ஏமப்பேறூரில் பிறந்த அந்தணர் குலத்தவர் நமிநந்தியடிகள். மகேஸ்வரனின் ஐந்தெழுத்தை அன்புடன் உணர்ந்து இடைவிடாது சிந்தித்திருப்பதும் பூஜிப்பதும் தொண்டுகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நாள்தோறும் திருவாரூர் பெருங்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமானை தரிசித்து வழிபடுவதை தமது தலையாய
திருப்பணியாகக் கொண்டிருந்தார்.
.
எழுந்த அன்பின் பெருக்கால், ஒரு மாலைப்பொழுதில் ஈசனுக்கு விளக்கேற்றி துதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏமப்பேறூர் வரை தமது இல்லம் சென்று எடுத்த வர தாமதமாகிவிடும் என்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளில் வேண்டிப்பேற்றுக் கொள்ள எண்ணி, அருகிலுள்ள ஒரு வீட்டை அணுகினார். அவர் சென்ற வீடு சமணர்கள் வாழ்ந்த வீடு. "விளக்கேற்ற நெய் தாருங்கள்" என்று விண்ணப்பித்தவரிடம், "அனலேந்தி நிற்கும் உங்கள் சிவனாருக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நீரை ஊற்றி ஏற்றுங்கள்" என்று பரிகசித்தார்கள்.
.
மனம் பொறுக்க மாட்டாமல் இறைவனிடம் முறையிட்டழுத அடிகளை இறைவன் கருணை கொண்டு "அருகேயுள்ள குளத்தில் நீரெடுத்து வந்து ஏற்றும்" என்று ஆகாயமார்க்க அசரீரியாக அருளினார். தமது பாக்கியத்தை எண்ணி பேருவகை அடைந்து, குளத்தில் நீர் அள்ளி, ஐந்தெழுத்தோதி திருவிளக்கேற்றினார். சுடர்வீட்டு ஜோதியென ஒளிர்வது கண்டு ஆலய்ம் முழுவதும் ஊரெல்லாம் அதிசயிக்க விளக்கேற்றி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். சமணத்தவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
.
இந்நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்த நாட்களிலும் நீரூற்றி ஆலயமெங்கும் விளக்கேற்றும் திருப்பணி செய்து, பின்னர் தமதூர் சென்று பூஜைகளில் ஈடுபடுவதை வழக்கமெனக் கொண்டிருந்தார். இப்பெருமை ஊரெங்கும் பரவ, சோழ மன்னன் பெருங்க்கொடையளித்து ஆகம விதிப்படி பூஜைகளும் நித்ய ஆராதனைகளும் பங்குனி உத்திர விழாவும் நடைபெறுவதற்கு வழி செய்து அதற்கு தலைமை ஏற்க நந்தியடிகளை நியமித்தார்.
.
ஒரு சமயம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது மணலி என்ற ஊரில் உலா எழுந்தார். அங்கு பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஜாதி இனத்தவர்களும் சிவனாரை வணங்கிச் சென்றனர். அடிகள் இறைவனை மகிழ்ந்து பூஜித்த பின், தமது ஊரை அடைந்தார். வீட்டினுள் செல்லாமல் வெளித் திண்ணையில் தங்கிவிட்டார். மனைவியார் வீட்டினுள் வந்து அர்ச்சனை பூஜை செய்ய நினைவூட்டினார்கள். மணலியில் நான் இறைவனின் உலா கண்டு சேவித்திருந்தேன். அங்கு பல ஜாதியினர் வந்து வழிபட்டதாலும், தமக்கு தீட்டு உண்டாயிற்று அதனால் நீராட ஏற்பாடு செய்யப் பணித்தார்.
.
மனைவியார் அகன்றதும் மீண்டும் திண்ணையில் படுத்தவருக்கு எம்பெருமான் கனவில் காட்சிதந்தார். "திருவாரூரில் பிறந்த அனைவரும் கணங்கள். அதை நீ உணர்வாய்" என்று அறிவூட்டினார். உறக்கம் கலைந்தவர் தாம் செய்த பிழையால் வருந்தனார். உடன் சென்று பூஜைகள் தொடர்ந்தார். மறு நாள் பொழுது புலர்ந்ததும் திருவாரூர் சென்றார் அங்கு அத்தனை பக்தர்களும் சிவ ஸ்வரூபமாக தோன்றுவதைக் கண்டு, பிழை பொறுக்க இறைவனை இறைஞ்சி, ஜாதி வேறுபாடுகளை கடந்தார்.
.
நெடுங்காலம் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் புரிந்து, சிறப்புற வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார்.
.
ஓம் நமச்சிவாய
.
No comments:
Post a Comment