November 09, 2020

மங்கையர்கரசியார் நாயனார்



.
சோழ இளவரசியாக பிறப்பெடுத்த மங்கையர்கரசி, பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைத் திருமணம் செய்து இருவரும் சிறப்புற சிவதொண்டாற்றினர். ஞான சம்பந்தரை தமது வழிகாட்டியாகவும் குருவாகவும் வரித்து அவர் வகுத்த பாதையில் பயணித்து நெடுங்காலம் சைவம் தழைக்க பெரிதும் பணியாற்றினார்.
.
இடைப்பட்ட காலத்தில், பாண்டிய மன்னன் சமணத் தொடர்பினால் சைவத்தை பெரிதும் வருத்தினார். இதனால் மங்கையர்க்கரசியார் பெரிதும் மனம் வெதும்பி வாடினார். தமது அமைச்சர் குலச்சிறையார் துணை கொண்டு சைவத்திற்கு தம்மாலான தொண்டு ஆற்றிய வண்ணமிருந்தார். சம்பந்தர் பாண்டிய நாடு வந்தது கேட்ட மங்கையர்க்கரசியார், குலச்சிறையாருடன் அவரை நெடுது விழுந்து வணங்கி பக்திப்பெருக்குடன் வரவேற்று உபசரித்தார்.
.
சமண துறவிகள் மன்னரின் ஆணை பெற்று ஏவிய தீயானது, மன்னனுக்கே வெப்பு நோயாக வந்திரங்க, அதனை "மந்திரமாவது நீறு" என்று பதிகம் பாடி சம்பந்தர் விரட்டினார். அனல் புனல் வாதத்தில் சமணர்களை வென்று கூன்பாண்டியனை நின்றசீர் பாண்டியனாகி அருளினார் சம்பந்தர். வேற்று சமயத்தின் தாக்கத்தால் சைவம் குன்றியிருந்த நிலமையிலும் தொண்டாற்றிய மங்கையர்கரசியாரை வாழ்த்தினார் சம்பந்தர். சைவம் தழுவி திருநீறணிந்தார் பாண்டிய மன்னன் (இன்னிகழ்வுகளை சம்பந்தர் வரலாற்றில் விரிவாக பார்த்தோம்)
.
சம்பந்தர் எங்கெல்லாம் சென்று சிவபெருமானை வழிபட்டாரோ அவ்விடமெல்லாம் அரசியாரும் சென்று சம்பந்தர் திருவடிகளை பற்றி இறைவனை பக்தி செய்துய்ந்தார். திருத்தலங்கள் பலவற்றிற்கு மங்கையர்க்கரசியாரும், மன்னரும், குலச்சிறையாரும் பிள்ளையுடன் சேர்ந்து வழிபட்டு வந்தனர். தாம் விடை பெரும் வேளையில் பாண்டி நாட்டை சிவநேறி தழைத்தோங்க ஆள அருளிச் சென்றார் சம்பந்தர். அதன் வழியொழுகி, மதுரையம்பதியில் நிலைகொண்டு பாண்டி நாடெங்கும், சைவம் தழைக்கச் செய்தனர். ஆலய வழிபாடுகளும் ஆகம நெறிகளும் வளர்த்தனர்.
.
திருநாவுக்கரசரை தரிசித்து பாதம் பணியும் பாக்கியமும் பெற்றார். நெடுங்காலம் குறைவிலா அரசாட்சி புரிந்த மன்னருக்கு துணையிருந்து மன்னரோடு சிவனார் திருவடி எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment