November 09, 2020

புகழ்ச்சோழ நாயனார்



உறையூர் அரசர் புகழ்சோழர், படைகள் பல கண்டு, தேசங்கள் பலவும் வென்று செங்கோலாட்சி் நடத்தி வந்தார். சிவபக்தராக திகழ்ந்த மன்னர், ஆலய திருப்பணிகள் செவ்வனே நடக்க வழி செய்தார். அடியார்கள் நலம் நல்கினார். சிவநெறி சோழ நாடெங்கும் பரவச் செய்தார். அவர் வென்ற நாடுகள் தோறும் அற நெறி தழைக்கச் செய்தார்.
.
சிவகாமி ஆண்டார் என்ற அடியவர், இறைவனுக்கு சூட கொணர்ந்த மாலையை, புகழ்சோழரது பட்டத்து யானையும் அதன் பாகனும் செருக்கின் மிகுதியால் இடறி விட, அவர்களை எதிர்த்து கொன்ற எறிபத்த நாயனாரின் செயல் புரிந்து மனம் வருந்தி, அடியவர் மனம் கோண தமது யானையும் பாகனும் நடந்ததற்காக  தமையே பலியிடத் துணிந்தார். பின் ஈசன் அருளால் வினை தீர்க்கப்பெற்றார் (இதன் நிகழ்வை எறிபத்த நாயனார் வரலாற்றில் படித்தோம்)
.
புகழ்சோழன், தமது கீழ் அரசாளும் சிற்றரசனாகிய அதிகன் என்பவனை திறைவரி செலுத்தாத காரணத்திற்கு முற்றுகையிட்டு சேனை திரட்டி தாக்கினார். அதிகன் தப்பிவிட்டாலும், பல வீரர்கள் மடிந்தனர். வெற்றி கண்ட சோழப் படையினர், ஜய பேரிகை கொட்டி யானைகளை குதிரைகளை கைபற்றி வெட்டுண்டவர்கள் தலைகளை அரசர் முன் கொணர்ந்தனர். அக்குவியலில் சிவனடியார் ஒருவரின் சடாமுடி தரித்த தலை தென்பட்டது. மெய்யுடல் நடுங்கி, தான் பெருந்தீங்கு இழைத்ததை உணர்ந்தார் சோழ மன்னர்.
.
புகழ்சோழர் என்ற பேருக்கு இலங்க சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய நாயன்மார், சிவ அபராதம் செய்ததை பொறுக்காது, தனது மகனுக்கு முடிசூட்டி, போரில் உயிர் துறந்த சிவனடியாரின் தலையை பொன்தட்டில் இட்டு, அதனை தனது தலை மேல் சுமந்து, செந்தீ வளர்த்து, அதுனுள் தானும் புகுந்து இறைவன் திருவடியில் இணைபிரியாது இணைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment