February 28, 2020

நானும் கூட

Image result for krishna swing painting


அஷ்டபத்தினி கொண்டாயோ
அச்சுதா! ஆண்டவனே
பதினாறாயிரம் பெண்டிருடன்
பலகோடியுந்தான் சேரட்டுமே!
இன்னுமொன்றைக் கூட்டிவிடு..
மாதவா மாலவனே,
மங்கையெனை மார்பில்வாங்கி- நல்
மங்கல நாண்பூட்டி - எழில்
மலர்மாலை தனைச்சூட்டி
மாதெனையும் சேர்ததுக்கட்டு!




மனதில் என்ன நினைவுகளோ




செவ்வாய் சிறுத்திருக்க
வில்லென வரைந்த புருவங்களின் மத்தியில்
வருத்தத்தின் சுருக்கங்கள்..
காலைச் சிற்றுண்டியில்
தூக்கலாக சிதறியிருந்த உப்புக்கல்,
கணித வகுப்பில் கண்டெடுத்த முட்டை,
கடிந்துகொண்ட முட்கள்,
கேலிக்குள்ளாக்கிய எகத்தாளம்,
எது தான் காரணம்!? - என
குழம்பிய பொழுதுகளை நீட்டாமல்
சட்டென பூமலர்ந்து
புருவங்கள் சீராகி
கோவைச் செவ்வாய்
காதுவரை நாண் தொடுத்தது.
முகக் கவிதைகள்
அகத்தை எப்போதும் விளக்கிவிடுவதில்லை!


February 22, 2020

புரிந்ததும் புரியாததும்




பொழுது போகிறதா?
அய்யோ பாவம்!
மெல்லப் பழகிவிடும்...
எப்படி சமாளிக்கிறாய்!
வீட்டில் முடங்குவது பெருங்கடினம்...
நடைபழகு; புத்தகத்தைப் பிரி.
ஏகாந்தமே பேரின்பம்..
விருப்ப ஓய்வின்
வடுக்கள் ஆறும் வரை
தொடரும் கரிசனம்
*
வீட்டில் பாவாமல்
வீதியிலே சுற்றிய கால்களுக்கு
பொன்விலங்கிட்டு
விருப்பங்களை விலக்கி
திருமணச் சுவற்றுக்குள்
உலகத்தைச் சுருக்கி
இல்லறதர்மம் காத்த என்னிடம்
இச்சொற்களை
யாரும் உதிர்த்ததில்லை.
-ShakthiPrabha

February 21, 2020

சுந்தரமூர்த்தி நாயனார் (இறுதிப்பகுதி)


.Image result for சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை
பித்தா பிறைசூடி என்று அன்பொழுக நின்ற சுந்தரர், அதன் பிறகு பெம்மானை பாடுவதே பெரும் பணியாக்கிக் கொண்டார். பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் பதிகம் பாடுவதுமே அவர் பிறவிப் பயனாகிப் போனது. இறைவன் மேல் "தோழமை" பூண்டு அதன் பொருட்டு வரும் பக்தியில் நிறைந்திருந்தார். தோழனை என்னவெல்லாம் உரிமையோடு பேசலாம், கேட்கலாம் ஏசலாம், அன்பினால் கட்டுண்டிருக்கலாம் என்று நாம் உணர்ந்திருக்கிறோமோ அது அத்தனையும் சிவனாரிடத்தில் இவர் கொண்டிருந்தார்.
.
நாவுக்கரசர் வழிபட்ட தலமான திருவதிகையியை தான் மிதிக்க கூனிக்குறுகி ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மடத்தில் படுத்துறங்கும் போது, இறைவனே பிராமணன் வடிவில் மடத்தில் நுழைந்து, அவரது திருவடிகளை சிரசின் மீது வைத்ததாக வரலாறு. வந்தது இறைவனே என்றுணர்தவர் "தம்மானை அறியாத சாதியாருளரே" என்று பாடினார்.
.
காதலுக்கு இறைவனையா தூது அனுப்பவது? தூய்மை இருந்தால் எதுவும் சாத்தியமே என்று உணர்த்துகிறது இறைவன் இவருக்காக பரவை நாச்சியாரிடமும் சங்கிலி நாச்சியாரிடமும் தூது போன நிகழ்வு. இருவரும் உமாதேவியாரின் தோழியராக இருக்கும் சமயத்தில் இறையனாரின் தொண்டரான ஆலாலசுந்தரர் இருவரின் அழகில் சற்றே மெய்மறக்க, தோழியர் இருவருமே சுந்தரரை கண்டு நாணி நின்றனர். அதன் பொருட்டு மூவருக்கும் பிறவியாகியதாக வரலாறு.
.
திருவாரூரில் வாழ் அடியவர்கெல்லாம் தம் அடியவன் சுந்தரன் வருகிறான் என்று உணர்த்தியதும், பின் அசரீரியாக "உமக்குத் தோழரானோம்" என்றுரைத்தபடியால் சுந்தரரை "தம்பிரான்தோழர்" என்று குறிப்பிடுவதுண்டு.
.
வேளாளராகிய குண்டையூர்கிழார் என்பவர் அனுதினமும் நெல்மணிகளை சுந்தரருக்கு சமர்பித்து வந்தார். பஞ்சம் வந்த போது நெல் வளம் சுருங்கி அனுப்ப இயலாமல் போனதற்காக வருதும் போது ஈசனே சுந்தரருக்கு நெல்மணிகளை தரும் பொருட்டு குண்டையூர் முழுவதிலும் நிரப்பி அருளினார். அந்த அதிசயத்தை கண்ட சுந்தரனார் ""நீள நினைந் தடியே" என்று பதிகம் பாடி துதிக்க அன்றிரவே திருவாரூர் முழுதும் நெல்மணிகளை நிறைக்கும் மனம் கொண்டு அசரீரியாக அருளினார்.
.
சிறந்த தோழமை பூண்ட சேரமான் பெருமான் பிரிவின் பொழுது பரிசளித்த பொன்னும் மணியும் ரத்தினங்களையும், சிவனார், தம்மையன்றி வேறு எவரும் சுந்தரருக்கு இத்தனை சொத்துக்கள் அளிக்க கூடாது என்று கருதினாரோ என்னவோ, வேடுவராக பூத கணங்களை அனுப்பி, பொக்கிஷங்களை களவாடச் செய்தார். வருந்திய சுந்தரர், "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்று பதிகம் பாடி, பொருளை திரும்ப மீட்டார்.
.
கொங்கதேசத்தில் திருப்புக்கொளியூரில் பலகாலம் முன் முதலையின் பசிக்கு மகனை இழந்து வாடும் தம்பதியருக்கு, அருளியவராய் இழந்த நீர்கரையில் சென்று "உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா" என்ற பதிகம் பாட முதலை வாயினின்று என்றோ மரணித்த மழலை, இழந்த பருவங்களின் வளர்ச்சியுடன் பாலகனாக மீண்டது கண்டு வானில் தேவரும் அமரரும் பூமாரிப் பொழிந்தனர்.
.
பலகாலம் சிவனையன்றி வெறோன்றும் அறியாது சிறப்புற வாழ்ந்து, சிவன் சன்னிதானத்தில் இப்புவி வாழ்வு போதுமென்று கசிந்துருகி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகம் பாடினார். சுந்தரன் இங்கு வருகிறான் என்று இறையனார் வெள்ளையானையை அனுப்பி, சுந்தரரை அழைத்து வரச்செய்தார். இதையறிந்த அவரது உற்ற தோழரான சேரமான் பெருமாள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, விரைந்து குதிரையில் ஏறி ஆகாயத்தில் விரையும் வெள்ளையானையுடன் இணைந்தார் திருக்கையிலாயம் அடைந்தார். சுந்தரர் ஆலாலசுந்தரராக கையிலாயத்தில் திருத்தொண்டுகள் தொடர்ந்தார் என்பது நிகழ்வு.
.
சுந்தரர் வாழ்வில் பாகமாகி சிவத்தோண்டு செய்த நாயன்மார்கள் பலர். கோட்புலி நாயனார் தமது பெண்களை தந்தருள, அப்பெண்களை புத்திரிகளாக்கிக் கொண்டதும், கலிக்காம நாயனார் இறைவனை தூது அனுப்பியதற்கு கோபித்து பின் உணர்ந்து நட்பாகியதும், சேரமான் பெருமாளிடம் கொண்ட ஆழ்ந்த நட்பும், சுந்தரராலேயே நாயன்மார்களாக உயர்த்தப்பெற்ற தாய் தந்தையராகிய இசைஞானியார் மற்றும் சடையனாரும், வளர்த்த நரசிங்கமுனையரைய நாயனாரும், சுந்தரர் வாழ்வில் பங்குகொண்டு உயர்ந்தும் உயர்த்தியும் நின்ற நாயன்மார்கள்.
.
சுந்தரர் பாடிய ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு அற்புத நிகழ்வும், இறை தரிசனமும் இருக்கிறதென்றால் அது மிகையல்ல. இறையனாருடன் அன்றாடம் அளவளாவி அவரை வாழ்வின் இணைபிரியா அங்கமாக்கி வாழ்ந்தார் என்றால் ஆலாலசுந்தரர் எனும் தொண்டரின் பெருமை சொல்லவும் தகுமோ
.
ஓம் நமச்சிவாய.

