November 07, 2020

திருநீலநக்க நாயனார்



.
சோழமண்டல சாத்தமங்கை எனும் ஊரில் அந்தணராக பிறந்தார் திருநீலக்கர். அந்தணராகப் பிறந்தவர் வேதத்தின் உட்பொருளான சிவனை பூஜித்தல், அர்ச்சிதல், தொழுதல், அவனடியார்களை சிறபித்தல் அமுதளித்தல் முதலியனவையே உய்யும் வழி என்றுணர்ந்து தினமும் வேதாகம முறைப்படி சிவனை பூசித்து பல இறைத்தொண்டு ஆற்றி வந்தார்.
.
ஒரு சமயம், அவர் பிறந்த திருவூரான சாத்தமங்கையிலிருக்கும் அவயந்தி என்ற கோவிலில் அருளிச் சிறப்பிக்கும் பரமேஸ்வரனை பூஜிக்க விரும்பி, பூசனைக்குறிய பொருட்களுடன் தம் மனைவியாருடன் ஆலயம் சென்று மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனியில் விழுந்தது. பூஜைக்கு அழுக்கு நேருமோ என்றேண்ணிய மனைவி, அதனை தமது வாயினால் ஊதி போக்கினார்.
.
இதனைக் கண்டு வெகுண்ட நாயனார், எங்கனம் கீழ்மையான இச்செயலை செய்யத்துணிந்தார். வேறொரு வகையில் நீக்காமல் எச்சில் கொண்டு ஊதி நீக்குவது பெரும்பாவச் செயல். அச்செயல் புரிந்த உம்முடன் இனி நான் வாழுதற்கில்லை, உமைத் துறந்தேன் என்று உரைத்துச் சென்றார். அது கேட்ட மனைவியும் வருந்தி அஞ்சி ஒதுங்கி ஆலயத்தில் தங்கி விட்டார்.
.
அந்த இரவு துயில் கொண்ட பின் கனவில் இறைவன் எழுந்தருளி தம் திருமேனியை காட்டினார். உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறியருளினார். விழித்த நீலநக்கர் இறைவனின் கருணையை வள்ளல்தன்மையை மனதில் கொண்டவராக ஆடிப்பாடி கூத்தாடி, ஆலயம் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
.
சம்பந்தரைப் பற்றி கேட்டுணர்ந்து, அவரை தரிசிக்கவும் திருப்பாதம் தோழவும் ஆவல் மேலிட்டவரானார். அப்பொழுது சம்பந்தர் பல்வேறு ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை பாடி, சாத்தமங்கையை வந்தடைந்தார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக, தமது சுற்றம் சூழ அவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து திருவமுதளித்து மகிழ்ந்தார். அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்பாணருக்கும் அவரது துணைவி மதங்கசூளாமணியாருக்கும் நடு வீட்டில் தாம் வேள்வி செய்யும் வேதிகை அருகே இடம் கொடுத்து உயர்ந்த மரியாதையை செய்தார். இவரது செயலால் அகமகிழ்ந்த சம்பந்தர் மறு நாள் பெருமானை பாடிய பதிகத்தில் இவரையும் சிறப்பித்து பாடினார்.
.
ஞானசம்பந்தரிடம் பெரும் பக்தி பூண்டு அவருடன் தாமும் புறப்பட முயன்றார் எனினும் சம்பந்தர் அவரை அவயந்தி பெருமானை பூஜித்து அத்திருத்தலத்தில் இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார். சம்பந்தரிடம் பெரும் பக்தி கொண்டதால் அவரை தினம் அன்புடன் தினமும் நினைந்தார். திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்திற்கு வேதியராக புரோகிதம் செய்தவர் அப்பெருஞ்சோதியில் தாமும் கலந்து இறைவனுடன் உறைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment