February 21, 2020

சுந்தரமூர்த்தி நாயனார் (இறுதிப்பகுதி)


.Image result for சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை
பித்தா பிறைசூடி என்று அன்பொழுக நின்ற சுந்தரர், அதன் பிறகு பெம்மானை பாடுவதே பெரும் பணியாக்கிக் கொண்டார். பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் பதிகம் பாடுவதுமே அவர் பிறவிப் பயனாகிப் போனது. இறைவன் மேல் "தோழமை" பூண்டு அதன் பொருட்டு வரும் பக்தியில் நிறைந்திருந்தார். தோழனை என்னவெல்லாம் உரிமையோடு பேசலாம், கேட்கலாம் ஏசலாம், அன்பினால் கட்டுண்டிருக்கலாம் என்று நாம் உணர்ந்திருக்கிறோமோ அது அத்தனையும் சிவனாரிடத்தில் இவர் கொண்டிருந்தார்.
.
நாவுக்கரசர் வழிபட்ட தலமான திருவதிகையியை தான் மிதிக்க கூனிக்குறுகி ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மடத்தில் படுத்துறங்கும் போது, இறைவனே பிராமணன் வடிவில் மடத்தில் நுழைந்து, அவரது திருவடிகளை சிரசின் மீது வைத்ததாக வரலாறு. வந்தது இறைவனே என்றுணர்தவர் "தம்மானை அறியாத சாதியாருளரே" என்று பாடினார்.
.
காதலுக்கு இறைவனையா தூது அனுப்பவது? தூய்மை இருந்தால் எதுவும் சாத்தியமே என்று உணர்த்துகிறது இறைவன் இவருக்காக பரவை நாச்சியாரிடமும் சங்கிலி நாச்சியாரிடமும் தூது போன நிகழ்வு. இருவரும் உமாதேவியாரின் தோழியராக இருக்கும் சமயத்தில் இறையனாரின் தொண்டரான ஆலாலசுந்தரர் இருவரின் அழகில் சற்றே மெய்மறக்க, தோழியர் இருவருமே சுந்தரரை கண்டு நாணி நின்றனர். அதன் பொருட்டு மூவருக்கும் பிறவியாகியதாக வரலாறு.
.
திருவாரூரில் வாழ் அடியவர்கெல்லாம் தம் அடியவன் சுந்தரன் வருகிறான் என்று உணர்த்தியதும், பின் அசரீரியாக "உமக்குத் தோழரானோம்" என்றுரைத்தபடியால் சுந்தரரை "தம்பிரான்தோழர்" என்று குறிப்பிடுவதுண்டு.
.
வேளாளராகிய குண்டையூர்கிழார் என்பவர் அனுதினமும் நெல்மணிகளை சுந்தரருக்கு சமர்பித்து வந்தார். பஞ்சம் வந்த போது நெல் வளம் சுருங்கி அனுப்ப இயலாமல் போனதற்காக வருதும் போது ஈசனே சுந்தரருக்கு நெல்மணிகளை தரும் பொருட்டு குண்டையூர் முழுவதிலும் நிரப்பி அருளினார். அந்த அதிசயத்தை கண்ட சுந்தரனார் ""நீள நினைந் தடியே" என்று பதிகம் பாடி துதிக்க அன்றிரவே திருவாரூர் முழுதும் நெல்மணிகளை நிறைக்கும் மனம் கொண்டு அசரீரியாக அருளினார்.
.
சிறந்த தோழமை பூண்ட சேரமான் பெருமான் பிரிவின் பொழுது பரிசளித்த பொன்னும் மணியும் ரத்தினங்களையும், சிவனார், தம்மையன்றி வேறு எவரும் சுந்தரருக்கு இத்தனை சொத்துக்கள் அளிக்க கூடாது என்று கருதினாரோ என்னவோ, வேடுவராக பூத கணங்களை அனுப்பி, பொக்கிஷங்களை களவாடச் செய்தார். வருந்திய சுந்தரர், "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்று பதிகம் பாடி, பொருளை திரும்ப மீட்டார்.
.
கொங்கதேசத்தில் திருப்புக்கொளியூரில் பலகாலம் முன் முதலையின் பசிக்கு மகனை இழந்து வாடும் தம்பதியருக்கு, அருளியவராய் இழந்த நீர்கரையில் சென்று "உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா" என்ற பதிகம் பாட முதலை வாயினின்று என்றோ மரணித்த மழலை, இழந்த பருவங்களின் வளர்ச்சியுடன் பாலகனாக மீண்டது கண்டு வானில் தேவரும் அமரரும் பூமாரிப் பொழிந்தனர்.
.
பலகாலம் சிவனையன்றி வெறோன்றும் அறியாது சிறப்புற வாழ்ந்து, சிவன் சன்னிதானத்தில் இப்புவி வாழ்வு போதுமென்று கசிந்துருகி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகம் பாடினார். சுந்தரன் இங்கு வருகிறான் என்று இறையனார் வெள்ளையானையை அனுப்பி, சுந்தரரை அழைத்து வரச்செய்தார். இதையறிந்த அவரது உற்ற தோழரான சேரமான் பெருமாள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, விரைந்து குதிரையில் ஏறி ஆகாயத்தில் விரையும் வெள்ளையானையுடன் இணைந்தார் திருக்கையிலாயம் அடைந்தார். சுந்தரர் ஆலாலசுந்தரராக கையிலாயத்தில் திருத்தொண்டுகள் தொடர்ந்தார் என்பது நிகழ்வு.
.
சுந்தரர் வாழ்வில் பாகமாகி சிவத்தோண்டு செய்த நாயன்மார்கள் பலர். கோட்புலி நாயனார் தமது பெண்களை தந்தருள, அப்பெண்களை புத்திரிகளாக்கிக் கொண்டதும், கலிக்காம நாயனார் இறைவனை தூது அனுப்பியதற்கு கோபித்து பின் உணர்ந்து நட்பாகியதும், சேரமான் பெருமாளிடம் கொண்ட ஆழ்ந்த நட்பும், சுந்தரராலேயே நாயன்மார்களாக உயர்த்தப்பெற்ற தாய் தந்தையராகிய இசைஞானியார் மற்றும் சடையனாரும், வளர்த்த நரசிங்கமுனையரைய நாயனாரும், சுந்தரர் வாழ்வில் பங்குகொண்டு உயர்ந்தும் உயர்த்தியும் நின்ற நாயன்மார்கள்.
.
சுந்தரர் பாடிய ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு அற்புத நிகழ்வும், இறை தரிசனமும் இருக்கிறதென்றால் அது மிகையல்ல. இறையனாருடன் அன்றாடம் அளவளாவி அவரை வாழ்வின் இணைபிரியா அங்கமாக்கி வாழ்ந்தார் என்றால் ஆலாலசுந்தரர் எனும் தொண்டரின் பெருமை சொல்லவும் தகுமோ
.
ஓம் நமச்சிவாய.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete