்பம்.   பயமாக இருந்தது. இனம்புரியாதொரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஓடியது.   

.

குறிப்பிட்ட இந்த டகுத்துறைக்கு பொதுமக்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. 

.

"சமீர் அங்க பாரு, சொன்ன மாதிரியே படகு தயாரா இருக்கு"  படகொன்று அவர்களை நெருங்கவும்,  திடீர் சோதனை உத்தரவின் பேரில் படகுத்துறைக்கு வந்திருந்த முத்துகுமார்  கண்களில் இவர்கள் மாட்டவும் சரியாக இருந்தது.  யார் இவங்க! முதலில் இந்தத்துறையில் எப்படி படகு செலுத்தபடலாம்? என்ற குழப்பத்துடன் சிலர் பார்த்திருக்க....

.

மலரைப் போல மெல்ல மிதந்து வந்த படகில் நால்வரும் கால்பதித்து ஏறினர்.   முத்துகுமார் அவசரமாக தளக் புளக்கென்று தண்ணீரில் தள்ளாடி படகை  நெருங்கத் துவங்கினார்.    சமீரும் சஞ்சயும் குபீரென குதித்து அவரை பின்னாலிருந்து வளைத்து   தடுக்க முற்பட்டனர். 

.

"கொஞ்சம் நான் சொல்றத நிதானிச்சு கேளுங்க" ....  என்று கூவிக் கொண்டே படகை நோக்கி வேகமாக நீந்தினார்.  அவர் நெருங்குவதற்குள்,  மெல்லமாக சுற்ற ஆரம்பித்த படகு,  கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமெடுத்தது. அவரது இருகைகளும் படகை பற்றிவிட்ட சமயம்,  ரசிகா கட்டையை ஓங்கினாள்.  நெற்றியில் ஒரே அடி.      தேவிகா கதற,   பின் தொடர்ந்த   சஞ்சய், இன்ஸ்பெக்டர் கால்களை இழுக்க, அவர் நிலை தடுமாறி  குப்புற விழுந்தார். 

.

அவரை அப்புறமாகத் தள்ளி, மின்னல் வேகத்தில் சமீரும் சஞ்சயும் படகில் ஏறியதும்,  காற்றை விட வேகமாக  மிதந்த படகு, சடுதியில் தொலை தூர தொடுவானத்தை எட்டி, புள்ளியாய் மறைவதை  பார்த்துக் கொண்டே முழுவதுமாக மயங்கினார் முத்துகுமார்.  அல்லது மயங்கியது போல நடித்தார். தெளிந்து எழுந்த போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் தொடர்பின்றி இருந்தது.

.

 

“எப்படி தாக்கப்பட்டீங்க?

‘நினைவில்லை... ‘

‘யார் தாக்கினாங்க?

“யாருமில்லையே! “

“பொதுமக்கள் புழங்குவதற்கு தடைசெய்யப்பட்ட படகுத்துறையில் படகு இருக்குறதா சத்தம் போட்டாங்களே! “

“அப்படியா?

....

அவர் அருகில் இருந்தவர்களை பேட்டி கண்டனர்.

“நீங்க படகை பார்த்தீங்களா?

“அப்படி பார்த்ததா எங்களுக்கு நினைவில்லை சார்”.

.

"மர்மமான முறையில் தாக்கபட்ட முத்துகுமார்" - அலறியது மீடியா.

 

***

 

சுழன்று  சுற்றிய படகு சீர்பட்டது. நெஞ்சம் படபடத்து, தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தாள் தேவிகா. ரசிகாவை விட தேவிகாவுக்கு  எதிலும் தயக்கமும் பயமும் அதிகம். 

.

சென்ற வாரத்தின் வியாழக்கிழமை, சாதாரணமாகத் துவங்கி, அசாதாரணமாக முடிந்தது.

.

"கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே"   என்று தொலைக்காட்சியில் ஆண்டாள் எழுப்பிக் கொண்டிருந்ததையும் மீறி ரசிகா தூங்கிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்திருந்த தேவிகா பக்கத்து மேஜையில் ஒப்பனை செய்து கொண்டிருந்த போது முணுக் முணுக்கென்று சிணுங்கியது செல்ஃபோன். சமீர் கூப்பிட்டிருந்தான்.

.

"அவசர சந்திப்பு. இன்னும் ஒரு மணி  நேரத்தில் தெருகூடும் இடத்திலுள்ள "சுதந்திரப் பூங்கா"வில் சந்திக்கவும். இன்றைய தினசரி பத்திரிகை எடுத்துவா" என்னவாக இருக்கும் என்று குழம்பி, ரசிகாவையும் உலுக்கினாள். இவர்களின் சந்திப்புகள் பற்றி பெரிய அளவில் பெற்றோர்களுக்கு தெரியாது. ஏதோ சாக்குபோக்கு உளறிவிட்டு, இருவரும் பூங்கா விரைந்தனர்.

 

.

'இதப் பாரு.'  என்றான் சஞ்சய். அவனுடன் சமீரும் வந்திருந்தான். அவர்கள்  சுட்டிக்காட்டியது  அன்றைய தினசரி பத்திரிகையின் ஒரு சின்ன விளம்பரத்தை.

.

"உடன் விரைந்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு. தேவை ஒரு துளசிச் செடி" பெயர் விலாசம், தொடர்பு எண், முகவரி எதுவுமே மருந்துக்கும் குறிப்பிடப் படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அதை விட பன்மடங்கு ஆச்சரியம் அவசரமாக தங்கள் பிரதியை பிரித்தபோது காத்திருந்தது...... அப்படிப்பட்ட விளம்பரம் அவர்களது பிரதியில் தென்படவில்லை. ரசிகாவுக்கு

அட்ரினலைன் ஜிவ்வென்று ஏறியது. 'என்னடா இது. யார் இவங்க?  ஒண்ணுமே புரியலையே.  உன் கைல இருக்குற பிரதில மட்டும் இருக்குதே! '

.

அடுத்த நாள் வெள்ளியன்று வந்த தினசரியை அவசரமாக பிரித்து அங்குலம் அங்குலமாக படித்தனர். "பாலாற்றங்கரையின் படகுத்துறைக்கு அடுத்த வியாழன் விரைந்து வரவும். துளசிச் செடியை மறக்காதே!" - இப்போது  இவர்கள் தினசரியில் மட்டும் பளிச்சிட்ட செய்தி, சமீர் பிரதியிலும் சஞ்சய் வீட்டு தினசரியிலும் காணப்படவில்லை.  தேவிகா பயந்தாள். 

.

நால்வர் கூடியும், கூடாமல் குறுஞ்செய்தி மூலமாகவும், நாற்பது முறை அலசினார்கள். ஏதோ மந்திரவாதி விரிக்கும் வலை என்று அறுதியிட்டு  தீர்மானத்து, ''பின் தொடர வேண்டாம்'' என்று முதலில் முடிவெடுத்து, செய்தியைக் கடாசினாலும்... அடுத்தடுத்து ரசிகா மற்றும் சமீரின் ஆர்வக்கோளாறுக்கு இணங்கி, நால்வருமே இச்செய்தியின் ஆழம் வரை சென்றுவர முடிவெடுத்தனர்.

.

***

 

காற்றைக் கிழித்து புள்ளியாய் மறைவதாகத் தோன்றிய படகு உள்ளபடி, இன்னும் அதிக வேகமெடுத்தது. தேவிகாவுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.  அதே வினாடியில் படகு ஒரு விண்கலமாக  விரிந்து,  நாலாபுறமும் மூடிக்கொண்டு, விண்ணில் உயர்ந்தது. 

.

"கொரோனா கவசம் போல இது என்னடி"  - என்றாள். அவள் குரல் பத்து விதமாக எதிரொலித்தது. முகத்திற்கு  நேரே சுவாசக்குழாய் தானே இணைந்து கொண்டது. இத்தனையும்  கண்சிமிட்டும் நேரத்தில் அதிரடியாக நடந்தது.

.

குறிப்பிட்டு சொல்ல முடியாத  நேரத்திற்குப்  பிறகு சின்ன குலுக்கல் கூட இல்லாமல் மெத்தென்ற வெண்ணிற மண்ணில் இறங்கிய போது அது வேறு ஒரு பிரபஞ்சம் என்று யாரும் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்தது.

.

மூச்சுக்குழாய் அகன்றது. அட! சுவாசிக்க முடிகிறதே. பூமியைப் போலே பிராணவாயு எங்கும்  நிறைந்திருந்தது. பூமியை விட அழகாக, பச்சை, நீலம் சிவப்பு என்று வண்ண வண்ண மணல் மேடுகள், விவரிக்க முடியாத வண்ணத்தில் தாவரங்கள், பூக்கள். நால்வரும் திறந்த வாய் மூடவில்லை.

.

பெரிய பறவை போலொன்று பறந்து வந்தது. இல்லை. இல்லவே இல்லை. அருகே பறந்து வந்த பறவையைப் போல ஒரு நங்கையைக் கண்டு  பேச்சிழந்தனர்.

.

"கேலக்ஸி-16க்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் பாலவீதிக்கு மிக அருகில் இருக்கும் கேலக்ஸி எங்களது. என் பெயர் சுவஸ்திகா" என்றது.

.

'உங்களால் எப்படி எங்கள் மொழியில் கதைக்க முடிகிறது.'

.

“நான் எனது மொழியில் பேசினால் உங்களது மொழியில் கேட்கச் செய்யும் இணைப்பு கருவி எங்களிடம் இருக்கிறது” என்றது. தவறு என்றாள் சுவஸ்திகா.

.

சுவஸ்திகாவின் வண்ணச் சிறகைக் கண்டு கிறங்கிய சமீர் மெல்ல மீண்டு "உங்களால பறக்க முடியுதே"  என்று வழிந்தான்.

.

“எங்களால் பஞ்சபூதங்களினால் ஆகப்பட்ட எதனுள்ளும் பயணிக்க முடியும்” என்றாள். 

.

“உங்க உலகம் அற்புதமாகவும் விந்தையாகவும் இருக்கு.... வண்ணப் பூக்களும், வகைவகை பழங்களும்,  வண்ண நீர்நிலைகளும்... “

.

“நீர்நிலைகள்!!!!  உங்கள் துளசிச் செடியை அதற்குத்தான் விரும்பியிருந்தோம். எங்களது நீர்நிலைகளின் பசுந்தன்மை குறைந்து நீலமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் தாவரங்கள் அதிலுள்ள அமிலத்தன்மையை அழித்து, புத்துணர்வூட்டுவனவாக இருக்கும். நீர் நிலைகளின் தன்மை மாசு ஏற்பட்டதால் எங்கள் தேவதைகள் வலு குன்றி காணப்படுகிறார்கள். எங்களது செயலாற்றும் திறன் குறைகிறது.,....

.

“செயலாற்றுவதா?  அப்படியென்றால் உங்க  பணி   என்ன?

.

பெரிதாக நகைத்தாள். அவள் பற்கள் வசீகரமாக பளிச்சிட்டது. “உங்களது பூவுலகின் மானிடர்களுக்கு இடர் ஏற்படாமல் காக்கும் தேவதைகள் நாங்கள்!”

.

இமைக்க மறந்தனர் நால்வரும். சஞ்ஜய் முதலில் வாய் திறந்தான். "அப்டீன்னா  நீங்க தேவதையா?"

.

"உங்களைப் பாதுகாக்கும் தேவதைகள், தேவர்கள், ஏஞ்சல்ஸ், எப்படி வேண்டுமென்றாலும் விளிக்கலாம்"

.

“தேவலோகத்தில் பாரிஜாத மலரை எங்கள் உலகுக்கு கொணர்ந்த பாமாதேவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பேற்பட்ட தேவலோகத்தில்  துளசிச்செடி இல்லையா!” களுக்கென்று சிரித்தாள் தேவிகா.

.

“அதன் மூலப்பிரதியான "ப்ரோடோடைப்" தொலைந்து விட்டது. பூலோகத்திலிருந்து  வரவழைத்து இங்கு மாசு களைந்தபின், அதன் பிரதிகளை இங்கு பரவ விடுவோம்.... “  என்றாள்.

.

தன் பையிலிருந்து பத்து துளசிச் செடிகளை எடுத்த ரசிகா புன்னகைத்தாள். நால்வருக்கும் சுவஸ்திகாவை மிகவும் பிடித்துவிட்டது.

.

அடுத்த சில வினாடிகளில் விதவிதமான வண்ண அலங்காரத்துடன், பல தேவதைகள் கூடி, துளசிச் செடிகளை சில மூல நீர்நிலைகளில் முக்கி எடுத்தனர்.  சற்று நேரத்தில் நீர்நிலைகள் இளம் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.  துளசிச் செடிகளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிய சுவஸ்திகாவிடம்....

.

"நீங்க தான் இங்கு தலைமை தேவதையா? இந்திரன் மாதிரி இந்திராணி" என்றான் சமீர்.

.

"என் பேயர் சுவஸ்திகா. மேலும் தேவ ரகசியங்களை வெளியிட எங்களுக்கு உரிமையில்லை"...

.

“அதிருக்கட்டும்...இவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி உங்க பிரபஞ்சத்திற்கு வந்த எங்களுக்கு என்ன பயன்? ஒரு காவலதிகாரியை வேறு  தாக்கியிருக்கோம்....அப்பா அம்மா தேடுனா என்னத்த ....ஆஹா! நாங்கள் திரும்பி போனா பல யுகம் முடிஞ்சிருக்குமோ! இந்த மாதிரி கதை எத்தன படிச்சிருக்கோம்! "

.

“அதைப்பற்றிய கவலை வேண்டாம்.  உங்களது நேரத்திற்கே  உங்களை திரும்ப செலுத்தும் ஆற்றம் எமக்குண்டு.  உங்களை படகுத் துறையில் கண்ட நினைவு அங்கிருந்த பலருக்கும் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. மேலும்... அவர் நீங்கள் நினைப்பது போல அங்கிருந்தவர் காவலாளி இல்லை ....அவர்...அதிருக்கட்டும்... நீங்கள் நால்வரும் துப்பறியும் நண்பர்கள் தானே"

.

அசடு வழிய இளித்தனர்... "ஆமா... "ஃபேமஸ் ஃபைவ்" , சீக்ரெட் செவன்"  கேள்விப்பட்டிருப்பீங்களே...அதைப் போல எங்களது "பெண்டாஸ்டிக் ஃபோர்".  எங்க மொழியில "நம்பிக்கை நால்வர்"  பெயர் சூட்டியிருக்கோம். இதைத் துப்பறியும் ஸ்தாபனமாக்குற எண்ணம் உண்டு.    - தெளிவாக விளக்கினாள் தேவிகா.

.

“அது தான் எங்களது பரிசு, நான் ஒரு  களிம்பு தருகிறேன். அதைப் பூசிக்கொண்டால்  சில மணி நேரங்களுக்கு உங்களை யாராலும் பார்க்க முடியாது.  நாளை உங்கள் பூமியில், தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவரை, தீவிரவாதியினர் தாக்க முற்படுவார்கள். நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரே முறை தான் பயன்படும். “

.

விண்கலம்  வெண்ணிற மண்ணில் ஊன்றி அவர்களை ஏற்றுக் கொண்டது. அவர்கள் விடைபெற்றுக் கொண்டதை தூரத்தில் ஒரு முகம் கவனித்துக் கொண்டிருந்த்து.  அந்த முகத்தை நால்வருமே வனிக்கவில்லை.

.

***

கனவு போல் முடிந்தது. எப்படி சென்றனரோ, அதே வழியில், சுழன்று சுற்றி நின்ற விண்கலம், படகாக மிதந்து அவர்களை கரை சேர்த்தது. வீட்டுக்கு வந்த தேவிகா சகோதரிகளுக்கு பெரும் ஆச்சரியம்.

.

"என்னடி லைப்ரரிக்கு போய் வர மூணு மணி நேரமா!" - என்னது மொத்தம் மூணு மணி நேரமா? ரசிகா கண்ணடித்தாள்.

 

**

மறுநாள்  அதிசுறுசுறுப்பாக விடிந்தது.  அதிகாரி வீட்டை நெருங்க தடையேதுமில்லை. களிம்பைப் பூசிக் கொண்டதும் கடவுளாகி விட்டது போலத் தோன்றியது.  "மிஸ்டர் இந்தியா படத்துல அனில்கபூர் இப்படித்தான்...." இழுத்தான் சஞ்சய். "ஷ்ஷ்...அங்க பாருங்க அவங்க நடவெடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கு. கண்டிப்பா அவனுங்க தான்."  மானாவாரியாக படமும், காணொளியும் பதிவாகிக் கொண்டிருந்தது. நால்வரையும் கண்களால் கண்டு  யாரென்று கேட்க  ஆளில்லை.

.

அடுத்த மாதங்களுக்கு "நம்பிக்கை நால்வர்" பற்றிய செய்தி, வைரலாகியது. பெரிய விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இவர்களுக்கு எஸ்காட்டாக எப்போதும் "முத்துகுமார்" . பெற்றோருக்கும் மற்றோருக்கும் இவர்கள் திறமை திண்ணமாக வெளிப்படத் துவங்கியது. சின்னதும் பெருசுமாக பல சில்லறை துப்பறியும் கேசுகள் குவியத்  துவங்கின.  ஒவ்வொரு கேசிலும் இவர்களுக்குத் துணையாக ஆங்காங்கே முத்துகுமாரும் நுழைந்து விடுவதால் ஏறக்குறைய இவர்கள் நண்பராகி விட்டார்.

.

***

வேலூர் சிறையில்...

.

"எப்படிடா? அவ்வளவு சாக்ரதையா திட்டம் போட்டிருந்தமே. எங்கியிருந்து இதையெல்லாம் படம் புடிச்சுதுங்க!" –

.

"அதை விடு.... யாரோ முத்துக்குமாராம் அவரை மர்மமா தாக்கினதா வேற குற்றம் சுமத்திருக்காங்க, யாரவன்? என்னடா நடக்குது!"-யோசித்து மண்டை வெடித்தது.

 

***

“எல்லாம் என்னோட புத்திசாலித்தனம் தான். எப்படி கரெக்ட்டா துளசிச் செடியை எடுத்து வெச்சிருந்தேன் பாத்தீங்களா!”- ரசிகா

.

சமீர் இடியிடியெனச் சிரித்தான். “அந்த பேஸ்ட் மட்டும் இல்லையின்னு வையி.... நம்ம கதை கந்தல்....எல்லாம் அந்த சுவஸ்திகா....அந்த தேவதை..”.அவன் கண்களில் சுவர்கம் தெரிந்தது... 'சே! நான் அங்கயே செட்டில் ஆகியிருக்கலாமோ!'

.

"போதும் ரொம்ப பேசாத ... மூடு'  என்றாள் தேவிகா.

 

.

முணுக்முணுக் என்றது செல்ஃபோன்  இளநீலத்தில் மிளிர்ந்து,  நால்வர் தொலைப்பேசியும் "வணக்கம்" என்று கிசுகிசுத்தது....

.

'யாராவது விளையாடுறாங்களா இருக்கும். மே பீ அ ப்ராங்க் '  என்றாள் தேவிகா. ரசிகாவின் அட்ரினலைன் ஜீவ்வென்றி ஏறி.....இல்லை என்றது, ஏனெனில்  நால்வர் செல்ஃபோனிலும் அடுத்தடுத்த செய்திகள் குரல்வழி செய்திகள் ஒலித்த வண்ணமிருந்தன

.

"நம்பிக்கை நால்வர்...நம்பிக்கை நால்வர்... நம்பிக்கை நால்வர்..... வணக்கம். தொடர்பு கிரகம் "வீனஸ்டோ".  உங்களது பாலவீதியிலேயே உள்ளது.  உங்களது  இணைப்பு உடனே தேவை"......... திரையில் தெரிந்த  சுவஸ்திகாவின் முகத்துக்குப் பின், மங்கலாகத் தென்பட்ட தெளிவற்ற முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே!  

.

***

அந்த உருவம் சின்னதொரு சாக்லேட் அளவு காந்தக் கருவியை இயக்கியது...

.

"வீனஸ்டோ திட்டத்துக்கு அவர்கள் தயார் - நானும்"  என்ற செய்தியை சுவஸ்திகாவுக்கு அனுப்பியது. மோட்டார் பைக்கை விருக்கென்று செலுத்தி  ரோட்டோரக் கடையருகே நிறுத்தி "ரெண்டு இட்லி குடுப்பா"  என்றது.

.

"இன்ஸ்பெக்டருக்கு சார் சூடா ரெண்டு செட்டு இட்லி" என்ற கடைப் பையனை பார்த்து முத்துகுமார் மெல்லப் புன்னகைத்தார்.

 

***

.

“முகுந்த் இருக்காருங்களா!”

..

“சார் நான் ஸ்ரீநாத்.”

..

“ஆகிடுச்சு சார். இன்னும் பத்து நிமிடத்தில் அனுப்பிவிடுகிறேன். ...”

..

“கண்டிப்பாக. பத்து அல்லது பதினைந்து பகுதிகள் வரும்னு நினைக்கறேன் சார்.”

.

சிறுவர்களுக்கான தொடர் Famous Five சாயலில் இதை மினி தொடர்களாக தொகுக்க திட்டமிட்டு..... (இவர்கள் பயணம் தொடருமோ?).... என்ற கேள்வியுடன்,  கதைக்கான sequelஐக்  குறிப்பிட்டு,  கணினியில் சேமித்தான் ஸ்ரீநாத்.   நாளையே "வீனஸ்டோ" எழுதத் துவங்க வேண்டும். 

.

சரியாக எட்டு நிமிடங்களில் பதிப்பாசிரியர் முகுந்த்  மின்னஞ்சலுக்கு "துளசிச் செடி"  வந்து சேர்ந்தது. 

 

(முற்றும்)

 

ShakthiPrabha


(Story was written for "Short story writing contest for given pic)