சுந்தரமூர்த்தி நாயனார் (பகுதி 1)




சிவ வழிபாட்டு முறையை பின்பற்றும் எவருக்கும் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
.
ஆசிரியர், அரசன், தாய், மூத்தவர்கள் போன்ற உயர்ந்தோரை தமிழகராதியில் குரவர் எனக் குறிப்பிடுவதுண்டு.
.
சமயக்குரவர்கள் என்று போற்றபடும் நால்வருள் ஒருவர் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது இயற்பெயர் நம்பியாரூரர். இசைஞானியார் சடையனார் எனும் திருத்தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரைப் பெற்ற பேறுக்கே இருவரும் நாயன்மார்களாக உயர்ந்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.
.
சுந்தரர் பெயருக்கேற்ப அகத்திலும் புறத்திலும் மிகுந்த அழகராக இருந்தார். அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போழுது அவரது அழகின் மனம் பறிகொடுத்த அரசர் நரசிங்கமுனையரையர் தாமே சுந்தரரை வளர்க்க பிரியப்பட்டு தம்பதிகளின் சம்மதம் பெற்று , பல கலைகளையும் கல்விகளையும் கற்பித்து சிறந்த முறையில் வளர்த்தார்.
.
பருவ வயதின் போது சடங்கவி சிவாச்சாரியாரின் புத்திரிக்கும் சுந்தரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது சிவனார் வயோதிக வேடத்தில் தோன்றி திருமணம் நடவாமல் தடுத்தாட்கொண்டார். சுந்தரர் பரம்பரையே தமக்கு அடிமைப்பட்டுள்ளதாக சான்றுரைத்து திருவெண்ணை நல்லூரின் திருவருட்டுறைக் கோவிலில் சென்று அந்தர்தியானமானார். அசாரீரி ஒலித்து சுந்தரர் தமைப்பாடவே இப்பிறவி எடுத்ததை நினைவூட்டியது. பித்தன் எத்தன் என்றெல்லாம் வன்மையான சொற்களில் நிந்தனா-ஸ்துதி பாடியதில் உளம் மலர்ந்த இறையனார். சுந்தரரை 'வன்றோண்டன்' என்று அன்போடு அழைத்து, பித்தன் என்ற அழைத்த சொல்லையே முதலடியாக எடுத்துக்கொடுத்தார். அவர் பாடிய முதல் திருப்பதிகம் "பித்தா பிறைசூடி" என்றமைந்தது.
.
(சுந்தரர் தொடர்வார்)
.
ஓம் நமச்சிவாய

February 20, 2020

சிறுதொண்டர் நாயனார்

Image result for சிறதொண்டர் நாயன்மார்

பரஞ்சோதி என்பது இவரது இயற்பெயர். நரசிம்ம பல்லவரின் படைத்தலைவனாக பணியாற்றிய பரஞ்சோதியாரைப் பற்றி சரித்திர நிகழ்வுகளை படித்தறியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. வாதாபி நகரை படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடி, அங்கு நிறந்திருந்த பொன்னும் மணியும் முத்தும் நவரத்தினங்களும், போரில் வென்ற யானை குதிரைகளையும் பல்லவ மன்னனிடம் கொணர்ந்து குவித்தார்.
.
அருகிருந்த அமைச்சர்கள் இவரது பெருமையினை எடுத்துரைப்பவராக, யானையேற்றம் குதிரையேற்றம் தோள்வலிமை போர்திறன் மிக்க நம் சேனாதிபதி, சிவத்தொண்டராக பெரிதும் மதிக்கதக்கவர். அவரது திருத்தொண்டினை புகழ்ந்து கூறக் கூற இப்படிப்பட்ட ஒரு சிவத்தொண்டனை படைத்தலைவனாக்கி போர்முனைக்கு அனுப்பியிருந்தேனே என் மடமையை என் சொல்வேன் என மிக வருந்திய பல்லவ வேந்தன், பல திரவியங்களும் பொருட்களும் செல்வங்களும் பரிசாக வழங்கி, சிவத்தொண்டினையே அனுதினமும் இசைந்து செய்வீர் எனக்கூறி படைத்தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அனுப்பினான்.
.
வேதங்களும் வடமொழி நூல்கள் பலவும் கற்றவராக சிவத்தொண்டினையே சதா காலமும் சிந்தித்து செய்பவராக விளங்கினார். திருவெண்காட்டு நங்கையை திருமணம் செய்து இல்லறம் நல்லறமாக நடத்திவந்தார். சிவத்தொண்டு செய்தும், அமுதளித்தும், இன்பம் கண்டார். சிவனடியார்களுக்கு பணிவுடன் சிறுதொண்டனைப் போல் பணிந்து தொண்டு செய்தலால் சிறுதொண்டர் என்று பெயர் வரப்பெற்றார். அடியார்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் விரதமிருந்தார். இத்தம்பதிகளுக்கு அருமை மைந்தன் பிறக்க சீராளன் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்தனர்.
.
சிறுதொண்டர் பெருமை உலகெலாம் அறிய திருவுள்ளம் கொண்ட இறைவன், பைரவ அடியார் வேடம் தாங்கி குடில் வாசலில் தோன்றிபார். தனது செம்மேனிக்கு கருப்பு சட்டை அணிந்து, சடைமுடியை முடித்து, இடது கையில் சூலம் தாங்கி, தும்பைப்பூ சூடியவராக வந்து "அடியார்க்கு அமுதளிக்கும் சிறுதொண்டர் இருக்கிறாரோ" என்றழைத்தார். அதுவரை அடியார் எவரையும் காணாது, அதன் பொருட்டே அடியவரை தேட சென்றுள்ளார் என்றுரை த்த மனைவியிடம் தாம் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக கூறிச் சென்றார்.
.
தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்த சிறுதொண்டர், ஆத்தி மரத்தடிக்கு ஓடி அடியாரைக் விருந்துக்கு வருந்தி அழைக்க, பைரவ அடியாரோ, தாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்பதாகவும், தனக்கு உணவு சமைப்பது கடினம் என்று கூறினார். ஐந்து வயது மிகாத நரப்பசுவை உணவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். ஊனம் எதுவும் இல்லாதவனாகவும், அப்பாலகன் தாயாருக்கு ஒரே பிள்ளையாகவும் இருக்க வேண்டும். தாயார் பிள்ளையை பிடித்திருக்க தந்தை அரிந்து கொடுக்க, அதனை பக்குவமாக குறையேதுமின்றி சமைத்த உணவையே உட்கொள்வதாக கூறினார்.
.
வேறெவரும் செய்யத் துணியாத இச்செயலை சிறிதும் தயங்காது இத்தம்பதியினர் மேற்கொண்டனர். பள்ளி சென்றிருந்த தமது மகனான அழைத்து அவனையே உணவாக்கினர். அடியவருக்கு உணவிடும் போது, நாம் தனியே உண்ண மாட்டோம் நம்முடன் சிவனடியார் இன்னொருவரும் உணவு உண்ண வேண்டுமென்றார். வேறு அடியவர் எவரும் வேண்டாம், உம்மை விட சிறந்த அடியவர் உளரோ, நீரே எம்முடன் உண்ண வேண்டும் என்று சிறுதொண்டரை தம்முடன் உணவு உண்ண அழைத்தார். அதற்கும் ஈடுகொடுத்து அருகில் உண்ண அமர்ந்த போது, நாம் உண்ணும் முன் உமது மகனை அழைத்து வாரும் அதன் பின் மூவருமாக உண்போம் என்றார். அடியார் எங்கே உண்ணாமல் சென்று விடுவாரோ என்று பதைத்தை தம்பதியர், மகன் இப்பொழுது வருவது கடினம் எனவே அவரை உண்ண இறைஞ்சினார்கள். அடியார் விடுவதாக இல்லை. பிடிவாதமாக மகனை அழையும் அவன் வந்தாலேயன்றி நாம் உண்ணோம் என்றார்.
.
புறத்தே சென்று "அருமை மகனே சீராளா சிவனடியார் உணவு உண்ண அழைக்கிறார், உடன் வா என் கண்ணே" என்றழைக்க, பேராச்சர்யமாக பள்ளி சென்ற சீராளன் ஓடி வருவது போல் வந்தான். கையில் வாரியணைத்து "அடடா அடியார் அமுது உண்ணும் பாக்கியம் பெற்றோம்" என்று மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் செல்ல அங்கு அடியாரோ அமுதோ காணாமல் மனம் மிகவும் நொந்தார். அமுதளிக்கும் பேறு இழந்தோமே எங்கு சென்றார் என்று துடித்த தம்பதியருக்கு வீட்டின் வெளியே பேரொளி புறப்பட்டதை கண்டனர். அம்பிகை சமேத ஈசனாக முருகப்பெருமானுடன் காட்சியளிக்க பேருவகை அடைந்தவர்கள் நெடிது நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். அவர்களின் சிறந்த தொண்டால் மகிழ்ந்த இறைவன், தம்பதிகளுடன் அவர் மைந்தனையும், அவர்களுக்கு பெருந்துணையாய் இருந்த சந்தனத் தாதியையும் உடன் அழைத்து தமை விட்டு அகலாதபடி கைலாயப்பேறு அருளினார்.
.
ஓம் நமச்சிவாய


February 10, 2020

தமிழ் வெல்லும்




காலத்தின் கதியோடு
இயைந்தும் இணைந்தும்
குதித்தோடும் இளமைத் தமிழும்,
தமிழனும் தோற்றதில்லை!
சாதிமதங்கள் மறந்து
தமிழ் நுகரும் முதிர்ச்சியில்,
வேற்றுமை இல்லா ஒற்றுமை மலரும்
தமிழ்மணம் புவியெங்கும் கமழும்.
கற்கால சுவடுகள், சிற்பங்கள்,
பழம்பெருமை பறைசாற்றும் சித்திரங்கள்,
தொன்மொழி தமிழ்மொழி எனும் சான்றுகள்,
கலாச்சாரத்தை கண்ணாய் காக்கும் உயர் பண்பு,
இத்தனை பெருமைகளுடன்;
பண்பின் சிகரங்களாக
நட்பின் இலக்கணங்களாக
தனிமனித ஒழுக்கத்தில்
தப்பற்றவர்களாக
தமிழெனன்றும் சொல்லி
தலை நிமிர்ந்து வெல்லுவோம்

-ShakthiPrabha

(Posted in eluthu dot com in 2018 for a contest) 

February 09, 2020

மறக்க மனம் கூடுமோ




கண்கள் பகிர்ந்த காதல் மொழிகள்
கவிதைகளாக தமை கிறுக்கிக் கொண்டு
சிதறிப்போகிறது...
சிந்தாமல் சிதறாமல் தொடருது
பகிர மறந்து புதைந்து போன
கனவுகள்.


ShakthiPrabha

February 07, 2020

சிறப்புலி நாயனார்




திருவாக்கூர் எனும் அறமிக்க திருவூரில் அறம் வளர்க்கும் அந்தணர் மரபில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இளமை முதல் மாறாத பக்தி கல்யாண சுந்தரனை துதி பாடி வந்தார். அடியார்களுக்கு அமுது செய்விப்பதும், அவர்கள் தேவையறிந்து பூர்த்தி செய்யும் தாராள குணமும் மிக்கவராகினார். மேலும், எண்ணற்ற வேள்வி யாகங்கள் சிவ ஆகம முறைப்படி செய்தும் செய்வித்தும் சேவை புரிந்தார். பஞ்சாக்ஷர மந்திரமோதி பல சிவ தொண்டுகள் செய்து, பிறரிடம் எல்லையில்ல பேரன்பு கொண்டு, இன்சொல் சொல்லி பக்தி வளர்த்தார். பலரும் இவர் மேல் அன்பு பூண்டு இவரை தொழுதற்குறியவராக கண்டனர். பல்லாண்டு சிறப்பாக வாழ்ந்தவர் சிவபதவி அடைந்து பெருமான் திருவடியை நித்தம் சேவிக்கும் பெரும்பேறு பேற்றார்.
.
ஓம் நமச்சிவாய 

February 06, 2020

வன்புணர்வு






புதுமலர், இளமலரென்றும்
வண்ணமிழந்து வாசம் தொலைத்ததென்றும்
பகுத்தறியா வண்டுகள்.
முதுமலரின் வறட்சியிலும்
முயங்கிக் கிடக்கும் பூச்சிகள்
.
இணங்கும் உரிமை மறுக்கப்பட்டு
இணையும் விதியின் வழியில்
சிக்கித் துடிக்கும்
சிறகிழந்த மலர்கள்
.
ருசித்ததும்
ரசிக்க ஏதுமில்லையென
இலக்கை நகர்த்தி இறக்கை விரிக்கும்
.
பூச்சிகளும் வண்டுகளும்
நன்றி மறப்பதில்லை.
நுகர்ந்த பூவின் மிச்சத்தை
எச்சமென விட்டுச் செல்லும்
பூக்களை சிதைத்ததாகவோ
உருகுலைத்து உமிழ்ந்ததாகவோ
இதுவரை சரித்திரமில்லை.

(© ஷக்திப்ரபா)

February 03, 2020

பூங்காடு




வாசவலை விரித்து தேனிரைக்கும்
வண்ணப்பூக்களின் வசந்த மாநாட்டில் - தன்
வசமிழந்த பட்டுப்பூச்சி இறகுகளில்
தீட்டப்படும் தேனோவியத்தால்;
பறக்கும் திசையெங்கும் தூவப்படும் மகரந்தச் சாரல்..
காடுமுழுதும் வண்ணப் பூந்தேன் மழை.

ஷக்திப்ரபா