November 12, 2020

மானக்கஞ்சாற நாயனார்


சிவபக்தியில் சிறந்து விளங்கிய மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு எனும் ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார். மானக்காந்தன் என்பது இயற்ப்பெயர், இவருக்கு கல்யாண சுந்தரி என்ற மனைவி இருந்தாள். சிவன் தாள் பணிதலும், அவன் புகழ் நினைந்தலும், அடியார் தொண்டில் ஈடுபடுவதும், வீடுபேற்றை அருளும் என்ற பேருண்மை உணர்ந்தவராக இருதார். அரசர்க்கு சேனாபதியாகப் பணியாற்றும் குலத்தினர். ஆகையால் மன்னர்க்கு பணி செய்திருந்தார். வேளாண்மை தந்த செல்வத்தால், செல்வம்  வளம் உடையவராக பெருவாழ்வு வாழ்ந்திருந்தார். அடியார்கள் குறிப்பறிந்து சேவை செய்தார்.
.
பேறுகள் பல பெற்றிருந்தும், நெடுநாள் பிள்ளை வரம் இல்லாது வாடிய இத்தம்பதியினர், அரிய பல உபாசனைகளும் பூஜைகளும் உகந்தளித்து சிவனாரை திருப்தி செய்தபின்னர், அவர் அருளால் அழகிய பெண் குழந்தை அருளப் பெற்றனர். அப்பெண் குறைவற்ற செல்வத்துடன் சிறப்பற வளர்க்கப்பட்டாள். சிவ நேறிகளை போதித்து, அறிவுடன் வளர்தனர். எழிலுருவானவள் மணப்பருவம் எய்தினாள்.
.
சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெண்ணின் அறிவு அழகை கேள்வியுற்று, மானக்கஞ்சாற நாயனாரின் பெருமை உணர்ந்தவர், முதியோர் சிலரை அனுப்பி அப்பெண்ணை தனக்கு மணமுடிக்க விண்ணப்பம் செய்ய, அவருக்கே மணம் பேசி நற்திங்களில் முகூர்த்த நாள் குறித்தனர். சுற்றம் சூழ ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுபதினத்தில் கஞ்சாறுக்கு புறப்பட்டார்.
.
அவ்வாறு திருமணம் நாள் நெருங்கும் நேரத்தில், உலகுக்கு மானக்கஞ்சாற நாயனாரின் பெருமையை உணர்த்த திருவுள்ளம் கொண்டான் இறைவன். ஈசன் மாவிரதி கோலம் கொண்டு மானக்கஞ்சாற நாயனார் வீட்டை அடைந்தார். மாவிரதி என்பவர்கள் சிவனாரின் அடியவர்கள். ஆண்டிக்கோலம் பூண்டவர்கள். மாவிரதி அங்கு நடைபெறும் திருவிழாக் கோலத்தை கண்ணுற்று அங்கு என்ன விழாவிற்கான ஆயுத்தம் என்று வினவ, தமது மகளுக்கு திருமணம் என்று பணிவுடன் எடுத்துரைத்தார் மானக்கஞ்சாறர். அனைவரையும் ஆசீர்வதித்த மாவிரதி முன், தமது மகளை கொணர்ந்து நிறுத்தி அவரை பணியும் படி செய்தார் நாயனார். வணங்கி எழுந்த பெண்ணின் நீள் கருங்கூந்தலை கண்டு ஆண்டியார், "இப்பெண்ணின் நீள் முடி எமது பஞ்சவடிக்கு ஆகும்" என்று மொழிந்தார். பஞ்சவடி என்பது முடியினால் பட்டையாக செய்யப்பட்டு மார்பில் பூணூலைப்போல் தரிக்கப்படுவது.
.
மகிழ்ந்த நாயனார், உடன் வாளை உருவி, அலங்கரிக்கப்பட்ட அவள் நீள்முடியை வெட்டி "என்ன புண்ணியம் செய்தோமோ" என்று பூரித்து ஈசனிடம் சமர்பிக்க, இறைவன் ரிஷப வாகனனாகத் உமாதேவியான கௌரியுடன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலித்து "உம் புகழ் விளங்கச் செய்தோம்" என்றருளினார். நெடிது வணங்கி எழுந்த நாயனார் பரவசமிகுதியில் கட்டுண்டிருந்தார். இறைக்காட்சி மறைந்த சில கணங்களில் ஏயர்க்கோன் கலிக்காமர் திருமணம் கோலத்தில் வந்து சேர்ந்தார்.
.
அங்கு நடந்த நிகழ்வை கேட்டறிந்து மகிழ்ந்து ஆனந்தித்தார். துக்கித்தார். இறைவனின் கோலத்தை நான் காணாது போனேனே என வருந்தினார். அசரீரியாக இறைவன் அருளி நல்வார்த்தைகள் மொழிந்த பின் துக்கம் நீங்கப்பெற்றார். மணப்பெண்ணும் மீண்டும் நீள்முடி வளரப்பெற்றவளாகி எழில்ரூபம் கொண்டவள் இனிதே திருமணம் நிகழப்பெற்று சிறப்புற வாழ்ந்தாள்.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment