September 23, 2022

Meditate upon AmbaaL with Thandangam (தோடு-earrings) (Deivathin Kural)




தாலி பாக்யத்தைதான் அவளுடைய “தாடங்க மஹிமா” என்று சொல்லியிருக்கிறார். ஸெளமாங்கால்யச் சின்னமான தாடங்கம் என்று

சொல்லியிருக்கிறார்! ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார்.
.
வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலிதான்! இதென்ன புதிர் போடுகிறேனே என்றால், நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாஸன்
சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன்.
.
“தாலீ பலாச தாடங்காம்” என்பது காளிதாஸன் வாக்கு. தாலம், தாலீ என்றால் பனை, பலாசம் என்றால் புரசு என்று ஒரு அர்த்தம். ஆதிகாலத்தில்
ஜனங்கள் படாடோபமில்லாமல் எளிமையாக இருந்தபோது ஸ்த்ரீகளுடைய பரம ஸெளமாங்கல்ய ஆபரணங்களான மங்கள ஸூத்ரப் பதக்கம், காதுத்தோடு இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால் மங்கள ஸூத்ரப் பதக்கமாயிருந்த ஒலை நறுக்குக்கே தாலி என்று பெயர் வந்துவிட்டது. ‘தோடு’ என்பதும் பனையோலையின் பெயர்தான். காதிலும் அந்த ஒலையைச் சுருட்டித்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன், அநேக குடியான ஸ்திரீகள் அப்படி போட்டுக்கொண்டு.
.
பிற்கால ஜம்ப வழக்கங்கள் வராத ஆதி நாட்களில் காளிதாஸன் வாக்குப்படி ஸாக்ஷாத் பராசக்தி உள்பட – எல்லோரும் ஒலைத்தோடு போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
.
‘கம்மல்’ என்றும் தோட்டைச் சொல்வது. ‘கமலம்’, ‘கமல்’ என்பதுதான் அப்படி ஆனது. நடுவே ஒரு கல், சுற்றிலும் ஆறு என்று, நடுவே
கர்ணிகையும் சுற்றி இதழுமாக ஒரு தாமரை இருக்கிறார்போலத் தோடு கட்டியதால் ‘கமலம்’ என்று பேர் வைத்து ‘கம்மல்’ ஆயிற்று.
.
இத்தனை ஜம்பம், டம்பம், டாம்பீகம் வந்துவிட்ட இன்றைக்கும் அம்பாள் பூஜையில் அவள் போட்டுக் கொள்கிற பரம எளிமையான கருகுமணியும் பச்சோலையும் ஸுமங்கலிகளுக்குக் கொடுக்கிறோம்.
.
‘தாலீ பலாசம்’ என்ற பனையோலையே ‘தாட பத்ரம்’ என்பதும். ‘தாட(da)ங்கம்’ என்பதே அப்புறம் ‘தாட(ta)ங்கம்’ என்று வந்திருக்கிறது.
தோடு, அதற்கு வேறாகக் குண்டலம் (இந்த நாள் லோலாக்கு, ஜிமிக்கி) என்று இல்லாமல், தோடு குண்டலம் இரண்டும் சேர்த்துப் பண்ணிய நகை
தாடங்கம் என்று தோன்றுகிறது.
THandanga mahimai
“பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறானென்றால் அது உன் மஹிமை தானம்மா! – தவ ஜநநி
தாடங்க மஹிமா!” என்கிறார்.
.
ச்ரோத்ரத்திற்கு (காதுகளுக்கு) விசேஷம் ஜாஸ்தி. பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ருஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி என்றே பேர் பெற்றிருப்பது? உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈச்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே?
.
இதனாலெல்லாந்தானோ என்னவோ, அம்பாளுடைய தாடங்கத்தில் நம்முடைய ஆசார்யாளுக்கு ரொம்ப பக்தி, பற்றுதல். ‘ஸர்வ மங்களா’ எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. ஸூர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு தாடங்கம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: தாடங்க-யுகளீ-பூத தபனோடுப மண்டலா என்று.
.
Her Thandangam Nourishes and protects Jivas
அதே ஸூர்ய சந்திரர்களை நமக்குப் பால் கொடுக்கிற அம்மாவின் இரண்டு வக்ஷோருஹங்கள் என்று ஆசார்யாள் இதே ஸெளந்தர்ய லஹரியிலேயே சொல்லி இருக்கிறார். [ச்லோ. 34] ஆகையால் அந்தத் தாடங்கங்களும் ஒரு பக்கம் பரமேச்வர பத்னியின் ஸெளமாங்கல்ய சின்னம், இன்னொரு பக்கம் குழந்தைகளான நமக்கெல்லாம் பாலூட்டுகிற மாத்ரு வாத்ஸல்யத்தின் சின்னம் ஆகிறது.
.
ஆகையாலேதான் ஜம்புகேச்வரத்திலே அகிலாண்டேச்வரியின் சக்தி ஜனங்கள் தாங்க முடியாத அளவுக்கு ஆனபோது அவர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி அதில் அதிகப்படி சக்தியை ஆகர்ஷணம் பண்ணி அம்பாளை சமனப்படுத்த நினைத்தபோது அந்த ஸ்ரீசக்ரத்தை தாடங்க ரூபத்தில் பண்ணி அவளுடைய ச்ரோத்திரத்திலேயே ப்ரதிஷ்டித்து விட்டார்.
.
ப்ருத்வி க்ஷேத்ரமும், ப்ருத்வியின் மத்ய ஸ்தானமுமான காஞ்சீபுரத்தில் அம்பாள் காமாக்ஷியின் சக்தி இதே மாதிரி அபரிதிமாயிருந்தபோது அவளுக்கு எதிரே ப்ருத்வியிலேயே – பூமியிலேயே – ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் பண்ணினார்.
.
‘சிவயுவதி’ என்று அவளை அவனுடைய பத்னி என்று பேர் கொடுத்துச் சொல்லியிருப்பது அவளுடைய ஸெளமாங்கல்யத்தையும்,
உக்ரமில்லாத, ரௌத்ரமில்லாத சிவமான அநுக்ரஹ சித்தத்தையும் தெரிவிப்பதாக இருக்கிறது.
.
Chapter: அம்பாளின் தாடங்கம் Volume 6
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment