திருக்கோவலூர் என்னும் ஊரை ஆண்ட குறுநிலமன்னராக இருந்தவர் மெய்ப்பொருள் நாயனார். ஈசன் அடி போற்றுவதும், அவன் பணி செய்து கிடப்பதும், சிவ மந்திரம் ஓதுவதுமே நற்கதிக்கு வழி என்பதை உணர்ந்தவராக இருந்தார். சிறப்புற அரசாண்டு, பகைவர்களால் இன்னல் நேராமல் திருநாட்டை காத்தார். நாடெங்கிலும் சிவ வழிபாடுகளும் பூஜைகளும் ஆகம முறைப்படி நடப்பதற்கு வழி செய்தார். அடியார்களிடத்தே அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார் என்பது இவரது சரித்திரத்தின் மூலம் விளங்குகிறது.
.
தனது நாட்டை கண்ணெனக் காத்தவர், பகைவர் முற்றுகையிட்டால் அவர்களை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். பல முறை மெய்ப்பொருளாரிடம் தோற்ற முத்தநாதன் என்ற மன்னன், நாயன்மாரிடம் மிகுந்த பகையுணர்வும் வெறுப்பும் கொண்டிந்தான் . வல்லமையினால் அவரை வீழ்த்த பலமுறை முயன்று தோல்விகண்டவன், வஞ்சத்தால் பழி தீர்க்க எண்ணினான்.
.
சிவனடியார்களை தொழுது நிற்பவரை, அடியார் வேடத்தில் அணுகினான். நீறணிந்த நெற்றியுடன், மேனியெங்கும் நீறு பூசி, சடாமுடி தரித்து, ஆயுதத்தை புத்தக முடிப்பு ஒன்றில் மறைத்து எடுத்துச் சென்றிருந்தான். அரண்மணை அடைந்தவனை சிவனடியார் என்று நினைத்து வாயில் காவலர்கள் அனுமதித்தனர். அரசர் பள்ளியறை வாயிலை அடைந்தவனை தத்தன் என்ற காவலர் தடுத்தும், தாம் மன்னனை காண்பது அவசியம் என்று வலியுறுத்தினான். சிவனடியவரான தம்மிடம் ஆகமம் ஒன்று இருக்கிறது அதனை உரைப்பதற்கே வந்திருப்பதாக கூறினான்.
.
துயில் கொண்டிருந்த அரசரை அரசி எழுப்பினார். எவரும் அறியாத அரிய தகவல் கொண்ட சிவ ஆகமம் கொண்டர்ந்திருப்பதாக உரைத்தான். அவரிடம் அதுபற்றி தனியே பேச வெண்டும் எனக்கூற அரசியாரை அப்புறம் செல்லுமாறு பணித்து, அடியவர் எனக் கருதி மிக மகிழ்வுடன் வரவேற்று மகிழ்ந்தார் நாயன்மார். ஆசனமளித்து அமரச் செய்து தாம் தரையமர்ந்து ஆகமம் கேட்கலானார்.
.
வலிமையில் குறைந்த கொடிய அம்மன்னன் புத்தக முடிப்பில் மறைந்திருந்த உடைவாளை உருவி நாயன்மாரை வீழ்த்தினான். இதை சற்றும் எதிர்பாராதவராக இருந்தவர், குத்துண்டு விழுந்த நிலையில்கும் சிவ வேடத்தினைக் கண்டு மெய்ப்பொருள எனத் தொழுதார்.
.
விழிப்புடன் இருந்த தத்தன், உடனே பாய்ந்து அக்கொடிய மன்னனை வாளால் வீழ்த்த முனைந்த போதும் நாயன்மார் "தத்தா நமரே காண்" என்று தடுத்து முத்தநாதனை பத்திரமாக எல்லை தாண்டி விட்டுவரப் பணித்தார். வழியெங்கும் கொதித்து போயிருந்த மக்களை சமாதானப்படுத்தி அரசரின் ஆணை எடுத்துக்கூறி எல்லை வரை பாதுகாப்பாக விட்டு வந்தான் தத்தன்.
.
அரண்மணை வந்தவன் நாயன்மாரிடம் தம் பணி நிறைவேறியதைக் கூற, மெய்ப்பொருள் நாய்னார், "நீ இப்பொழுது செய்ததை எனக்கு யார் செய்ய வல்லவர்கள் " என்று அன்புடன் உரைத்து நன்றி கூறினார். அரசுரிமையை வாரிசுக்கு வழங்கு, நீறு நெறி போற்றி அரசாளப் பணித்து, ஈசனை நினைந்தார்.
.
இறைவன் அம்மையப்பராக நாயனாருக்கு காட்சிதந்து அருள் செய்து தம் திருவடியில் இடையறாது தொழுதிருக்க இணைத்துக் கோண்டார்.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment